Sunday, July 02, 2006

கடைசி வார்த்தை

இவன் அவனா? அவன் இவனா? என்ற குழப்பத்தில் KARZ படத்தின் கேப்ஷனான "The Burden of Truth"ல் மூழ்கியிருக்க நீள் வாரயிறுதி
முடியும் தருவாயில் சில வார்த்தைகள்...

கவிதைகள் தைத்தவையாக இருப்பவதை விட புரிதலையே அதிகம் விரும்புகின்ற அற்ப ஜீவன் நான். சில சமயம் வெறும் வசனங்கள் கூட எனக்கு கவிதையாகத் தெரிவதை "Blame it on Beer" என்று சொல்ல முடிவதில்லை. எடுத்துக்காட்டாக KARZ படத்தில் ஒரு வசனம்:

தர்த் நே தும்கோ ஜனம் தியா?
யா
ஜனம் நே தும்கோ தர்த் தியா?


[வலி உனக்கு உயிர் தந்ததா?
இல்லை
உயிரே உனக்கு வலியானதா?
]

அதே போல் சமீபத்தில் (அட நேத்துப்பா...) படித்த ஞானக்கூத்தன் கவிதை ஒன்று...

கடைசி வார்த்தை

கதறிக் கதறி அழுகிறாள் மனைவி
என்னை அறியீரோ? யாம் உன் கிழத்தி
இவர்நும் மக்கள். என்கிறாள்
சற்றுக் கண்ணைத் திறந்து பார்த்தவர்
மீண்டும் யாவர் நீவிர் என்கிறார்

கடைசியில் சொல்லப்படும் வார்த்தைகள்
கொடுமையின் நீல வண்ணத்தில் தோய்ந்தவை
முதற்கண் அவ்வாறு சொன்னீரே
என்று குற்றம் சாட்டிப் பயனில்லை

கடைசியில் சொல்லப்பட்டுபவை
அதற்குமுன் சொல்லப்பட்டதற்கெல்லாம்
சொக்காய் மாற்றிப் போடுபவை

மேதாவி என்பவன்
முதலில் சொல்லும் பொழுதே
கடைசியில் சொல்லப் போவதை
மனதில் ஒத்திகை பார்ப்பவன்

கடைசி வார்த்தைகளில்
நட்பு பகைமை
சொத்து அழிவு
உறவு தாயாதி
கற்பு கலைப்பு
ஏற்பு நிராகரிப்பு
அணைப்பு பிரிப்பு
எல்லாம் சங்கிலிக் கணைகளாய்ப் பிணைந்திருக்கும்
எல்லா சந்தர்ப்பங்களிலும்
கடைசி வார்த்தைகள் எளிதாய்ப் புலப்படும்
கவிதையின் இறுதிப்பகுதி தவிர

-ஞானக்கூத்தன்

நன்றி: பென்சில் படங்கள்
விருட்சம் வெளியீடு

பி.கு. இது வெறும் கவிதை குறித்த பதிவுதான் என்று நான் கூறினாலும், பதிவினைப் படித்து, இரு மணி நேரம் செலவு செய்து அ(ன)ர்த்தம் தேடப்
போகும், சென்னையில் மையம் கொண்ட புயலொன்று புரிந்து கொள்ளவாப் போகின்றது? :-)

2 comments:

ramachandranusha(உஷா) said...

நீங்கள் யாராக இருந்தாலும் (இந்நிமிடம் வரை தெரியாது), உங்களுடைய பதிவுகளை விரும்பி படித்துக்கொண்டிருந்தேன். தவறுகள் செய்யாத மனுஷ ஜென்மமே கிடையாது. அதனால் போனவை போனதாகவே இருக்கட்டும்.
உங்கள் ஸ்டைல் எழுத்துகளை பார்க்கவே முடியாத என்று எண்ணும் நேரத்தில் மீண்டு(ம்) வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி.
-உஷா
பி.கு இன்னும் பதிவை படிக்கவில்லை :-)

Anonymous said...

That's a great story. Waiting for more. » »