Saturday, April 22, 2006

நீ இருபது நான் அறுபது

பூந்தமல்லி சூப்பர்சானிக் ஹைவேயில் சர்வேஷின் தானியங்கி கார் சத்தமின்றி ஒலி வேகத்தைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசல், சிக்னல், கால்நடைகள் குறுக்கீடு, ஆட்டோ அராஜகம், மிதிவண்டி சாகசம் போன்ற புராதனக் கவலைகள் மறந்து, எர்கோணோமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட குஷன் சேரில் சொகுசாகச் சாய்ந்தபடி, எதிரே தெரிந்த திரையில் இன்றைய தலைப்புச் செய்திகளை வாசிக்கும் பெண்ணை ரசித்துக் கொண்டிருந்தான். கடந்த நூற்றாண்டுப் பாடலான "தேன்கூடு நல்ல தேன்கூடு" பாடல் சாடிலைட் ஸ்டீரியோ சானலில் அதிராமல் வழிந்தது.

செய்தியினூடே தேர்தல் அதிகாரி சுபாஷ் குப்தா திரையில் தோன்றி, இந்த தேர்தலில் கண்டிப்பாக 100% வாக்குப்பதிவு செய்யுமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விட்டார். போன தேர்தலில் 99.99% வாக்குப்பதிவு என்ற கணக்கு அகண்ட தமிழகம் போன்ற முன்னேறிய நாட்டிற்கு இழுக்கு என்று கண்களைத் துடைக்காமல் நாசூக்காக வருத்தம் தெரிவித்தார். அரதப் பழசான விகடனில் 'இது கொஞ்சம் ஓவர்' என்ற கார்ட்டூன் தொடரை லைப்ரரி ஆர்கைவில் பார்த்தது ஞாபகத்துக்கு வர களுக்'கென்று சிரித்துக் கொண்டான்.

இந்தியா, இலங்கை, பர்மா, பிஜி, அந்தமான் நிகோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், மாலத்தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், இந்தோநேஷியா, கனடா, நோர்வே, ஸ்விட்சர்லாந்து, நியூஜெர்ஸி, கலிபோர்னியா சிலிக்கன் பள்ளத்தாக்கு, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற மூவேந்தர் ஆண்ட முற்காலத்திலிருந்து, கோபால் பற்பொடி விற்ற த(க)ற்காலம் வரை தமிழர் பெருவாரியாக வாழ்ந்து வந்த பகுதிகள் அனைத்தையும் சர்வே செய்து, பிரித்து, அளந்து அகண்ட தமிழகம் உண்டானது பூவுலகின் அதிபெரும் புரட்சியாக அண்டசாரமே ஏற்றுக் கொண்டது. உலகில் அதிகமாகப் பேசப்படுவது தமிழ் மொழியாகவும், மக்கட்தொகையில் சீனர்களை விட தமிழர்கள் அதிகமாகவும் கொண்ட அகண்ட தமிழகம், அண்டசாரத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லரசாக மாறியதில் வியப்பென்ன வேண்டிக் கிடக்கின்றது?

வரலாறு போதும்; வாழ்க்கைக்கு வருவோம். இன்று அகண்ட தமிழகத்தில் அதிமுக்கியமான 2060 வருட தேர்தல்.

அகண்ட தமிழகம் கண்ட அயற்சியில் அரசியல்வாதிகள் இருந்ததால், தமிழ் தேசியம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து போயிற்று. உதிரிப் பிரச்சினை வளர்த்த பிராமணர்களையும், பத்தாண்டுகளுக்கு முன்னர் இரு தானியங்கி லாரிகளில் ஏற்றி ஒன்றை கைபருக்கும், மற்றொன்றை போலன் போன்ற கணவாய்களுக்கும் சூப்பர்சானிக் ஹைவேக்களில் நிரந்தர பேக்கப் செய்து விட்டதால் பிராமணீயமும் அதைச் சார்ந்த சிக்கல்கள் பலவும் உதிர்ந்து விட்டன. தப்பிப் பிழைத்த பிராமணர்கள் சிலரும் முற்போக்குப் பட்டங்களை சூட்டிக்கொண்டு, தமது சுய அடையாளங்களை பொதுவிலாவது மறைத்துக் கொண்டதால் மீண்டுமொரு உதிரிப் பிரச்சினைக்கு உடனடி வழியில்லை. தமிழ்த் திராவிடத்தை அரசு மதமாக அறிவித்து விட்டதால், மனு வளர்த்த இந்து சாதிகள் அனைத்தும் அடையாளமின்றி ஒழிந்து போயின. இராமாயணம், மகாபாரதம் போன்ற கட்டுக் காதைகள் கட்டுக் கட்டாகக் கொளுத்தப்பட்டு, தமிழ்த் திராவிட வரலாறுகளே அகண்ட தமிழகத்தில் முன்னிறுத்தப்பட்டன. இளஞ்சிறார்களுக்கு தமது பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுக்க கல்வித் திகிரிகளும் (Educational CDs) தமிழர்களுக்கு இலவசமாய் வழங்கப்பட்டன.

மக்களுக்கு கோடானுகோடி நன்மைகள் விளைந்தாலும் இவற்றால் அரசியல்வாதிகளுக்கென்ன லாபம்?

வீதிக்கொரு கட்சி, சாதிக்கொரு சங்கம் என்பதெல்லாம் பழங்கனவாக, அகண்ட தமிழகத்தில் தற்போது இரண்டே இரண்டு கட்சிகள்தான் இருந்தன. அண்டத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்கப்போகும் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரென்று சிண்டை (மன்னிக்கவும் பார்ப்பனீய மொழிதான் அழிந்து விட்டதே!) மக்கள் மயிரைப் பிய்த்துக் கொண்டார்கள்.

தமிழ்த் தேசிய கட்சியிலிருந்து (ததேக) தலைவர் மண்கொண்டானும், தமிழ் பேசிய கட்சியிலிருந்து (தபேக) தலைவி பொன்கொண்டாளும் இத்தேர்தலில் மோதுகின்றனர். போன நூற்றாண்டில் நடந்தது போலக் கூட்டணிக் குழப்பங்கள், கடைசி நேர காமெடித் தாவல்கள் அகண்ட தமிழகத்தை விட்டு என்றோ அகன்று போயின.

இரு தலைவருக்குமிடையே வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இரண்டே இரண்டு கருத்து விவாதங்கள்தான். முதல் விவாதம் சிபி பெர்னார்டு தலைமையில் பாயா டிவி ஏற்பாடு செய்ய இருவரும் மூன்று சுற்று மோதவேண்டும். பின்னர் சூரபாண்டியன் தலைமையில் Fun நெட்வொர்க் நடத்தும் நிகழ்ச்சியில் மீண்டும் மூன்று சுற்றில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தலைமை தாங்குபவர் நாட்டின் தலையாய பிரச்சினை ஒன்றைக் கொடுக்க இரு தலைவர்களும் பட்டிமன்ற ஸ்டைலில் விவாதிக்க வேண்டும். இது வெறும் கருத்து விவாதமாதலால் வெற்றி-தோல்வி என்பது அறிவிக்கப்படமாட்டாது. மக்களிடமிருந்து கேள்விகளைப் பெற்று தலைவர்களைக் கேட்பதாய் சிபி பெர்னார்டும், சூரபாண்டியனும் சூளுரைத்தாலும் திரை மறைவில் பழம் நூற்றாண்டு வழக்கப்படி, அங்கீகரிக்கப்பட்ட கேள்விகளையே தலைவர்கள் முன் வைப்பதாய் புரளிகளும் உண்டு.

இச்சுற்றுகளின் போதே தலைவர்களின் வெற்றி குறித்த கருத்து கணிப்புகள் எல்லாம் துல்லியமாக, அறிவியல் பூர்வமாக ஸ்டேட்ஸ்மென் எக்ஸ்பிரஸ், The Tamil Dravidian, அகண்ட தமிழகம் டைம்ஸ் போன்ற செய்தித் தாள்களில் வெளிவர தேர்தல் வெப்பம், மின்சாரம் பாய்ந்த டங்ஸ்டன் கம்பியிழையாய் எகிறும்.

பூமியில் அனைத்து ஊழல்களையும் அரசியல்வாதிகள் செய்து முடித்து விட்டதாலும், விஞ்ஞானம் கண்டபடி வளர்ந்துவிட்டதாலும், ஊழல் அறிவுப்பூர்வமாக அணுகப்படாமல், அறிவியல் பூர்வமாய் அணுகப்பட்டது.

நிலவில் தமிழ் மக்கள் குடியமர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலமான ஜான்சியை, பொன்கொண்டாள் சட்டத்திற்கு புறம்பாக தானே தனது பாயா பப்ளிகேஷனிற்காக குறைந்த விலையில் வாங்கிக் கொண்டார் என்று மண்கொண்டான் திகீர் குற்றச்சாட்டை வெளியிட்டார். இதென்ன 'தனக்குத் தானே திட்டமா' என்று தனது தேர்தல் அறிக்கையிலும் பொங்கினார். ததேக'வின் சார்புநிலை ஏடாகக் கருதப்படும் பணகரனிலும் இது குறித்து கேலிச்சித்திரம் வெளியானது பரபரப்பான சூட்டைக் கிளப்பி விட்டது.

பதிலுக்கு 'Fun நெட்வொர்க்கை வெறும் பத்து மில்லியன் ரூபாய்க்கு ஆரம்பித்த மண்கொண்டானின் குடும்ப சொத்து இன்று பத்து டிரில்லியனாய் வளர்ந்தது காணீர்', என்று பொன்கொண்டாள் சாடினார். மேலும் கொசுறாக நிலவில் தனது கேபிள் நிறுவனத்திற்காக சூராணம் ஆழ்நிலக் குழாய்கள் பதித்ததில் ஊழல்; பூந்தமல்லி சூப்பர்சானிக் ஹைவேயை தனது டிஐஜியான அகமது பலியை விட்டு உதைத்துப் பார்த்ததில் தரமற்ற பொருட்களால் பாலம் கட்டிய ஊழல்; என்று அறிவியல்பூர்வமாய் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்க 'அட்றா சக்கை' என்றார்கள் மக்கள்.

டிபேட் எனப்படும் கருத்து விவாதத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்று நிரூபித்தனர். மண்கொண்டான் நிலவில் இலவசமாக நிலப்பட்டா தருகின்றேன் என்றால் பொன்கொண்டாள் நிலவில் ஓசியில் வீடே கட்டித் தருகின்றேன் என்று கூற, தேர்தல் மேலும் களை கட்டியது. நல்லவேளையாக முன்னொரு காலத்தில் வாழ்ந்த யாகவா முனிவர் டிவி விவாதத்தின் போது துண்டால் சிவசங்கர் பாபாவை துவைத்த காட்சிகள் மாதிரி அசம்பாவிதங்கள் ஏதும் அரங்கேறவில்லை.

களப்பயிற்சியில் இறங்கிய லாவோலா கல்லூரி நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பின் முடிவுகளோ பெண்டுலம் போல் நிலையின்றி ஒருநாள் மண்கொண்டானுக்கும், மறுநாள் பொன்கொண்டாளுக்கும் சாதகமாய், தீர்ப்பை மாற்றி மாற்றி எழுதி மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இன்று தேர்தல் என்பது சர்வேஷிற்கு சட்டென்று நினைவிற்கு வந்தது.

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக "சானியா" என்று மென்மையாக அழைத்தான்.
"யெஸ் பாஸ்" என்று குழைவான பதில் கார் ஸ்பீக்கரில் வழிந்தது.
"ஆக்ஸெஸ் எலெக்ஷன் மெயின்பிரேம் ப்ளீஸ்"
"இரண்டு மானோ நிமிடங்கள் ப்ளீஸ்"

சானியா ஒரு அறிவியல் ப(பு)துமை. அகண்ட தமிழகம் முழுவதுமே ஒரு நடுவண் மெயின்பிரேம் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. மதர் கம்ப்யூட்டர் என்று நடுவண் மெயின்பிரேம் விளிக்கப்பட்டாலும், பலரும் 'அம்மா' என்றே பாசமாய் அதனை அழைத்தார்கள். அம்மாவிற்கு பல சேய்கள். அவற்றில் ஒன்றுதான் சர்வேஷின் சானியா. கம்பியில்லாத் தொடர்பு மூலம் சானியா போன்ற பல சேய்கள், அம்மாவை எப்போது வேண்டுமானாலும் ஆக்ஸஸ் செய்ய முடியும் என்பது 2006'ல் கனவில் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? 2000' தொடக்கத்தில் நேனோ செகண்டில் வேலைகள் செய்த காலம் மலையேறிப் போய் இப்போதெல்லாம் 'மானோ விநாடியில்' (நேனோவை விட ஆயிரமாயிரம் குறைந்த நேரத்தில்) அம்மாவை ஆக்ஸஸ் செய்யமுடியும்.

டிவியில் செய்தித் திரை மறைந்து புதிய திரை தோன்றியது.

"தலைவர்களின் பின்புல ஆய்வறிக்கை, கருத்துக்கணிப்புகள் வேண்டும்", சர்வேஷ் கட்டளையிட்டான்.
மேலும் சில மேனோ விநாடிகள் தாமதத்திற்குப் பிறகு அறிக்கைகள் மற்றும் கணிப்புகளை சான்யா புட்டு புட்டு வைத்தாள்.

வாக்கு யாருக்கென்று சர்வேஷ் துல்லியமாக முடிவு செய்தபின் விசைப்பலையின் குறிப்பிட்ட பொத்தானை அமுக்கினான். வோட்டு பதிவாகிவிட்டது. இன்னும் சில மணித்துளிகளில் ரிஸல்ட் அறிவிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. யார் வருவார் அகண்ட தமிழகத்தின் அதிபராக? சர்வேஷின் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத் துடிப்பு எகிறிக் குதிக்க, அட்ரனலீன் அத்துமீறி சுரக்க ஆரம்பித்தது.

"எலக்ஷன் ரிஸல்ட் சானியா" சர்வேஷ் முனகியபடிக் கேட்டான்.

பதிலில்லை. ஆனால் தீடீரென்று மிகவும் சில்லிப்பாக இருப்பதாய் உணர்ந்தான். அவனது உடலே தொப்பலாக நனைந்திருந்தது போல் தோன்றியது. காரினுள்ளே முழுவேகத்தில் ஏஸி இயங்கியும் கூட இவ்வளவு வியர்வையா என்று ஆச்சர்யப்பட்டான்.

"என்னது எலக்ஷன் ரிஸல்ட் சானியாவா? அது சானியா இல்லே. சோனியாடா!" இப்போது பேசியது யாரென்று சர்வேஷ் குழம்பினான். எனது உள்மனம் கூட பேச ஆரம்பித்து விட்டதா? பேசினால் காதில் கேட்பது போல் இருக்கின்றதே? சே... காதிருந்தால் கேட்கத்தானே செய்யுமென்று வெட்க புன்முறுவல் ஒன்றை வாய்கோணி உதிர்த்தான்.

"இல்லையில்லை நீ இருபது நான் அறுபது" அவனது குரல் கொஞ்சம் பிசிறடிப்பது போலிருந்தது.

"கிழிஞ்சது கிருஷ்ணகிரி. நம்ம ரெண்டு பேருமே இருபதுதான்". அதுவும் சரிதானே. பேசுவது உள்மனமென்றால் ஒத்த வயதில்தானே இருக்கவேண்டும். சமாதானமானான்.

இப்பொழுது மேலும் சில்லிப்பாக, அதிமேலும் தொப்பலாக நனைந்தது போல் சர்வேஷ் உணர்ந்தான். இப்போது காட்சி கொஞ்சம் தெளிவானது போலிருந்தது. ஒருவேளை ரிஸல்ட் வரும் நேரமாயிருக்குமோ? கிறுகிறுப்பும் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.

"அது வந்து தேன்கூடு..." என்று மெல்ல இழுத்தான்.

"என்னது தேன்கூடா? மவனே செருப்பால அடிப்பேன். நாம இருக்கிறது நரிமேடு". சேச்சே இந்த உள்மனதைக் கண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். கொஞ்சம் கூட மட்டு மரியாதையின்றி பேசுகின்றது.

இப்போது மண்டையில் சுள்ளென்று வலித்தது. 'ஆஹா என்னடா இது இம்சை?' என்று தனக்குள் விசனப்பட்டான்.

"ஙௌக்காமக்கா டாஸ்மாக் கலப்பட சரக்கு வேண்டான்னு அப்பவே சொன்னேனேடா; கொஞ்சமாவது கேட்டியா? கல்ப்பு கல்ப்பா சரக்கைக் காலி பண்ணிட்டு, இப்போ சானியாவாம், தேன் கூடாம், எலெக்ஷனாம், இவர் அறுபதாம், டேய் என்னாடா நெனச்சிக்கிட்டு இருக்க? என்னாலேயே தாங்கமுடியலியேடா. டேய் எழுந்திருடா தடிமாடு"

எதிரே பக்கெட்டும் கையுமாக நிற்பது கண்டிப்பாய் உள்மனதில்லை, எனது ரூம்மேட்தான் என்ற உண்மை இன்னொரு தண்ணீர் விளாசலுக்குப் பின்னர் லேசாக விளங்கத் தொடங்கியது.

அப்போ என்னோட தானியங்கி கார், நிலவில் இலவச வீடு, எல்லாவற்றிற்கும் மேலாக எனதருமை சானியா என்னவாயின போன்ற எண்ணற்ற கேள்விகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்ததா, இல்லை என் தலை அவ்வாறு கிர்ரடித்ததாவென உணர்ந்தறியும் திராணியில் அப்போது நானில்லை.

"ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்ப நான் கேள்வி கேக்கணும்
சர்வேஷா
தலையெழுத்தென்ன மொழியடா
ஓ..ஓ தப்பிச்செல்ல என்ன வழியடா?"


என்ற பாட்டு எங்கேயோ சன்னமாய் ஒலித்தது.

13 comments:

குசும்பன் said...

தாய்மார்களே, தகப்பன்சாமிகளே, இரத்ததின் இரத்தமான உடன்பிறப்புகளே!

தேன்கூடு+தமிழ்மணம் இணைந்து நடத்தும் எலெக்ஷன் 2060 போட்டியில் கலந்து கொள்ள முதல் வேட்பாளனாக களம் இறங்கியிருக்கின்றேன். உங்களது பொன்னான நல்ல வாக்குகளையும், பிளாட்டின கள்ள வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் குசும்பனுக்கே குத்த வேண்டுமென தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்.

எனது தேர்தல் ஏஜெண்டாக இருக்க தம்பி ஏஜெண்டார் 8860336 தவிர வேறு யார் உளர்? (ஆனந்தக் கண்ணீர்)

போன பார்லிமெண்ட் தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன சூப்பர் ஸ்டாரைப் போல உங்களுக்கு குத்திட்டேன்ன்னு ஒரு கன்பர்மேஷன் கொடுத்தா இந்தச் சிறுவன் சந்தோஷப்படுவான்.

உங்கள் உற்றோர், உறவினர், அறிந்தோர், அறியாதோர் போன்ற அனைவரிடமும் இதே வேண்டுகோளை எனது சார்பாகத் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். :))

நீவிர்
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

ஏஜண்ட் NJ said...

திணவெடுத்த தோள்களுடன்
புறப்பட்டுவிட்டான் NJ
குசும்பனைக் குத்துவதற்கு !

எங்க போயி குத்துறதுன்னு லிங்க் குடுபா! இல்ல சும்ம இங்க கமெண்ட் பொட்டிலயே சொல்றதா! புர்யலபா!!

ஏஜண்ட் NJ said...

தேன்கூடு+தமிழ்மணம் இணைந்து ???


தேன்கூடு + தமிழோவியம்
இணைந்து நடத்தும் !!!!!


which is correct Kusumba!!!

- NJ

குசும்பன் said...

தாய்மார்களே, தகப்பன்சாமிகளே, இரத்ததின் இரத்தமான உடன்பிறப்புகளே!

தேன்கூடு+தமிழோவியம் இணைந்து நடத்தும் எலெக்ஷன் 2060 போட்டியில் கலந்து கொள்ள முதல் வேட்பாளனாக களம் இறங்கியிருக்கின்றேன். உங்களது பொன்னான நல்ல வாக்குகளையும், பிளாட்டின கள்ள வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் குசும்பனுக்கே குத்த வேண்டுமென தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்.

எனது தேர்தல் ஏஜெண்டாக இருக்க தம்பி ஏஜெண்டார் 8860336 தவிர வேறு யார் உளர்? (ஆனந்தக் கண்ணீர்)

போன பார்லிமெண்ட் தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன சூப்பர் ஸ்டாரைப் போல உங்களுக்கு குத்திட்டேன்ன்னு ஒரு கன்பர்மேஷன் கொடுத்தா இந்தச் சிறுவன் சந்தோஷப்படுவான்.

உங்கள் உற்றோர், உறவினர், அறிந்தோர், அறியாதோர் போன்ற அனைவரிடமும் இதே வேண்டுகோளை எனது சார்பாகத் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். :))

நீவிர்
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

பிகு. தம்பி ஏஜெண்டுன்னா சும்மாவா? களத்தில் இறங்கி காரியம் சாதித்திடுவான் எம்தம்பி!!!

(மிஷ்டேக்க சரி செஞ்சிட்டேன் பீடமே!!! புரூப் ரீடிங் குடுக்காத தப்பு. அண்ணனை மன்னிக்கவும்..)

ஆஹா அதோ வருகுது பார் வரிப்பட்டாளம். வாளையோட்டு. அவர்கள் மீது வேலைப் பாய்ச்சு... (மூச்சிரைக்கின்றது. கொஞ்சம் ரெஸ்ட்ப்பா :-)

யப்பா ஏஜெண்டு எங்க எப்படி குத்தணும்னு அவா இன்னும் ஷொல்லலியேப்பா...

;))

Unknown said...

போட்டியிலே முதல் ஆளா கலந்துகிட்டதுக்கு வாழ்த்துகள் குசும்பன். இந்த தில்லுக்காகவாவது உங்களை நம்ம மக்கள் ஜெயிக்க வைக்கணும் (அப்போ எவனும் கதைக்காக ஓட்டு போட மாட்டானான்னு கேக்காதிங்க, அது மக்கள் கையிலே இருக்கு).

மா சிவகுமார் said...

ஆகா,

நீங்கள் அல்லவா பாக்கியவான். கனவு கூட எவ்வளவு இனிமையாக வருகிறது. 2060ல் இந்த கனவு நனவாகி விட வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

கொசப்பேட்டையாரே!

//போட்டியிலே முதல் ஆளா கலந்துகிட்டதுக்கு வாழ்த்துகள் குசும்பன். இந்த தில்லுக்காகவாவது உங்களை நம்ம மக்கள் ஜெயிக்க வைக்கணும் //

என்ன ராசா சொல்றீக...? போட்டியில கலந்துக்க 'தில்' எதுக்குபா? 'மஜா' ஒண்ணே போதும்பா ;-)

குசும்பன் said...

சிவக்குமார் அண்ணாச்சி,

//நீங்கள் அல்லவா பாக்கியவான். கனவு கூட எவ்வளவு இனிமையாக வருகிறது. 2060ல் இந்த கனவு நனவாகி விட வாழ்த்துக்கள். //

நம்மளைக் கண்டுகினதுக்கு டாங்ஸ்பா.

குசும்பன் said...

//Awesome imagination. Venkat M
Anonymous | 04.23.06 - 12:23 am | #//

வெங்கட் சார்,

வாங்க வாங்க. என்ன இந்தப் பக்கம்? கொமண்ட்டிற்கு நன்றிங்கோவ்.

குசும்பன் said...

மொதமுறையா பின்னூட்டமிட்ட வெங்கட் சாருக்கும், சிவா சாருக்கும் நான் சொன்ன நன்றி பின்னூட்டங்களை பிளாக்கர் சாப்டுடிச்சி ஸாருமாரே!!!

வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

வந்தனம்!வந்தனம்!!வந்தனம்!!!

துளசி கோபால் said...

:-))))))))))

வெற்றி உமதே. கனவு நனவாகட்டும்:-)

Anonymous said...

முகமூடி என்பது யார், அவனுக்கும் பிகேசிவக்குமாருக்கும் என்ன தொடர்பு என்பதை முதலில் எழுதியது எங்கள் தலைவர்தான்.

முகமூடி என்று யாரோ ஒருவனை காட்டி சென்னை பார்ப்பனர்கள் அறிமுகப் படுத்தி பேசிக் கொண்டால் அது உண்மையாகுமா?.

இணையத்தில் பாப்பார ஜாதியையா வளர்க்கும் பாப்பான்களூக்கு எங்கள் கண்டனம்!

(போலிடோண்டு ரசிகர் மன்றம்
அமெரிக்க கிளை)

Anonymous said...

தலைவரா? தலையே இல்லாததுக்கு பேரு முண்டம்டா லூசுங்களா? ஒரே ஒருத்தன் அம்மிஞ்சிக்க்ரையிலருந்து அமெரிக்கா வரைக்கும் கிளை பேரு போட்டுகிட்டு உடான்ஸ் விடுறதை பாரேன்.

அ.உ.மா.த.ர.ந.மன்றம்
(அகில உலக மாயவரத்தான் தலைமை ரசிகர் நற்பணி மன்றம்)