Saturday, November 13, 2004

மட விவகாரம்

தனி மனித துதியோ, மிதியோ நமக்கு ஆவாதுங்கோ...(நடுநிலையா எழுதப் போறேங்கறதை சூசகமா சொல்லியாச்சுங்கண்ணா)

இணையத்துல எல்லோரும் பூந்து கலக்கிட்டபின்னே நமக்கென்னா வேலைங்கறேளா? அதுவும் சரிதான். ஏதோ நம்மாலான பத்து காசு இதோ:

1. கருணாநிதி கைதையும், சாமிகளோட கைதையும் ஒப்பிடலாமா? முதல் கைது 'கில்லி' பட ஸ்பீடு. ரெண்டாவது 'ஆட்டோகிராப்' மாதிரி ஸ்லோ மோஷன். கைலி, முண்டா பனியனோட, கால்ல செருப்பில்லாம, கோழிக் குஞ்சை தள்ளிக்கினு போறமாதிரி முத கைது. ஆனா தனி செஸ்னா விமானத்துல ஆந்ராவிலிருந்து வந்து, போலீஸ் வேன்ல கூட ஏறாம டயோட்டா குவாலிஸ், டாடா சுமோன்னு சொகுஸா வேலூர் வரை வந்தது ரெண்டாவது கைது. வேலூர் சிறை சூப்பிரடெண்ட் சொல்லிட்டார். சாமிகளின் பூசை, புனஸ்காரம் தொடரும். சிறையின் சீருடை கிடையாது. தண்டம் வைத்திருக்கலாம். போன்ற சில சலுகைகள். அரசு வழக்கறிஞரோ சாமிகள் குற்றஞ் சாட்டப்பட்ட கிரிமினல். அதனால் பிரத்தியேக சலுகைகள் கிடையாதுங்றார். என்னாப்பா நடக்குது? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. சங்கரராமனுக்கு (அவாளா இருந்தாலும்) கருணாநிதி காட்டிய கரிசனம் (?) புல்லரிக்க வைத்தது. வாழ்நாளில் பாதி திமுக கட்சி வளர்ச்சிக்கு அர்ப்பணித்த சிவகங்கை சிங்கமான தா.கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதற்கு ஆறுதல் கூட சொல்லவில்லை தன்மானத் தலைவர். இப்போ சங்கரராமனுக்காக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கின்றார். காலக் கொடுமையே...சரி விடுங்க...அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

3. கொலைக்கான பணத்தை சீலோடு யாராவது கொடுப்பார்களா? கொலை செய்தவரோடு செல் போனில் பேசுவார்களா? இவ்வழக்கு ஜோடனை செய்யப்பட்டதாக இருக்கலாமென்று சந்தேகத்தை SK அண்ணா எழுப்பியிருக்கின்றார்கள் . அதே வாதம் அழகிரிக்கும் பொருந்துமென்னும் கருத்தும் நிலவுகின்றதே? அதாவது ஒரு கட்டத்தில் 'இந்தாளு (தா.கி.) செத்தாத்தான்யா நிம்மதி', என்று ஓப்பனாக கோபப்பட்டார் அழகிரி. அப்போது அவருக்கு தெரியாதா தாகி கொல்லப்பட்டால் தனக்குத்தான் போலீஸ் முதல் ஆப்படிக்குமென்று. அதென்ன சாமிகளையும், அழகிரியையும் ஒரே தட்டில் வைக்கிறேனென்று கோபப்படாதீர்கள். சாமிகளுக்கு 'இம்மாதிரி' கேஸ் புதிது. திட்டத்தில் தப்பு நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் அழகிரி 'கில்லாடியாயிற்றே'. அவருமா இப்படி தப்பு பண்ண முடியும்?

4. பத்ரியோட பதிவு ஆச்சரியமாயிருந்தது . தலைவரு முடிவே பண்ணிட்டார். வீரப்பனே தேவலாமென்று. எனக்கென்னமோ 'எல்லாமே' இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாத்தான் படுது. 'சூப்பர் ஆதாரம்'னு இருக்குன்னு சொல்லி ராத்திரியோட ராத்திரியா சம்மி கூட்டிட்டுப் போயி கருணாநிதியை 'அம்மா' என்னா பண்ணாங்க? பாவம் ஆதாரம் தேடி பாலங்களை உதைச்சு உதைச்சு முகமது அலி காலு வலி கண்டதுதான் மிச்சம். கேஸையே இப்போ டிராப் பண்ணிட்டா. வளர்ப்பு மகன், எம்ஜிஆரின் முன்னாள் டிரைவர், செரினா, சின்னம்மாவின் பெரியப்பா(?) அல்லாரு மேலும் 'அம்மா' கஞ்சா கேஸ¤ போட்டாக...இப்போ என்னாச்சு? யாருக்கும் தெரியுமோ?முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி மீது 'முறை கேடாக' நடக்க முயற்சி செய்ததாய் புகார், எல்லாம் செய்து கொடுத்த முன்னாள் சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன் மீது 'சொத்துக் குவித்த' புகார், முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மீது 'செக்ஸ்' புகார் என்று 'அம்மா'வின் புகார்/கைது/சஸ்பெண்ட்/வாபஸ் படலங்களை நாம் பல வருடங்களாய் கண்டு களிக்கின்றோம். அதுபோல் இவ்வழக்கும் 'புஸ்'வாணம் ஆக சாத்தியக்கூறுகளுண்டு. மெட்ராஸிலுள்ள நிலம் கைமாறததால்தான் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி உள்ளே போனாரென்ற வதந்தியுண்டு. இப்போ ஜீனியர் விகடனும், தினகரனும் 'மெடிகல் காலேஜ்' விஷயம்தான் தான் மடத்துக்கும், அரசுக்குமிடையே கசப்பை ஏற்படுத்த காரணமாயிருக்கலாமென்கிறது. உண்மை அப்படியென்றால்...'அடப் பாவிங்களா... இப்படியெல்லாமா பழி வாங்றது?'

5. எத்தனையோ பதிவுகளைப் படிச்சாலும், 'இல்லைய்யா. சாமிகள் அப்படி செய்திருக்க வாய்ப்பேயில்லை'ன்னு ஒரு பதிவும் சொல்லலே. இதுதான் இணைய நியாயமோ? வீரப்பனைக் கூட சுட்டதற்கு எதிரா கார-சார விவாதங்களைப் பதிஞ்சாளே!!! ஒருவேளை 'முத்திரை' குத்திடுவாளோன்னு பயமா இருக்கலாமோ? அப்புறம் எதுக்குவே எல்லாரும் கூசாம 'தங்கு தடையற்ற இணைய சுதந்திரம்' பத்தி மார் தட்டுறீங்க? தமிழ்மணத்துல ரெஜிஸ்டர் ஆன 259 மனங்களும் ஒரே மாதிரி சிந்தனை செய்யுதா? நம்ப முடியலியே பாசு !!! அப்படியே இருந்தா இந்தா குசும்பன் கூவுறான் "வாள்க இணைய ஒத்துமை".

6. பாவம் நம்ம அருண். அவரோட கனவுகளுக்கு ஒரு வரைமுறையே இல்லாம ஆட்டோ மீட்டர் போல தறி கெட்டு எகிறிக்கொண்டிருக்கின்றது. அவரோட பதிவைப் படிச்சேன். //சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஆன்மீகவாதிகளுக்குப் பொருந்துவது போல், அரசியல்வாதிகளுக்கும் பொருந்துமல்லவா?! அப்படிப் பொருந்த வேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனைகளும்!//. தாகி மற்றும் அண்ணா நகர் ரமேஷ் கொலைகளும், சங்கரராமன் கொலையும் ஒன்றா? ஒரே மாதிரி விசாரிக்கப்படணுமா? ஆன்மீகவாதிகளும்/அரசியல்வாதிகளும் சட்டத்தின் முன் சமமா? ஆஹா குசும்பில் நம்மை மிஞ்சி விடுவார் போலிருக்கின்றதே!!! ;-)

7. கடேசியா ஆச்சிமகனோட சங்கல்பம் //எஞ்சியிருக்கும் வாய்ப்பிலும் நிச்சயமாக ஜெயேந்திரர் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடமாட்டேன்//. . ஏங்க அப்படி?

2 comments:

Badri Seshadri said...

"4. பத்ரியோட பதிவு ஆச்சரியமாயிருந்தது . தலைவரு முடிவே பண்ணிட்டார். வீரப்பனே தேவலாமென்று." என்று எழுதியிருக்கிறீர்கள். அதற்கான மறுமொழி இது. நான் ஜெயேந்திரர் கைது பற்றி எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது ஒரு குற்றவியல் வழக்கு. முழு விவரமும் வெளிவரவில்லை. சிவில் சமாச்சாரமாயிருந்தால், எனக்குத் தோன்றியிருந்தால், தெரிந்ததுவரை வைத்து ஏதாவது கருத்து சொல்லியிருப்பேன்.

ஜெயேந்திரர் வீரப்பனை இரண்டு இடங்களில் இழுத்திருந்தார். ஒன்று தன்னைக் கைது செய்து வேனில் ஏற்ற வந்தபோது "நான் என்ன வீரப்பனா?" என்று கேட்டது. அடுத்தது, சில நாள்கள் முன்னால் 'வீரப்பன் கடத்தல் லிஸ்டில்' தன் பெயரும் இருந்தது பற்றி தனக்குத் தெரியும் என்றது. இரண்டையும் வைத்து வீரப்பன் ஜெயேந்திரருக்கு என்ன பதில் சொல்லியிருப்பான் என்ற கற்பனையை என் பதிவில் எழுதியிருந்தேன்.

Anonymous said...

தயவு செய்து 'தமிழுக்கு' நிகழ்ந்த கொடுமையை - ஜெயேந்திரர் கைதோடு ஒப்பிடாதீர்...