Wednesday, October 07, 2009

சராசரி எழுத்தாளன் For Dummies

வெகுசன ஊடகம், வெளங்காத சி(கு)த்திலக்கிய ஊடகம் என்று இரண்டு ஜாதி உண்டு. இதில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள். அப்படியிருக்க இந்த டிஜிட்டல் கேமரா வந்தவுடன் அனைவரும் போட்டோகிராபர்கள் ஆகிவிட்டது போல், இணையம் வந்தாலும் வந்தது ஆளாளுக்கு ஒரு பூக்கடை (அட வலைப்பூங்க!) திறந்து, எழுத்தாளர்கள் ஆகிவிட்டார்கள். இருப்பினும் இணையத்தில் இலக்கியம் இல்லை, அங்கே எழுதுபவன் எழுத்தாளன் இல்லை என்று மேற்கூறிய ஊடக ஜாதியியலாளர்கள் பிரஸ்தாபிக்க பலரது உள்ளம் தொய்ந்து போனது. ஏதோ எழுத்தாளனாவது சாத்தியமோ இல்லையோ ஒரு சராசரி எழுத்தாளனாக வேண்டுமென்ற வீணாய்ப் போன ஆசை கொண்ட வலைப்பதிவர்களுக்கு இந்த பூ சமர்ப்பணம்.

1. எழுத்தாளனும் சராசரியும் வேறு வேறு. வில்லை எடுத்தவன் வில்லன் அல்ல என்பது போல் எழுதுபவர் அனைவரும் எழுத்தாளர் அல்ல என்பதை உணரவும். எந்த குப்பையை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கலாம். ஆனால் சஹ-எழுத்தாளர்களை விமர்சனம் செய்யுமுன் ஒரு விண்ணப்பம் போட்டுவிட்டு, முடிந்தால் "டிராப்ட்" காப்பி அனுப்பி "அப்ரூவல்" வாங்கி விட்டு பதிவேற்றலாம்.

2. எழுத்தாளர்கள் கொலை வெறியுடன் சண்டை போடும் போது "கிராஸ்-பயரில்" மாட்டிக் கொள்ளாமல் இருப்பது சராசரிகளின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. கருத்து கந்தசாமியாக முயற்சித்தால் அந்த "கந்தசாமியே" உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்க!

3. வேப்பேரி ரிக்ஷமாமா, பிரெஞ்ச் மாமி, பிலிஸ்டைன் சமூகம், வாழ்வது எப்படி, இன்டலெக்ச்சுவல் இம்பேலன்ஸ் போன்ற சொல்லாடல்கள் எழுத்தாளர்களுக்கே உரிமம் ஆனவை. எடுத்தாள்வது என்பது மொன்னை கத்தியை வைத்து மொட்டை அடிப்பதற்கு சமானம். அயன் பற்றி வேண்டுமானால் எழுதலாம். ஆனால் அயன் ராண்ட் பற்றி எழுதினால் எழுத்தாளர்களின் "காண்ட்" ஆகி விடுவார்கள்.

4. பின் நவீனத்துவம், பின் நவீன மீள்பொருண்மை பக்கமெல்லாம் தலை என்ன உடலின் எந்த பாகத்தையும் நீட்ட வேண்டாம். சிக்கி சின்னா பின்னமாகி சீரழிவது நிச்சயம். எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டனேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும்.

5. சுயசரிதைக்கும், நாவலுக்கும் குறைந்தபட்சம் அடிப்படை வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் சிக்கிக் கொண்டால் "அது என்ன என்னுடைய சுய சரிதையா? நாவல்யா நாவல்" என்று சொல்லி தப்பிக்க முயலக் கூடாது. ஏனென்றால் அது எழுத்தாளர்களுக்கே உரிமமான "சாக்கு-போக்கு"! நீர் ஒரு சராசரி என்பதை நினைவில் நிறுத்தித் தொலைக்கவும்.

6. முடிசுருள், பிலிம் சுருள் இத்தோடு சுருள்களை மூடிக் கொள்தல் நலம். உள்சுருள் உள்ளே போனால் உரோமம் கூட மிஞ்சாது என்று தெளிக! உதாரணமாக நீங்கள் 104 டிகிரி காய்ச்சல் என்ற நூல் எழுதியிருந்தால் அதில் உள்சுருளாக இப்படிப்பட்ட அறிவு செறிந்த கவிதைகள் எழுதியிருக்கலாம். உதாரணமாக:

வார்த்தைகள் அல்குதலாகி
அறுகிச் சிறுத்தது
வார்த்தைகளா
வடிவத்தின் படிமமா
படிமத்தின் பரிமாணமா
பரிமாணத்தின் பரிணாமமா
அல்குதலான அல்குலா


(பக்கம் 1005)
*****

பாசமாய் நான் வளர்த்த
பாச்சைப் பூச்சியின்
மீசைமயிரின் குறுகுறுப்புகள் ஊடே
உறைந்துவிட உள்விருப்பமுற்று
பாச்சையின்
அவுசை வாடை பட்ட
சுற்றுக் காற்று
அண்டமெங்கும் அடைந்து கிடப்பதாய்
அர்த்தங் கொண்டு
அலசிய போது
சாக்கடை புழுக்களூடே
கரப்பொன்று
மீசையாட்டியபடி
ஊரக் கண்டேன்

(பக்கம் : 2005)

******

இப்படி நீங்கள் கெக்கே பிக்கே என்று உளறியிருந்தாலும் உள்சுருளென்று உதார் விடக்கூடாது. உரிமம் இல்லாததால் உரித்து உப்புக் கண்டம் தடவி விடுவார்கள்!

7. நமக்கும் கொஞ்சம் இங்கிலிபீஸ் தெரியுமென்றாலும், படா படா எழுத்தாளர்களை மேற்கோள் காட்டக் கூடாது. அப்படி காட்டினாலும் அவர் புலிட்ஸர், எலிட்ஸர், நோ"பல்" போன்ற அவார்டுகள் அள்ளி குமித்திருக்கிறாரா என்று தெரிந்திருக்க வேண்டும். அல்லது அத்தகைய அவார்டுக்கு "ஈக்குவலாக" ஒரு அவார்டு வாங்கியிருக்கின்றாரா என்று அறிந்திருக்க வேண்டும். கலைமாமணி, கலாபவன் மணி, சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி போன்ற அவார்டுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா!

8. சினிமா, இசை போன்ற விஷயங்களை எழுதும் போது அதீத ஜாக்கிரதை அவசியம். முக்கியமாக வசனம் எழுதியது யாரென்ற அடிப்படை விஷயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள். உங்களது விமர்சனத்திற்கு முன்னர் எழுத்தாளர்கள் கருத்து என்ன என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட்டு இளையராஜா ஒரு குப்பை என்று ஜல்லியடிக்க முடியாது. ஏனெனில் நீர் ஒரு சராசரி!

9. ஙௌக்கா மக்கா தண்ணியடிச்சது பத்தியாவது எழுதித் தொலையலாமென்றால் அங்கேயும் "பொலிறிக்ஸ்" பொலி போட்டு விடும். சாராயம், கள், பிரெஞ்சு ஒயின், ஸ்காட்ச் விஸ்கி இப்படி ஒவ்வொரு பானத்திலும் ஒரு பாணம் ஒளிந்து கொண்டிருப்பது அறிக!

10. இத்த எயுதுன நானும் ஒரு "ஆவரேஞ்" தான்! பாருநிவேதித/நைவேத்திய கொள்கைக்கும் இதுக்கும் காத தூரமென்று அறிக! :-)