Tuesday, March 13, 2007

இணைய அரங்கம்

இப்போ சன் டிவியில அரட்டை அரங்கத்தை விஜய.டி.ராஜேந்தர் நடத்த, அவரை கம்மென்று கவிழ்க்க இணைய அரங்கத்திற்கு அழைத்து வந்துவிட்டோம். அவரே உச்சபட்ச காமெடி என்பதால் கூட சைடு கிக்குகள் இல்லையென்றாலும் விவேக் அவ்வப்போது தோன்றுவாரென்று வாசகர்களை எச்சரிக்கின்றோம்.

ராஜேந்தர்:
இண்டெர் நெட்டுங்றது மாயவலை
இங்கன எழுதுறது தனிகலை
அவனவன் வைப்பான் அணுஉலை
பீச்சிலேயும் எடுப்பான் சூப்பர்சிலை

ஏ திந்தானக்கடி ஏ திந்தானக்கடி

என்று பாட ஸ்டேடியமே திகிலடிக்கின்றது.

ராஜேந்தர்: வாங்க வாங்க வந்த எல்லோருக்கும் வணக்கம். இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டே இண்டர் நெட்டு தான். எவனாலயும் ஈகோ டிரிப் அடிக்காம இருக்கவே முடியாது. இங்க ட்ரிப் போயி ட்ரிப்ஸ் ஏத்துற நெலமைக்கு வந்தவங்களும் இருக்காங்க. எட்டிப் பாத்துட்டு செட்டிலானவங்களும் இருக்காங்க. சுத்தி சுளுக்கெடுத்தவங்களும் இருக்காங்க. சும்மா இருக்கறவங்களும் இருக்காங்க. இதோ நானும் இருக்கேன். ப்ளாக், வலைப்பதிவு, வலைப்பூ அவசியமா? அத்தியாவசியமா? இல்லை அல்லக்கைகள் போடும் அலப்பற ஆட்டமா? இணையத்துலயும் இலக்கியம் வருமா? இப்பிடி பல டாபிக்ல பேச மக்கள்ஸ் ஆர்வமா இருக்காங்க. நானே பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது. வாங்க மாலன் சார். நீங்கதான் மொதோ போணி...
மாலன்: நெட்டுலேயும் நாந்தாங்க மொதோ போணி. ஆனா போ"நீ" பண்ணிட்டாங்க. என்னோட பொன்னான 180 நிமிடங்களை ஸ்பெண்ட் பண்ணி எவ்வளவோ டிரை பண்ணி பாத்துட்டேன். என்னைய ப்ரை பண்ணிட்டாங்க. இதுக்கு மேல என்னால முடியல அதுனால வேதனையுடன் விடை பெறுகின்றேன்.
(கூட்டத்தோடு ராஜேந்தரும் கண் கலங்குறார்)
ராஜேந்தர்: இப்போ நீங்க உங்களோட சோதனையை, வேதனையை வெளிப்படுத்தீட்டீங்க. எனக்கென்னமோ கொஞ்சம் சப்டெக்ஸ்ட் என்னான்னு புரியல...
மாலன்: நீங்க வேற வலைப்பூக்கள் எல்லாம் ப்ரீ-டெக்ஸ்ட்ல ஓடுது. இப்பிடித்தான் ஒரு சூழல் 1970'களில் சிற்றிலக்கியத்தில் நிலவியது
விவேக்: ஆஹா ஹிஸ்டிரிய அவுத்து வுட்டு ஹிஸ்டீரியா ஆக்குறாரே
ராஜேந்தர்: அப்ப இண்டெர்நெட்டு சீக்கிரம் முற்றும் சிற்றிலக்கிய சூழலுக்கு வந்துடும்னு சொல்றீங்களா?
மாலன்: (முனகுகின்றார்) ஹூம் இப்ப மட்டும் என்ன வாழுதாம்? தீப்பெட்டி படம் மாதிரி சினிமா ஸ்டில்களை சேக்குற விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்காங்க. ஏன்னு கேட்டா பிச்சைப்பாத்திரத்தால மொத்துறாங்க. இதெல்லாம் எனக்குத் தேவையா?
மனுஷ்யபுத்திரன்: இவர் நெலமை கொஞ்சமாவது தேவலாம். என்னை அனாமதேய புழுக்களெல்லாம் அனாயாசமா போட்டுத் தாக்கிடுச்சி. செங்கிஸ்கான் படை மாதிரி செட்டிலாக வுடாம செம்மிறாய்ங்க. ஆறுமுகத்தை நாவலராக்கி அழகு பாத்தோம்னு மாலன் சமாதானப் புறாவை அனுப்பினா சிக்கன்-65 மசாலா தடவி சுக்காவாக்குறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல... (கண்ணைக் கசக்குகின்றார்)
குசும்பன்: ஐய்யா நான் இணையக் குசும்பனுங்க
ராஜேந்தர்: (கிலியாகின்றார்) பேரே சரியில்லியே? ஏதோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குறோமோ?
குசும்பன்: வலைப்பூக்கள் உலகம்ங்றது ஒரு தனித்துவமானது. ஜூனியர் விகடன் மாதிரி ஜுகல்பந்தி இருக்கும். குமுதம் மாதிரி கவர்ச்சி; கல்கி மாதிரி "நடுநிலைமை"; ரிப்போர்ட்டர் மாதிரி கட்&பேஸ்ட்; நக்கீரன் மாதிரி மஞ்சள் மசாலா; கணையாழி மாதிரி கத்திக்குத்து; காலச்சுவடு மாதிரி காண்டு; இப்பிடி வெகுஜன ஊடகம் மாதிரி எல்லாமே உண்டு. ஞானவெட்டியான்-ஞாபீடம்; இளவஞ்சி-இணைய குசும்பன்; பெயரிலி-பெடிச்சி; சின்னவன்-சிறில் அலெக்ஸ்; பிகேஎஸ்-பிரேமலதா இப்பிடி கலக்கல் காம்பினேஷன் இருக்குற இடமய்யா இது. 25 வருஷமா ஜூவியை நாந்தான் தூக்கி நிறுத்தினேன்னு ஒருத்தரு சொன்னாருன்னு வைங்க நெட்டுல ப்ரூப் கேட்டு ஒடனே பிட்டப் போடுவாய்ங்க. அடுத்த இஷ்யூ வர வரைக்கும் காத்திருக்க வேண்டாம். கட்டை வெரல்ல பவர் இருக்குற மாதிரி பதிவைத் தட்டி பரபரப்பு கெளப்பிடுவாய்ங்க.
ராஜேந்தர்: இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?
குசும்பன்: அது தெரிஞ்சா நான் ஏன் நெட்டுல குப்பை கொட்டப் போறேன்?
ராஜேந்தர்: பேருக்கு ஏத்தாப்புல பெஸ்டாத்தாம்ப்பா பேசுற...
பாரா: (பாக்கை மென்றபடி) நான் அப்பவே சொன்னேன். யாருமே கேக்கலை. தமிழோவியத்த தல முழுகுன பின்னாடிதான் நான் நிம்மதியா இருக்கேன். நெட்டுல ஒன்பது கட்டளைகள்ன்னு தாம்ப்பா சொன்னேன். என்னை மனத்துக்கண்ணையே மறக்கடிச்சுட்டானுங்க. (தேம்புகின்றார்)
நாமக்கல் ராஜா: பின்னே வலைப்பூக்கள்ள என்ன வேணுமின்னாலும் எழுது அப்பிடின்னு சொல்லி முடிச்சி பதிவு பப்ளிஷ் ஆறதுக்குள்ள கொஞ்ச நாளைக்கு பதிவு போடலேன்னா குடி முழுகிப் போயிடாதுன்னு கட்டளை போட்டா எவந்தான் சும்மாயிருப்பான்? தூர வெலகுனாலே துள்ளி வந்து சண்டை போடறவனுக்கு, வெத்திலை தாம்பூலம் வெச்சி வெவரம் சொன்னா பெண்டக் கயட்டாமலா வுடுவான்?
வெங்கடேஷ்: (ஓவென்று கதறுகின்றார்)
ராஜேந்தர்: ரொம்ப நொந்து போயிருக்கார் போல. ஸார் சொன்னா நாங்களும் கூட அழுவோம்ல. நம்ம ப்ரொட்யூசரும் அழுறதுக்குத்தான் சான்ஸ் பாத்துக்கிட்டு இருக்கார்
வெங்கடேஷ்: (திக்கியபடி) சுனாமிக்கு நன்றி'ன்னு சொன்னவுடனேயே சுகுற்றா என்னைய சுத்தி சுத்தி அடிச்சானுங்க. இதையே இலங்கையிலேர்ந்து ஒரு அம்மா சொன்னா உச்சுக் கொட்டி ஆறுதல் சொல்றாங்க அதே ஆளுங்க. புரியில ஒண்ணுமே புரியல
சொக்கன்: இந்த தில்லாலங்கடி தெரியாமத்தான் நான் நெட்டுல மறந்து கூட ஒதுங்றதில்ல. சும்மா இருந்தாலும் சுலபமா வுடாம நாந்தான் நேசக்குமார்'ன்னு இப்போ சுருதியக் கெளப்புறானுங்க. நான் "தினம் ஒரு விளக்கம்" ரேஞ்சுல பவுன்சருக்கு பம்ம வேண்டியதாயிருக்கு. (மூக்கை உறிஞ்சுகின்றார்)
ராஜ்குமார்: பெரிய எழுத்தாளர்களுக்கே இணையம் ஒத்து வராது போலருக்கே?
தமிழினி: ஐய்யய்யோ அப்ப இணையத்துல எழுதி பெரிய எழுத்தாளரா வர முடியாதா? பொட்டி கட்டி சென்னைக்கு வந்தது வீணாப்போச்சா?
ராஜ்குமார்: ஹலோ நான் பெரிய எழுத்தாளர்கள் வலைப்பூவிற்கு வருவதைச் சொல்கிறேன்
தமிழினி: ஹப்பாடி இப்பத்தான் நிம்மதி. முத்துக் குமரன் நீங்களும் கவலையை விடுங்கள்
ராஜேந்தர்: இதென்ன சைடு டிராக்கு? அப்ப நீங்க எல்லாரும் நெட்டுல பிட்டு அவசியங்றீங்க... ஆனா பெரிய எழுத்தாளர்களுக்கு அனாவசியம் அப்பிடீங்றீங்க?
பெயரிலி: இங்க பல ஆடியன்ஸ் இருக்காங்க. அதுனால பல கோஷ்டிகள் எடுத்துக்காட்டா ஈழத் தமிழன் - இலங்கைத் தமிழன் ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா?
ராஜேந்தர்: என்னப்பா என்ன வித்தியாசம்?
பெயரிலி: !@#$%^&*()<> {}|_+.,? (கூட்டம் கலவரமாகின்றது)
மனுஷ்யபுத்திரன்: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும் சொன்னாங்க (மாலன் அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்)
ராஜேந்தர்: என்னப்பா இது வித்தியாசத்த விளக்குமாறு கேட்டா வெளக்குமாறு தூக்குறியே?
ஈழநாதன்: நீங்கள் காகிதக்கத்தி வீசி, வீசும் காற்றின் திசையில் காலைத் தூக்குகின்றீர்கள் என்பதைத்தான் பெயரிலி அண்ணை கூறினார்கள்
ராஜேந்தர்: (பேஸ்தடிக்கின்றார்) அய்யய்யோ கூட்டம் சேருதே? குமுறிடுவானுங்களோ?
மனுஷ்யபுத்திரன்: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும்...
ராஜேந்தர்: ஆஹா மனுஷனே போட்டுக் குடுத்துடுவாரு போலருக்கே
பிகேஎஸ்: தம்பி ஈழநாதா...இப்பிடித்தான் 2002'ல் நீங்கள் சிங்கை பிரௌசிங் செண்டரிலிருந்து வேறொரு பெயரில் பதிவிட்டிருப்பதை சொந்தப் பெயரில் சொல்லிக் கொள்கின்றேன். அதனுடைய ஐபி அட்ரஸ் இதோ...
ராஜேந்தர்: என்னது ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஐபி அட்ரஸா? எழவு என்னாங்கடா இது?
பாரா: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையவும் ஐபியால அடிச்சானுங்க
விவேக்: அம்மா அடி ஆடிட்டர் மூலமா கேட்டிருக்கேன். இதென்னடா புதுசா ஐபி அடி...? வெவரமாச் சொல்லுன்னா வெளக்குமாறு வேற தூக்குவானுங்களே
இரா. முருகன்: இவிடத்தே இண்டெர்நெட்டுலே ஜீவிதம் படு கஷ்டம் ஸாரே. நாய் நக்கியெண்டு அறியுமோ?
விவேக்: அடப்பாவிங்களா... ஏதோ பொழுது போக்கா எழுதிப் போடுவானுங்க ப்ளாக்குலன்னு பாத்தா சீரியஸா சிலம்பம் சுத்துவானுங்க போலருக்கே. பாட்டியாலா ட்ரிங்கடிச்சாலும் பத்தாது போலருக்கே...
தமிழ்பார்டெண்டர்: வாங்க விவேக் லாங்ஐலண்ட் ஐஸ் டீயை ஸ்குரூ டிரைவரோடு மிக்ஸ் பண்ணி கல்ப்படிச்சு ஈசிஆர்'ல கில்மாவா இருக்கலாம்
விவேக்: என்னது பார்டெண்டரா? அடப்பாவிங்களா என்னமோ பாலோடு நரசுஸ் டிகாஷன் கலக்குறது மாதிரி சர்வ சாதாரணமா சொல்றானே? லாங்ஐலண்ட் ஐஸ் டீயை என்னமோ டாட்டா சக்ரா டீ மாதிரி பாவிக்கிறானே. எஸ்ஸாயிடுவோமா?
ஜொள்ளுப்பாண்டி: பாரண்ணே... வித்யா எப்பிடி இருக்காக?
விவேக்: என்னது ஜொள்ளுப்பாண்டியா? ஏம்ப்பா நீங்கெல்லாம் நெட்டுல என்னாப்பா பண்றீங்க?
ராஜேந்தர்: இதென்ன இலவசக் கொத்தனார், மீட்டர் முருகேசன், இரவுக்கழுகார் இப்பிடி ஒரிஜினல், போலின்னு பல பேரு இருக்காங்களாம். கண்ணக் கட்டல?
ஜெயமோகன்: இந்த லட்சணத்துல இணையத்துல இலக்கியமாம்... எங்கே உருப்படும்?
விவேக்: ஆஹா வந்துட்டாருய்யா பழைய கம்பெடுத்து புதுக்கூழு காச்சிறவரு? சுரா'வுக்கு சிம்பிளா 350 பக்க கடுதாசி போட்டவரு இவருதானா? சோத்துக்கு அலைஞ்சா சுண்டக்கஞ்சி வேணுமாங்றாரே?
நாஞ்சில் நாடன்: குசு, பீ, மூத்திரம் என்று இணையத்திலேயும் இலக்கியம் வளருகின்றது
விவேக்: அடப்பாவிங்களா? இதுதான் இலகியமாடா? மேத்தா ஸார் சொன்னத கேக்க மாட்டீங்களா? பெண்ணியத்துல கூட கண்ணியம் வேணும்னு சொன்னாரேடா?
பிரேமலதா: மிஸ்டர் விவேக் நீங்க என்ன MCP'யா?
விவேக்: எனக்கு MC கோல்டு, RC, ராயல் ஸ்டாக் ஏன் OM, OC எல்லாம் தெரியும். MCP என்ன புது ப்ராண்டா?
(பெண்ணியவாதிகள் விவேக்கைப் பின்னியெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். விஜய.டி.ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. யார் யாரை அடிக்கின்றார்கள் என்பதே புரியாமல் போகின்றது.)

இந்நிலையில் "தாயே உன் பெயர் சொல்லும்போதே இணையத்தில் இருட்டடி கிடைக்குதே; தாய்மண்ணே சலாம்; ஆள விடு சலாம்;" என்ற பாடலோடு கூட்டம் முடிவடைகின்றது.

முடிவு? அடுத்தவட்டி மீட்டிங்குல பாத்துக்குவோம்.

13 comments:

Anonymous said...

அண்ணே என்னைக் கூட ஞாபகம் வைச்சிருக்கீங்களே.அப்பப்ப உக்கார்ந்து யோசிப்பீங்களோ

ஈழநாதன்

ramachandranusha(உஷா) said...

super :-)

குசும்பன் said...

நாதன் தம்பி,

யோசிக்கிறதுலாம் பெரிய விஷயங்ணா. நம்ம அப்பிடியே டைப்புறதுதான்.

உஷாக்கா,

நன்றி!

லக்கிலுக் said...

கும்தலக்கடி கும்மாவா
குசும்பன்னா சும்மாவா

குசும்பன் said...

லக்கியாரே...

இதுல வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் ஒண்ணுமில்லியே?

Anonymous said...

//பாரண்ணே... வித்யா எப்பிடி இருக்காக?//
அது திவ்யா இல்லே? LSVக்கு ஏதும் உள்குத்தா? ;)

குசும்பன் said...

ஆஹா அனானியண்ணே!

அது திவ்யாதான். வித்யா இல்ல. ஜொள்ஸ் கொஞ்சம் தவறிட்டாரு.

நீங்க பாட்டுக்கு LSV'ன்னு ஆக்ரோனிம் போட்டு ஆப்படிச்சுடுவீங்க போலருக்கே? ;-)

(ஆமாம் அனானி கமெண்ட்டைப் பாத்தா எழுதுனவுக யாருன்னு புரியிற மாதிரி இருக்கே? :-))

முகமூடி said...

இப்போ எதுக்கு இம்மாம் பெரிய கொசுவத்தி... சைடுல // பேருக்கு ஏத்தாப்புல பெஸ்டாத்தாம்ப்பா பேசுற // ஒரு சுயபுராணம் வேற... என்னதான் நடக்குது இங்க.

குசும்பன் said...

முகமூடியாரே...

//இப்போ எதுக்கு இம்மாம் பெரிய கொசுவத்தி... சைடுல //

ஒண்ணுமே பிரியலியே...

கால்கரி சிவா said...

இரா.முருகன், மாலன், மனுஷ்யபுத்திரன், பாரா இவங்கெல்லாம் எனக்கு சீனியர்களா? கேட்கவே புல்லரிக்கதே.

சீனியர்களே தயை செய்து வலைப்பதிவிற்கு வந்து பதியுங்கள்

சுவாமி said...

படிச்சமா, சிரிச்சமா, போனமா ன்னு இருக்கனும். இப்படியெல்லாம் கடைசீல யோசிக்க வைக்க கூடாது! உங்களுக்கும் தீனி போடுரதுக்கு ஆளுங்க குறைச்சலே இல்ல போல.

சுவாமி

குசும்பன் said...

கால்கரியாரே,

ஆமாம். அவர்களெல்லாம் சீனியர்களே! சில பல காரணங்களால் ஒதுங்கி விட்டனர்.

சுவாமி,

யோசிக்க வைக்கிறேன் அப்பிடி இப்பிடின்னு என்னையும் இண்டலக்சுவல் ஆக்கிபுடாதீங்க. அக்காங்
:-)

//உங்களுக்கும் தீனி போடுரதுக்கு ஆளுங்க குறைச்சலே இல்ல போல.//

பாஸ் இது 2000'லேர்ந்து follow பண்ண மேட்டர். சமயத்துக்கு தகுந்த மாதிரி பரிமாறியிருக்கேன். அம்புட்டுதேன்.

Muthu said...

:))

kannu vechi vechi ippa computer pakkamee vara mudiyala... chennaikku potti katti vanthu ennaiiyaa panna?