Thursday, October 28, 2004

ஹாட்டு கண்ணா ஹாட்டு

இன்னாப்பா இம்மாம் நாளா எழுதறோம். மக்கா ஒருத்தரும் நம்மளை கண்டு(டி)க்களையேன்னு வருத்தமா கீதா? இந்தா புடிங்க...டேவிட் லெட்டர்மேன் கணக்குல கவுண்ட் டவுன். இதெல்லாமே ஹாட் தலைப்புகங்கறதால நம்பர் ஏதும் போடல. இதெல்லாம் சும்மா எழுதுனா ஜிவு ஜிவுன்னு கூட்டம் மொய்க்கும்.
அப்பால நம்ம டாபிக்கை பயன்படுத்தினா காப்புரிமை கேசெல்லாம் போடமாட்டேன். அதனால கலாய்ங்க...

செம்மொழி ஜிந்தாபாத்

எப்பவுமே சூடான டாபிக் இது. மொழி தெரிஞ்சவா, தெரியாதவா எல்லாருமே ஜல்லியடிக்கலாம். ஒரு பக்கம் 'தமிழ் படிச்சா வேலை கிடைக்குமா'
கஸ்மாலம்பாங்க. 'பழமைவாதிம்பாங்க'. இன்னோரு பக்கம் வணக்கம் தலைவரேன்னு பதிகம் பாடுவாங்க. ஆகமொத்தத்துல ரஜினி படத்துக்கான மினிமம் கியாரண்டி போல இந்த ஹாட் டாபிக். தயக்கமில்லாம யூஸ் பண்ணுங்கோ.

வார்த்தை War

கமெண்டுப் பொட்டி கலகலக்கணும்னா இத விட சிறப்பா ஒண்ணுமே இல்ல. பிளாக்குல ஒரு குறிப்பிட்ட 'சிலரை'த் தேர்ந்தெடுத்து, வார்த்தை செட்டுகளைப் போட்டு ஒரு கும்மு கும்முங்க. யாரு கண்டா ட்ராக் பேக்கும், எதிர் வினையும் உங்களை எங்கேயோ கொண்டு போயிடும். எதுக்கும் முதலுதவிப் பொட்டிய ப(க)க்கத்துல வெச்சுக்கிறது ஷேமம்.

இலக்கிய அபிஷ்டுக்கள்

அடா அடா இதப் பத்தி பத்தியா நெடுங்கதையாடலாம். எழுதுறதுக்கு முன்னாடி காலச்சுவடு, உயிர்மை'ன்னு படிச்சுட்டு எழுதுங்கோ. சாருமதியோட கோணல்
பக்கங்கள் ஒரு அட்சய பாத்திரம். அள்ளிண்டு வந்து கொட்டுங்கோ. உள்ள(த்)தை சொல்கிறேன்னுட்டு குழுஊக்குறி (நம்ம நாடன் சார் எழுதின கட்டுரை)
போட்டு வெளுத்து வாங்குங்க. ரெஸ்பான்ஸ் வந்து ஜில்பான்ஸ் மாதிரி கெடைக்கும்.

கவிதாயினிகள் கலாசல்

இது மேற்படி தலைப்புக்கான உப தலைப்புதான்னாலும் தனி ஸ்பெஷாலிடி உண்டு. யெலெக்கியவாதிங்கள ஊடு கட்டி அடிக்கலாம். டகீலா போட்டுட்டு ஷகீலா படம் பாத்த மாதிரி இருக்குன்னு கவிதயா பெனாத்தலாம். என்ன... பின்னூட்ட பொட்டியில விளக்கமாறு வந்தா நான் பொறுப்பில்லைங்கண்ணா முன்னாடியே சொல்லிப்புட்டேன்.

கீதா கீர்த்தனாக்கள்

இது வேற கீதா. பகவத் கீதா. சும்மா பட்டய கிளப்பலாம். லைட்டா 'வர்ணம்' பூசி எழுத தெரிஞ்சா உத்தமம். இல்லேன்னா 'யேய் நான் தெரியாம எழுதல. வம்பிழுத்தே டின்னு கட்டிடுவேன்'ங்ற தொனியில எழுதினா இன்னும் சூப்பரு. அப்படியே சைடுல போனா 'அவதாரங்களையும்' லேசா போட்டுப் பாக்கலாம். இராமரோட சாதகம் பாத்து புறந்த எடத்தை எழுதலாம். இல்ல மறுக்கலாம். இன்னும் கொஞ்சம் சைடுல போனா ஆரியன், திராவிடன், தீவாளி'ன்னு இந்த சரத்துக்கு முடிவேயில்ல. கொஞ்சம் கற்பனையை அவுத்து வுட்டா உம்மள புடிக்க முடியாதுங்கோய்.

Female Kind

முச்சங்கரி அணி போட்டு முச்சங்கர்களோடு அடித்துப் பிடித்து விளையாடலாம். ஏதோ ஆம்பளைன்னா அப்புரானின்னு அழுகுணி ஆட்டம் ஆடறதா பூகம்பம் கிளப்பலாம். நேரா மோத தயக்கம்னா முகமூடி போட்டுகிட்டு ஆம்பளைங்களே இந்த ஆட்டம் ஆடலாம். சுவாரஸியமா இருக்கும். முக்கியமா முச்சங்கர் சின்னம் (logo) பத்தி பிரச்சினை கிளப்பலாம். ஆமாப்பா மலர்கள் பொம்பளைங்களோட சின்னம்தானே! ஏதோ குட்டையை நல்லா கலக்குங்கோ. மீனு தானா மாட்டும்.

கதே, கவிதே

ஒரு இழவும் புரியாத மாதிரி கதே போடலாம். இல்லேன்னா இருக்கவே இருக்கு கவித. படிக்கறவா முடியைப் பிச்சிண்டு அலையணும். கமெண்ட் போட சொன்னா, எழுதறவங்க ஒரு நல்ல கருத்தா சொல்லிட்டா ஹிட்டு தான். ஊக்கத்திற்கு குங்குமம் மாதிரி நல்ல கமெண்ட்டுக்கு தலைமுடி தைலம் இலவசமாய்த் தர்றதா விளம்பரம் கொடுக்கலாம்.

மனித உரிமை Murder

தூக்கு தண்டனை தேவையா? என்கவுண்டர் அவசியமா? மனித உரிமை, மண்ணாங்கட்டின்னு பெனாத்தறதுக்கு பொருத்தமான டைட்டில் இது. ரெண்டு சாரரா பிரிஞ்சிக்கிட்டு மாத்தி மாத்தி (புஷ்-கெர்ரி மாதிரி) சேறு அடிச்சு களிக்கலாம். எக்குதப்பா யாராவது பேசினா பெர்சனலா அட்டாக் பண்ண சரியான சந்தர்ப்பம் இது. வுடாதீங்கோ.

பெரிய மனித Review

லட்டு மாதிரியான டாபிக் இது. பேரு தெரிஞ்சவங்க கொடுக்கும் பேட்டி, எழுதின பொஸ்தகம், பாட்டு, கட்ளைன்னு திரும்புன பக்கமெல்லாம் கெடைக்கும். பாஞ்சு புடிக்கணும். கொஞ்சூண்டு படிக்கணும். ஐடியா அப்படியே வந்து விழும். மறை கழண்டு போச்சு, வயோதிகம் வந்துடுச்சு, செலக்டிவ் அம்னீஷியா, நட்டு கேசுன்னு மரியாதையா சொல்லிட்டு பல பதிவுகள் போடலாம். தெகிரியமிருந்தா பதில் போடுன்னு மடலாற்குழுவுல ஓப்பன் சேலஞ்ச் உடலாம். யாரு கண்டா நம்மை வைச்சு நாலு பேரு அடிச்சிக்குவாங்க.

Deep Writing

முன்னமே சொல்லிப்புடுறேன். இது கொஞ்சம் கஷ்டம். பத்து நாளு படிச்சிப்பிட்டு ஆழ, அகலமா எழுதுறது. இன்ஸ்டண்ட் பேரு கிடைக்காது. மொதல்ல கொஞ்சூண்டு பேரு வருவாங்க. அப்புறமா தெரியாது. நமக்கு இதெல்லாம் ஒத்து வராது பாசு.

பினா.குனா. இதல்லாம் வெறும் டிப்ஸ்தான். குத்து வெட்டுக்கு ஆளான நான் பொறுப்பில்ல!!!

1 comment:

rajkumar said...

நல்லா கீதுப்பா இது