Thursday, April 06, 2006

சினிமா விமர்சனம் For Dummies

வர வர யாரெல்லாம் சினிமா விமர்சனம் எழுதுறதுன்னு வெவஸ்தையே இல்லாமப் போச்சி பாஸு. இந்த லட்சணத்தில் எடுத்த எடுப்பிலேயே ஒரு படத்துக்கு ரெண்டு விமர்சனம் வேற... தோடா அதுவும் ஒரு துண்டு துக்கடா போஸ்டர் கூட இல்லாம... வெளங்குமாய்யா ஒலகம். சரி பரவாயில்லை. நச்'சுன்னு விமர்சனம் எழுத நாற்பது வழிகள் கேட்டாரு முகமூடி. நீர் எழுதியிருப்பதுவே நச்சாகத்தானே (குசும்பா நீ வெஷம்ப்பான்னு யாரோ புல்லரிக்கிற மாதிரி இருக்கு) இருக்கு. மேலும் நச்சாக்கனுன்னா இந்தா புடிங்க சிம்பிளா:

1. படம் பார்க்கும் போது தாக சாந்தி செய்து கொள்ள அடிக்கடி எழுந்து போனால் (அட குளிர்பதனப்பெட்டிக்குப்பா) கதையிலிருந்து விடுபட்டு விடுவோம் (க்கும் ரொம்ப முக்கியம்). எனவே அனைத்து கலர் திரவங்களையும், சைடு டிஷ்களும் சூழ படம் பார்க்க ஆரம்பியுங்கள். சிந்திய மிக்சரில் கவனத்தை சிதற விடாமல் கவனம் படம் மீது இருக்க வேண்டியது அதி முக்கியம். தாகசாந்தியின் உபயமாக விக்கல், தும்மல், உச்சா போன்ற சைடு எபெட்டுகளை கண்ட்ரோல் பண்ணினால் நல்லது. கவனத்தை குவித்து வைத்து உங்களது குண்டிலினி சக்தியை விமர்சனத்திற்குப் பயன்படுத்தலாம்.
2. இப்போ உங்களுக்குப் புடிச்ச பேருல கேரக்டர் வருதுன்னு வெச்சுக்கங்க. உடனே நீங்க பண்ண வேண்டியது "Pause" போட்டு விட்டு அந்த காரெக்டர் பேசும் வசனத்தைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வசனங்களை அப்பிடியே விமர்சனத்துலப் போட்டா ஒரு ரியல் எபெக்ட் வரும். (குடும்பத்தோடோ, நண்பரோடோ பார்த்தால் அவர்களுக்கு இச்செய்கை கண்டிப்பாக கோபமூட்டும். அட்சீஸ் பண்ணிக்க சொல்லுங்க. விமர்சனவாதியாவதுதானே நமக்கு முக்கியம்?)
3. நேரம் கிடைத்தால் DVD'ல் கதைச்சுருக்கம் படிக்கவும். ஓஸ்காரா, கோல்டன் குளோபா இல்ல வேறேதும் பரிசு வாங்கா விட்டாலும் நாமினேஷனாவது ஆகியிருக்கின்றதா என்று குறிப்பெடுத்துக் கொள்ளவும். பெரிய ரேஞ்சுல பிலிம் காட்ட இது உதவும்.
4. படத்தை கதையை வைத்துக் கொண்டு திறமையாகப் பிரிக்க வேண்டும். காதல், பாடல், பின்னணி இசை, கோபம், சிரிப்பு, அழுகை, கற்பழிப்பு, வில்லனின் பேக்கிரௌண்ட், ஹீரோவின் உன்னதம், ஹீரோயினின் மறைக்காத/வெளிப்பட்ட நடிப்பு, அங்கதம் செய்பவனின் அங்க சேஷ்டை போன்றவற்றை தொடர்ந்து "நோட்ஸ்" எடுத்துக் கொள்ளவும். "குருதிப்புனல் படம் பெரிதாகப் போகாததிற்கு அதில் பாடல்களே இல்லை" போன்ற நோபல் கண்டுபிடிப்பு வசனங்கள் கொசுறாக விமர்சனத்தில் வர வேண்டும்.
5. கண்டிப்பாக ஒன்றிரண்டு பாடல் வரிகளை மனப்பாடம் செய்து கொள்ளவும். வேறு எழுத அதிக விஷயமில்லையென்றால், "குப்பத்து ஜனங்களின் மத்தியில் இரண்டு ஹீரோக்களும் டோய் அந்த தாளம் அடிடா டோய் அந்த பாட்டைப் படிடா என்று ஆடுவது உணர்ச்சிப் பூர்வமாகப் படமாக்கப்பட்டிருந்தது" (படம்: பட்டியல்) என்று சொன்னால் நீங்கள் வளருகின்றீர்கள் விமர்சனத்தில் என்று அர்த்தம்.
6. சான்ஸ் கிடைக்கும்போது திரைகதை எழுதுவது எப்படி (சுஜாதா), ஹாலிவுட் அழைக்கின்றது (LA ராம்) போன்ற வீணாய்ப் போன புத்தகங்களை படித்து வைத்துக் கொள்ளவும். புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் உங்களுக்குப் புரிய வேண்டுமென்று அர்த்தமில்லை. அம்மாதிரி புத்தகங்களைப் படித்தால் உங்களது விமர்சனம் "டெக்னிக்கல்" அந்தஸ்து பெறும். எடுத்துக்காட்டாக "பச்சைக் கிளிகள் தோளோடு என்ற பாட்டில் குடும்பத்தோடு மண் மிதிக்கும் காட்சியில் அப்பா கமலஹாசனின் காலிலிருந்து கிளந்தெழும் சகதி பாவாடை தாவணியில் சிக்கென்று ஆடும் மகள் கஸ்தூரியின் முகத்தில் தெரிக்கும். அதை அழகாக அப்பர் ஆங்கிளில் குளோசப்பாக கஸ்தீரியின் முகத்தைக் காட்டி விநாடிக்கும் குறைவாக ப்ரேம் ப்ரீஸ் செய்வது தமிழ்ப்படங்களில் செய்யப்பட்ட புது யுத்தி." மவனே இணையத்துல அருண் வைத்தியநாதனுக்கு அடுத்தபடி நீங்கதான்ன்னு பேசப்படுவீர்கள்.
7. காதில் பஞ்சு வைக்கும்படியாக இருந்தாலும் ஒரு விமர்சகர் பஞ்ச் டயலாக்குகளை விட்டு விடவே கூடாது. "டேய் நான் விழுந்தா உரம். எழுந்தா மரம். படுத்தா பாம்பு. விடுத்தா அம்பு" போன்ற அச்சு-பிச்சு-பஞ்ச்சு டயலாக்குகளை விட்டுவிட்டால் நீங்கள் என்ன புண்ணாக்கு விமர்சனம் எழுத முடியும்?
8. பட லொகேஷன்கள் குறித்து கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். ஏனெனில் பெரும்பாலான பாடல்கள் ப்ரொட்யூசரின் பர்ஸ் கனத்தைப் பொறுத்து லொக்கேஷன்கள் வேறுபடும். "விசாகப்பட்டினத்து சிவந்த மண்குன்றுகளுக்கிடையே ஹீரோ வில்லன்களை அடிப்பது, மேட்ரிக்ஸ் படத்தில் நியோ போடும் சண்டைகளை பீட்டர் ஹெயின்ஸ் கண் முன் நிறுத்துகின்றார்" என்றால் எவ்வளவு எபெக்ட் குடுக்கும் தெரியுமா?
9. பாயிண்ட் 8 படிச்சேள்னா ஒரு உண்மை விளங்கும். தமிழ்ப்படம் பற்றிய விமர்சனம் எழுதும் போது ஆங்கில, ஸ்பேனிஷ், ஹிந்தி படங்களைப் பற்றி மேற்கோள் காட்டினால் உங்களது மல்ட்டி-கல்ச்சர் அவேர்னெஸ்ஸை உலகினுக்குத் தெரியப்படுத்தலாம். "தீன் திவாரே, 21 கிராம்ஸ், அமோரஸ் பெரோஸ் போல மூவரைச் சுற்றி நிகழும் கதைக்களத்தை ஏற்கெனவே 1962'ல் நெஞ்சில் ஓர் ஆலயமாய் படைத்தவர்தான் ஸ்ரீதர்" என்று ஐதர் காலத்து படத்துக்கு விமர்சனம் எழுதினீர்களென்றால் மவனே ஜாக்பாட்டுதான்.
10. ஒரு இழவும் வெளங்கலியா? படத்த பாத்தவுடனே பதிவு போட்டுணுன்னு கண்களில் நீருடன் கையரிக்கின்றதா? உங்களுக்கும் ஒரு வழி உண்டு. கண்ணெரிச்சலுக்கு சொட்டு மருந்து விட்டு, கையரிப்புக்கு அஞ்சால் அலுப்பு மருந்து போட்டுக்கிட்டு, ரெண்டு வேலியம் மாத்திரைய உள்ள தள்ளுங்க. உமக்கு விமர்சனம் பண்ண வரவே வராது. ஏன்னா இந்த நெலமையில This DUDE Kamal'ன்னு தூய ஆங்கிலத்தில் பினாத்தத்தான் வரும்.
11. பாயிண்ட் பத்துல கோச்சுக்கிட்ட மக்கள்ஸே... உமக்கான இன்ஸ்டண்ட் விமர்சனம் எழுத ஒரு வழியுண்டு. இங்கே கிளிக்குங்கள். . அட இந்த இழவைத்தானே எல்லாரும் பண்றாங்கன்னு சொல்றீங்களா? ம்ஹூம் நான் மாட்டிக்க விரும்பலேப்பா... அப்பீட்டு.

8 comments:

PKS said...

Padithean. Rasithean. Sirithean.

- Thanks and regards, PK Sivakumar

துளசி கோபால் said...

யோவ் குசும்பு,

உமக்கு நிஜமாவே பயங்கரக் குசும்புய்யா:-))))

சன்னாசி said...

IMDB போனால் மட்டும் பத்தாது குசும்பரே, சைடிலே external reviews என்று ஒரு சுட்டி இருக்கும், அதை ஒரு தட்டு தட்டினால் கடகடவென்று இருபது முப்பது விமர்சனங்களும் வந்து விழும் - ஜில்ஜில் ஜிகர்தண்டாவுக்கு இதுவும் உபயோகமாயிருக்கும் தானே ;-)

ஒரு சின்ன உதாரணம் இங்கே ;-)

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணே கலக்கிபுட்டீங்க !
அப்படியே "நக்கல் for dummies" எழுதினீங்கன்னா என்னைய மாதிரி "வளரும் கலைஞர்"??!!களுக்கு உபயோகமா இருக்கும் :)))

Boston Bala said...

அட்றா! பயனுள்ள குறிப்புகள் :-)

சன்னாசி சொன்னது போல் 'புகழ்பெற்ற விமர்சகர்களின் பார்வை' படித்துவிடுவது அவசியம். ரோஜர் ஈபர்ட் (கதை சுருக்கத்துக்கு), சாலன்.காம் (ஃப்ரென்ச், இத்தாலி என்று உலகளாவிய நோக்கிற்கு), ஸ்லேட்.காம் (அமெரிக்க காலகட்டத்திற்கேற்ற அலசலுக்கு) பயன்படும்.

டிவிடி-யில் உள்ள எக்ஸ்ட்ராக்களைத் தவறவிட வேண்டாம். நிறைய பேட்டிகள், திரைப்படத்தினூடே நிகழ்ந்த சுவாரசியங்கள், 'தி மேகிங் ஆஃப்', ஸ்டோரிபோர்ட் அரங்கங்கள், கலை இயக்கம், ஒளி ஓவியருடன் சந்திப்பு எல்லாவற்றில் இருந்தும் ஒரு வரி எடுத்து விடலாம்.

நடிகர், இயக்குநரின் முந்தைய படங்களோடு ஒப்பிடுதல், திரைவரலாற்றை ஒப்பிடுவது என்று நீட்டித்தால் 'காலச்சுவடு' தரத்துக்கு உயரும் ;-)

குசும்பன் said...

வணக்கம் PKS ஸார்! தன்யனானேன். ஷுக்ரியா!

துளசியக்கா,

விமர்சன வித்தகியின் வாயால் குசும்புரிஷியானேன். தன்யவாத். :-))(டெல்லி தமிழ்)

வாங்க வாங்க சன்னாசி ஸார்...

அடடே ஐடியா அட்டகாசம் :-) ஒரு வேளை அனுபவம் பேசுகின்றதோ? ;-)

பாண்டியரே,

பார்முக்கு வந்துட்டீங்க போலருக்கு உங்க பதிவுல. நக்கல் For Dummiesஆ? ஏம்ப்பா நீங்களே அடிச்சு ஆடுற ஆட்டத்துல நான் என்ன புதுசா ஐடியா கொடுக்கப் போறேன்? ;-)

வந்துட்டாருய்யா பாபா... :-)
அது எப்பிடிங்க இந்த அளவுக்கு இணையத்த மேஞ்சு வைச்சிருக்கீங்க? ;-)

அபுல் கலாம் ஆசாத் said...

குசும்பனாரே,

கலக்கியிருக்கின்றீர்கள்.

அடுத்த முறை விமர்சனம் என எழுதத்துவங்கினாலே உங்கள் பதிவு நினைவுக்கு வருமென்பதில் சந்தேகமில்லை.

நண்பரே, இந்த ஃப்ரீஸ் செய்து எழுதும் வகையில்தான் வீர்-ஸாராவில் ஷாருக் படிக்கும் கவிதையை எழுதிக்கொண்டேன். உங்கள் குசும்பான வரிகளைப் படித்ததும் இடிஇடியென சிரித்தேன்.

இதோ ஹுசைன் சகோதரர்களின் 'நயே கப்டே பதல்கர் ஜாவூன் கஹான்' கவ்வாலி ஓடிக்கொண்டிருக்கிறது. ப்ரீஸ் ரீவைண்ட் கண்டிப்பாக உண்டு.

சல்தாஹை'பா (இது சென்னை உருதுக்காரர்கள் பாணி).

அன்புடன்
ஆசாத்

குசும்பன் said...

அடடே ஆஸாத் பாய் நம்ம பதிவிலா? ஏதேது வெகுதூரம் வந்து விட்டீர் (கட்டபொம்மன் பாணியில்... :-)

//'நயே கப்டே பதல்கர் ஜாவூன் கஹான்'//

"புதிய ஆடையை மாற்றி எங்கு போவேன்" கவ்வாலி எப்டியிருக்கங்ணா? ப்ரீஸ் பண்ணாம சொல்லுங்க ;-)

ஷுக்ரன் சாதிக் (இது அரேபிய பாணி :-)