Wednesday, August 23, 2006

கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் 2

(பொதுவா ஸீகுவல்' பத்தி எனக்குப் பெரிய அபிப்பிராயம் கிடையாது. இருப்பினும் சுஜாதா சொல்றமாதிரி 15 நிமிடப் புகழ் யாரை விட்டது? :-)

தருமி: (பேக்கிரௌண்டில் திகில் மியூஸிக்) மதுரை பக்கத்துல ஒரு குக்கிராமம். சின்ன வயசுல நம்ம ஹீரோ அழகர் ஆத்துல இறங்குறத பாக்குறதுக்காகப் போனபோது தவறி அழகருக்கு பதிலா ஆத்துல வுழுந்துடுறாரு. ப்ரீஸ். அப்புறம் குளோசப்புல அந்தக் குழந்தை ஆத்துல மூழ்குறது மாதிரி காட்டுறோம். கட். பிளாஷ்பேக் ஓவர். இதுனால நம்ம வளர்ந்து விட்ட அந்த ஹீரோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்ற ஒன்லைனர்தான் கதையே. இதுனால ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த கொடுமைக்காக இப்ப இன்னும் வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்பிடி ஹீரோ பழி வாங்குறார்ங்கிறது ஸ்டோரி பில்டப். எப்பிடி? இந்த மாதிரி தத்துவ படங்களுக்கு கமலஹாசனை விட்டா வேற யாரு இருக்கா? This Dude Kamal... என்று அவர் உணர்ச்சி வசப்பட ("பேராஸிரியர் ஸார் ஏன் இப்பிடி என்னைய வதைக்கிறீங்க?" என்று குணா போல் ஸவுண்ட் விட்டபடி பேராஸிரியர் ஞானசம்பந்தத்திடம் அடைக்கலமாகின்றார் கமல்)

டோண்டு: (நள்ளிரவு வரை விழித்திருந்து பதிவு போட்டதில் கண்கள் சிவப்பாக இருக்கின்றது) நமக்கும் பீதியைக் கிளப்பத் தெரியும். ஆனா இப்ப அடிதடி ஸீஸனாக்கும். நம்ம ஹீரோ தன்னோட காரில் (அதாவது வாடகைக்காரெல்லாம் அவருடைய கார்தான்) செல்லும் போது செல்பேசி கிணுகிணுக்கிறது. ஒரு டெலிமார்க்கெட்டிங் பிகர் "லோனு வாங்கலையோ லோனு"ன்னு திருவிளையாடல் சிவாஜி கணக்காக கூவ, கோவம் வந்த ஹீரோ "டெலிராணியே எனக்கு போன்போடாத நீ; ஜென்ம ஜென்மமாய் இதுக்கு கட்டுப்பட்டு நீ" என்று கலாய்க்கின்றார். பாடலை எழுதிய ஜயராமனுக்கு நன்றி. இப்படியே பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தையும் ஆங்காங்கே ஹீரோ வலியுறுத்துவான். மசாலாவிற்கு குறைவேயில்லை. 'ஏங்க சிவஞானம்ஜி உங்களோட போலியைப் பிடிச்சு ஒரு கிளுகிளுப் பாடல் எழுதி வாங்கிட்டீங்கன்னா, அரேபியப் பாலைவனத்துல, கால்கரி சிவா உதவியோட படமாக்கிடலாம் என்ன சொல்றீங்க?'( சிவஞானம்ஜி உடல் முடியாத நிலையிலும் ஓடி எஸ்கேப்பாகின்றார்). அப்படியே இஸ்ரேல்-லெபனான் பார்டர்ல ஒரு சண்டைக் காட்சிக்கு வஜ்ரா இருக்கவே இருக்காரு. என்னது மியூசிக்கா? அதுக்குதான் நம்ம சிமுலேஷன் இருக்கவே இருக்காரே...அடப்போங்க ஸார் ஹீரோவுக்கு விவேக்க வுட்டா ஜனங்களுக்கு அட்வைஸ் கொடுக்க வேற யாரு இருக்கா? (அடப்பாவிங்களா... இம்சை அரசன் மாதிரி காமெடி பண்ணலாமுன்னு பாத்தா, டாக்குமெண்டரி போட்டு கவுத்துடுவானுங்களேன்னு விஸ்க்கென்று எஸ்கேப்பாகின்றார் விவேக்)

ஜொள்ளுப்பாண்டி: எனது பணி இளசுங்கள கவருவதே என்ற உன்னத நோக்கோடு ஹீரோவின் பயணம் பஸ்ஸாடாப்பில் தொடங்குகின்றது. காடு, மேடு, கழனி, கஞ்சித்தொட்டி என்று போகுமிடங்களிலெல்லாம் அவனுக்கு மவுசு. முதலில் காட்டில் ஒரு கரலாக்கட்டை பெண் காதலிக்கின்றாள். அதன்பின் மேட்டில் ஒரு திம்ஸுக்கட்டை. அப்புறம் கழனியில் ஒரு நாட்டுக்கட்டை. அப்புறம் கஞ்சித்தொட்டியில் ஒரு செமகட்டை என்று பட்டையக் கிளப்பும் ரோல். இது போதாதென்று வெளிநாடுகளுக்குச் சென்று வெள்ளைக்கட்டைகளோடும் விளையாடுகின்றார். கொசுறாக மாடல்கட்டைகளையும் கொஞ்சுகின்றார். இப்படம் மட்டும் வெளிவரட்டும். அப்புறம் அடுத்த மன்மதனாய் நாந்தான் பேசப்படுவேன். பாத்தீங்களா மன்மதன் நாந்தான்னா நயாந்தாரா யாருன்னு கேக்கிறீங்களே...ஹிஹிஹி? ('ஙௌக்காமக்கா'வென கதை கேட்ட இணையமக்கள் 'உருட்டுக்கட்டை'யுடன் துரத்த ஜொள்ளுப்பாண்டி அப்ஸ்காண்ட்)

காசி: நாளைய சமுதாயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்னத்தில் இன்றைய வரலாறுகளைப் பதிய வேண்டுமென்னும் தாகமுள்ளவன் என் ஹீரோ. தாபமுள்ளவன் என் ஹீரோ (உடனே பத்து பேர் கை தட்டுகின்றார்கள்). எல்லாவற்றையும் ஒரே இடத்தில் திரட்டி, வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உன்னத முயற்சியில், வில்லன்கள் குறுக்கிடுகின்றார்கள். "கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இதுவொரு தமிழ்மாலைப் பொழுது" என்று ஹீரோ பாடுகின்றார். வில்லன்களின் எல்லா கேள்விகட்கும் "மௌனமே காதலாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும்" என்று சொல்லிச் செல்லும் 'மௌனி'தான் என் ஹீரோ (கைத்தட்டல் அடங்க மறுக்கின்றது). இறுதியில் வெறுத்துப் போய் "சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை" என்று பாடிவிட்டு, நித்தியசோதனை என்ற வரலாறு எழுதிவிட்டு, திரட்டியதை விற்று விடுகின்றான் ஹீரோ வெறும் தவசதானியங்களுக்கு (கேட்போரின் விசும்பொலி). இறுதியில் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா" என்று ஹீரோ அமைதி காண ஐய்யப்பனிடம் செல்வதாய் படம் முடிகின்றது. ஹீரோவா நம்ம சேரனைப் போட்டுடலாம். என்ன அழும்கட்டத்தில் மட்டும் முகத்தை மூடிவிட்டால் போதும். மத்தபடி பொருத்தமான கேரக்டர். (ஐயப்பனோ "என்னால பணிக்கர் பிரஸ்னத்துக்குக் கூட தீர்வு சொல்ல முடியும். ஆனா இந்த நித்தியப் பிரச்சினைக்கு?" என்று கூறிவிட்டு புலி மீதேறி கிலியுடன் அடர்ந்த காட்டுக்குள் ஐக்கியமாகின்றார். இனி படத்தில் நடிக்கவே மாட்டேனென்று அரசியலில் புகுந்து விடுகின்றார் சேரன்).

வஜ்ரா ஷங்கர்: நீங்க நெனைச்ச மாதிரியே படம் இஸ்ரேலைச் சுத்திச் சுத்தி வருது. நீளமான அடுக்கு வசனங்களை, புள்ளி விவரத்தோடு அள்ளித் தெளிச்சி அசத்திப்புடுவோம்ல. "ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விட்டு விட்டு Peace Peace என்று பேசுகின்றாயா? மவனே பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்"ன்னு அடித்தொண்டையியில ஹீரோ கத்துறதுலேர்ந்து ஸ்கிரீன் பிளே ஆரம்பம். ஸமீபகாலமா சுமார் 2000 ஆண்டுகளா இஸ்ரேலியர்கள் படும் துன்பத்தை நம்ம டோண்டுவின் உதவியில் அப்பிடியே தத்ரூபமாக் காமிக்கிறோம். என்னாது அப்ப வில்லனுக்கு யாரு வசன உதவியா? அட வெளங்காப்பயலுகளா... நம்ம நிலமெல்லாம் ரத்தம் எழுதின பாரா'தான். ஹீரோவா இவ்வளவு புள்ளி விவரங்களை அடுக்கத் தெரிஞ்ச ஒரே ஆளு நம்ம விஜயகாந்த்தான். வில்லனாய் அடி வாங்க சோப்ளாங்கி நம்ம லெபனான் சாரி சாரி லியாகத் அலிகான். படம் பேரா ஆக்காங் 'இஸ்ரேல்புரி' (தர்மபுரி படம் நட்டுக்கிட்டாலும் சரி இவனுங்க நம்மளோட அரசியல் வாழ்வையே அஸ்தமிக்க யோசிக்கிறாங்களே என்று தனது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டு விட்டு ஓடி ஒளிகிறார் கேப்டன்)

கைபுள்ள: "என்னடாது இதுவரைக்கும் பிஞ்ச கதையாக் கேட்டு காது பஞ்சராகிப் போச்சே, இன்னும் நம்ம கடிக்கக் கைபுள்ளய காணோமின்னுதான்ன பாக்குறீங்க? என்னடா இவன் சின்னப்பயதானேன்னு தானே நெனப்பு. ரேஸ்கல்ஸ்" என்று ஓப்பனிங்கிலேயே பிட்டைப் போட்டு நுழைகின்றான் இம்சை அரசன். அட அதாங்க நம்ம ஹீரோ வடிவேலு. வில்லனா ஒரு சேஞ்ச்சுக்கு நம்ம பார்த்திபன். வலைப்பதிவு முடமான பார்த்திபனிடம், "ஏண்டா வா.மாணிகண்டனுக்கு ஆப்போஸிட்டா எழுதுறது யாருன்னு தெரியுமா?" என்று கேட்பார். முழிக்கும் பார்த்திபனிடம் "Go. ராகவன்டா என் வென்ரு" என்று பொடனியில ஒண்ணு குடுக்குறதுக்கு இணையமே குலுங்கும். கல்யாணம் பண்ண வேண்டுமென்ற பார்த்திபனிடம் "எப்பேர்ப்பட்ட பொண்ணு வேணும்?" என்று வினவுவார். "ஏதோ வத்தலோ, தொத்தலோ" என்பார் பார்த்திபன். "வத்தல்னா அது சரி. அது ஒன் ரேஞ்சு. அதென்னடா தொத்தல்?" என்று மறுபடியும் ஒரு அடி. "தொத்தல்னா அடி என்னத்துக்கு? அவ்வ்வ்வ்வ்வ்" என்று பதுங்கும் பார்த்திபனைப் பார்த்து சவடாலாய் "டேய் தொத்தல்னா அது ஆப்பத்துக்கும், அல்வாவுக்கும் பொறந்த ஹைபிரிட்டுடா. ஒன் முகத்துக்கு தொத்தலா கேக்குது. இப்பிடியே பஸ் புடிச்சு துபாய்க்கு ஓடிப்போயிடு" என்று விரட்டும் போது உலகமே சிரிப்புச் சுனாமியில மூழ்கிடும்ல. என்னாது ஹீரோயினா மடிப்பு அம்ஸாவா... என்னது சின்னப்புள்ளத்தனமாயிருக்கு போயி மல்லிகா ஷெராவத்த அள்ளிட்டு வாடாங்கோவ்...(போலி கைப்புள்ள அலப்பரை தாங்க முடியாமல் வடிவேலு "அவனா நீயென்றபடி" வாய் பிளந்து நிற்கின்றார்)

(நீளம் தாங்க முடியலீப்பா... படிச்சுட்டு சொல்லுங்க அடுத்த முயற்சி செய்யலாம்)

Tuesday, August 22, 2006

கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்

சுஜாதா, மதன், கிரேஸி மோகன், பாலகுமாரன், எஸ்.ரா, ஜெயமோஹன் போன்ற (ந)அச்சு ஊடக வித்துவான்களையே கோலிவுட் தத்தெடுத்துக் கொள்கின்றதே என்று நான் ஆதங்கப்படாத நாளே இல்லை எனலாம். ஏன் இணைய எழுத்தாளர்களுக்கு கதை விடத் தெரியாதா? இதோ இணைய ஜாம்பவான்கள் கதை விடத் தயாராகின்றார்கள்:

ரஜினி ராம்கி: ஒரு அருமையான கதை கைவசம் இருக்கு. சொல்றேன் கேளுங்க. திருக்குவளைன்னு ஒரு சின்ன ஊரு. நம்ம கதாநாயகன் அங்கதான் பிறக்கிறார். அப்புறம் அஞ்சு வயசுல புளிப்பு முட்டாய் வாங்கித்தராத தகப்பனை எதிர்க்க, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்க ஒரு புரட்சியாளன் உருவாகின்றான். பின்னர் அவனே அரசியலில் நுழைந்து ஐந்து முறை முதலமைச்சராகவும் ஆகின்றான். இதுல ரஜினி ஸார்
நடிச்சா கண்டிப்பா படம் பிளாட்டினம் ஜூப்ளிதான். வில்லனா சோக'தாஸ்'ங்ற கேரக்டருல பிரகாஷ்ராஜைப் போட்டு பெண்டைக் கழட்டலாம். படத்தோட ரெண்டு ஹீரோயின்ஸ் யாரு யாருன்னு தலைவர் முடிவு செஞ்சுட்டா போதும். நாளைக்கே படத்த ஆரம்பிச்சுடலாம். (அவசர அவசரமாக சத்திக்கு எஸ்.எம்.எஸ் பறக்க, படித்துப் பார்த்த ரஜினி பதற்றமாகின்றார்)

பி.கே.எஸ்: ஹே ஹே ஹே கொஞ்சம் நிறுத்துப்பா. இது சரித்திரப் படங்களின் காலம். கோலிவுட் இம்சை அரசனிலிருந்து, ஹாலிவுட் பைரேட்ஸ் வரை பார்த்துத் தெளியவேண்டுமென்று எனக்கு இளவதிலேயே போதித்த ஆசானை அன்புடன் நினைத்துப் பார்த்து, மனதில் வியக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்க்கும் வாய்ப்புப் பெற்றவன்...

ரஜினி ராம்கி: ஏங்க அங்கங்க ஒரு புல்ஸ்டாப் போடுங்க. பாருங்க எப்பிடி மூச்சு வாங்குது?

பி.கே.எஸ்: சரி. கதைக்கு வருவோம். குஜராத் என்கின்ற பிற்படுத்தப்பட்ட மாநிலத்தில் நமது கதாநாயகன் பிறந்து, வளர்ந்து பின்னாளில் ஆதிக்க சக்தியை எதிர்க்கும் அகிம்சைத் தலைவரா அவதாரமெடுக்கின்றார். ஹீரோவா யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனா உண்மையான ஹீரோ யாருன்னா படத்துக்கு வசனம் எழுதப்போகும் ஜெயக்காந்தன்தான். (விஷயம் கேள்விப்பட்டு ஜெர்க்காகின்றார் ஜெயக்காந்தன்)

முகமூடி: ஆளாளுக்கு இப்பிடி கதை வுட்டுக்கிட்டு இருந்தா எப்பிடி? நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. கோயம்பேடுலேர்ந்து கொசப்பேட்டைக்கு போற 12-B பல்லவனை, வண்டலூர்லேர்ந்து தப்பிச்சு வந்த குரங்குக் கூட்டம் ஒண்ணு கடத்துது. அந்த பஸ்ஸை நம்ம கதாநாயகன் எப்பிடி காப்பாத்துறார்ன்னு சொல்றோம். சும்மா ஸ்பீடு-3 மாதிரி பேசப்படப்போற படமிது. ஹீரோவா விஷால பேசி முடிச்சிடலாம். அவருதான் இண்டஸ்டிரியில கறுப்பா இருக்காரு. என்ன வழவழன்னு ஒரு மொட்டையப் போட்டோமின்னா நம்மூரு 'சாமுவேல் ஜாக்ஸன்' அவருதான். அப்பிடியே நம்ம இராம.நாராயணனைப் பிடிச்சு டைரக்டராப் போட்டுட்டா போதும். சும்மா ஜிவ்வுன்னு எல்லா செண்டர்லேயும் கூட்டம் கூடுமில்ல. (விஷால் உடனடியாக சிலப்பதிகாரம் பட ஷெட்யூலிலிருந்து காணாமல் போய்விட்டதாக செய்தி பிளாஷாகின்றது)

பி.கே.எஸ். (மனதிற்குள்) அடப்பாவி Snakes in the Plane'னை மடிச்சிப் போட்டு கத வுடுறனுங்களே...
முகமூடி: (உணர்ந்தவராக மனதிற்குள்) ஆமாமா இவரோடது மட்டும் ஒரிஜினலா என்ன? காந்திய அப்பிடியே உல்டா பண்ணி டகால்டி காட்டுறானுங்களே...

ரோஸாவசந்த்: கதை என்ற பதத்திற்கே அர்த்தம் தெரியாத அனர்த்தங்களுடன் இனிப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற பொதுப்புத்தி கொஞ்சம் வந்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒருப் பிரச்சினையுமில்லை என்றாலும் அதைச் சொல்லி உங்களுக்கு விளக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் வெறும் விவாதக்கூத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் விஷயத்திற்கு வருகின்றேன்.
ஹீரோ ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு அடிக்கடி சென்று மதுபானம் அருந்துபவர். ஆனால் அங்கேயும் தமிழ் வளர்க்கும் ஆர்வலர் அவர். 'பார்லி-வடிநீர்' என்றுதான் ஆர்டரே கொடுக்கும் திராவிடர் அவர். சைடு டிஷ்ஷாக பீப்-சுக்கா சாப்பிடும் இந்துமத எதிர்ப்பாளர் அவர். எதை எதிர்க்க வேண்டுமென்றாலும் 'பாஸிஸமென்ற' துண்டைப் பாங்குடன் போடுபவர். இவற்றை எதிர்க்கும் வில்லனின் ஆண்குறியை அறுத்து விடும் அளவிற்கு நமது ஹீரோவிற்கு குவாட்டர் அடித்தால் (சே-)குவாராவை விடக் கோபம் வரும். வில்லனாக நமது சிம்புவைப் போட்டு விடலாம். வில்லனின் அடியாளாய் விடாது கருப்புவை போட்டு விடலாம். என்னது ஹீரோ யாரா? அடத் தாயோ*ங்களா? என் படத்துல என்னை விட வேற யாருடா ஹீரோவா நடிக்க முடியும்? போயி புரடியூசர கொண்டுவாடா பொறம்போக்கு... (பட விஷயம் கேள்விப்பட்ட சிம்பு நயன்தாராவிடம் அடைக்கலமாகின்றார்)

விடாது கருப்பு: சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். ரோஸாவசந்த் என்னும் பொட்டி பூர்ஷ்வா தனது படத்தில் என்னை வில்லனின் அடியாளாய்ப் போட திட்டமிட்டிருக்கின்றார் என்று. இவரை ராயர் காமெடி கிளப் என்ற படத்தில் திரு.மலை என்பவர் ஓட ஓட விரட்டி அடித்த காட்சிதான்
ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது
. ஏய் வெட்டி பூர்ஷ்வாவே... எனது கதையைக் கேள். வில்லன் ஒரு பாம்பே ரிட்டர்ன் தீவிரவாதி. ஹீரோ போலீஸ் கமிஷனர். ஆனால் தலையில் அடிபட்டதால் தீவிரவாதியின் போன் நம்பர், மெயில் ஐடி போன்றவற்றை பச்சை குத்தி அலைகின்றார். கடைசியில் வில்லனை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகின்றார். படத்தின் பெயர் 'கஜினி காக்க'. கடைசியில் ட்விஸ்டாக அந்த தீவிரவாதி ஒரு பார்ப்பனர் என்று க்ளோஸப்புல காட்டுறோம். கத எப்பிடி? ஹலோ வில்லனா யாரு நடிக்கிறாரா? அது நம்ம பொட்டி பூர்ஷ்வாதான். அந்தாளே ஹீரோவா நடிக்கும் போது என்னோட படத்துல நாந்தான் ஹீரோன்னு முடிவே பண்ணியாச்சு. சரி சரி பணப் பொட்டிய எடுங்க. ஷூட்டிங்கிற்கு லேட்டாச்சு... (விஷயம் கேள்விப்பட்ட ரோஸாவஸந்த் காண்டாகின்றார்)

ராமச்சந்திரன் உஷா: அடடே எல்லாரும் சினிமாக் கதை வுடுறீங்களா? என்னோட கதையில ஹீரோவே ஹீரோயின்தாங்க. அவங்க பாம்பேல இருக்கிற ஸ்லம் ஏரியாவப் பாத்துட்டு கண்ணீர் வுடுவாங்க. திடீர்னு அநீதிக்கு எதிரா சவுண்ட் குடுப்பாங்க. போராடுவாங்க. ஆனா போராடுற மாதிரி தெரியாமப் பாத்துகுவாங்க. கேள்வி கேப்பாங்க. கதை எழுதுவாங்க. விஷய தானம் செய்வாங்க. மொத்தத்துல அவங்க ஒரு 'ஆல்-இன்-ஆல்' அழகுராணி. ஜான்ஸி ராணிக்கு அடுத்தபடி பேச வைக்கிற புரட்சிப் பெண் கேரக்டர். என்ன கேட்டீங்க? ஹீரோ யாரா? ஒரு நிமிஷம் இருங்க... வீட்டுக்காரரை கேட்டுட்டு வந்துடறேன். (வீட்டுக்காரர் கேள்விப்பட்டு மூர்ச்சையாகின்றார்)

இட்லிவடை: பிரச்சினையே இல்லாம பிரச்சினையை உருவாக்கிற படம் என்னோடது. கதை, வசனம், களம் பற்றி கவலையேப் பட வேண்டாம். துக்ளக், கல்கி, குமுதம், ராணி, கல்கண்டு'ன்னு ஸ்கேன் பண்ணியே ஒப்பேத்திடலாம். ஹீரோவ ஒரு கூட்டமே நடிக்குது. பிரபல எழுத்தாளர் ஒருவர். பிரபலமாகத் துடிக்கும் புதுமுக எழுத்தாளர் ஒருவர். ஸமீபத்தில் கல்யாணமான இனிக்கும் ஒருவர். இன்னும் கொஞ்சம் வழுக்கை அகலமானால் ரன்வேயே போடலாமென்று போலியாரால் புகழப்பட்ட ஒருவர். இவர் தவிர்த்து போலி ஸாமியாராய் உலா வரும் எக்ஸ்ட்ரா ஹீரோ ஒருவர். படத்தின் டைட்டில் "பஞ்ச பாண்டவர்". அடுத்த எலக்ஷனுக்குள்ள ரிலீஸ். படத்தோட பேருலதான் பஞ்சமே தவிர, மத்தபடி நெட்டுல ஹிட்டுதான் எப்பவுமே. (விஷயம் லீக்காக எஞ்சிய கோயிஞ்சாமிகள் எஸ்கேப் ஆகின்றார்கள்)

மயிலாடுதுறை சிவா: இப்ப எவன் மக்களுக்காக படம் எடுக்கிறான்? நான் சொல்றேன் பாருங்க. பிற்படுத்தப்பட்டாலும் மிகவும் பிற்பட்டதாய் தன்னை அறிவித்து, ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோரை அடித்து வீழ்த்தினாலும், தற்போது அசத்தும் ஆங்கிலத்தில் பேசுபவர் நம் ஹீரோ. புரட்சி என்ற பெயரில் திராவிட கலாச்சாரத்தையே கோட்டு சூட்டால் அடித்து வேட்டியையே கடாசியவர். மரத்தை வெட்டி பசுமை மாநிலம் காண்பவன் என் ஹீரோ. இந்தப் படம் மட்டும் ரிலீஸாகட்டும் 'படப்பெட்டியை கடத்தியவர்' என்ற பட்டம் மறைந்து 'படப்பெட்டி ஓட்டியவர்' என்ற பட்டம்தான் நிலைக்கும். என்னது ஹீரோவா யாரா? நம்ம அமைச்சர் அன்புமணிதான். முன்னாடி மாறனைப் போடலான்னு தான் நெனைச்சேன். ஆனா அவரு 'டாட்டா' காட்டிட்டாரு. (இது வேற வம்பா என்று அன்புமணி அப்பீட் ஆகின்றார்)

குழலி: ஆஹா ஆஹா... இது நடவாதா என்று நான் நடக்காத காலம் முதலாக எண்ணி எண்ணி எண்ணம் மாளாதிருந்த காலம் போய் இன்று திராவிடன் நான்தானென்று அடையாளம் கண்ட திருநாளிது. இதற்காக நான் என் 'மதி'க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வாளாவிருந்த என்னை வால் நட்சத்திரமாக்கி வானில் உலவவிட்டாயே... 'வாலாகினானும் நொந்து நூலாகவில்லையே' என்று வைரமுத்து வரிகளோடு எனது ஹீரோ அறிமுகமாகின்றான். "அறிந்த முகத்திற்கே அறிமுகமா? வெட்டிய மரம் வேர்தான் பிடிக்குமா?" என்ற பஞ்ச் டயலாக்கோடு பீடி பிடிக்கும் பெருமாளை அறை விட்டு மீண்டும் அறிமுகமாகின்றார் ஹீரோ. 'என்னோடு ஜெயங்கொண்டம் கலா தியேட்டருக்கு வந்தாயா? படப்பொட்டி கடத்தினாயா? இல்லை விருத்தாசலம்-சென்னைச் சாலையில் மரம் வெட்டிப் போட்டாயா? யாரைக் கேட்கின்றாய் திராவிடன் யாரென்று?' என்று காது கிழியும் பஞ்ச் டயலாக்குகளை அய்யா மாலடிமை எழுதிக் கொடுத்திருக்கும் பட்சத்தில் படம் எல்லா செண்டர்லேயும் ஹிட்டுதான். (மாலடிமை அய்யா மயக்கம் போட்டு விழுகின்றார்)

துளசி கோபால்: 'என்ன நடக்குது இங்க?' அப்பிடின்னு டைட்டிலோட நம்ம படம் ஆரம்பிக்குது. ஒரு பழத்திற்காக உலகை சுற்ற நான் ரெடின்னு ஹார்லி-டேவிட்ஸன் பைக்கில் இரண்டாம் பிள்ளை முர்ஹேன் அமர்ந்து படபடக்க. மூத்தபிள்ளை பீள்யாரோ "Ma, Dad World - World Dad,Ma"டா என்று பஞ்ச் கொடுத்து பழம் வாங்க ஒரே கிளாப்ஸ். ஹார்லி டேவிட்ஸன் பைக் மெக்கானிக்கா (காதல் முருகன் புகழ்) பரத் நம்ம மூர்ஹேன் கேரக்டர். (ஆனா பீள்யாரா யாரைப் போடலாமென்று குழப்பத்துடன் அவர் கோபாலைக் கேட்க அவர் விழுந்தடித்து ஓடுகின்றார்)

இராமகி: பலுக்கிப் பெருக்குதல் நம் கலை. எந்த வார்த்தைக்கும் தமிழ் வேருண்டு என்பதை திராவிடன் அறிவான். உதாரணமாக "கேட்டை" என்பது "கேட்" ஆகி, அதுவே பலுக்கிப் பெருகி வடமொழியில் தவறாக "கேட்ஸ்" ஆனது. ஆகையால் பெயரில் "கேட்ஸ்" உள்ளவரெல்லாம் பிறப்பிலில்லாவிடினும் திராவிடன்தான் போன்ற புரட்சிக்கருத்துகளை எடுத்துச் சொல்கின்றான் என் நாயகன். இந்த எனது களக்கருத்தையே அமெரிக்கர்கள் சுட்டு "My Big Fat Greek Wedding" என்று எடுத்து விட்டார்கள். இதில் 'மை' என்ற வார்த்தை 'மசி' என்பதிலிருந்து மருவி, 'பிசின்' எனக் கிளைத்ததால், பேசாமல் 'அசின்'னே நாயகியாகட்டும் என்று முடிவெடுத்து விட்டேன். தம்பி தேனப்பன்தான் ப்ரொட்யூசர். (ஏற்கெனவே மண்டை உருளும் தயாரிப்பாளர் தேனப்பன் இனி சினிமா பக்கமே தலைவைக்க மாட்டேன் என்று பிள்ளையார்பட்டி ஓடி விடுகின்றார்)

சின்னவன்: "சின்னவா சின்னவா மன்னாதி மன்னனல்லவா" என்ற பாடலுடன் கலாய்க்கும் பார்ட்டியாக அறிமுகமானலும் என் ஹீரோவிற்குள்ளேயும் ஒரு அந்நியன் அடங்கிக் கிடக்கின்றான். ஒரு பிரச்சினையில் பொங்கியெழுந்து பத்து பெயர்களில் தசாவதாரம் எடுத்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கின்றான். அந்நியன் ஷங்கர் போல கிராபிக்ஸ் டகால்டி இல்லாமல் ஒரே ஐபி அடையாளத்துடன் எனது ஹீரோ எளிமையாக வலம்வர ஒருநாள் கருங்காலிகளால் காட்டிக் கொடுக்கப்படுகின்றான். அநீதிக்கு எதிரான வேடத்திற்கு தண்டையனையா என்று வெறுத்துப் போய் "போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்" என்ற வைதேகி காத்திருந்தாள் பட டயலாக் பேசிவிட்டு கேமராவுடன் ஆப்பாயில், ஆம்லெட்டு என்று படமாய் சுட்டுத் தள்ளுவதாய் படம் முடிகின்றது. இந்த ரோலுக்கு பொருத்தமானவர் நம்ம தனுஷ்தான். ஏன்னா அவரு கோவப்பட்டாதான் சகிக்காது. அப்புறம் ஹீரோயினா? இராமகி படத்துல நடிக்கலேன்னா நம்ம அசினுதான்... (தனுஷ் 'மாமா இமாலயாஸுக்கு டபுள் டிக்கெட் போடுங்க' என்றபடி ரஜினி காலைப் பிடிக்கின்றார்)

(இப்போதைக்கு ஒரு டஜன்தான் என்றாலும் பலருடைய எண்ணங்களும் கைவசமுள்ளன. சினிமா இண்டஸ்ட்ரிபடி நல்ல சகுனம் பாத்துட்டு வாரன்)