Wednesday, February 07, 2007

இவர்கள் சந்தித்தால்

பாபா-கலீஞர், அனர்ந்தமயி-கலீஞர்'ன்னு எதிரெதிர் துருவங்களின் சந்திப்பு அரசியல் வானில் அரங்கேற நமது சக வலைப்பதிவர்கள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கையா பார்ப்பார்கள். இதோ நமது இணைய உலகில் "ஒத்துப்போகாத ஜோடி நம்பர்-1" என்ற போட்டி "கலங்கப் போவது யாரு?" என்ற டைட்டிலில் நடத்தப்படுகின்றது. நடுவர்களாய் வழக்கம் போல் நமது பார்த்திபனும், வடிவேலுவும்:

வ: அண்ணே நம்மள இணையத்துல கூப்பிட்டு கௌரதி பன்ணி எவ்வளவு நாளாச்சு? உங்களக் கூட "முன்னாள் பெப்ஸி இந்நாள் உமா" கூடப் சன் டிவியில பாத்தேனே? என்ன உங்களுக்கும் மார்க்கெட் டவுனா?
பார்த்திபன்: இந்த குசும்பு தானே வேணாங்றது "நான் கடவுள்"
வ: என்னாது நீங்க கடவுளா?
பார்த்திபன்: அட "நான் கடவுள்" ஆர்யா கூட உமாவோட ப்ரோக்கிராம் கொடுத்தாரு. அப்ப அவரு மார்க்கெட் டவுனா? சிங்கத்துக்கு காச்சலடிச்சா நாய் பக்கத்துல வந்து நக்கி உட்டுப் போகுமாம்.
வ: இந்தா இந்த சிங்கம், நாய் கதய வுட்டு இணையத்துல இலக்கிய சண்டையை உருவாக்கிறாத. சொல்லிப்புட்டேன் ஆமாம். சட்டு புட்டுன்னு நிகழ்ச்சிக்குப் போவோம். சோடிங்க காத்துக்கிட்டு இருக்கு. மொதோ ஜோடி வாங்கப்பா.

(தெலுங்கு பட நடிகர் பாலகிருஷ்ணா போல் 20 வயது இளைஞன் உடையில் டோண்டுவும், குறுந்தாடி மேலைநாட்டு ஸ்டைலில் இணைய நாடோடியும் வருகின்றார்கள். ஸ்டேஜ் களை கட்டுகின்றது)
டோ: வாங்க வாங்க. உங்களோட தனிப்பட்ட நட்பு என்னான்னு இந்த இணையத்துக்கு தெரியாது.
நாடோடி: அட ஆமாங்க திரு. டோண்டு ராகவ ஐயங்கார் அவர்களே
டோ: ஏங்க உங்க வீட்டுக்கு ஒரு ஐயர், ஐயங்கார் வந்தா ஆகாதா? வந்தா அப்பிடி என்னதான் நடக்கும்?
நா: அய்யோ அய்யய்யோ ஒரு ஐயரும், ஐயங்காரும் ஒண்ணா வந்தா எனக்கு "பட்டை நாமாம்" சாத்திடுவாளே
வடி (பார்த்திபனைப் பார்த்து): ஆஹா நம்மள விட சூப்பர் ஜோடி இதுதான் போலருக்கு. குண்டக்க மண்டக்க பேசுறாங்களே
பார்த்திபன்: இணைய நாடோடி பட்டையும், நாமமும் சொன்னீங்க ஆனா இன்னும் சில விஷயங்கள் இருக்கே: பூணூல் ணூல் ல்
வடி (முணுமுணுக்கிறார்): வார்த்தையைப் பிரிச்சுப் போட்டே கொல்றானே
டோ: எங்காளுங்க வந்தா பட்டை நாமமா. நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம். போடா ஜடாயு ஸாரி... ஜாட்டான்னு போயிக்கிட்டே இருப்போம்
நா: சரிங்க. உங்கள ஐயங்கார் என்றே விளிக்கலாமா? டோண்டு டோண்ட்-டூ
டோ: சரி ஹிப் ஹிப் ஹிப் (விக்கலெடுக்க பார்த்திபன் தண்ணீர் கொடுக்கின்றார்) ஹிப்போகிரிட் அவர்களே டோண்டு வில்-டூ
வடி: ரெண்டு பேருமே மாத்தி மாத்தி டூ விடுறானுங்களே எப்பிடி அவிய்ங்களுக்குள்ள தனிப்பட்ட நட்பு இருக்கும்?
பார்த்திபன்: அதாண்டா நெட்-தமிழன்
வடி: அதென்ன புது சேனலா?
பார்த்திபன்: டேய் நீ டிவி ஊடகத்த வுட்டுட்டு வெளியில வா! இணையத்துல இணை! பொன்னான 180 நிமிடங்களை செலவு பண்ணு. விவரம் புரியும். சரி சரி இந்த ஜோடி எந்த பாட்டிற்கு ஆடப் போகின்றது?
(வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகு தூரமில்லை நி வாராய் என்ற பாடலுக்கு யார் யாரைப் பிடித்து தள்ளப் போகின்ரார்கள் என்ற சஸ்பென்ஸுடன் டோண்டுவும், நாடோடியும் ஆட அரங்கமே அதிர்கின்றது)

வடி: என்னாணே அடுத்த ஜோடியோட கெட்டப்பே பயமா இருக்கு. ஒருத்தன் முகமூடி போட்டுருக்கான். இன்னோரு ஆளு பாக்க காட்டான் மாதிரி இருக்கான்.
பார்த்திபன்: டேய் ச்சுப்-கரோ
வ: அப்பிடின்னா?
பார்த்திபன்: டெல்லித் தமிழ்ல கம்னு கெட'ன்னு அர்த்தம். அடுத்த ஜோடி வாங்க. கலங்க அடிங்க.
(முகமூடியும், குழலியும் மேடையில் தோன்றுகின்றார்கள்)
முகமூடி: என்ன குழலி என்னையப் பாத்தவுடனே டென்ஷனாறீங்க?
குழலி: உங்கள எங்க பாக்க முடியுது? அதான் முகமூடி போட்டு இருக்கீங்களே?
மு: சரி முகமூடியைக் கழட்டிடுறேன். (முகமூடியைக் கழட்டுகின்றார்)
கு: சரி நீங்கதான் முகமூடின்னு எப்பிடி நம்புறது? நீங்களே ஏன் குசும்பனாவோ, சின்னவனாவோ இருக்க முடியாது?
மு: அடப்பாவிங்களா! இதுக்குப் போயி தாசில்தார், RDO, VAO சர்ட்டிபிகேட்டா வாங்கிட்டு வர முடியும்? நாந்தான் சத்தியமா முகமூடி... நம்புங்க
கு: சதி நடக்கின்றது. வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் இல்லாமல் என்னை அப்யூஸ் செய்யிறாங்க
மு: என்னாது அப்யூஸா? எனக்குத் தெரிந்தவரை சைல்ட் அப்யூஸ், டிரக் அப்யூஸ் கேட்டுருக்கேன். ஆனா உங்கள எப்பிடி அப்யூஸ் செஞ்சாங்க?
கு: திராவிடர்களே எழுமின், விழுமின். நீ அடிமைப்பட்டுக் கிடந்தது போதும். இனிமேலும் உன்னை அப்யூஸ் செய்ய முடியாது. நீங்கள் என்னை அப்யூஸ் செய்தால் அது என் முடிக்கு சமானம் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா நான் அதை கிரீம் போட்டு சீவி வளர்த்து வெட்டி விடுகின்றேன்
மு: ஏங்க உங்களுக்கு வெட்டுறத தவிர வேறெதுவுமே தெரியாதா? நாட்டுல பிரச்சினைன்னா மரம் வெட்டுவீங்க... வீட்டுல பிரச்சினைன்னா முடியை வெட்டுறீங்க
கு: நாங்க என்ன தலையவா வெட்டுனோம்? கேவலம் முடியை வெட்டக் கூடாதா? அய்யய்யோ என்னைய அப்யூஸ் பண்றாங்களே
வடி (முடியைப் பிய்த்துக் கொள்கின்றார்): இந்த ரேஞ்சுல இவனுங்க போனானுங்கன்னா நான் வெட்டுறதுக்கு முடியே இருக்காது போலருக்கே...ஜூட் சீக்கிரம் ஏதாவது பாட்டுக்கு ஆடுங்கப்பா...
கு: நம்மள ஜட்ஜ் பண்ண இவனுங்களுக்கு என்னா தகுதி இருக்கு? எனக்கு ஜீரி மேலேயே சந்தேகமா இருக்கு
மு: அது ஜீரி இல்லீங்க ஜூரி
கு: ஸாரி நான் செந்தமிள் திராவிடன். தேவபாஷை எனக்கு வீக். டீக்-ஹே?

(தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் "என்னம்மா கண்ணு சவுக்கியமா" என்ற பாட்டுக்கு முகமூடி ஆட ஆரம்பிக்க, ரஜினியின் மிஸ்டர் பாரத் படமென்று நினைத்த குழலி படப்பெட்டி கடத்தும் பழக்க தோஷத்தில் பாட்டு டிவிடி'யை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார். அரங்கத்தில் குழப்பமான கைத்தட்டல்)

பார்த்திபன்: (வியர்வையை வழித்து விட்டபடி) ஏண்டா இந்தப் போட்டிக்கு வந்தோம்னு கண்ணைக் கட்டுதே
வடி: எங்கூருல இதைத்தான் கூப்பிட்டுக் குத்து'ம்பாய்ங்க. சும்மா கெடந்த சுருக்குக் கயித்தை மாலைன்னு கழுத்துல மாட்டிக்கிட்டானாம் ஒருத்தன்
பார்த்திபன்: டேய் எனக்கும் பழமொழி தெரியும். அடங்கு. எவனாவது பழமொழி for Dummies'ன்னு பதிவு போட்டுடப் போறான். நெக்ஸ்ட் நெட் ஜோடி வாங்க ப்ளீஸ்

(வரமாட்டேன் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தபடி பத்ரியும், அவர் கையை வித்யாவின் கையாய் நினைத்தபடி இஅழுத்துக் கொண்டு கையில் லேப்டாப்புடன் நுழைகின்றார் தமிழ் பார்டெண்டர்)
பத்ரி: ......
வடி: ஹலோ பத்ரி இப்போ நீங்க என்ன சொன்னீங்க? ஒண்ணுமே கேக்கலியே?
பார்த்திபன்: அவர் ஒண்ணும் சொல்லலியா? எனக்குக் கேட்டுதே?
வடி: ஏம்ப்பா நானும் பக்கத்துலதானனே இருந்தேன். ஒண்ணும் கேக்கலியே?
பார்த்திபன்: ஹூம் அவரு பேசாம இருந்தாலே நூறு தடவை பேசின மாதிரி
(காண்டாகின்றார் வடிவேலு)
தமிழ்: வலைபதிவர் சந்திப்புன்னா ஆரஞ்சு ஜூஸையே சிந்திக் குடிக்கிற உங்களுக்கும், ஸ்கூரூ டிரவரையே ராவுல ராவா அடிக்கிற எனக்கும் ஒன்பது வித்தியாசம் இர்க்கு நைனா. வேணா பான்பராக் காராவையோ, குஜினி கும்கியையோ கேளெங்க கத்ரி ஸார்
வடி: ஆஹா கெளம்பிட்டாய்ங்கடா. ஆமாம் பார்காரரு ஆரு கிட்ட பேசுறாரு?
பார்: கம்னு கெட இல்லேன்னா உன்னைய "குடிவேலு" ஆக்கிப்புடுவாரு அக்காங்
பத்ரி: .........
வடி (பார்த்திபனை கம்மென்று இருக்குமாறு சைகை செய்தபடி) எங்களுக்கும் வெளங்கும். இப்போ இவரு பேசுனது எனக்கும் புரிஞ்சிச்சுல்ல
பார்: அவரு எங்கடா பேசுனாரு? நரசிம்ம ராவு கூட ஏப்பம் வுட வாயைத் தொறப்பாரு. இவரு என்னடான்னா பெவிக்காலு ஒட்டுன டைட்டு லிப்பால்ல இருக்காரு
வடி: அப்ப முன்னாடி ஒரு பஞ்சு டயலாக்கு உட்ட
பார்: பஞ்சு டயலாக்கு சொன்னா அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது
தமிழ்: மேற்கு பதிப்பகத்துல MP3 புக்கு போட்டா பெரிய ஆளா? ஸ்டேஷன் பெஞ்சுல டீ ஆத்துறவனெல்லாம் கொரலு கொடுக்கிறானாமில்ல.
வடி: அடப்பாவி சூப்பர் ஆக்ட் கொடுக்கிறார்பா. லேப்டாப் பதிவுல MP3 புக் சூப்பர்ன்னு சொன்ன மாதிரில்ல தெரிஞ்சுது
பார்: டேய் இவ்வளவு அப்பாவியாய் இருக்குற. அதான் போறவன் வர்றவனெல்லாம் உன்னைய மிதிக்கிறான்
பத்ரி: ............
வடி (கண்களைக் கசக்கியபடி): அய்யோ என்னைய விட நல்லவரா இருக்கிறாரே இந்த பத்ரி
பார்: சரி சரி சட்டு புட்டுன்னு ஆடுங்க

(காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாய் அடிபட்டு தரையில் கிடக்கின்றார். அவரைச் சுற்றி வந்தபடி தனுஷ் மாதிரி வெறியுடன் "திவ்யா திவ்யா" என்று ஆடுகின்றார் தமிழ்பார் டெண்டர். அரங்கமே அதிர்ச்சியுடன் பார்க்கின்றது)

வடி: என்னாபா ஒரே ரவுசு பார்ட்டிங்களா இருக்கு... ஒரு இலக்கிய ஜோடியே இணையத்துல கிடையாதா?

(உடனே தோம் தோம் வந்தோம் என்று ஒரு ஜோடி குதிக்கின்றது. ஸாரி கொதிக்கின்றது. அருகருகே இருந்தாலும் அக்னி நட்சத்திரமாய் தகிக்கின்றது. ஆஹா புரிந்து கொண்டீர்களா? பிகேஎஸ்+சுமூ தான் அந்த ஜோடி)
பிகேஎஸ்: வாங்க குடியாத்தம் முனிரத்னம் சுந்தரமூர்த்தி அவர்களே! வணக்கம் என்பதை நான் சொந்தப் பெயரில் சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
சுமூ: அப்ப நான் என்ன அடுத்தவன் பெயருலயா எழுதறேன். என்னோட முழுப்பேர்லதான் நானும் எழுதறேன். சுருக்கமா சுமூ. அதுவும் என் பெயர்தான். வலிக்கிற இடத்துல அடிக்கணும்.
பி: வாய்யா என் தெலுங்குப் பட வில்லனே... எத்தனை சுட்டிகள் என்னைத் திட்டிப் போட்டிருப்பீர்கள்? இதையும் நான் சொந்தப் பெயரில் தான் கேட்கின்றேன். விளக்கு'ங்கள்
சு: விளக்கு என்பது வாங்கவோ விற்கவோ வந்த ஸ்தாபனமல்ல...
(கூட்டத்திலிருந்து ஒருவர் "ஆஹா விளக்கு பற்றி அருமையாக விளக்குகின்றார். சொல்லி கில்லி மாதிரி அடிக்கின்றார் என்று கத்த கடுப்பகின்றார் பிகேஎஸ்)
வடி: அண்ணே அடிக்கடி "சொந்தப் பெயரில் கேட்கிறேன்னு சவுண்டு வுடறாரே ஏண்ணே?"
பார்த்திபன்: அதுவா அவரு வேற பேருல எழுத முடியலேன்னு கடுப்புதான்
வடி: அப்ப சொந்தப் பேருல இல்லாம வேற பேருல வேற எழுதுவானுங்களா?
பார்த்திபன்: ஆமாண்டா சொந்தப் பேருல படிக்கிற ஆளில்லேன்னு வையி...வேற பேருல எழுதுவானுங்க
வடி: அப்ப பிகேஎஸ் ஏன் வேற பேருல எழுதுல?
பார்த்திபன்: ஏண்டா எனக்கு ஆப்பு வைக்கப் பாக்குறியா? இத நான் என் சொந்தப் பேருலதான் கேக்குறேன்
சுமூ: என்னைக் குறி வைத்து வெறி வந்தது போல் நீங்கள் பல இடங்களில் எழுதி வந்துள்ளீர்கள் என்பதை மக்களுக்கு இந்த சுட்டிகள் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். அதனால் இவரைப் புறக்கணியுங்கள். புத்தகங்கள் வாங்காதீர்கள்
வடி: ஏண்ணே இந்த சுட்டிகள் என்றால் என்னண்ணே?
பார்த்திபன்: அட பொறம்போக்கு... கண்டபடி சுட்டுறதுதான் சுட்டி. எவன் அதிகமா சுட்டுறானோ அவந்தான் ஜெயிச்சதா அர்த்தம்
பி: உங்களைப் போல் எனக்கும் சுட்டத் தெரியும். அதையும் ....
வடி: என்னா சொந்தப் பேருலேயே சொல்றீங்களா? அடங்குங்கப்பு.
பி: உங்களுக்குத் தெரியாது வடிவேலு. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும். கொஞ்சம் அசந்தா சூச்சூன்னு டிரெயினு வுட்டுடுவானுங்க. இல்லே வீரமணி இவந்தான்னு கற்பூரமணைச்சு சத்தியம் பண்ணுவானுங்க. சுதாகரிப்பா இல்லைன்னு வைங்க உங்களையே சுத்திகரிப்பு பண்ணிடுவானுங்க. இந்த செஸ்னாவுல...
சுமூ: அய்யய்யோ அதுல நான் அடிப்படை உறுப்பினர் கூடக் கெடையாது. வருஷாவருஷம் பொங்கல் சாப்பிடத்தான் போவேன். செஸ்னா என்னா எனக்கு டயோட்டா சியானாக் கூடத் தெரியாது. பிரண்டுதான் காட்டுனாரு. நான் தமிழனே கெடையாது. எனக்கு கன்னடம், தெலுங்கு, கியூனிபார்ம் மொழிகள் கூடத் தெரியும் (மூச்சு இளைக்கிறது)

(ஏ சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி என்ற பாடலுக்கு பிகேஎஸ் குத்தாட்டம் போட, சிங்கம் என்ற வார்த்தையில் ஆட்சேபம் தெரிவித்து வெளி நடப்பு செய்கின்றார் சுமூ)

வடி: ஸ்ஸப்பா நாலு ஜோடியிலேயே கண்ணைக் கட்டுதே
பார்த்திபன்: இதுக்கே அசந்தா எப்பிடி... உச்சக்கட்டமே இனிமேத்தான் இருக்கு
வடி: என்னாது உச்சக்கட்டமா?
(பிப்பிரி பிப்பிரி'ப்பேன்னு விசில் ஊதியபடி பபூன் டிரஸ்ஸில் லெப்ட்-ரைட் போட்டபடி இணைய குசும்பனும், டிங்கிரி டிய்யாலே என்று இருக்கும் முடியைக் கோதியபடி இளவஞ்சியும் அரங்கத்திற்குள் நுழைகின்றார்கள். அரங்கத்தில் விசில் சப்தம் காதைப் பிளக்கின்றது)
வ: @@@###$$$
கு: !!!%%%&&&
வ: ***&&&^^^
கு: +++|||???
வடி: இவய்ங்க என்னா பேசிக்கிறாய்ங்க... சகிக்கலியே?
பார்: இனிமே உனக்கு கண்ணை மட்டும் கட்டாது. எல்லாமே கட்டும் பாரு
வ: \\\---///
கு: <<<===>>>
வடி: அடேய் சட்டுபுட்டுன்னு ஆடித் தொலைங்கடா
பார்: இப்ப மட்டும் என்னா பண்றாங்க? இன்னும் வேற ஆடணுமா?
(திருடா திருடி படத்தில் "மன்மத ராசா" பாடல் ஸ்பீக்கரில் எகிறுகின்றது. ஒரே புழுதிமயத்தில் என்ன நடக்கின்ரதென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆடியன்ஸும் கூட ஆடுகின்றனர்)
வடி: மத்தவன் பேசுனது கூட கொஞ்சமாவது வெளங்குச்சி. ஆனா இந்த ஜோடிதான் சூப்பர் டோய்
பார்: இந்தாங்க மொதோ ரவுண்டுல வின்னர்ஸ் நீங்கதான். கொஞ்ச நேரத்துல கதி கலங்க அடிச்சுட்டீங்க. புடிங்க பரிசை

குழலி: ஆஹா தகுதி இல்லாதவனுங்கள ஜீரியில போடாதீங்கன்னு அப்பவே சொன்னேனடா. இப்பப் பாத்தியா ரிஸல்ட்டை. இதுக்குத்தான் நான் போட்டியிலேயே கலந்துக்குறதில்ல. போன போட்டியில நான் விட்ட பின்னூட்ட சுட்டி
வடி: இனிமே எவனாவது சுட்டி கொடுத்தீங்க சுண்டு விரல கடிச்சிப்பிடுவேன்
பிகேஎஸ்: அதையும் நீங்கள்...
வடி: ஆமாம்ப்பா சொந்தப் பேருலேயே சொல்லிக்கிறேன். இல்லேன்னா குடிவேலுன்னு சொல்லிப்புடுவாய்ங்க
தமிழ்பார்: ஏய்ய்ய்ய் திவ்யா எங்கடா? பைக்கை எடுங்க இசிஆர் போகணும்
வடி: குடிச்சிப்பிட்டு ஓட்டாதீங்கடா எபைஆர் போட்டுடப் போறாங்க
பத்ரி: .....
வடி: அய்யா இப்பவாவது ஏதாவது சொல்லுங்கய்யா...
பத்ரி: .....

(வெறுத்துப் போய் வடிவேலுவும், பார்த்திபனும் நடையைக் கட்டுகின்றார்கள். இரண்டாவது ஸீஸனுக்கு பல ஜோடிகள் தயாராவதாய் தகவல் இரவுக் கழுகாருக்கு குட்டிக் கழுகு எஸெமெஸ் அனுப்புகின்றது)

Friday, February 02, 2007

இணையக(கா)தை for Dummies

ஏதாவது ஒரு பதிவு போட்டு திரட்டியில் சேர்த்து விரட்டிப் பிடித்து, பின்னூட்டம்/விவாதக் குத்துகளில் மூழ்காவிட்டால் உறக்கம் வருவதில்லை என்று செந்தழல் கண்களுடன் கொலைவெறியுடன் அலைபவரா நீங்கள்? கவலைபடாதீர்கள். இணையத்தில் நீங்கள் தனியரல்லர். வெறும் பதிவு போட்டு அவ்வாறு அலைவதை விட தத்துவார்த்தமான கதை, கவிதை, கட்டுரை எழுதிப்பாருங்கள். இணையத்தில் இலக்கியமில்லை என்று சொன்ன ஜெயமோகனே தன்னைத் திருத்திக் கொள்வார். நிற்க! எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மண்டபத்தில் எழுதிக் கொடுப்பவரெல்லாம் இப்போது கிடையாது. ஏதோ என்னாலான கதை விடச் சில உதவிக் குறிப்புகள்:

1. கதை எழுதுவதற்கு முன் ஒரு குருவை மானசீகமாக செலக்ட் செய்யவும். சுஜாதா என்று ஓப்பனான பெயரை விட கநாசு, சிசுசெ, சுரா, பாரா, நபி, வெசா, இபா என்று இனிஷியல்களை அள்ளிப் போட்டால் பார்க்க பாந்தமாய் இருக்கும்.

2. கதை எழுத உதவும் உத்திகளை விவரிக்கும் பொழுது பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல், பிளாக் ஹோல், *** ஹோல் என்று கரடு முரடாக கோர்க்க வேண்டும். படிப்பவர் இதில் நீங்கள் எந்த யுக்தியையோ குயுக்தியாக பயன்படுத்தியது தெரியாமல் திக்கித் திணறி இறுதியில் "வாவ்" என்ற பாராட்டையோ "ஓவ்/உவ்வேக்" வாந்தியையோ பின்னூட்டுவார்கள்.

3. கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல "கேரக்டருக்கு உறவினர்/நண்பர் பெயரை வைக்கலாம் தப்பில்லை. ஆனால் அதுவே அச்சானால், படமாக வந்தால் அவர்களுடனான உங்கள் உறவு எவ்வாறு இருக்கும் என்று காரண்டி கிடையாது". கதையின் உயிரான கேரக்டரென்றால் "அ, ஆ, இ" என்று பெயர் வைக்கலாம். மெய்யான கேரக்டரென்றால் "க், ங், ச்..." என்று சேப்'ஆக விளையாடலாம். இடைப்பட்ட கேரக்டர்களுக்கே இருநூத்திப் பதினாறு ஆப்ஷன்ஸ் "க, ங, ச..." என்று இருக்கின்றது. ஆரிய கேரக்டர்களுக்கு "ஹ, ஹ், ஹா, ஷ, ஜ, ஸ்ரீ" இப்படி அழைக்கலாம். கணக்கு பண்ணுவோருக்கு இருக்கவே இருக்கு "1, 2, 3, ..." செந்தமிழில் கணக்குப் பண்ண "க, ச....". என்னை மாதிரி குசும்பு புடிச்ச காரெக்டரா இருந்தா "ஃ" என்று பெயரிடலாம். இப்படி வைத்தால் தேவையில்லா காண்ட்ரோவெர்ஸிகளைத் தவிர்க்கலாம். இருப்பினும் "ஒண்ணும் ஒண்ணும் இரண்டு" என்று ஒருவர் வலைப்பதிவு வைத்திருக்கின்றார் என்பதறியவும். அவர் சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

4. அதெல்லாம் முடியாது நான் பேரு வைச்சே தீருவேன்னு அடம் பிடிப்பவரா நீங்கள்? தப்பித் தவறி கூட இணையத்திலிருப்பவரை காயப்படுத்தாதபடி OPML கோப்பை தி/விரட்டிகளிலிருந்து டௌன்லோடு செய்து, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு அங்கிருக்கும் வலைப்பதிவர்களின் பெயர்களை கவனமாகத் தவிர்க்கலாம்.

5. இனிஷியல்களால் செல்லமாக பெயர்கள்/நபர்கள் அழைக்கப்படலாம்/டுவார்கள் என்பதறிக. உதாரணமாக "குருவி கடிச்ச கொய்யாப்பழம்" என்று நீங்கள் எழுதினால் "என்னோட பெயர் குரு.வித்யா; செல்லமாக என்னை குருவி என்று அழைப்பார்கள். சிறிய வயதில் நான் கொய்யாப்பழம் திருடி அடி வாங்கியதை ஒருமுறை பதிவில் எழுதியிருந்தேன்; அதையே குறிப்பிட்டு என்னைக் கதையில் கிண்டலடிக்கின்றார் கதாசிரியர்" என்று யாராவது உங்கள் மீது பாயலாம். எச்சரிக்கை அவசியம்.

6. குழூஉக்குறி, தற்குறிப்பேற்றுதல், வழக்குச் சொற்கள், இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் போன்றவற்றை முடிந்தால் தவிர்த்து விடவும். கூகுளேஸ்வரன் உதவியோடு அவைகள் எங்காவது எகிடுதகிடாக வலைப்பதிவில் வந்திருக்கின்றதா என்று பார்ப்பது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் "சிக்கல் சண்முகசுந்தரமாகி" நலந்தானா என்று மற்றவரை பாட வைத்து விடும் அளவிற்கு அடிபடுவீர்கள். உங்களைச் சுற்றி அழகாக டான்ஸ் ஆடப்போவது பத்மினி இல்லையென்றும் உணர்க.

7. நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது "பாகேப" எழுத ஒன்றும் வாரமலர் டீகப் முக அந்துமணியல்ல. கற்றதும், பெற்றதும் எழுத சுஜாதாவும் அல்ல. கடமைகள், காயங்கள் எழுத லட்சுமி நாராயணன் அல்ல. அவர்களையும் தாண்டி புனிதமானவர்கள். அதாவது "வலைப்பதிவர்கள்". ஆகையால் உங்கள் சொந்த சம்பவங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. "ஞாயிற்றுக் கிழமை பத்து மணிக்கு எழுந்து ஊத்தை வாயுடன் காப்பி குடித்தான்" என்று எழுதினால் "மவனே நானே என்னைத்தான் குசும்பு பண்றேன்னு உன்னைச் சம்மிப் புடுவேன்". கருத்துச் சுதந்திரமெல்லாம் படிக்கிறவாளுக்குத்தான். எழுதுறவாக்குக் கெடையாது என்று அறிதல் நலம் பயக்கும்.

8. சம்பவமே இல்லாமல் கதை எழுத எப்பிடி முடியும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேட்கலாம். இப்ப வரும் கதைகள் ஆழமான சம்வம் சம்பந்தப்பட்டவை என்று நீங்கள் நம்பினால் எப்படி இணையத்தில் காலம் தள்ளப் போகின்றீர்களோ என்ற கவலைதான் வருகின்றது. கமர்ஷியல் படமெடுக்கச் சொன்னால் ஆவணப்படமெடுத்து சொந்தமாய் ஆப்படித்துக் கொள்வதற்கு ஒப்பான பாவகாரியமிது.

9. எத்தனையோ இசங்களும், இயங்களும் இருக்கும் போது எல்லோரும் புரிந்து கொண்ட மாதிரி புருடா பாவனையில் பாவிக்கும் "பெண்ணியம்" என்றெல்லாம் எழுதி உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாமலிருப்பது புண்ணியம். இல்லை ஏதாவது இயத்தை யூஸ் பண்ணியே தீர வேண்டுமென்றால் காரீயம், காரியம், ஈயம் என்று எழுதி உங்களது இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளலாம்.

10. சரி மேற்கொண்ட புல்லட் பாயிண்ட்டுகளைக் கொண்டு ஒரு வழியாக கதை எழுதி விட்டீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பு என்ன வைப்பது என்று தலையப் பிய்த்துக் கொள்கின்றீர்களா? பழமொழி, கிழமொழியெல்லாம் வைத்து அதிரடியாக ஆட்டம் போடாதீர்கள். "கூடையும் இரண்டு காடைகளும்", "பாயும் தலையணை வாத்துகளும்", "பாயாவும் மூன்று பரோட்டாக்களும்" போன்ற தலைப்புகள் பொதுவாக எந்தப் பிரச்சினைகளையும் தராதவை. இருப்பினும் டோட்டல் சேப்டி சிங்காரம் நீங்களென்றால் "!, @, #, $, %, ^, &, *, (, ), :-), ;-),..." போன்ற சிம்பல்களையே சிம்பாலிக்காக போட்டு விட்டால் குற்றமொன்றுமில்லை கொற்றவனே!

கதை எழுதி உதை வாங்காமலிருக்க வாழ்த்துக்கள் !!!

பிகு: இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு கத எளுதத்தான் வேணுமான்னு கேட்டா அது "உங்கள் சாய்ஸ்". அட இது கூட நல்ல தலைப்பாக உங்களுகுத் தோன்றினால் "அட கஷ்டகாலமே" என்று என்னால் ஆதங்கப்படத்தான் முடியும். வர்ட்டா? ;-)