Tuesday, August 02, 2005

தொட்டாற்சிணுங்கியும் சில விளம்பரப்பலகைகளும்

எடுத்தாச்சு, தூக்கியாச்சு, போயிட்டு வாரன், கடேசிப் பதிவு நன்றி இத்யாதி இத்யாதிகள் கடந்த சில நாட்களாய் வலைப்பூக்களில் பிளாஷாய் அடிக்கின்றன.

என் மாடு பால் கறக்கவில்லை. பொண்டாட்டி வையறாங்க. தப்புத் தப்பா இணையத்துல பேசறாங்க. ஐ'பீ கலெக்ட் பண்றாங்க. எரிதம் வருது. ஆபீஸ¤ல வலைப் பதிய முடியல. ஆமாம் இதெற்கெல்லாம் இந்த தமிழ்மண நிர்வாகிகள் என்னதான் செய்றாங்கோ? (அய்யா அன்பு இது குசும்பைய்யா...)

எழுதுவது ஈகோ. வலைப்பூ ஈகோ டிரிப். இதுல என்னாய்யா குறைஞ்சு போச்சி. அங்கீகார அரிப்பென்றால் என்ன? அரிப்பியலியம் (கொப்பிரைட்: குசும்பன்) என்று வை(த்)துக் கொள்வோமா? ஆமாம் ஈகோ இல்லாமல் எழுத நானென்ன "இணையமே ரிலாக்ஸ் பிளீஸ்", "வலைப்பூ திற பின்னூட்டம் வரும்", "அத்தனைக்கும் பின்னூட்டமிடு" என்று ஸ்ரீலஸ்ரீ இணையானந்த குசும்பஹாசன யோகேஸ்வர ஸ்வாமிகளா? அட நாராயணா நாராயணா... அதென்ன கடந்த 2-3 வாரங்களாக பார்த்த வாசகர் பரிந்துரையின் பேரில் தூக்குகின்றார்கள்? இதுக்கு முன்னாடி ஓட்டு போட்டதெல்லாம் சனநாயகத்தின் சக்தியுணர்ந்தோர், இப்போ ஓட்டு போடறவங்கெல்லாம் சனநாயகத்தை சந்தி சிரிக்க வைக்கறவங்களா? அட தேவுடா தேவுடா... அரசியல் கட்சியெல்லாம் மண்டி போட்டு மடிப் பிச்சை கேட்கணும் ஓய் !!!

நம்ம எப்பவுமே நடுத்தெருப் புகழைப் பற்றி கவலைப்பட்டது இல்லை ஸார். நானே ஒரு கையேந்தி பவன். வைச்சா குடுமி இல்லேன்னா வழிச்சுடலாங்றது நல்ல பாலிஸிதான். அநேகமா கடந்த இரண்டு வாரங்களா (3 வாரங்களில்லை) வலைமக்கள் ஏன் இப்படி குத்துகின்றார்கள் இதற்கு முன்னர் ஏனிப்படி குத்தினார்களென்று யாமறியேன் பராபரமே.

என்னத்தைச் சொல்றது? யாம்தான் எழுதினோம். நீவிர் இத்துனைப் பேர் படித்தீர். ஓட்டின்றி அந்நாளில் காய வைத்தீர். இன்றும் ஓட்டின்றி (அட கையில இர்ந்த ஓட்டை ஓட்டுப் போட்டு கடாச வைச்சுட்டாங்கப்பா) ஓய வைத்தீர். அன்று வெற்று வெளியில் அரசனாய் நம்பவில்லை. இன்று ஒற்று ஒளியில் ஓவராய் (Icon: நன்றி திரு. இராமகி) உணரவில்லை. இது இலக்கியத்தரமாய் ஜல்லியடித்தவை என்றே வைத்துக் கொள்ளலாம்.

வைத்துக் கொள்வதும், தூக்குவதும் அவரவர் நேயர் விருப்பம்.

வலைப்பூ நாளொறு வண்ணம் பொழுதொரு தூரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை. அது சிறுகை கொண்டு கூழும் அளாவலாம். சிறிதே அசந்தால் அதையும் பிசையலாம்.

பொறுமை காப்போம் ஏனெனில் இது யாம் பெற்றது.

பெத்துப் போட்டுவிட்டு குத்துதே குடையுதே என்று பொறுப்பின்றி தொட்டாற்சிணுங்கியாயன்றி பொறுப்புடன் பேணிக் காப்போம்.

இல்லையெனில் ம(தோ)ற்றவர் போல் விளம்பரப் பலகை பிடிப்போம், "நல்லதோர் வீணை செய்தே... அதை நலங்கெட புழுதியில் எறிந்து விட்டோம்"

கதை விடும் காதை

நீண்ட நாட்களாகவே எனக்கும் அந்த ஆதங்கமிருந்தது. அமெரிக்காவிலோ, கனடாவிலோ அல்லது வேறு கண்டங்களிலோ (?) நடக்கும் இலக்கிய (வலைப்பதிவர் என்று வாசிக்க) கூட்டங்களின் போது பார்வையாளர்களாகவும், பங்கு பெறவும் வந்திருந்த இலக்கியவாதிகள் (அ·தாவது வலைப்பதிவர்கள்) பலரும் வெளியிலில் நின்ற படி ஆரஞ்சு ஜூஸ் குடித்தோ அல்லது கீழே மேலே சிந்தியபடி பியர் அடித்தோ தங்களுக்குள் பே(கீ)சிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிக் கொள்வதற்கோ, சமீபத்தைய இலக்கியப் (வலை/வயிற்றுப்) போக்குகள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கோ சந்தர்ப்பம் இருப்பதேயில்லை என்று.

பொதுவாக தமிழ் வெகுஜன மற்றும் சிற்றிலக்கிய எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது அதுவும் தமிழில் வெகு அபூர்வமான ஒன்று. பொது இடங்களில் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசிக் கொள்வார்களேயன்றி நட்போடு பழகுவதோ, தங்களது படைப்புகள் பற்றி கலந்து பேசிக் கொள்வதோ சாத்தியமேயில்லை. சில்வியா பிளாத் சொல்வது போல இன்னொரு எழுத்தாளரைச் சந்தித்து நட்பு கொள்ளும் அளவு தான் இன்னமும் மனச்சிதைவு அடைந்துவிடவில்லை என்ற கூற்றைப் பொய்யாக்க விரும்பினேன். எஸ்.ரா. கூறுவது போல "ஒரு எழுத்தாளர் மற்ற வலைப்பதிவரோடு பழகுவதற்கு தடையாக இருப்பது அவரின் ஈகோ மட்டுமே. அதைக் களைந்து எறியும் போது நட்பும், பகிர்தலும் சாத்தியமே."

மேலும் வலைப்பூக்கள் ஒரு ஈகோ டிரிப் என்பதால் சமீபத்தில் 2 நாட்கள் வேகாத வெய்யிலில் வேகாஸில் கதை விடும் காதை என்ற இலக்கியச் சந்திப்பில் வலைப்பிரபலங்களையும், வெளியுலகப் பிரளயங்களையும் கூட்டாக இணைத்தேன். பல்வேறு உலக இலக்கியங்கள் குறித்தும், தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத சக்திகளான வலைஞர், பொருமா, இராமநீ(நே)சர், கோ.வை., ச்சூஜாதா ஆகியோரின் படைப்புலகம் பற்றியும் விவாதம் செய்தபடி, ஒன்றாக கேசினோவில் கேம்ளிங் செய்தபடி, ஆளரவமிக்க Crazy Horse'ல் அமர்ந்து விவாதம் செய்து கொண்டு இரண்டு நாட்கள் கூடியிருந்த சந்தர்ப்பம் ஏற்பட்டது.

வலைப்பிரபலங்களான சங்கட், கவி கருணாதாஸ், குன்னக்குடி ஓவியர், ஹல்வாசிட்டி பாபு, கவிக்குமார், பனாரஸ் பிரகாஷம், மாடர்ன் பொண்ணு , சிகப்பி (பெண்ணில்லாத சந்திப்பென்று யாரும் குறை கூறிவிடக்கூடாதல்லவா?) உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

வேகாஸில் சீசன் இல்லாத காலமென்றில்லையென்பதால் வெறிச்சோடாமல் இருந்தது. தேஜாவூ மகளிர் மட்டும் ஷோ காட்டும் இடத்தில் பகலிலும் கூட்டமிருந்தது. இரண்டு நாட்களும் ஸீஸர்ஸ் பேலஸ் பயணியர்(?) விடுதியொன்றில் தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்நாள் காலை அமர்வில் பார்த்திபனும், வடிவேலுவும் பொத்தாம் பொதுவாக ஒரு உரையாடலைத் துவங்கி வைத்தனர். வடிவேலு 'குண்டக்க மண்டக்க' என்னும் தமிழ்த்திரையுலகில் புதிய புரட்சி செய்யப் போகும் திரைப்படம் குறித்து நீண்ட சொற்பொழிவொன்றை ஆற்றினார். குன்னக்குடி ஓவியர் அதிதீவிரமாக குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். இடையிடையே ஸீஸனில்லாத குற்றாலத்தில் ஐந்தருவியில் விழும் நீர் போல அரிதாக ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பங்கம் வைக்கவில்லை. குறிப்பாக அவர் பார்த்திபனிடம்," ஏய்யா குடைக்குள்ளே மழை ஏன் ஓடல?" என்று வினவ அதற்கு பார்த்திபன், "ஏண்டா நக்கலா... குடைக்குள்ளேயே மழை. எப்படியும் நனைஞ்சிட்டோம். அப்புறம் ஏன் ஓடணும்?" என்று பதிலுறுக்க வேகாஸே சிரிப்பு பயர் வொர்க்ஸில் குலுங்கியது.

அதைத் தொடர்ந்து சமகாலப் பதிவுகள், புனைவுகள், சிறுகதைகள் பற்றிய விவாதமாக அது வளர்ந்தது. ச்சூஜாதாவின் அறியா'யியல் பதிவுகள் பற்றி உரையாடல் திரும்பிய போது சங்கட்டின் பேச்சு வரா'லாற்றில் பொறிக்கத் தக்கது. "தினமணி கதிரில் ச்சூஜாதாவின் சிலிக்கன் சில்லுப் புரட்சி படித்து அதன்பின்னர் பல பக்கங்கள் கொண்ட பதில் எழுதினேன். அது உப்புமாவில் போட்ட உப்பைப் போல இடமே தெரியாமல் சென்று விட்டது. இன்று சிலிக்கன் செய்யும் புரட்சியினை 'கண்ணார' நமக்குக் காணக் கிடைக்கின்றது. இவரிடம் கருத்துக்காக இன்னும் கையேந்தி நிற்பவரைக் காணக் கண் கூசுகின்றது" என்றார். கவிக்குமார் சிறிதே உணர்ச்சி வயப்பட்டவராய்," பிரபலங்களின் பிழைகள் பிரசுரிக்கப்படுகின்றன. சாமான்யர்களின் நல்ல வலைப்பூக்கள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. வெகுஜன ஹோட்டலில் எளிமையாய்த் தருகின்றேன் என்று அரை வேக்காட்டு உப்புமா பரிமாறுவது ஆபத்தானதுதான்" என்றார்.

மதிய அமர்வில் எழுத்துகளும் மையின் நிறங்களும் என்ற தலைப்பில் மாடர்ன் பொண்ணு பேசினார். "இவ என்ன சொல்றான்னா, ச்சோவின் எழுத்தில் காவி நிறம், காநியின் எழுத்தில் (தற்சமயம்) பச்சை நிறம், பாரு நிவேதிதா எழுத்தில் எப்போதும் ஒரே பச்ச்ச்சை நிறம், சாலன் எழுத்தில் மஞ்சள் நிறம் பாருங்க பார்வையாளர்களே பாருங்கங்றா", என்று தனது தத்துவார்த்த கண்டுபிடிப்பாக்கத்தை சமர்ப்பித்தார்.

Expert Comments:

வடிவேல்: "ஏம்ப்பு இம்பூட்டு கலர்லேயா எழுதுவாய்ங்க?"
பார்த்திபன்: "டேய் வீணாய்ப்போனவனே. குமுதம் அரசு பேனாவுல என்னா மையி தெரியுமா?"
வடிவேல்: "என்னா மையி?"
பார்த்திபன்: "ம்ம்ம்ம்... ஏதோ லேகிய வைத்தியரு சொல்றா மாதிரி சொப்பன ஸ்கலிதமாம்"
வடிவேலு: "அது யாரு வைச்ச மையி? ஒரே சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு"

அதைத் தொடர்ந்து இன்றைய இ(சி)ந்திய இலக்கியப் போக்குகள் பற்றிய பார்வைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மாலையில் வேகாஸ் ஷோக்களில் ஒன்றான நீராடியின் (Water Dance) முன்னால் யாவரும் ஒன்றாக கூடி பொருமா பற்றியும் குற்றால குறவஞ்சி பற்றியும் பேசியபடி சில்லென்று பியர் (காநி மதுவருந்தக் கூடாதென்றும் பியர் அருந்தலாமென்றும் கூறியிருந்தமையால்) அருந்தினோம். குற்றால குறவஞ்சியில் எத்தனை முறை 'கொங்கை'ப் பிரயோகம் வந்துள்ளதென்று புள்ளி விவரப் புலியான பெயரீதரன் கூற சபையே வியப்பில் ஆழ்ந்தது.

'இரவு இலக்கியத்தில்' (ஒண்ணாப் படிச்சு உசுரை வாங்காதீங்க :-) பெருகிவரும் அரசியல் பற்றிய விவாதம் சூடுபிடித்தது. பேச்சு முடிந்து யாவரும் உறக்கத்திற்கு திரும்பும் போது மணி காலை நான்காகியது. வேகாஸிற்கு விடியலேது? மறுநாள் காலை பத்து மணிக்கு மப்புக் கலையாமல் மீண்டும் ஏதேதோ உளராடல். இரவு வீடு திரும்பும் பயணம்.

இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கதை விடும் காதை என்ற இலக்கியச் சந்திப்பில் நான் புரிந்து கொண்டது வலைப்பூ மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்குள் ஆரோக்யமான மாற்றங்கள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றன. எப்போதும் வலைப்பூக்காளர்க்கு வெகு ஜன ஊடகங்களின் வாயிலாக அருளாசிகளை சொல்லிக் கொண்டிருப்பதை விடவும் தனிப்பட்ட இது போன்ற சந்திப்புகளின் வழியாக புதிய படைப்பிலக்கியம் பற்றி பேசவும், புரிந்து கொள்ளவும் தயராகயிருக்கிறார்கள் என்பதே.

இதே போல இன்னொரு இலக்கிய முகாமை இந்த ஆண்டின் இறுதியில் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

இந்த கூட்டம் முன்மொழிந்த சில விஷயங்கள் குறித்து தனியே பதிந்து தங்களது ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.