Thursday, August 07, 2008

நோபலும் குப்பைத்தொட்டியும்

நான் எழுதியவனின் எழுத்தைத்தான் பார்ப்பேனே தவிர எழுதியவனின் பின்புலத்தைப் பார்ப்பதில்லை; இது சாரு நிவேதிதா எங்கோ குறிப்பிட்டதை நினைவிலிருந்து எழுதுகின்றேன். சாருவின் எழுத்துக்களை விரும்பியோ, விரும்பாமலோ ரசித்துப் படிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஜீரோ டிகிரி மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படித்திருக்கின்றேன். இணையத்தில் கோணல் பக்கங்கள் முதல் சாரு ஆன்லைன் வரை வாசித்து வந்திருக்கின்றேன்.

தசாவதாரம் பற்றி அவரது உயிர்மைக் கட்டுரையை http://uyirmmai.com/contentdetails.aspx?cid=43 வாசித்தேன். கலகக்காரர், கான்ட்ரோவர்ஸி கதாநாயகன் என்றே சாருவை பலர் கருதிக் கொண்டிருக்கும் வேளையில், பல நல்ல கட்டுரைகளைப் படைத்திருக்கும் சாருவால் குப்பையையும் அதிலும் மட்கிப்போன குப்பைக் கட்டுரையும் படைக்க முடியுமென்று நிரூபணம் செய்திருக்கின்றார். இப்போது அக்கட்டுரையில் சொன்ன மன்னனை நானும் நினைத்துப் பார்க்கின்றேன். சாருவைக் காண முடிகின்றது.

கமல் ஒரு கலைஞன். படைப்பாளி. சாருவைப் போல. மகாநதி படம் பார்த்ததிலிருந்து சாரு கமலை சக பயணியாக பார்த்து வந்திருக்கின்றார். சந்தோஷம். இப்போது தசாவதாரம் பார்த்ததிலிருந்து கமல் ஒரு ஜாதி/இன/மொழி வெறியராக (ஏனெனில் மகாநதி பற்றிய கருத்தில் கமல் இவ்வாறெல்லாம் இல்லை) சாருவுக்குத் தோன்றுகின்றார். இப்போதெல்லாம் சாரு ஒருவரைப் பற்றி திட்டி எழுதினால் அதில் திட்டப்பட்டவரின் பின்புலம் கண்டிப்பாகத் தெரியும். இந்துத்வா, பிராமணீயம், நார்ஸிஸம் என்று கமலுக்கு எதிராக கச்சை கட்டி கொச்சையாக தனது வழமையான பாணியில் சாடியிருக்கின்றார் சாரு.

தசாவதாரம் பற்றி கமலே குறிப்பிட்டது போல, "இதில் கதை என்று ஒன்று கிடையாது. 10 வேடங்களில் தோன்ற வேண்டுமென்ற முடிவு செய்யப்பட்ட பிறகு அதற்கென பின்னப்பட்ட திரைகதையே தசாவதாரம்". சாருவிற்கு ஒரு படைப்பாளியாக தனக்கு தோன்றியதை சுதந்திரமாக எழுதுவது சுகம் தருவதைப் போல கமலும் தனக்குத் தோன்றியதை படமாக எடுக்கும் சுதந்திரம் தரக் கூடாதா? பிரச்சினை என்னெவென்றால் கமலை "உலக நாயகன்" என்று கூறி விட்டார்கள். சாருவோ "இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால் , பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" http://charuonline.com/may2008/theeranathi1.html என்று அங்கலாய்த்துக் கொள்கின்றார். ஒருவேளை இதுதான் சாருவின் அடிப்படைப் பிரச்சினையோ? கமல் எந்நாளும் சக கலைஞர்களைப் பார்த்து நீங்களெல்லாம் குப்பை. நான்தான் சர்வமும் என்று எங்கேயும் பீற்றிக் கொண்டதாய் நான் அறிந்திருக்கவில்லை. அதே தீராநதி நேர்காணலில் "நான் பத்து , இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பெரிய சுயதம்பட்டம் வேறு. அதுதான் கனிமொழி அவர்களே சொல்லிவிட்டார்களே...15 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் தத்தெடுத்துக் கொண்டதாக...அது போதும் சாரு! உங்களின் பிரச்சினையே அங்கீகாரத்துக்கு காத்துக் கிடக்கும் செத்த மனோபாவம். நான்தான் பெரியவனென்ற அகங்காரம். இதே அகங்காரம் கமல் என்ற கலைஞனிடத்திலும் உண்டு. ஆனால் அடுத்தவரை மட்டம் தட்டி வரும் அகங்காரமல்ல அது. "எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டு சென்று கொண்டே இருப்பேன். உன்னை நான் தொல்லை செய்யப் போவதில்லை" என்ற மமதை. இதில் தவறென்ன சாரு?

எவ்வளவு நாட்கள்தான் கமல் என்ற "கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்". வேண்டுமானால் தசாவதாரத்தில் ஒரு வேடத்தை பாபாவின் பக்தராய்க் காட்டியிருக்கலாமோ? அஸின் முகுந்தா முகுந்தா பாட்டுக்கு உருகுவதைப் போல, விபூதி விழும் புகைப்படம் பார்த்து பாபா பக்தன் கமலும் "உருகினேன் மருகினேன்" http://charuonline.com/oldarticls/kp236.html என்று பாடியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பீயளோ? யார் சர்க்கஸ் கோமாளி சாரு? அக்னாஸ்டிக் என்று முத்திரை குத்திக் கொண்டு ரஸ்புடீனின் ரஸாலீலாக்களையும், பாபாவின் தங்கமோதிரம்/செயின் எடுக்கும் தங்கமலை ரகஸியங்களையும் கண்டு வியக்கும் நீரல்லவா அக்மார்க் கோமாளி!

வின்சென்ட் பூவராகவன் என்பது ஒரு தலித் பாத்திரப்படைப்பு. அதனால் கறுப்பு நிறம். இறுதியில் உயர்சாதி ஒருவனின் குழந்தையைக் காப்பாற்றப் போய் உயிரையும் விடுகின்றான். தலித் என்றாலே கறுப்பா? உங்களது வார்த்தைகளில் "தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள்? " நல்ல கேள்வி! அதே போல் புத்திசாலித்தனமாக இன்னொரு கேள்வியையும் முன் வைக்கின்றீர்கள். இம்முறை ரங்கராஜ நம்பி குறித்து "அது சரி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ குணத்தை அளிக்கக்கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்துகொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா?". ஆக உங்கள் கருத்துப்படி ரங்கராஜ நம்பி ஒரு பருப்பு தயிர் சாதம் சாப்பிடும் ஒல்லிக்குச்சியாய் அசட்டு அம்பியாய் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் அவாளைப் பற்றி உமது மனதில் பதிந்துள்ள பிம்பம். அது சரியெனத் திடமாக நம்பி, நம்பி பாத்திரத்தை ஏளனப்படுத்த முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டு வரை அதிகம் அறிப்படாத குங்பூ என்ற சண்டைக்கலை உருவான இடம் இந்தியா. உருவாக்கியது Bodhidharma என்ற துறவி. உருவாக்கப்பட்டது சுய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதற்காக. இதனடிப்படையில் சைவ வைஷ்ணவ மோதல்கள் நிகழ்ந்த சமயத்தில் தன்னையும், தனது மதத்தையும் காப்பாபாற்றிக் கொள்ள ஒரு ரங்கராஜ நம்பி உடற்பயிற்சி செய்து மல்யுத்த வீரனைப் போல் காட்சியளிக்கக் கூடாதா? சினிமா என்பது 50% Fantassy 50% Reality என்று கூறியவர் கமல். நம்பி வேடத்தில் குலோத்துங்கனின் ஆட்களை அடிப்பதை விஜய்யின் ஹீரோ சேஷ்டையோடு ஒப்பீடு செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றார். ஒரு முன்னணி டைரக்டரிடம் சமீபத்தில் உரையாட சந்தர்ப்பம் கிடைத்த பொழுது சாருவின் கருத்தையே அவரும் முன் வைத்தார். தனது இடத்தை தக்க வைக்கத்தான் ஸ்டீராய்டு பயன்படுத்தி கிண்ணெண்று உடலை முறுக்கி கமல் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பதாக! அருமையான ஒப்பீடுகள்! எழுத்தாளர் தேவிபாலாவை தோற்கடித்து உம்மை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் தினமும் 20 மணி நேரம் படித்து எழுதுகின்றீர்கள் என்று உங்களிடம் யாரேனும் கூறினால் என்ன சொல்வீர்கள்? அவரவர் இடம் அவரவர்க்கு.


எனது பார்வையில் பூவராகவன் பாத்திரம் தான் மிகக் கச்சிதமாகவும், உயரியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகின்றது. மண்ணுக்காப் போராடி, உயர்சாதியினரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்பாக இருப்பது, ஒரு குழந்தயின் உயிரைக் காப்பாற்ற தனதுயிர் துறப்பது என்று பூவராகவன் ஒரு உயிரோட்டமுள்ள, கண்ணியவானாகத் தெரிகின்றான். ஆரவமுதன்தான் பூவராகவன் என்று ருக்மணிப் பாட்டி கதறி அழுவதும், அதைக் கண்டு முகம் சுளிக்கும் தனது மகனை "ஜாதிப் பிசாசே" என்று சாடுவதும், சாரு நிவேதிதாவிற்கு தெரியவில்லை. ஒரு வேளை கிருஷ்ணவேணி பாட்டிக்கு (ருக்மணிப்பாட்டி அல்ல) பூவராகவனின் கறுப்பு நிறம் தெரியவில்லை போலும்.

ஒருவேளை பூவராகவனை வெள்ளையாய்க் காட்டி, சந்தான பாரதியின் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, அவருடன் சமமாக தண்ணியடிப்பது போல் காட்டி, மொள்ளமாறி முடிச்சவிழ்க்கி வேளைகளைக் காட்டுவது போல் வைத்திருந்தால் சாரு சந்தோஷப்பட்டிருப்பார் போலும்! ஆஹா தலித்தை வெள்ளையாக் காட்டி, உயர் சாதியினரோடு சரிக்கு சமமாக சதிகள் செய்ய வைத்து உயரிய சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார் கமல். அவர் எனது ஸகஹிருதயர் என்று கொண்டாடியிருப்பார்.

கமலின் நார்ஸிஸம் பற்றிப் பேசுகின்ற சாரு தனது நாறும் நார்ஸிஸத்தை மறந்து விட்டார் போலும். தனது பிரதிபிம்ப படைப்புகளான முனியாண்டி, நேநோ, பெருமாள், குருசாமி பாத்திரங்கள் போல இப்போது புனே பூபதியும் இணைந்து கொண்டார். கலீபுல்லா கமல் வேஸ்ட்; கதைக்கு தேவையே இல்லை. ஆமாம் ஒத்துக் கொள்கின்றேன். படத்தில் கதையே இல்லை; தேவையுமில்லை என்று கமலே கூறுகின்ற போது கலீபுல்லா மட்டுமென்ன. யாருமே தேவையில்லை தான்.

என்னமோ அமோரஸ் பெரஸ், கிராம்-21போன்ற Alejandro Gonzalez Inarritu படங்களில் சமூகத்திற்கு மிகவும் உதவுகின்ற கதையம்சம் இருந்தது போலவும், தசாவதாரம் போன்ற படங்களில் அது மிஸ்ஸிங் என்பது போலவும் அங்கலாய்த்து இருக்கின்றார் மனுஷன். Alejandro ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை மறுக்கவில்லை. கேயாஸ் தியரியைக் கையாண்டுள்ள விதம் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்று என்பதால் தசாவதாரத்தின் குறைபாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் தீமைக் கொண்ட அந்நியன், சந்திரமுகிக்கு சாருவின் கருத்தென்ன என்று படிக்க முடியவில்லை. அறிவியல் மற்றும் அதன் புனைவு கதைகளத்தை கையாள்வது மிகவும் கடினம். மேலும் அதில் ஒருவரே பத்து வேடமேற்பதென்பது முன் பின் யாரும் நினைத்திராதது.

கபிலன் தனது தலைவன் பூவராகவன் பூவுடல் எதிரே கவிதை பாடிய காட்சியையும் நொந்து கொண்டிருக்கின்றார். கமலுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லையென்று. சாரு பேசாமல் நீங்கள் ஸ்டோரி டிஸ்கஷனுகளுக்குச் சென்று சிரத்தையாய் உமது ஐடியாக்களைக் கொடுக்கவும். நீர் கொடுக்கின்ற ஒவ்வொரு வாயில் நுழையா பேர் கொண்டவர்கள் எடுத்த சினிமாக்களையும் இவ்வாறு அக்கு வேறு ஆணிவேராக கிழித்து தோரணம் போட முடியும். ஜார்ஜ் கார்லின் http://www.imdb.com/name/nm0137506/ என்ற ஒரு அமெரிக்க காமெடியன், எழுத்தாளர் மற்றூம் நடிகர் கடந்த ஜூன் மாதம் இறந்தார். தனது மரணத்திற்கு யாரும் துக்கப்படாமல் தனது Funeral Services போது அனைவரும் சிரிக்க வேண்டுமென்று வேண்டுகோளுடன் மறைந்தார். அதே போல் தான் அவரது இறுதிச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. அப்படியிருக்க இறந்த தலைவன் முன்னல் இரங்கற்பா பாடும் அளவுக்கு நாமும் முன்னேறலாம் (?) என்ற சிந்தனை தவறா என்ன சாரு?

முஸ்லிம்களை அந்நியர்களாகச் சித்தரித்து தனது இந்துத்துவ சிந்தனையை கமல் முன்னிருத்துவதாக சாரு சாடுகின்றார். கமல் அரசியலுக்கு வருவது மாதிரி தெரியவில்லை. 2011 முதல்வர்கள் ஆக ஆசைப்படுவோரின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. மேலும் இந்துத்துவ கருத்துக்களை முன்வைப்பதால் அவரது படம் ஓடி விடுமா என்றும் சொல்ல முடியாது. ஆனால் உங்களை மாதிரி ஆட்களால் இப்படியெல்லாம் கூட சிந்திக்க முடியுமென்ற போது எனக்கு "full"அரித்து விட்டது. மருதநாயகம் என்கின்ற கான்சாகிப் திரைப்படம் எனது டிரீம் ப்ரோஜெக்ட் என்று கோடிகளை அள்ளி இறைத்து, இன்னும் இறைக்கப் போகும் கமல் எப்படி இந்துத்துவா கருத்தை கொண்டிருந்து அதை திணிக்கவும் முடியும் சாரு?

என்றோ கேட்ட ஒரு கதை. லோகாதய குழியில் விழுந்த ஒரு வழக்கமான மானுடன் ஒரு விபத்தை சந்திக்கின்றான். புத்தம் புது மெர்செடெஸ் பென்ஸ் கார் டோட்டல் டேமேஜாகின்றது. உயிர் பிழைத்த அவனிடம் டாக்டர் "நீங்கள் உயிர் பிழைத்ததே பெரிது; அதனால் கார் போனால் பரவாயில்லை" என்கின்றார். அய்யோ கார் போச்சா என்று பதறுகின்றான் மானுடன். அவனுக்கு கார்தான் பெரிது. டாக்டரோ "ஹலோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்பார்கள். அதுபோல் உங்களுக்கு வெறும் கையோடு போயிற்று" என்கின்றார். அப்போதுதான் வலது கையை எடுத்த விவரம் மானுடக்கு தெரிந்தது. உடனே அவன் "ஐய்யோ எனது ரோலக்ஸ் வாட்ச் போச்சே" என்கின்றான். கலிபுல்லா என்ற பாத்திரம் மூலம் நான் பார்ப்பது வேறு. "நல்லவேளை விசாரணை என்ற பெயரில் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பித்தோம்" என்ற கெட்ட விஷயத்திலும் ஒரு நல்லதை தேடும் சாதாரண மனித மனதின் வெளிப்பட்டினை அரசியலாக்கும் தந்திரம் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.

எம்ஜியாரின் நடனம், கமல் நடனம் அருமையான கம்பேரிஸன். கமலுக்கு பாங்ரா என்ன நடனமே ஆடத் தெரியவில்லை! ஹலோ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லை சாரு? அவ்தார் சிங்கின் பாத்திரம் இன்னும் நன்றாக மெருகேற செய்திருக்கலாம் என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பஞ்சாபி உச்சரிப்பு குறித்து பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஹேராமில் ஆங்கிலம், ஹிந்தி, வங்காள மொழிகளின் கலவை பலருக்கு புரியவில்லை. அதனால் அவதார் சிங்கின் உச்சரிப்பை பொறுத்துக் கொள்ளலாம் என்றே படுகின்றது.

மேக்கப்பில் செயற்கைத்தனம் (கலீபுல்லா, ப்ளெட்சர், புஷ்) இருந்தது உண்மைதான். ஆனால் ஒன்பது பேய்கள் உலவுகின்றன என்று கூறுகின்றீர்கள்! கொஞ்ச நாட்களுக்கு முன்பு (http://charuonline.com/ இணையதளத்தில் தேடி படித்துக் கொள்ளவும் நேயர்களே) நீங்கள் மாறுவேடத்தில் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளோடு மிங்கிள் ஆகி விடுவதாய் எழுதியிருந்தீர்கள். அதாவது எந்த அளவிற்கு மாறுவேடமென்றால் ஒரு பெண் உங்களை ஸ்டூடெண்ட்டாக நினத்து டா போட்டுதான் பேசுவாளாம். அந்த கர்மாந்திர மாறுவேட ரகஸியத்தை கமலுக்கு சொல்லிக் கொடுக்கலாமே சாரு! கோடி கோடியாய் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் அழுவதற்கு உங்களுக்கு கொடுக்கலாம். எப்படி வசதி?

சாருவின் வாதம்:

"இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில்கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முக மூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை. வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்துகொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக்கூடிய ஒன்று. ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க, இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?"

சரிங்க உலக நாயகன் பட்டத்தை நீங்களே வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது இனிமேல் நீங்கள் அப்படிக் கூப்பிடாதீர்கள். அல்லது அவ்வாறு வரும் செய்திகளைப் படிக்க வேண்டாம்.

கிராமியக் கலைஞர்களையும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்படும் வேளையில், கஞ்சா கருப்புக்கும், இந்திரா பார்த்தசாரதிக்கும் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதால் கேவலமாகப் பார்க்கின்றார். ஏனய்யா இந்த ஓர வஞ்சனை? காமெடிக் கலைஞன் என்றால் கேவலமா?

உச்சபட்ச காமெடியாய் கமலை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகின்றார். மக்களே இந்த ஒப்புமையைப் படித்து விட்டு அவரவர் விருப்பப்படி சிரித்துக் கொள்ளலாம்.

இன்னொன்று சிரிக்க "கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம், ‘தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா?’ என்று."

ஆமாம் சிவாஜி கணேசன் காலத்திலிருந்து கமல் காலம் வரை தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு பஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது! போதுமா? நிம்மதியாய் அடுத்த கழிசலை தொடங்கவும்.

இப்படிக்கு,
"சாரு" ஹாசன்

13 comments:

Venkat Muthusamy said...

Good one. I read Charu's article about Dasavatharam. Agreed with your posting. Cheers Venkat Muthusamy

Anonymous said...

You said very well. That guy is good for nothing. He writes 'Kutti kadhaigal' but they are nothing but his own 'vetti kadhaigal'

முகமூடி said...

ரீடரை திறந்தால் குசும்பனிடம் இருந்து புதிய பதிவென்கிறது. சவுக்கியமா?

*

சாருவை பொறுத்த வரை எழுத்தையும் எழுதுபவனின் பின்புலத்தையும் பிரித்து பார்க்க இயலாத அளவு சுயபிரதாபம் இருக்கும். அதுவே புதிய வாசகர்களை பொறுத்த வரை அவருக்கு பலமாகவும் அதே வாசகர்கள் பழக பழக அவருக்கு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது.

இவருடன் நீண்ட நாள் சாட் தொடர்பில் இருந்த வாசகி இவரை (இவரின் சைபர் செக்ஸ் ஆர்வத்தை என்று படிக்கவும்) புறக்கணித்து அவள் காதலனை மணக்க முடிவு எடுத்த பொழுது அவளை கேவலப்படுத்தி எழுதிய போதே சாருவின் பிம்பம் காணாமல்போய்விட்டது (மனதுக்குள் எப்பொழுதுமே பெரிய மன்மதன் என்ற நினைப்போடு அலைபவரை என்னென்பது)

'படமெடுத்து ஆடும்' தன் ஆண்மைக்கு நிகரில்லை என்று பல கட்டுரைகள். இலக்கியவாதிகளின் சண்டையின் போது டவுசர் (லிட்டரலி) அவிழ்க்கப்பட்ட போது வெளிப்பட்ட துக்கிணியூண்டு சைஸ் குறித்த ஜார்ஜ் கொஸ்டாண்ஸா நீச்சல் குள தண்ணீர் டெம்பரேச்சர் தன சப்பைகட்டு. ஒரு புறம் இலக்கியத்துக்காக பிச்சை மறுபுறம் காஸ்ட்லி தண்ணீர் மற்றும் அக்ஸசரீஸ் (பாரில் தொலைக்கும் செருப்பு விலை 6000ரூ). செக்ஸ் டிப்ரிவியேஷன் ஆள் சமயங்களில் கவுதம புத்தருக்கு அண்ணன் என்று முரண்பாடுகளின் மொத்த உருவம் சாரு.

இதெல்லாம் தேவையில்லை. அவர் எழுத்தை மட்டும் பார்க்கலாம்தான். ஆனால் இதுவரை பெரும்பாலும் தன்னை மட்டுமே எழுதுபவரை எப்படி எழுத்தை மட்டுமே பார்ப்பது.

அவரின் எழுத்தில் இருக்கும் வசீகரம் மட்டுமே அவரை தொடர்ந்து படிக்க தூண்டுவது.. நடு நடுவே ஒரு சில உருப்படியான கட்டுரைகள் கிடைக்கும். அதை தவிர்த்து பார்த்தால் கமல் சொல்வது போல சாருவின் மற்றெல்லா துணுக்கு தோரணங்களையும் அனுபவிக்கலாமே தவிர ஆராய கூடாது.

குசும்பன் said...

வாங்க வெங்கட். இன்னும் நியாபகம் வைச்சிருக்கீங்க! நலமா?

ஐயா முகமூடியாரே,

வாருமையா...நச்சுன்னு ஒரு கமெண்ட்டுய்யா...

லௌகீகத்திற்கு குறைவில்லை. சரி சரி சட்டு புட்டுன்னு இனிமே பதிவுகளைப் போட்டு இன்னொரு வலம் வருவோமா?

கை ஜிவு ஜிவுங்றது ஓய்! :-)

குசும்பன் said...

கெயக்குப் பதிப்பகத்துல ஏதோ பெனாத்தி இருக்காரே சாரு...கவனிச்சேளா முகமூடி? :-0

ILA (a) இளா said...

வாங்க,... வாங்க.... வருசமாச்சு போல

sappa figuru... said...

kalakkitteenga boss....
yenakkum antha aal mela romba naalave yegappatta kaduppunga....

kulebagaavali... said...

kalakkitteenga boss...

ரவி said...

ஏன் இப்போதெல்லாம் பதிவில் கலர் அடிப்பதில்லை. அதுதானே ட்ரேட் மார்க் ?

ரவி said...

மீண்டும் திரட்டிகளில் இணைக்கலாமே ? அட்லீஸ்ட் தமிழ்ஷ் ?

குசும்பன் said...

//ஏன் இப்போதெல்லாம் பதிவில் கலர் அடிப்பதில்லை. அதுதானே ட்ரேட் மார்க் ?//

"அடிக்கணும்" ரவி! :-)

//மீண்டும் திரட்டிகளில் இணைக்கலாமே ? அட்லீஸ்ட் தமிழ்ஷ் ?//

அய்யய்யோ வேண்டாம் ரவி! ஏற்கெனவே ஒரு தபா பட்டாச்சி...எந்த திரட்டியோடவும் எனக்கு கூட்டணி இல்ல! ப்ளாக்கர், ப்ளாக்கர்கள் கூட மட்டும்தான் கூட்டணி! :-)

Ashok D said...

என்னா, நண்பரே... கமல், ரஜினிவிட எங்களுக்கு சாருவ பிடிக்கும்.. அவர போய் கலாய்க்கிரியபா..
சாரு எழுத்த அனுபவிக்கனும்.. ஆராய கூடாது.

C.V.Rajan said...

நல்ல சாரமான, சரக்குள்ள குசும்புதான் சாமியோவ்!

C.V.Rajan