Saturday, April 22, 2006

நீ இருபது நான் அறுபது

பூந்தமல்லி சூப்பர்சானிக் ஹைவேயில் சர்வேஷின் தானியங்கி கார் சத்தமின்றி ஒலி வேகத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசல், சிக்னல், கால்நடைகள் குறுக்கீடு, ஆட்டோ அராஜகம், மிதிவண்டி சாகசம் போன்ற புராதனக் கவலைகள் மறந்து, எர்கோணோமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட குஷன் சேரில் சொகுசாகச் சாய்ந்தபடி, எதிரே தெரிந்த திரையில் இன்றைய தலைப்புச் செய்திகளை வாசிக்கும் பெண்ணை ரசித்துக் கொண்டிருந்தான். கடந்த நூற்றாண்டுப் பாடலான "தேன்கூடு நல்ல தேன்கூடு" பாடல் சாடிலைட் ஸ்டீரியோ சானலில் அதிராமல் வழிந்தது.

செய்தியினூடே தேர்தல் அதிகாரி சுபாஷ் குப்தா திரையில் தோன்றி, இந்த தேர்தலில் கண்டிப்பாக 100% வாக்குப்பதிவு செய்யுமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விட்டார். போன தேர்தலில் 99.99% வாக்குப்பதிவு என்ற கணக்கு அகண்ட தமிழகம் போன்ற முன்னேறிய நாட்டிற்கு இழுக்கு என்று கண்களைத் துடைக்காமல் நாசூக்காக வருத்தம் தெரிவித்தார். அரதப் பழசான விகடனில் 'இது கொஞ்சம் ஓவர்' என்ற கார்ட்டூன் தொடரை லைப்ரரி ஆர்கைவில் பார்த்தது ஞாபகத்துக்கு வர களுக்'கென்று சிரித்துக் கொண்டான்.

இந்தியா, இலங்கை, பர்மா, பிஜி, அந்தமான் நிகோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், மாலத்தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், இந்தோநேஷியா, கனடா, நோர்வே, ஸ்விட்சர்லாந்து, நியூஜெர்ஸி, கலிபோர்னியா சிலிக்கன் பள்ளத்தாக்கு, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற மூவேந்தர் ஆண்ட முற்காலத்திலிருந்து, கோபால் பற்பொடி விற்ற த(க)ற்காலம் வரை தமிழர் பெருவாரியாக வாழ்ந்து வந்த பகுதிகள் அனைத்தையும் சர்வே செய்து, பிரித்து, அளந்து அகண்ட தமிழகம் உண்டானது பூவுலகின் அதிபெரும் புரட்சியாக அண்டசாரமே ஏற்றுக் கொண்டது. உலகில் அதிகமாகப் பேசப்படுவது தமிழ் மொழியாகவும், மக்கட்தொகையில் சீனர்களை விட தமிழர்கள் அதிகமாகவும் கொண்ட அகண்ட தமிழகம், அண்டசாரத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லரசாக மாறியதில் வியப்பென்ன வேண்டிக் கிடக்கின்றது?

வரலாறு போதும்; வாழ்க்கைக்கு வருவோம். இன்று அகண்ட தமிழகத்தில் அதிமுக்கியமான 2060 வருட தேர்தல்.

அகண்ட தமிழகம் கண்ட அயற்சியில் அரசியல்வாதிகள் இருந்ததால், தமிழ் தேசியம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து போயிற்று. உதிரிப் பிரச்சினை வளர்த்த பிராமணர்களையும், பத்தாண்டுகளுக்கு முன்னர் இரு தானியங்கி லாரிகளில் ஏற்றி ஒன்றை கைபருக்கும், மற்றொன்றை போலன் போன்ற கணவாய்களுக்கும் சூப்பர்சானிக் ஹைவேக்களில் நிரந்தர பேக்கப் செய்து விட்டதால் பிராமணீயமும் அதைச் சார்ந்த சிக்கல்கள் பலவும் உதிர்ந்து விட்டன. தப்பிப் பிழைத்த பிராமணர்கள் சிலரும் முற்போக்குப் பட்டங்களை சூட்டிக்கொண்டு, தமது சுய அடையாளங்களை பொதுவிலாவது மறைத்துக் கொண்டதால் மீண்டுமொரு உதிரிப் பிரச்சினைக்கு உடனடி வழியில்லை. தமிழ்த் திராவிடத்தை அரசு மதமாக அறிவித்து விட்டதால், மனு வளர்த்த இந்து சாதிகள் அனைத்தும் அடையாளமின்றி ஒழிந்து போயின. இராமாயணம், மகாபாரதம் போன்ற கட்டுக் காதைகள் கட்டுக் கட்டாகக் கொளுத்தப்பட்டு, தமிழ்த் திராவிட வரலாறுகளே அகண்ட தமிழகத்தில் முன்னிறுத்தப்பட்டன. இளஞ்சிறார்களுக்கு தமது பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுக்க கல்வித் திகிரிகளும் (Educational CDs) தமிழர்களுக்கு இலவசமாய் வழங்கப்பட்டன.

மக்களுக்கு கோடானுகோடி நன்மைகள் விளைந்தாலும் இவற்றால் அரசியல்வாதிகளுக்கென்ன லாபம்?

வீதிக்கொரு கட்சி, சாதிக்கொரு சங்கம் என்பதெல்லாம் பழங்கனவாக, அகண்ட தமிழகத்தில் தற்போது இரண்டே இரண்டு கட்சிகள்தான் இருந்தன. அண்டத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்கப்போகும் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரென்று சிண்டை (மன்னிக்கவும் பார்ப்பனீய மொழிதான் அழிந்து விட்டதே!) மக்கள் மயிரைப் பிய்த்துக் கொண்டார்கள்.

தமிழ்த் தேசிய கட்சியிலிருந்து (ததேக) தலைவர் மண்கொண்டானும், தமிழ் பேசிய கட்சியிலிருந்து (தபேக) தலைவி பொன்கொண்டாளும் இத்தேர்தலில் மோதுகின்றனர். போன நூற்றாண்டில் நடந்தது போலக் கூட்டணிக் குழப்பங்கள், கடைசி நேர காமெடித் தாவல்கள் அகண்ட தமிழகத்தை விட்டு என்றோ அகன்று போயின.

இரு தலைவருக்குமிடையே வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இரண்டே இரண்டு கருத்து விவாதங்கள்தான். முதல் விவாதம் சிபி பெர்னார்டு தலைமையில் பாயா டிவி ஏற்பாடு செய்ய இருவரும் மூன்று சுற்று மோதவேண்டும். பின்னர் சூரபாண்டியன் தலைமையில் Fun நெட்வொர்க் நடத்தும் நிகழ்ச்சியில் மீண்டும் மூன்று சுற்றில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தலைமை தாங்குபவர் நாட்டின் தலையாய பிரச்சினை ஒன்றைக் கொடுக்க இரு தலைவர்களும் பட்டிமன்ற ஸ்டைலில் விவாதிக்க வேண்டும். இது வெறும் கருத்து விவாதமாதலால் வெற்றி-தோல்வி என்பது அறிவிக்கப்படமாட்டாது. மக்களிடமிருந்து கேள்விகளைப் பெற்று தலைவர்களைக் கேட்பதாய் சிபி பெர்னார்டும், சூரபாண்டியனும் சூளுரைத்தாலும் திரை மறைவில் பழம் நூற்றாண்டு வழக்கப்படி, அங்கீகரிக்கப்பட்ட கேள்விகளையே தலைவர்கள் முன் வைப்பதாய் புரளிகளும் உண்டு.

இச்சுற்றுகளின் போதே தலைவர்களின் வெற்றி குறித்த கருத்து கணிப்புகள் எல்லாம் துல்லியமாக, அறிவியல் பூர்வமாக ஸ்டேட்ஸ்மென் எக்ஸ்பிரஸ், The Tamil Dravidian, அகண்ட தமிழகம் டைம்ஸ் போன்ற செய்தித் தாள்களில் வெளிவர தேர்தல் வெப்பம், மின்சாரம் பாய்ந்த டங்ஸ்டன் கம்பியிழையாய் எகிறும்.

பூமியில் அனைத்து ஊழல்களையும் அரசியல்வாதிகள் செய்து முடித்து விட்டதாலும், விஞ்ஞானம் கண்டபடி வளர்ந்துவிட்டதாலும், ஊழல் அறிவுப்பூர்வமாக அணுகப்படாமல், அறிவியல் பூர்வமாய் அணுகப்பட்டது.

நிலவில் தமிழ் மக்கள் குடியமர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலமான ஜான்சியை, பொன்கொண்டாள் சட்டத்திற்கு புறம்பாக தானே தனது பாயா பப்ளிகேஷனிற்காக குறைந்த விலையில் வாங்கிக் கொண்டார் என்று மண்கொண்டான் திகீர் குற்றச்சாட்டை வெளியிட்டார். இதென்ன 'தனக்குத் தானே திட்டமா' என்று தனது தேர்தல் அறிக்கையிலும் பொங்கினார். ததேக'வின் சார்புநிலை ஏடாகக் கருதப்படும் பணகரனிலும் இது குறித்து கேலிச்சித்திரம் வெளியானது பரபரப்பான சூட்டைக் கிளப்பி விட்டது.

பதிலுக்கு 'Fun நெட்வொர்க்கை வெறும் பத்து மில்லியன் ரூபாய்க்கு ஆரம்பித்த மண்கொண்டானின் குடும்ப சொத்து இன்று பத்து டிரில்லியனாய் வளர்ந்தது காணீர்', என்று பொன்கொண்டாள் சாடினார். மேலும் கொசுறாக நிலவில் தனது கேபிள் நிறுவனத்திற்காக சூராணம் ஆழ்நிலக் குழாய்கள் பதித்ததில் ஊழல்; பூந்தமல்லி சூப்பர்சானிக் ஹைவேயை தனது டிஐஜியான அகமது பலியை விட்டு உதைத்துப் பார்த்ததில் தரமற்ற பொருட்களால் பாலம் கட்டிய ஊழல்; என்று அறிவியல்பூர்வமாய் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்க 'அட்றா சக்கை' என்றார்கள் மக்கள்.

டிபேட் எனப்படும் கருத்து விவாதத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்று நிரூபித்தனர். மண்கொண்டான் நிலவில் இலவசமாக நிலப்பட்டா தருகின்றேன் என்றால் பொன்கொண்டாள் நிலவில் ஓசியில் வீடே கட்டித் தருகின்றேன் என்று கூற, தேர்தல் மேலும் களை கட்டியது. நல்லவேளையாக முன்னொரு காலத்தில் வாழ்ந்த யாகவா முனிவர் டிவி விவாதத்தின் போது துண்டால் சிவசங்கர் பாபாவை துவைத்த காட்சிகள் மாதிரி அசம்பாவிதங்கள் ஏதும் அரங்கேறவில்லை.

களப்பயிற்சியில் இறங்கிய லாவோலா கல்லூரி நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பின் முடிவுகளோ பெண்டுலம் போல் நிலையின்றி ஒருநாள் மண்கொண்டானுக்கும், மறுநாள் பொன்கொண்டாளுக்கும் சாதகமாய், தீர்ப்பை மாற்றி மாற்றி எழுதி மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இன்று தேர்தல் என்பது சர்வேஷிற்கு சட்டென்று நினைவிற்கு வந்தது.

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக "சானியா" என்று மென்மையாக அழைத்தான்.
"யெஸ் பாஸ்" என்று குழைவான பதில் கார் ஸ்பீக்கரில் வழிந்தது.
"ஆக்ஸெஸ் எலெக்ஷன் மெயின்பிரேம் ப்ளீஸ்"
"இரண்டு மானோ நிமிடங்கள் ப்ளீஸ்"

சானியா ஒரு அறிவியல் ப(பு)துமை. அகண்ட தமிழகம் முழுவதுமே ஒரு நடுவண் மெயின்பிரேம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. மதர் கம்ப்யூட்டர் என்று நடுவண் மெயின்பிரேம் விளிக்கப்பட்டாலும், பலரும் 'அம்மா' என்றே பாசமாய் அதனை அழைத்தார்கள். அம்மாவிற்கு பல சேய்கள். அவற்றில் ஒன்றுதான் சர்வேஷின் சானியா. கம்பியில்லாத் தொடர்பு மூலம் சானியா போன்ற பல சேய்கள், அம்மாவை எப்போது வேண்டுமானாலும் ஆக்ஸஸ் செய்ய முடியும் என்பது 2006'ல் கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? 2000' தொடக்கத்தில் நேனோ செகண்டில் வேலைகள் செய்த காலம் மலையேறிப் போய் இப்போதெல்லாம் 'மானோ விநாடியில்' (நேனோவை விட ஆயிரமாயிரம் குறைந்த நேரத்தில்) அம்மாவை ஆக்ஸஸ் செய்யமுடியும்.

டிவியில் செய்தித் திரை மறைந்து புதிய திரை தோன்றியது.

"தலைவர்களின் பின்புல ஆய்வறிக்கை, கருத்துக்கணிப்புகள் வேண்டும்", சர்வேஷ் கட்டளையிட்டான்.
மேலும் சில மேனோ விநாடிகள் தாமதத்திற்குப் பிறகு அறிக்கைகள் மற்றும் கணிப்புகளை சான்யா புட்டு புட்டு வைத்தாள்.

வாக்கு யாருக்கென்று சர்வேஷ் துல்லியமாக முடிவு செய்தபின் விசைப்பலையின் குறிப்பிட்ட பொத்தானை அமுக்கினான். வோட்டு பதிவாகிவிட்டது. இன்னும் சில மணித்துளிகளில் ரிஸல்ட் அறிவிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. யார் வருவார் அகண்ட தமிழகத்தின் அதிபராக? சர்வேஷின் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத் துடிப்பு எகிறிக் குதிக்க, அட்ரனலீன் அத்துமீறி சுரக்க ஆரம்பித்தது.

"எலக்ஷன் ரிஸல்ட் சானியா" சர்வேஷ் முனகியபடிக் கேட்டான்.

பதிலில்லை. ஆனால் தீடீரென்று மிகவும் சில்லிப்பாக இருப்பதாய் உணர்ந்தான். அவனது உடலே தொப்பலாக நனைந்திருந்தது போல் தோன்றியது. காரினுள்ளே முழுவேகத்தில் ஏஸி இயங்கியும் கூட இவ்வளவு வியர்வையா என்று ஆச்சர்யப்பட்டான்.

"என்னது எலக்ஷன் ரிஸல்ட் சானியாவா? அது சானியா இல்லே. சோனியாடா!" இப்போது பேசியது யாரென்று சர்வேஷ் குழம்பினான். எனது உள்மனம் கூட பேச ஆரம்பித்து விட்டதா? பேசினால் காதில் கேட்பது போல் இருக்கின்றதே? சே... காதிருந்தால் கேட்கத்தானே செய்யுமென்று வெட்க புன்முறுவல் ஒன்றை வாய்கோணி உதிர்த்தான்.

"இல்லையில்லை நீ இருபது நான் அறுபது" அவனது குரல் கொஞ்சம் பிசிறடிப்பது போலிருந்தது.

"கிழிஞ்சது கிருஷ்ணகிரி. நம்ம ரெண்டு பேருமே இருபதுதான்". அதுவும் சரிதானே. பேசுவது உள்மனமென்றால் ஒத்த வயதில்தானே இருக்கவேண்டும். சமாதானமானான்.

இப்பொழுது மேலும் சில்லிப்பாக, அதிமேலும் தொப்பலாக நனைந்தது போல் சர்வேஷ் உணர்ந்தான். இப்போது காட்சி கொஞ்சம் தெளிவானது போலிருந்தது. ஒருவேளை ரிஸல்ட் வரும் நேரமாயிருக்குமோ? கிறுகிறுப்பும் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.

"அது வந்து தேன்கூடு..." என்று மெல்ல இழுத்தான்.

"என்னது தேன்கூடா? மவனே செருப்பால அடிப்பேன். நாம இருக்கிறது நரிமேடு". சேச்சே இந்த உள்மனதைக் கண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். கொஞ்சம் கூட மட்டு மரியாதையின்றி பேசுகின்றது.

இப்போது மண்டையில் சுள்ளென்று வலித்தது. 'ஆஹா என்னடா இது இம்சை?' என்று தனக்குள் விசனப்பட்டான்.

"ஙௌக்காமக்கா டாஸ்மாக் கலப்பட சரக்கு வேண்டான்னு அப்பவே சொன்னேனேடா; கொஞ்சமாவது கேட்டியா? கல்ப்பு கல்ப்பா சரக்கைக் காலி பண்ணிட்டு, இப்போ சானியாவாம், தேன் கூடாம், எலெக்ஷனாம், இவர் அறுபதாம், டேய் என்னாடா நெனச்சிக்கிட்டு இருக்க? என்னாலேயே தாங்கமுடியலியேடா. டேய் எழுந்திருடா தடிமாடு"

எதிரே பக்கெட்டும் கையுமாக நிற்பது கண்டிப்பாய் உள்மனதில்லை, எனது ரூம்மேட்தான் என்ற உண்மை இன்னொரு தண்ணீர் விளாசலுக்குப் பின்னர் லேசாக விளங்கத் தொடங்கியது.

அப்போ என்னோட தானியங்கி கார், நிலவில் இலவச வீடு, எல்லாவற்றிற்கும் மேலாக எனதருமை சானியா என்னவாயின போன்ற எண்ணற்ற கேள்விகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்ததா, இல்லை என் தலை அவ்வாறு கிர்ரடித்ததாவென உணர்ந்தறியும் திராணியில் அப்போது நானில்லை.

"ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்ப நான் கேள்வி கேக்கணும்
சர்வேஷா
தலையெழுத்தென்ன மொழியடா
ஓ..ஓ தப்பிச்செல்ல என்ன வழியடா?"


என்ற பாட்டு எங்கேயோ சன்னமாய் ஒலித்தது.

Thursday, April 20, 2006

பயணக்கட்டுரை for Dummies

அட என்னாபா அல்லாரும் பயணக்கட்டுரைன்னு பிலிமு காட்றானுங்கோ... நம்மாள ஒண்ணுமே கீச முடியலியேன்னு வருத்தமா கீறியா நைனா/நைனி... இந்தா இன்னையோட கவலைய உடுங்றேன். குசும்பன் தரான் இன்ஸ்டண்ட் பாயிண்ட்ஸ். கபால்னு புடி. கஸ்மாலம் கட் & பேஸ்ட் பண்ணிடாத. கட்டுரை கும்முன்னு வந்தா ஒரு டேங்ஸ் வரி கீசிப் போடு. சும்மா சுத்தி வளைக்காம சுகுற்றா மேட்டருக்கு வரேன்... ஆகே படோ (ஹிஹி டில்லி தமிழ்ல்ல மேல படிங்க/போங்க'ன்னு சொன்னேன்)

1. பயணக் கட்டுரை என்றவுடன் அண்டார்ட்டிக், ஆர்ட்டிக் போன்ற துருவங்களுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. தேனாம்பேட்டை சிக்னலிலிருந்து, பாண்டி பஜார் சென்றதைக் கூட விலாவாரியாக எழுதினால் அதுவும் பயணக் கட்டுரை வகைகளிலேயே அடங்கும் என்று அறிக.

2. சும்மா பல்லவன் பஸ் ஏறினேன். ரிக்கெட் எடுத்தேன். ஷ்டாப் வந்ததும் இறங்கினேன் என்றால் ஒருவரும் சீந்த மாட்டார்கள். ஒரு சிறு சம்பவத்தையாவது சுவையோடு கோர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் பாண்டி பஜாரில் பேஜாரான நாதன் கபேயில் டீ குடித்தீர்கள் என்று கொள்வோம். "சீனி சேர்க்காமல் சாருக்கு டீ ஒன்று", என்று உரிமையாளர், (சர்க்கரை வியாதியுள்ள) உங்களைக் கண்டவுடன் உணர்ச்சி பொங்க மாஸ்டரிடம் கூறினார். உடனே அதைப் பற்றி முன்னுரை, விளக்கவுரை, பதவுரை, முடிவுரை என்ற ரேஞ்சுக்கு "நாதனண்ட சாயா" என்ற ரேஞ்சில் டீ அடிக்கத் தெரிந்தால் உத்தமம்.

3. பயணக்கட்டுரை எழுதுபவர்க்கு 3CCD TRV Sony 950 கேம்கார்டர் இல்லாவிட்டாலும், காமெரா பொறுத்தப்பட்ட மோட்டாலுல்லாவோ(?!*), நோக்கியாவோ குறைந்தபட்சத் தேவை. ஆத்திர அவசரத்துக்கு செல்பேசி காமெரா போல துணைவன் கிடையாது. கன்னாபின்னா படமெடுத்து கம்பியெண்ண நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. யார் கண்டது நீங்கள் போகும் போது பிரிட்டினி ஸ்பியர்ஸ் போல ஹாலிவுட் கட்டைகள் கோயிலுக்கு வந்தால் செல்-போனாலாவது போட்டோ சுட்டு நீங்கள் இணையத்தில் போட்டால் ஹிஹிஹி நீங்கதான் அல்டிமேட் பயணக் கட்டுரையாளர்.

4. சரித்திரம் பற்றி எழுதினால்தால் நீங்கள் பயணக்கட்டுரை வடிப்பவர் என்பது ஆதிகாலத்துச் சம்பவம். சரி அப்படியே ஆகட்டும். வேறொரு நாட்டில் கண்ணாத்தாள் கோயிலைப் பார்க்கின்றீர்கள். உடனே எடுங்கள் செல்போனை. எதுக்கு யாரிடமாவது கோயில் பற்றி விளக்கம் கேட்கவா என்றால் நீங்கள் உருப்படவே வழியில்லை. உடனே போனின் கேமராவைக் கிளிக்குங்கள். "கலவர நாட்டில் கண்ணாத்தாள் கோயில்" என்று நீங்கள் பிலிம் காட்டினால் ஏதோ ஒரு பெரிய ரேஞ்சுக்குப் போகின்றீர்களென்று அர்த்தம்.

5. வலைபதிவுகளில் பயணக்கட்டுரையாளராக முக்கியத் தேவை "உசுப்பிவிடும் பின்னூட்டங்கள்". அடப்பாவி பண்டைக்காலத் தமிழன் கால்வைச்சு நூற்றாண்டுகளுக்கு மேலான நாட்டுல கண்ணாத்தாள் கோயில் கண்டிப்பா இருக்கும்யா என்று ஏதாவது அநானி அநாவசியமாய் ஊளையிடலாம். கண்டு கொள்ளாதீர்கள். "ஐய்யா எனக்கு வரலாறு ரொம்பப் பிடிக்கும்ங்க. உங்க பதிவுல நான் நிறையக் கத்துக்கிட்டேன். இனிமே நீங்க எங்க போனாலும் செல்லும், கையுமாவே போங்க", போன்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் நீங்கள் பயணக் கட்டுரை ஜாம்பவானாகி வருகின்றீர்கள் என்று அர்த்தம்.

6. சமீபத்தில் முப்பது வருடம் கழித்து வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகின்றீர்களா? கொடுங்கள் கையை. ராஜயோகம் உங்களுக்கு. சும்மா டிவி சீரியல் ரேஞ்சுக்கு கொறைஞ்சது 120 எபிஸோடுகள் போட்டுத் தாக்கிடலாம். குறிப்பா முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த "எங்கே போச்சு என் வேப்பமரம்?" என்று செண்டிமெண்ட் பதிவு போட்டால் ஐய்யோ எல்லோருக்கும் காலங்காத்தாலேயே கண்ணைக் கட்டுமே!

7. உங்க பயணக் கட்டுரைக்கு நடுநடுவே "வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குது", அப்பிடின்னு கிராபிக்ஸ் வேலையைக் காட்டிக் கலக்குங்க. யார் கண்டா? மார்க்கோபோலோ கூட பெரிய யானையைப் பறவை தூக்கிக் கொண்டு போய் பொத்தென்று போட்டது என்று எழுதியவர்தானே? எப்பிடி உங்க ரேஞ்சை எங்க கொண்டு போறேன் பாத்தீங்களா?

8. யுவான் சுவாங்கிற்கு ஒரு ஹர்ஷவர்த்தனர். மார்க்கோபோலோவிற்கு ஒரு குப்ளாய்கான். ஆனால் உமக்கு புரவலர் யாருமில்லை என்று தெளிக. உங்களது பயணக்கட்டுரை "நமக்கு நாமே" திட்டம் போல் சோகமயமானது. ஆதலினால் பார்த்து செலவு செய்க. ஏதோ போற இடத்துல போட்டோ புடிச்சோமா, ஏதாவது எழுதினோமா, பின்னூட்டம் படிச்சோமா'ன்னு இருப்பது ஷேமம்.

9. எங்கன போனாலும் பொறுக்குற வேலையை உத்தமமா பார்க்க வேண்டும். அது என்னவென்று வினவுகின்றீர்களா? லீப்லெட்ஸ், பாம்(ப்)லெட்ஸ் போன்ற எந்த குப்பையைக் கண்டாலும் உடனே பொறுக்கிக் கொள்ள வேண்டும். கைடுகள் சொல்வதை, ஆங்காங்கே பொறிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகளை சின்சியராக நோட்ஸ் எடுக்க வேண்டும். அப்போதுதான் அத்தெண்டிசிடி கூடும். இந்த வெளங்கா வேலையைச் செஞ்சு போட்டு போன இடத்துல ஒரு இழவையும் ரசிக்க முடியலியேன்னு பின்னாடி வருத்தப்பட்டா நீங்கள் பயணக் கட்டுரையாளராவது பெரும் சிரமம்.

10. சரிங்க... உங்களுக்கு எழுத வராதுன்னு வைச்சுக்குங்க. வெறுமனே போட்டா புடிக்கத் தெரிஞ்சாக் கூட போதும். அட்சீஸ் பண்ணிடலாம். ஒரே ஒரு வழியிருக்கு. அலாஸ்காவில் அந்துமணி என்று ஆங்கிலப் பதிவு ஆரம்பித்து வெறும் பிலிமாய் காட்டவேண்டியதுதான் அது. "அடப்பாவிங்களா இதுக்கு ஆங்கில வலைப்பதிவு எதுக்கு? ஒரு புகைப்படம் ஒரு கோடி சங்கதியை எந்த பாஷையிலேயும் சொல்லுமே?" என்று நீங்கள் என்னைக் கேள்வி கேட்டால், என்னை வம்பில் மாட்டி விடப்பார்க்கின்றீர்கள் என்று அர்த்தம்.

பி.கு. இப்பிடித்தான் பாஸு ஒரு வெளங்காத ஆளு வேகாஸுல கூத்தடிச்சார். சுத்தி முத்தி ரசிச்சுப் பாக்காம எல்லாத்தையும் கடமையே கண்ணாய் படம் பிடித்துக் கொண்டிருந்தார். கேட்டால் கேப்சர் பண்றேன்னாரு. அட இது பரவாயில்லைன்னு எங்க கும்பல் ஜாலியா சுத்திட்டு, கடைசியில கேப்சர் பண்ணியதுல நாங்க ஆளுக்கொரு பிரிண்ட் போட்டுக்கிட்டோம். இத்தெப்பிடி இருக்கு? (அய்யய்யோ யாரோ செல்போன் தூக்கிக்கிட்டு அடிக்க ஓடியாரேங்களே? அடச்சே அது நம்ம கேப்சர் பண்ண பிரண்டுதான். எனக்கு யாரிடமிருந்தோ போனாம். கொடுக்கத்தான் வந்தாராம். ஜீட்டேய்!)

போட்டோ: நன்றி-கூகுளார்

Tuesday, April 18, 2006

புலிகளும் புத்த துறவிகளும்

புலிகளுக்கும் புத்த துறவிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை தினகரன் நாளிதழ் தனது 14'வது பக்கத்தில் படம் போட்டு வெளிச்சம் காட்டியிருக்கின்றது. படத்திற்கு கீழேயே இலங்கையில் பதற்றம் தொடர்கின்றதென செய்திக் குறிப்பும் வெளியாகியிருந்தது பரபரப்பை உண்டு பண்ணியது.

மேலதிக விபரங்களுக்கு தினகரன் 19 ஏப்பிரல் பிரதியைப் (பக்கம் 14; இபேப்பர்) படியுங்கள். அட இன்னும் மேலதிக விபரங்களுக்கு ஹைப்பர் லிங்க் 1; ஹைப்பர் லிங்க் 2

பிகு: பரபரப்பான செய்தியைத் தந்தற்கு தினகரனுக்கு நன்றி.

Thursday, April 06, 2006

சினிமா விமர்சனம் For Dummies

வர வர யாரெல்லாம் சினிமா விமர்சனம் எழுதுறதுன்னு வெவஸ்தையே இல்லாமப் போச்சி பாஸு. இந்த லட்சணத்தில் எடுத்த எடுப்பிலேயே ஒரு படத்துக்கு ரெண்டு விமர்சனம் வேற... தோடா அதுவும் ஒரு துண்டு துக்கடா போஸ்டர் கூட இல்லாம... வெளங்குமாய்யா ஒலகம். சரி பரவாயில்லை. நச்'சுன்னு விமர்சனம் எழுத நாற்பது வழிகள் கேட்டாரு முகமூடி. நீர் எழுதியிருப்பதுவே நச்சாகத்தானே (குசும்பா நீ வெஷம்ப்பான்னு யாரோ புல்லரிக்கிற மாதிரி இருக்கு) இருக்கு. மேலும் நச்சாக்கனுன்னா இந்தா புடிங்க சிம்பிளா:

1. படம் பார்க்கும் போது தாக சாந்தி செய்து கொள்ள அடிக்கடி எழுந்து போனால் (அட குளிர்பதனப்பெட்டிக்குப்பா) கதையிலிருந்து விடுபட்டு விடுவோம் (க்கும் ரொம்ப முக்கியம்). எனவே அனைத்து கலர் திரவங்களையும், சைடு டிஷ்களும் சூழ படம் பார்க்க ஆரம்பியுங்கள். சிந்திய மிக்சரில் கவனத்தை சிதற விடாமல் கவனம் படம் மீது இருக்க வேண்டியது அதி முக்கியம். தாகசாந்தியின் உபயமாக விக்கல், தும்மல், உச்சா போன்ற சைடு எபெட்டுகளை கண்ட்ரோல் பண்ணினால் நல்லது. கவனத்தை குவித்து வைத்து உங்களது குண்டிலினி சக்தியை விமர்சனத்திற்குப் பயன்படுத்தலாம்.
2. இப்போ உங்களுக்குப் புடிச்ச பேருல கேரக்டர் வருதுன்னு வெச்சுக்கங்க. உடனே நீங்க பண்ண வேண்டியது "Pause" போட்டு விட்டு அந்த காரெக்டர் பேசும் வசனத்தைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வசனங்களை அப்பிடியே விமர்சனத்துலப் போட்டா ஒரு ரியல் எபெக்ட் வரும். (குடும்பத்தோடோ, நண்பரோடோ பார்த்தால் அவர்களுக்கு இச்செய்கை கண்டிப்பாக கோபமூட்டும். அட்சீஸ் பண்ணிக்க சொல்லுங்க. விமர்சனவாதியாவதுதானே நமக்கு முக்கியம்?)
3. நேரம் கிடைத்தால் DVD'ல் கதைச்சுருக்கம் படிக்கவும். ஓஸ்காரா, கோல்டன் குளோபா இல்ல வேறேதும் பரிசு வாங்கா விட்டாலும் நாமினேஷனாவது ஆகியிருக்கின்றதா என்று குறிப்பெடுத்துக் கொள்ளவும். பெரிய ரேஞ்சுல பிலிம் காட்ட இது உதவும்.
4. படத்தை கதையை வைத்துக் கொண்டு திறமையாகப் பிரிக்க வேண்டும். காதல், பாடல், பின்னணி இசை, கோபம், சிரிப்பு, அழுகை, கற்பழிப்பு, வில்லனின் பேக்கிரௌண்ட், ஹீரோவின் உன்னதம், ஹீரோயினின் மறைக்காத/வெளிப்பட்ட நடிப்பு, அங்கதம் செய்பவனின் அங்க சேஷ்டை போன்றவற்றை தொடர்ந்து "நோட்ஸ்" எடுத்துக் கொள்ளவும். "குருதிப்புனல் படம் பெரிதாகப் போகாததிற்கு அதில் பாடல்களே இல்லை" போன்ற நோபல் கண்டுபிடிப்பு வசனங்கள் கொசுறாக விமர்சனத்தில் வர வேண்டும்.
5. கண்டிப்பாக ஒன்றிரண்டு பாடல் வரிகளை மனப்பாடம் செய்து கொள்ளவும். வேறு எழுத அதிக விஷயமில்லையென்றால், "குப்பத்து ஜனங்களின் மத்தியில் இரண்டு ஹீரோக்களும் டோய் அந்த தாளம் அடிடா டோய் அந்த பாட்டைப் படிடா என்று ஆடுவது உணர்ச்சிப் பூர்வமாகப் படமாக்கப்பட்டிருந்தது" (படம்: பட்டியல்) என்று சொன்னால் நீங்கள் வளருகின்றீர்கள் விமர்சனத்தில் என்று அர்த்தம்.
6. சான்ஸ் கிடைக்கும்போது திரைகதை எழுதுவது எப்படி (சுஜாதா), ஹாலிவுட் அழைக்கின்றது (LA ராம்) போன்ற வீணாய்ப் போன புத்தகங்களை படித்து வைத்துக் கொள்ளவும். புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் உங்களுக்குப் புரிய வேண்டுமென்று அர்த்தமில்லை. அம்மாதிரி புத்தகங்களைப் படித்தால் உங்களது விமர்சனம் "டெக்னிக்கல்" அந்தஸ்து பெறும். எடுத்துக்காட்டாக "பச்சைக் கிளிகள் தோளோடு என்ற பாட்டில் குடும்பத்தோடு மண் மிதிக்கும் காட்சியில் அப்பா கமலஹாசனின் காலிலிருந்து கிளந்தெழும் சகதி பாவாடை தாவணியில் சிக்கென்று ஆடும் மகள் கஸ்தூரியின் முகத்தில் தெரிக்கும். அதை அழகாக அப்பர் ஆங்கிளில் குளோசப்பாக கஸ்தீரியின் முகத்தைக் காட்டி விநாடிக்கும் குறைவாக ப்ரேம் ப்ரீஸ் செய்வது தமிழ்ப்படங்களில் செய்யப்பட்ட புது யுத்தி." மவனே இணையத்துல அருண் வைத்தியநாதனுக்கு அடுத்தபடி நீங்கதான்ன்னு பேசப்படுவீர்கள்.
7. காதில் பஞ்சு வைக்கும்படியாக இருந்தாலும் ஒரு விமர்சகர் பஞ்ச் டயலாக்குகளை விட்டு விடவே கூடாது. "டேய் நான் விழுந்தா உரம். எழுந்தா மரம். படுத்தா பாம்பு. விடுத்தா அம்பு" போன்ற அச்சு-பிச்சு-பஞ்ச்சு டயலாக்குகளை விட்டுவிட்டால் நீங்கள் என்ன புண்ணாக்கு விமர்சனம் எழுத முடியும்?
8. பட லொகேஷன்கள் குறித்து கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். ஏனெனில் பெரும்பாலான பாடல்கள் ப்ரொட்யூசரின் பர்ஸ் கனத்தைப் பொறுத்து லொக்கேஷன்கள் வேறுபடும். "விசாகப்பட்டினத்து சிவந்த மண்குன்றுகளுக்கிடையே ஹீரோ வில்லன்களை அடிப்பது, மேட்ரிக்ஸ் படத்தில் நியோ போடும் சண்டைகளை பீட்டர் ஹெயின்ஸ் கண் முன் நிறுத்துகின்றார்" என்றால் எவ்வளவு எபெக்ட் குடுக்கும் தெரியுமா?
9. பாயிண்ட் 8 படிச்சேள்னா ஒரு உண்மை விளங்கும். தமிழ்ப்படம் பற்றிய விமர்சனம் எழுதும் போது ஆங்கில, ஸ்பேனிஷ், ஹிந்தி படங்களைப் பற்றி மேற்கோள் காட்டினால் உங்களது மல்ட்டி-கல்ச்சர் அவேர்னெஸ்ஸை உலகினுக்குத் தெரியப்படுத்தலாம். "தீன் திவாரே, 21 கிராம்ஸ், அமோரஸ் பெரோஸ் போல மூவரைச் சுற்றி நிகழும் கதைக்களத்தை ஏற்கெனவே 1962'ல் நெஞ்சில் ஓர் ஆலயமாய் படைத்தவர்தான் ஸ்ரீதர்" என்று ஐதர் காலத்து படத்துக்கு விமர்சனம் எழுதினீர்களென்றால் மவனே ஜாக்பாட்டுதான்.
10. ஒரு இழவும் வெளங்கலியா? படத்த பாத்தவுடனே பதிவு போட்டுணுன்னு கண்களில் நீருடன் கையரிக்கின்றதா? உங்களுக்கும் ஒரு வழி உண்டு. கண்ணெரிச்சலுக்கு சொட்டு மருந்து விட்டு, கையரிப்புக்கு அஞ்சால் அலுப்பு மருந்து போட்டுக்கிட்டு, ரெண்டு வேலியம் மாத்திரைய உள்ள தள்ளுங்க. உமக்கு விமர்சனம் பண்ண வரவே வராது. ஏன்னா இந்த நெலமையில This DUDE Kamal'ன்னு தூய ஆங்கிலத்தில் பினாத்தத்தான் வரும்.
11. பாயிண்ட் பத்துல கோச்சுக்கிட்ட மக்கள்ஸே... உமக்கான இன்ஸ்டண்ட் விமர்சனம் எழுத ஒரு வழியுண்டு. இங்கே கிளிக்குங்கள். . அட இந்த இழவைத்தானே எல்லாரும் பண்றாங்கன்னு சொல்றீங்களா? ம்ஹூம் நான் மாட்டிக்க விரும்பலேப்பா... அப்பீட்டு.