Friday, February 02, 2007

இணையக(கா)தை for Dummies

ஏதாவது ஒரு பதிவு போட்டு திரட்டியில் சேர்த்து விரட்டிப் பிடித்து, பின்னூட்டம்/விவாதக் குத்துகளில் மூழ்காவிட்டால் உறக்கம் வருவதில்லை என்று செந்தழல் கண்களுடன் கொலைவெறியுடன் அலைபவரா நீங்கள்? கவலைபடாதீர்கள். இணையத்தில் நீங்கள் தனியரல்லர். வெறும் பதிவு போட்டு அவ்வாறு அலைவதை விட தத்துவார்த்தமான கதை, கவிதை, கட்டுரை எழுதிப்பாருங்கள். இணையத்தில் இலக்கியமில்லை என்று சொன்ன ஜெயமோகனே தன்னைத் திருத்திக் கொள்வார். நிற்க! எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மண்டபத்தில் எழுதிக் கொடுப்பவரெல்லாம் இப்போது கிடையாது. ஏதோ என்னாலான கதை விடச் சில உதவிக் குறிப்புகள்:

1. கதை எழுதுவதற்கு முன் ஒரு குருவை மானசீகமாக செலக்ட் செய்யவும். சுஜாதா என்று ஓப்பனான பெயரை விட கநாசு, சிசுசெ, சுரா, பாரா, நபி, வெசா, இபா என்று இனிஷியல்களை அள்ளிப் போட்டால் பார்க்க பாந்தமாய் இருக்கும்.

2. கதை எழுத உதவும் உத்திகளை விவரிக்கும் பொழுது பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல், பிளாக் ஹோல், *** ஹோல் என்று கரடு முரடாக கோர்க்க வேண்டும். படிப்பவர் இதில் நீங்கள் எந்த யுக்தியையோ குயுக்தியாக பயன்படுத்தியது தெரியாமல் திக்கித் திணறி இறுதியில் "வாவ்" என்ற பாராட்டையோ "ஓவ்/உவ்வேக்" வாந்தியையோ பின்னூட்டுவார்கள்.

3. கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல "கேரக்டருக்கு உறவினர்/நண்பர் பெயரை வைக்கலாம் தப்பில்லை. ஆனால் அதுவே அச்சானால், படமாக வந்தால் அவர்களுடனான உங்கள் உறவு எவ்வாறு இருக்கும் என்று காரண்டி கிடையாது". கதையின் உயிரான கேரக்டரென்றால் "அ, ஆ, இ" என்று பெயர் வைக்கலாம். மெய்யான கேரக்டரென்றால் "க், ங், ச்..." என்று சேப்'ஆக விளையாடலாம். இடைப்பட்ட கேரக்டர்களுக்கே இருநூத்திப் பதினாறு ஆப்ஷன்ஸ் "க, ங, ச..." என்று இருக்கின்றது. ஆரிய கேரக்டர்களுக்கு "ஹ, ஹ், ஹா, ஷ, ஜ, ஸ்ரீ" இப்படி அழைக்கலாம். கணக்கு பண்ணுவோருக்கு இருக்கவே இருக்கு "1, 2, 3, ..." செந்தமிழில் கணக்குப் பண்ண "க, ச....". என்னை மாதிரி குசும்பு புடிச்ச காரெக்டரா இருந்தா "ஃ" என்று பெயரிடலாம். இப்படி வைத்தால் தேவையில்லா காண்ட்ரோவெர்ஸிகளைத் தவிர்க்கலாம். இருப்பினும் "ஒண்ணும் ஒண்ணும் இரண்டு" என்று ஒருவர் வலைப்பதிவு வைத்திருக்கின்றார் என்பதறியவும். அவர் சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

4. அதெல்லாம் முடியாது நான் பேரு வைச்சே தீருவேன்னு அடம் பிடிப்பவரா நீங்கள்? தப்பித் தவறி கூட இணையத்திலிருப்பவரை காயப்படுத்தாதபடி OPML கோப்பை தி/விரட்டிகளிலிருந்து டௌன்லோடு செய்து, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு அங்கிருக்கும் வலைப்பதிவர்களின் பெயர்களை கவனமாகத் தவிர்க்கலாம்.

5. இனிஷியல்களால் செல்லமாக பெயர்கள்/நபர்கள் அழைக்கப்படலாம்/டுவார்கள் என்பதறிக. உதாரணமாக "குருவி கடிச்ச கொய்யாப்பழம்" என்று நீங்கள் எழுதினால் "என்னோட பெயர் குரு.வித்யா; செல்லமாக என்னை குருவி என்று அழைப்பார்கள். சிறிய வயதில் நான் கொய்யாப்பழம் திருடி அடி வாங்கியதை ஒருமுறை பதிவில் எழுதியிருந்தேன்; அதையே குறிப்பிட்டு என்னைக் கதையில் கிண்டலடிக்கின்றார் கதாசிரியர்" என்று யாராவது உங்கள் மீது பாயலாம். எச்சரிக்கை அவசியம்.

6. குழூஉக்குறி, தற்குறிப்பேற்றுதல், வழக்குச் சொற்கள், இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் போன்றவற்றை முடிந்தால் தவிர்த்து விடவும். கூகுளேஸ்வரன் உதவியோடு அவைகள் எங்காவது எகிடுதகிடாக வலைப்பதிவில் வந்திருக்கின்றதா என்று பார்ப்பது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் "சிக்கல் சண்முகசுந்தரமாகி" நலந்தானா என்று மற்றவரை பாட வைத்து விடும் அளவிற்கு அடிபடுவீர்கள். உங்களைச் சுற்றி அழகாக டான்ஸ் ஆடப்போவது பத்மினி இல்லையென்றும் உணர்க.

7. நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது "பாகேப" எழுத ஒன்றும் வாரமலர் டீகப் முக அந்துமணியல்ல. கற்றதும், பெற்றதும் எழுத சுஜாதாவும் அல்ல. கடமைகள், காயங்கள் எழுத லட்சுமி நாராயணன் அல்ல. அவர்களையும் தாண்டி புனிதமானவர்கள். அதாவது "வலைப்பதிவர்கள்". ஆகையால் உங்கள் சொந்த சம்பவங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. "ஞாயிற்றுக் கிழமை பத்து மணிக்கு எழுந்து ஊத்தை வாயுடன் காப்பி குடித்தான்" என்று எழுதினால் "மவனே நானே என்னைத்தான் குசும்பு பண்றேன்னு உன்னைச் சம்மிப் புடுவேன்". கருத்துச் சுதந்திரமெல்லாம் படிக்கிறவாளுக்குத்தான். எழுதுறவாக்குக் கெடையாது என்று அறிதல் நலம் பயக்கும்.

8. சம்பவமே இல்லாமல் கதை எழுத எப்பிடி முடியும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேட்கலாம். இப்ப வரும் கதைகள் ஆழமான சம்வம் சம்பந்தப்பட்டவை என்று நீங்கள் நம்பினால் எப்படி இணையத்தில் காலம் தள்ளப் போகின்றீர்களோ என்ற கவலைதான் வருகின்றது. கமர்ஷியல் படமெடுக்கச் சொன்னால் ஆவணப்படமெடுத்து சொந்தமாய் ஆப்படித்துக் கொள்வதற்கு ஒப்பான பாவகாரியமிது.

9. எத்தனையோ இசங்களும், இயங்களும் இருக்கும் போது எல்லோரும் புரிந்து கொண்ட மாதிரி புருடா பாவனையில் பாவிக்கும் "பெண்ணியம்" என்றெல்லாம் எழுதி உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாமலிருப்பது புண்ணியம். இல்லை ஏதாவது இயத்தை யூஸ் பண்ணியே தீர வேண்டுமென்றால் காரீயம், காரியம், ஈயம் என்று எழுதி உங்களது இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளலாம்.

10. சரி மேற்கொண்ட புல்லட் பாயிண்ட்டுகளைக் கொண்டு ஒரு வழியாக கதை எழுதி விட்டீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பு என்ன வைப்பது என்று தலையப் பிய்த்துக் கொள்கின்றீர்களா? பழமொழி, கிழமொழியெல்லாம் வைத்து அதிரடியாக ஆட்டம் போடாதீர்கள். "கூடையும் இரண்டு காடைகளும்", "பாயும் தலையணை வாத்துகளும்", "பாயாவும் மூன்று பரோட்டாக்களும்" போன்ற தலைப்புகள் பொதுவாக எந்தப் பிரச்சினைகளையும் தராதவை. இருப்பினும் டோட்டல் சேப்டி சிங்காரம் நீங்களென்றால் "!, @, #, $, %, ^, &, *, (, ), :-), ;-),..." போன்ற சிம்பல்களையே சிம்பாலிக்காக போட்டு விட்டால் குற்றமொன்றுமில்லை கொற்றவனே!

கதை எழுதி உதை வாங்காமலிருக்க வாழ்த்துக்கள் !!!

பிகு: இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு கத எளுதத்தான் வேணுமான்னு கேட்டா அது "உங்கள் சாய்ஸ்". அட இது கூட நல்ல தலைப்பாக உங்களுகுத் தோன்றினால் "அட கஷ்டகாலமே" என்று என்னால் ஆதங்கப்படத்தான் முடியும். வர்ட்டா? ;-)

6 comments:

Anonymous said...

ஓகோ, அப்படி வரீங்களா?....புரிஞ்ச மாதிரி இருக்கு....

Anonymous said...

good post..

மா சிவகுமார் said...

:-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

:-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் said...

:-)

அன்புடன்,

மா சிவகுமார்

ரவி said...

எனக்கு ஒன்னுமே புரியல...