Tuesday, April 12, 2005

நியுமரோ யுனோ











டோண்டு சாருக்காக ;-)

பேராண்டிகளா நம்பர் ஒன்னாயிட்டேன் !!!

Friday, April 08, 2005

வெற்று இலையின் விழுமியங்கள்

இலக்கிய சர்ச்சையிலும், த(வ)ர்க்க சாஸ்திரத்திலும் விழுந்து, புரண்டு களிக்கும் வேளையிது போலும். ஆக்கம் மறந்து ஆக்கியோரை ஆப்படித்து, பழமைக்கா(க்)க நடப்பில் நட்பையும் நாறடித்து, கனவான்/கண்ணியவான் என்று மட்டையடித்து, பூமராங்கானால் நண்பரே/அன்பரே நன்றி/பன்றி என்று ஜல்லியடித்து, டக்கீலா ஷக்கீலா'வென பிறர் பேச அ(து)ஞ்சுகின்ற ('துண்டைக் காணோம் துணி(வை)யைக் காணோம்') பொருளைப் பேசும்....

ஹி....ஹி....தலைப்பைப் பார்த்து தடுமாறி வந்தவர்க்கும், வழமையான வாசக, வாசகியர்க்கும் குசும்பன் கும்பிடு போட்டுக்கிறான்.

அரை டவுசர் போட்ட காலமது.... 'வெத்தலையைப் போட்டேண்டி... சக்தி கொஞ்சம் ஏறுதடி...சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி' என்று பாடியபடி 'டக்கரினா டக்கரினா டானடக்கர டக்கரியனா' போட்ட சந்தோஷமான நேரம். பாம்படம் பாரம் பலவருடம் தாங்கி உதைப்பந்தின் கோல்போஸ்டாய்ப்போன 'டர்' காதுமடலுடன் பாட்டிதான் வெத்திலை வஸ்துவை முதன்முதல் அறிமுகப்படுத்தினாள். கும்பகோண கொசுவின் உதவியின்றி ஒரு யானைக்கால் பெற்று அதன் மேல் மற்றதை அசாதாரணமாகப் போட்டு, வரி வரியாய் ஊறும் பாம்புகளை பச்சை குத்திய கைகளோடு அவள் தாம்பூலம் தரிக்குமழகே அழகு...

'நாட்டுக்கட்டை'யானாலும் 'நாட்டு வெத்திலை' மட்டுமவளுக்குப் பிடிக்காது. கஞ்சி போட்ட அந்தக்கால தமிழக போலீஸின் காக்கி யூனிபாரம் போல 'மொட மொட'வென்று நாட்டு வெத்திலை இருக்கும். ஏறத்தாழ ஆடுதொடா இலையைப்போல. 'கொழுந்து வெத்திலை'யோ ரொம்ப ஸ்மூத். அமெரிக்க தமிழ்ல சொல்லணும்னா 'கூல்'. சந்தைக்குப் போகும் போது பாட்டியின் குரல் கூடவே வரும். 'கொழுந்து வெத்திலை ஒரு கௌலி வாங்கிடுடா.'

பாட்டியின் டேஸ்ட்டே தனி. சாப்பிட்டு முடித்தவுடன் ஆற அமர பித்தளைப் பெட்டியுடன் உட்காருவாள். Made to Order Vanity Case போல அது. வெத்திலை, பன்னீர் சுண்ணாம்பு, கொட்டைப்பாக்கு அல்லது கலிப்பாக்கு, புதுக்கோட்டை மைதீன் புகையிலை, தஞ்சாவூர் லக்ஷ்மி சீவல் என்று 'மாடர்ன் கேர்ள்' கைப்பை தோற்க, அழகாக 'அஞ்சறைப் பெட்டி' போல அதனதன் அறைகளிலே அடுக்கியிருப்பாள். அறுவை சிகிச்சை நிபுணரின் லாவகத்தோடு வெற்றிலைக் காம்பை கிள்ளியெடுத்து, அதன் கறுப்பு நுனியை அப்புறப்படுத்தி கையகப்படுத்துவாள். பின்னர் பாசமான பேரப்பிள்ளைகளின் வாயில் காம்புகள் மணக்கும். அப்பாவிடம் சொல்லுவாள், "சீரணத்துக்கு நல்லதுடா."

ஆனால் வெத்திலைப் பாக்கு குழந்தைகள் போட்டா 'கோழி முட்டும்'னு மத்தவா பயமுறுத்துவா. ஹ... அய்யா யாரு? அந்தக்கால கல்யாணங்களில் தாம்பூலத்தில் ஆங்காங்கே வைத்திருக்கும் தாம்பூல வகையறாக்களை ஒரு வழி பண்ணுவது எமது பொழுதுபோக்கு. கல்யாண சாப்பாடையே காண்ட்ராக்ட் விடும் இக்காலத்தில் தாம்பூலத்திற்கென்ன வேலை? பீடா கூட தனியே ஆர்டர் கொடுக்கணும். பீடான்னா எனக்குப் பிடித்தது 100-420 (ஏக்சௌ-சார்சௌ-பீஸ்) 120 (ஏக்சௌ-பீஸ்), 320 (தீன்சௌ-பீஸ்), 420 (சார்சௌ-பீஸ்). கல்யாணத்துல அதெல்லாம் கொடுப்பாளா என்ன?

வெத்திலைன்னா சும்மாவா? 'நான் வெத்திலை போட்ட ஷோக்குலே'ன்னு பின்னணி பாடுன கார்த்திக்கைக் கேட்டு பாருங்க. ஆதிகாலத்துல ராசாவை கைக்குள்ளே போட்டுக்க ராணிங்க கையாண்ட டெக்னிக்கே இந்த 'வெத்திலை' சமாச்சாரம்தான். பாம்புவிரல் அப்புறம் மோதிர விரல் இடுக்குல வெத்திலையை மடிச்சு நீட்டுற லாவகத்துலதான் ராசா 'டௌன்'. அதே டெக்னிக்கை மற்ற கன்னியரும் கையாண்டது வேறு விதம்.

நாக்குல போட்ட மருதாணியா 'செவ செவன்னு' இருந்தா பொண்டாட்டி மேல பாசமா இருப்பான்னு 'ரிவர்ஸ் டெக்னிக்'கும் வெத்திலைக்கு உண்டு. 'வெத்திலையின் வாசம் பொம்பளைக்கு ஏண்டி வந்தது' அப்படின்னு இலக்கிய கவிதய விசில் படத்துல வைச்ச 'ஜேடி-ஜெர்ரி' ஜோடிக்கு நன்றி. அப்புறம் இந்த வெத்திலையில அர்ஜுனனுக்கும் பங்கிருக்குதான் ராசா! ('தின்ன இலையும் பிளவும் தா அம்மே' அப்பிடின்னு சிங்கி பாடுனதைப் போட்டா இதுவுமிலக்கிய பதிவுதான் அம்மே/அய்யா!)

'கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்திலை போட்டா வாய் செவக்கும்', நாட்டாமை குஷ்புவே சாட்சி! மச்சினிச்சியை கவர் பண்ண வேண்டுமா? பல்லவியே வெத்திலைதான். 'வெத்திலை வெத்திலை வெத்திலை'ன்னு கோரஸ் பாடுன பிரஷாந்தைக் கேளுங்க...

சோகம் வேணுமா?'வெத்திலை வெத்திலை வெத்திலையோ கொழுந்து வெத்திலையோ சின்னச் சின்ன கொழுந்து வெத்திலையோ'ன்னு ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துல பாடுன சிவக்குமார் ஞாபகத்துக்கு வாராரு. கிளுகிளுப்பு வேணுமா? 'ஒன் அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தலை' பாட்டு ஞாபகத்துக்கு வரும்.

கம்போடியாவுல தாம்பூலம் போட்டா 'டெண்டல் பிராப்ளம்' இல்லங்றது நம்பிக்கை. அமெரிக்கா நம்பாது.மலாய் மக்களோ ஒரு படி மேல்...

நம்ம வடநாட்டு மக்கள் 'சலாம் கராயே ரசம்' என்பார்கள். கல்யாண முஸ்தீபுகளின் போது மணமகனின் ஏதோவொன்றை திருடி பெண் ரவுடிகள் காசு வசூலித்து மகிழும் காட்சி முடிந்தவுடன் (HAHK படத்தில் 'காசைக் கொடு, செருப்பை எடுத்துக்கோ என்று பளபளாவென்னு குத்துப் போட்ட மாதுரி ஞாபகம் வருதா?) வெத்திலை மாற்றிக் கொள்வார்கள்.

பாட்டி இறந்தவுடன் 8 பவுன் சங்கிலி, 4 பவுன் வளையல், 4 பவுன் பாம்படமெல்லாவற்றையும் அம்மா நினைவாய்(?) அத்தையர் எடுத்துப்போக மிஞ்சியது பித்தளை வெத்தலைப் பெட்டியும், பல்போன காலத்தில் வாங்கிய இரும்பு இடியுரலும்தான். அதில் இன்னும் வெத்திலையின் வாசமெஞ்சியிருக்க... யாரடாவன் இதை வெற்று இலையென்று இலக்கியப்படுத்தியவன்?

பினா.குனா.

முகமூடி போட்டா ஒரு செஞ்சுரி சரக்கு வைச்சுக்கோன்னு நம்ம பாரா சாரு எப்பவோ சொன்னாரு. இந்தா புடி... சேட்டன் சர்மா செஞ்சுரி (யோவ் பாபா இது சச்சின் 100 இல்ல;-) .. (வியர்வையை துடைச்சிக்கிறேம்பா!) அப்புறம் நம்பள்க்கு ஸ்டார்ல + ஓட்டுப் போட்டா குசும்பன் நிம்பள்க்கு ஜிமெயில் அக்கௌண்ட் தாரான். (ஹி...ஹி... சும்மாச் சொன்னேன். ஜிமெயில் வேண்டுவோர் தனியஞ்சல் போடுங்கோ. நூறாவது பதிவு மண்டகப்படி'ன்னு வைச்சுக்கோங்களேன்!)