Wednesday, February 09, 2005

ஆக்கமும், ஆக்கியவனும்

"எழுத்தை பாத்தா என்னைப் பாக்காதே. என்னைப் பாத்தா எழுத்தைப் பாக்காதே", அப்பிடின்னு நம்ம சா(பா)ரு நிவேதிதா சார் பொன்மொழி வுட்டாரு. (அப்புறம் அவரே நான் எழுதுவது என் வாழ்க்கை ரகஸியம்னு பீலா வுட்டு அப்பீட் ஆனது வேற விஷயம்)

சரி... ஒருத்தரோட எழுத்தை எப்படிப்பா எடை போடறது? இப்ப என்னையே எடுத்துக்குங்க. ஏதோ ஆரம்ப காலத்துல நம்ம செட்டுங்க வந்து படிச்சுட்டு அப்பப்ப கமெண்ட்டு குத்திட்டுப் போயிடுவாங்க. இப்போ எல்லை கொஞ்சம் விரிவடைஞ்சிருக்கு(ன்னு நெனைக்கிறேன்). இருந்தாலும் 'இணைய குசும்பன்' என்னாத்த எழுதி கீசியிருப்பான்'ன்னு பலர் பல பதிவுகளைப் பாக்காமலேயே போயிருப்பாங்க (இதிலிருந்தே தெரியவில்லை. ஜெயமோகன் சும்மாவா சொன்னார். இணையத்தில் தீவிர வாசகர்கள் குறைவென்று! ;-))

என்னோட புல்லறிவுக்கு (அதாவது 'full'அறிவிற்கு) எட்டியவரை ஆளைப் பாத்துதான் எழுத்தைப் படிக்கிறாங்க. எழுதுற எல்லார் மேலேயும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு 'முத்திரை' (எ.கா. சோழ முத்திரை) அல்லது 'இலச்சினை' இலவசமாய் குத்தப்படுகின்றது. இவனா இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற அபிப்பிராயமே அவனெ(ளெ)ழுதிய ஆக்கத்திற்கு விமர்சனமாய் கிடைக்கின்றது. அதாவது ஆக்கமென்பது இரண்டாம் பட்சமாய், ஆக்கியவனே(ளே) மூலமாக ஆகிப்போகின்றான்(ள்).

பலதுறைகளில் வீச்சிருக்கவேண்டுமென்பவரே, சுஜாதா புறநானூறுக்கு புக் போட்டால் விழுந்து கடிக்கின்றனர். ஏம்பா வெறும் 'கணேஷ்-வசந்த்' கிரைமோடும், ஸ்ரீரங்கத்து தேவதை தரிசனத்தோடும், அப்பப்போ சிலிகன், செல்லுலாய்டு ஜின்ஜினக்காவோடு நிப்பாட்டக் கூடாதுன்னு போர்க்கொடி பிடிக்கிறாங்க. ஏனுங்க இலக்கிய வட்டத்தை பட்டா போட்டு குறிப்பிட்ட கூட்டத்திற்கு வித்துபோட்டாங்களா?

கதை, வசனத்தோட கட்டிலில் படுத்துக் கெடக்காமா எம்பது வயசுல கொடைக்கானல் போயி தொல்காப்பியம் உரை ஏன் கருணாநிதி எழுதோணும்?

இவர்களெல்லாம் இலக்கியவாதிகள் கெடையாது. இலக்கிய வியாதிகள்'ன்னு கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் காரணம் யாது?

இதே புறநானூறு மற்றும் தொல்காப்பிய விளக்கத்தை நானே எழுதியிருந்தா (மவனே அடங்கமாட்டே!) என்னவாயிருக்கும்? மேலே நான் சொன்ன கதையாடலுக்கு (நன்றி: கோல்டுபெல்) கொஞ்சம் அடியுரமாய் இது தெரிகின்றது.

முனைவர் தொ.பொ. தவிர யாரும் ஆக்கப்பூர்வமாய் சுஜாதாவின் புறநானூறு ஆக்கத்தை அணுகியவரில்லை எனலாம். 'கருணாநிதி' பெயராலேயே எதிரிகள் அதிகமாதலால் விட்டு விடலாம்.

இணையம் குறிப்பா வலைப்பூக்களிலும் இதே ட்ரெண்ட் தென்படுகின்றது (நம்ம 'full'அறிவிற்கு). முதல்ல ஆளைப் பாத்துட்டுதான் படிக்கவே செய்றோம் (அட்லீஸ்ட் நான் அப்படித்தான் ஆரம்பித்தேன்). ஒரு பத்து பதிவுகள் படிச்சப்புறம் ஆளைப் பத்தி ஒரு படம் போட்டு வைச்சுக்கறோம். அதுக்கப்புறம் மவனே நீ 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் 'படம்' மட்டும் மாறவே மாறாது. 'அவனா நீ'ன்னு ஒரு மாதிரி ஆளைப்பாத்து அரண்டு அலறும் வடிவேல் கதைதான் இங்கேயும்.

சரி.. யெளவு சொல்ல வந்ததை சொல்லித்தொலை'ன்னு டமாஸ் கத்துறாரு. வரேன். வரேன்.

சுனாமிக்கு நன்னின்னு ஒருத்தர் சொன்னா குத்தம். பாஞ்சு புடுங்கலாம். இது சொயநலமான்னா இன்னொருத்தர் கேட்டா கரீக்டு. பச்சாதாபம் காட்டோணும். மேட்டரு என்னான்னு பாக்காம மீட்டரு என்னான்னு கேக்குற உலகமய்யா. அது சரி... இத்த கேட்டதால நம்ம ஆறுமூலம் துறவிமூலம் தேடாதீங்காணும். ஆனானப்பட்ட அரநங்கல்லூராரே பால் தரும் பசுவென்ற வித்தியாசம் பாராது சுக்கா சாப்பிடுவதாய் வாசகர்க்கு வாயு தந்து சுயஅடையாளம் காட்ட மறு(ற)க்கும்போது அடியேன் எம்மாத்திரம்? அவர் சமீபத்தில் போட்டுத் தாக்கிய Kவி கருணாதாஸ் ஸ்பெஷல் தரிசனத்தில் ஏடுகொண்டலவாடாவை தரிசித்து, வாசிப்பவர்க்கு நாமம் போடும்போது நான் எம்மாத்திரம்? பருப்புக்கூட்டமென மாமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமி என்றால் ரகஸிய மெயில் அனுப்பும் இணைய தா(த்)தாக்களை என்னவென்று சொல்வது?

நான் புரட்சியாளன் என்று வெற்று கூச்சலிடுவது புரட்சியில்லை. புரட்சி என்பதற்கு டெசிபல் அளவுகோளில்லை. மௌனத்தைக் கேட்டுப்பாருங்கள்.

(பினா.குனா. தீவிரமா ஆராய நம்மால முடியாதுன்னு ஜெயமோஹன் சார் சொன்னதை கவனத்தில் கொள்(ல்)க! குசும்பா உன்னைப் பத்தி தெரியாதான்னு வெறும் சவுண்ட் விட்டால் அப்புறம் இலக்கியத்துக்குத்தான் ஆபத்து! ஏன்னா என்னோட குசும்பு தொடரும்...:-0)

ஆபாசம், வக்கிரம், அளவுகோள்

அப்பாடி சூப்பர் பௌல் அமெரிக்காவுல எந்த mal-function'னும் (அதாங்க அசம்பாவிதம் சே...ஏமாத்திட்டானுங்க பாசு) இல்லாம முடிஞ்சு போச்சி. புட்பாலுன்னு சொல்லிட்டு முக்கா நேரம் கைல பந்தை எடுத்திட்டு ஓடறானுங்க. ஓடறவனை ஜல்லிக்கட்டு மாடு புடிக்கிற மாதிரி மத்தவுங்க விரட்டறானுங்க. நம்ம மர-மண்டைக்கு இலக்கியம் ஒருநாளு புரிஞ்சாலும் புரியலாம். ஆனா இந்த அழுகுணி ஆட்டம் மட்டும் புரியவே புரியாது. அப்ப எதுக்கு எட்டரை கோடி மக்களோட நீயும் பாத்தேன்னு கேக்காதீக...இதுக்கு மட்டும் பதில் வைச்சிருக்கேன்.

ஆட்டத்தைவிட சுவாரஸியமா இடைவேளைல நடக்கும் 'ஆட்டம்' பாக்கத்தான் டிவி முன்னாடி ஒக்காந்தேன். போனதடவை ஜேனட் ஜாக்ஸனும், ஜஸ்டின் டிம்பர்லேக்கும் (அதாம்ப்பா நம்ம பிரிட்டினி ஸ்பியர்ஸோட எக்ஸ் டாவு) 'தப்பாட்டம்' போட்டாங்க. ஆட்ட முடிவுல ஜஸ்டின் 'தெரியாத்தனமா' ஜேனட்டோட ஜாக்கெட்டை இழுக்க... ஒருபக்கம் கிழிந்து ஜஸ்டின் கையில் வந்துவிட... அப்புறமென்ன கோடானு கோடி ரசிகப் பெருமக்களுக்கு இலவச தரிசனம் கிடைத்தது. (ஏம்ப்பா பா.பா. அந்த போட்டோபடம் எங்கேப்பா கிடைக்கும்?) அப்புறம் பெடரல் அரசு தார்க்குச்சியோட அலைய ஆரம்பிச்சிருச்சி. ஆபாசத்தை ஊடகங்களில் பரவ விட மாட்டோம்'னு சபதம் போட்டு சகட்டுமேனிக்கு NFL, Fox TV'களுக்கு பைனை போட்டு தாளிச்சது. ஜேனட்டோ கூலா அது 'ward robe mal-function'னு சொல்லிட்டு போயிட்டாக. ஆஹா இப்போ புரியுணுமே நான் ஏன் நாக்கைத் தொங்கப்போட்டு பாத்தேன்ங்ற ரகஸியம்.

இந்த தடவை வயசான சர்.பால் மெக்கார்ட்டினியை (ஏதோ பீட்டில்ஸ் குழுவுல பாடினதா நெனைப்பு) போட்டு பாட உட்டாங்க. நல்லவேளை அவர் முழு டிரஸ்ஸோட பாடி முடிச்சுட்டார். பாக்ஸ் டிவி ஏதோ கொஞ்சம் ரசிகர்களுக்கு தீனி போட்டது. இடைவேளையில் பிட்டுப் படம் போட்டாங்க. GoDaddy.com என்பதே அந்த பிட்டுப் படம். வளமையான, வாளிப்பான (இந்த தினமலர் படிச்சுப் படிச்சு கெட்டுப் போயிட்டேன் பாசு) பெண்ணொருத்தி மீடியா சென்ஸார் செய்யும் கிழட்டு ஜட்ஜ்கள் முன்னால் விசாரணைக்கு வருவது போல் காட்சி அமைய, திடீரென்று மேலாடை ஏறக்குறைய ஸ்நாப் ஆக, ஏறத்தாழ ஜேனட் தரிசனம் கிட்டியது. ஜன்ம சாபல்யம் பலருக்கு. ஊடக தணிக்கையை (அய்யோ தமிழு வார்த்தை கெடைச்சிருச்சி) கிண்டல் செய்து வந்த வெளம்பரப் பிட்டுப் படம் இது. ஆனா ரெண்டாவது பகுதி இடைவேளையில மறுஒளிபரப்பா வரவேண்டிய அதே பிட்டுப் படத்தை பாக்ஸ் போடல. ஏன்னா பாக்ஸ¤க்கு புட்டுக்கிச்சி.

வெளம்பரப் படம் எடுத்த கம்பெனியோ இப்போ குய்யோ-முறையோ'ன்னு கூப்பாடு போடுது. அமெரிக்கா டிவியில இதைப் பத்தி விவாதம் அனல் பறக்குது. இந்த நாட்டுல எல்லாமே கோல்மால்தான். பெரிய பெரிய ஆட்டங்கள்ல 'cheerleaders' (அதாம்ப்பா ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்துபவர்கள்) பெயரில் பொண்ணுங்க போடும் ஆட்டம் இருக்கே... சிலுக்கு எல்லாம் பிச்சை வாங்கணும். அது ஆபாசமில்லையாம். ரேடியோப் பொட்டியில F*** வார்த்தை பேசினா ஆபாசமாம். பொப்பிசை பாடகிகளான ஸிம்ப்சன் சகோதரிகளை அவர்களது அப்பாவே 'ஏடாகூட' போட்டோ செஸனுக்கு ஏற்பாடு செய்வார். அது ஆபாசமில்லையாம். கேட்டால் மார்க்கெட்டிங் தந்திரமாம் (மீனாக்ஸ் கவனிக்கணும்).

ஆபாசம்னா என்னா லிமிட்டுன்னு அமெரிக்கா குழம்புது. குழப்புது. (குழம்புற...குழப்புற'ன்னு பாட தோணுது).

கிளிண்டன் ஜிப்பை அவிழ்த்ததால டெமாக்கிரடிக் கட்சிக்கு வெள்ளை மாளிகை கதவை எட்டு ஆண்டுகளுக்கு மூடி விட்டார்கள். மோனிகா லீவின்ஸ்க்கி வெவகாரத்தை விசாரிச்ச செனட்டர் ஸ்டார் அறிக்கையைப் படிங்க. இணையத்துல இலவசமா உலா வந்துச்சு. சும்மா போர்னோ பத்திரிக்கை கதை தோற்கும். டீடெயில்ஸ் வரும் பாருங்க. அடா அடா அடா (பாரா சார் இந்த அறிக்கை படிக்க வோணாம். ஏன்னா பொம்மை ஏதும் இல்ல) அது ஆபாசமில்லையாம்.

அப்ப ஆபாஸத்துக்கு லிமிட் என்ன?

நம்மூரில பாய்ஸ், நியூ படங்கள் ஆபாசமானவைகளா? சிற்றிதழ்களில் குழூஊக்குறி போடாமல் 'WYSIWYG' முறையில் 'உள்ளது உள்ளபடி' எடுத்துரைப்பது ஆபாசமானதா? ஆம்பளை எழுதினா சரி ஆனா அதையே பொம்பளை எழுதினா ஆபாசம்'ன்னு ஆணாதிக்க போக்கை கடைபிடிப்பது ஊடக தர்மமா? அழகிப்போட்டி சீனாவிலேயே நடத்தி விட்டார்கள். பெண்ணியம் பேசும் (அல்லது பெருமை காப்பதாய் கதைக்கும்) குழுக்கள் இத்தகைய போட்டிகள் ஆபாசமானது என்று போர்க்கொடி பிடிப்பது சரியா? ஆபாசத்துக்கும், வக்கிரத்துக்கும் வித்தியாசம் என்னா?

அதே அளவுகோலை வைத்து 'இடுப்புல மச்சத்தை இப்ப காட்டுறேன். மிச்சத்தை அப்புறமா காட்டுறேன்'ன்னு நாட்டுப்புற பாணியில் திரைப்படப் பாடல் எழுதுவது சரியா? 'சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு', 'எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்', 'பூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்' என்று பூடகமாக, சூசகமாக 'அந்த விஷயங்களை' சொன்னால் சரியா? இல்லை ஙொய்யா மக்கா ஓப்பனாவே 'மேஜரானதும் பேஜாரானேன்', 'டேய் கையை வைச்சுக்கிட்டு சும்மா இருடா', 'யாழ்ப்பாணம் யானைத் தந்தம் என் மேல முட்டியது; நாகப்பட்ணம் கப்பல் தரையே லேசா தட்டியது' ன்னு பாடிக்கிட்டே போனா சரியா?

போன பதிவுல சொன்ன மாதிரி எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும். வாங்க மக்களே... நீங்க என்னா நினைக்கிறீங்க?

Tuesday, February 08, 2005

இணையத்தில் இலக்கியமா? பாகம் இரண்டு

காட்சி - 3

(இணையதருமி சொக்கனிடம், ஜெயக்காமன் குறித்துப் போட்டுக் கொடுக்க, மன்னர் அவையில் அதகளம் ஆரம்பமானது)

(சென்ஸார்: பாஸ்ட் பார்வேர்டு: சொக்கன் திட்டுவது, ஜெயக்காமன் இடைமறிப்பது, சொக்கன் பாட்டின் விளக்கம் சொல்வது... etc. etc.)

மந்திரி: அப்படியானால் இணையத்தில் இயற்கையாக இலக்கியமுண்டென்பதுதான் உமது தீர்மானமான முடிவா?
சொக்கன்: ஏன் இன்னும் உமக்கு விளங்கவில்லையா?

மந்திரி: ஒருக்காலுமிருக்க முடியாது. நானும் ஒருகாலத்தில் இணையத்தில் பங்கு கொண்டவன்தான். அங்கே விவாதத்தில் தீவிரமும், அர்ப்பணிப்பும் இல்லை. ஆ.வி, ஜீ.வி. படிப்பவர்கள் கூடத் தேவலாம். இதற்கு சமூக உளவியல் காரணங்கள் கூறலாம். சிற்றிதழ் படிக்கும் கீழ்மட்ட கிராமத்து இளைஞனின் வேகம்...(Blah...Blah...Blah)
இணையதருமி: இன்னாது... கிராமத்துல கீழ்மட்டத்துல இலக்கியம் படிக்கிறாங்களா? நல்லா ஷோக்கா கீதுப்பா. மேல சொல்ங்கணா
(சொக்கன் தருமியை அடக்குகின்றார்)

மந்திரி: இணைய வாசகர் ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணர்கள்.
இணையதருமி: அப்பிடின்னா பலதுறையில ஜல்லியடிச்சாதான் இலக்கியமா? ஜாவா படிச்சவன் தமிழ்ல எய்துனா இலக்கியமில்லையா? சரி தெளிவாச் சொல்லு. இலக்கியம்னா என்னா? இலக்கியம் எய்தவும், படிக்கவும் என்னா குவாலிபிகேஷன் வோணும்? புட்டு வை வாத்யாரே...

மந்திரி: இணையத்தில் வலம் வருவோர் இலக்கியத்தை இளைப்பாறுதலாகவே நினைக்கின்றனர்
இணையதருமி: அடப்பாவி மந்திரியே... இலக்கியம் இளைப்பாறவாவது பயன்படுதேன்னு நான் சந்தோஷப்படுறேன். பொதுவா இலக்கியம் மனுஷாளை படுத்துதும்பா. இப்போ பரிசு உண்டா இல்லையா? யோவ் சொக்கரே... முத்தொள்ளாயிரம் அது இதுன்னு நினைச்சேனே? இப்போ யென்னா சொல்ற?

சொக்கன்: ஜெயக்காமனே என்னை நன்றாக உற்றுப்பார். இணையத்தில் இயற்கையாய் இலக்கியமில்லையா?

(அப்போது ராத்திரி முழுதும் வலை மேய்ந்ததில் சிவப்பேறியிருந்த சொக்கனின் கண்ணில் பிராட்பேண்ட் ஸ்பீடில் ஒரு காட்சி விரிந்தது. ஜெயக்காமன் ஒரு நாற்காலியில் அமர்ந்து, மேசை மேலுள்ள கணிணியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். எதிரே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் தாடி, மீசையுடன் அலைந்து கொண்டிருக்கின்றார். பின்னர் தெரிகிறது அவர் ஒரு மலையாள டைரக்டர். பெயர்: மீராதாஸ். கவரிமான் என்ற அவர் படத்துக்கு ஜெயக்காமன் இலக்கிய வசனம் அடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.)

(இணைய யுகத்தில் ஒளி வேகத்தில் ரகஸிய செய்தி கசிந்ததில் கடுப்பாகின்றார் ஜெயக்காமன்)

மந்திரி: சங்கறுப்பர் எங்கள் குலம் ...
இணையதருமி: அதான் இணையத்துலேயே சொல்லிட்டாங்களே

மந்திரி: சங்கரனார்க்கேது குலம்?
இணையதருமி: யோவ் சங்கரு, குலமின்னு பேசுன அழியாத அன்போட இணையத்துல தூரிகையோட இருக்கிறவரை உட்டு ஆப்படிக்க வைச்சுடுவேன் சாக்கிறதை.

மந்திரி: ... இரந்துண்டு வாழ்வதில்லை...
இணையதருமி: என்னாங்கடா இது...சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இணையத்துலதான் யாரும் யாருக்கும் இரந்துண்டு வாழறதில்லே. அடுத்தாளை உட்டு ஆசிட் அடிக்கிறதில்ல. சண்டை போட்டுட்டு அப்புறம் சந்தியிலே சிரிச்சிக்குவோம். இணையத்துல இப்போதான் முளைச்சு மூணு கூட நாங்க உடல. அதுக்குள்ளாற இதுல இலக்கியமில்லேன்னா சொன்னா சரியில்ல பாசு. அத வுடு. இலக்கிய பழம் தின்ன நீங்க இணையத்துல வந்து கொட்டை போடுங்க. அப்பவாவது இலக்கியம் இணையத்திலும் வளரும்ல. நாஞ் சொன்னா எவன் கேக்கப் போறான்?

(கிளைமாக்ஸ்: ஜெயக்காமனை சொக்கன் சாம்பலாக்கி, மன்னர் பாராமுகப் பாண்டியனின் வேண்டுகோளின்படி மீண்டும் உயிர்(மை)க்கின்றார். இணையதருமிக்கு ஓசி'யில் ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கின்றது)

மறுநாள் இணையதருமி வழக்கம்போல் ஆபீஸில் வலை மேயும்போது 'ஓலச்சுவடு' சிற்றிதழைப் படித்து பேஜாராகின்றான். உப்புமான் என்பவர் இணையதருமிக்கு வழங்கப்பட்ட விருதினை நக்கலடித்து வெலாவாரியா, மானாவாரியா தாக்கியிருந்தார். அடடே மறந்தே போச்சு. இப்போ இணையமும் இலக்கியமும் ஒண்ணாயிடிச்சுல்ல...'யம்மா இணைய-யம்மா வந்துதடியம்மா உங்காளைக்கு ஆபத்து' என்று கட்டபொம்மன் வசனம் இழையோட இணையதருமி இடத்தைக் காலி செய்ய...

வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
இலக்கியம் இதுதானடா


என்ற தத்துவப்பாட்டு காற்றோடு கலந்து ஒலித்தது.

இணையத்தில் இலக்கியமா? பாகம் ஒன்று

காட்சி - 1

(சென்னை மாகாணத்தில், கீழ்ப்பாக்கம் என்ற சிற்றூரை மன்னர் பாரா'முகப் பாண்டியன் ஆட்சி செலுத்திய காலமது. ம(கு)டிக்கொரு கம்ப்யூட்டர், மூலைக்கொரு பிரௌசிங் சென்டர், தடுக்கி விழுந்தால் ஒரு ISP, நிமிர்ந்து பார்த்தால் ஒரு புரோக்கிராமரென்று சகல வகையிலும் கீழ்ப்பாக்கமொரு சென்னையின் சிலிக்கன் வேலியாக இருந்தது. மன்னரென்றால் சந்தேகம் வரவேண்டுமென்பது அக்பரிலிருந்து, 'திருவிளையாடல்' வரை பேரரசு, சிற்றரசு, சாதி, மதம் பாரா'த யுனிவர்சல் கட்டளையன்றோ? இதோ ஆரம்பித்தது பாண்டியனின் சந்தேகம்...)

முரசறிவிப்பவன் (அதாவது கையிலிருந்த iPAD அவுட்புட்டை ஆம்பிளிபை செய்த ஸ்பீக்கரோடு): இணையத்தில் எழுதப்படுவது இயற்கைலேயே இலக்கியமா இல்லையா என்ற மாபெரும் சந்தேகம் நமது மாமன்னருக்கு வந்துள்ளது. இச்சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்க்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும்...

இணையதருமி: (அறிவிப்பைக் கேட்டதும் புலம்ப ஆரம்பிக்கின்றான்) அய்யோ அய்யோ ஒரு ரூபாயா ரெண்டு ரூபாயா? ஆயிரம் ரூபாவாச்சே. இப்ப பாத்து நமக்கு இலக்கியம் வர மாட்டேங்குது. ஏய் சொக்கா?
சொக்கன்: (ஜீன்ஸ், டி-ஷர்ட்டில்) என்ன கூப்டீங்களா?

இணையதருமி: அடப் போய்யா... இலக்கியம் படைக்கணுமின்னு சொக்கநாதரைக் கூப்டா நீ வேற பேஜார் பண்றியே?
சொக்கன்: நானும் சொக்கன்தான். என்னவென்று சொல்லுங்கள். உதவ முயற்சிக்கின்றேன்.

இணையதருமி: உன்னைப் பாத்தா திருவிளையாடல் சொக்கநாதர் மாதிரி தெரிலியே. ஒருவேளை தமிழோவியத்துல முத்தொள்ளாயிரத்திற்கு விளக்கவுரை எழுறத ஆளா?
சொக்கன்: (தெய்வீக முறையெனப்படும் மர்மமான சிரிப்பை உதிர்க்கின்றார்)

இணையதருமி: சரி சரி டிப்டாப்பா டிரஸ்ஸைப் பாத்தோண்ண கொஞ்சம் மெரண்டு போயிட்டேன். அது சரி... இணையத்துல இலக்கியம் இருக்குங்றே?
சொக்கன்: அதிலென்ன சந்தேகம்.

இணைய தருமி: அப்ப தண்டோரா போட்டதை நீயும் கேட்டுட்ட... இல்ல... என் வயித்துல அடிக்கிறதுக்குன்னே வந்திருக்க போல...
சொக்கன்: எனக்கு பரிசுப் பணம் வேண்டாம். நான் அச்சு ஊடகத்திலும் பூந்து புறப்பட்டு இருக்கின்றேன். மன்னரின் சந்தேகம் தீர்க்கும் கவிதை ஒன்று தருகின்றேன். பாடலைக் கூறி பரிசு வென்று வா.

இணையதருமி: அப்பப்ப நான் ஜல்லி அடிக்கிறதையே இணைய மக்கள் கீசி, கலாய்க்கிறாங்க. இப்ப உம்மோடத எடுத்துப் போய் பத்து பேரு முன்னாடி வைச்சு சம்மிட்டாய்ங்கன்னா?
சொக்கன்: என் திறமையில் உனக்கு நம்பிக்கையில்லையா?

இணையதருமி: என் நம்பிக்கையை உடு. மத்தவாளுக்கு குறிப்பா மன்னர்வாளுக்கு இருந்தா போதும். ஆயிரம் ரூபா ஐயா பையில. ஆமாம் சத்தியமா உனக்கு ஒரு கட்டிங் கூட வேண்டாமே? நான் புள்ளை குட்டிக்காரன்பா...
சொக்கன்: என் திறமை மீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் என்னை பரிசோதித்துப் பாரேன் உனக்குத் திறமையிருந்தால்

இணையதருமி: என் எங்கிட்டயே மோதிப் பாக்குறியா? நான் பாக்க சும்மா சாதாரணமா இருப்பேன். அடிச்சா சதா-ரணம்தான்.
சொக்கன்: கேள்விகளை நான் கேட்கவா?

இணையதருமி: ஏய் நான் பச்சைத் தமிழன். எனக்குக் கேக்க மட்டும்தான் தெரியும். பதில் சொல்லிப் பழக்கமில்லை.
சொக்கன்: ஜல்தி கேளுமே (நாக்கைக் கடித்துக் கொள்கிறார்)

இணையதருமி: சேர்ந்தே இருப்பது
சொக்கன்: விஜயேந்திரரும், ரகுவும்

இணையதருமி: சேராதிருப்பது
சொக்கன்: காஞ்சியும், கலவையும்

இணையதருமி: பிரிக்க முடியாதது
சொக்கன்: குரங்கும், சிரங்கும்

இணையதருமி: பிரிந்தே இருப்பது
சொக்கன்: அறிவும், (சாகித்ய) அகாதமியும்

இணையதருமி: சொல்லக் கூடாதது
சொக்கன்: சுனாமிக்கு நன்றி

இணையதருமி: சொல்லக்கூடியது
சொக்கன்: ஒன்பது கட்டளைகள்

இணையதருமி: வில்லுக்கு
சொக்கன்: அத்வானி

இணையதருமி: சொல்லுக்கு (அதாவது சும்மா பேச்சுக்கு)
சொக்கன்: வாஜ்பாய்

இணையதருமி: தமிழுக்கு
சொக்கன்: ரீபாக் ஷ¥ (ஹி.. ஹி.. திருமா'ங்க)

இணையதருமி: ஆசைக்கு
சொக்கன்: ஜெ

இணையதருமி: அறிவுக்கு
சொக்கன்: ஜெ. ஜெ (ஹி.. ஹி.. இனிஷியல் போட்டேன்)

இணையதருமி: (தடாலென்று சொக்கன் காலில் விழுகின்றார்) ஐயா...கவிதையைக் கொடுங்கள். என்ன பரிசு கிடைக்கின்றதோ அதை அப்படியே உம்மிடம் கொடுத்து விடுகின்றேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்.
சொக்கன்: எல்லாவற்றையும் நீயே எடுத்துக் கொள்.

இணையதருமி: சம்மினா கூடமா?
சொக்கன்: (செருமுகின்றார்) போய் வா. பரிசு உனதே. (கவிதையை இணையதருமி காதில் கிசுகிசுகின்றார்)

காட்சி-2

(மன்னர் பாராமுகப் பாண்டியன் அவை. சபையின் மூத்த தமிழறிஞர் ஜெயக்காமன் வீற்றிருக்கின்றார்)

இணையதருமி: பார் வேந்தே... என்னைப் பார் வேந்தே... சந்தேகம் தீர்க்கும் பாடலைக் கேள் வேந்தே...

(கவிதையைத் திக்கித் திணறி படிக்கின்றார்)

கொங்குநாட்டுத் தமிழ் முதல்
சென்னைச் செம்மொழி வரை
அமோரஸ் பெரோஸையும்
ஆயுத எழுத்தையும்
தோரோவின் குளத்தையும்
சமணர் படுகையையும்
சந்தடி சாக்கில் சாமியாரையும்
சமமாய் பாவித்து சல்லியடித்து
குழுமமாய் கூடி கும்மியடித்து
பின்னூட்டத்திலும் யாம் வளர்ப்பது
நீ அறியாய் இலக்கியமே

மன்னர்: ஆஹா ஆஹா அருமையான கவிதை. தீர்ந்தென் சந்தேகம். யாரங்கே ஆயிரம் ரூபாய்க்கான பெரிய காசோலையைக் கொண்டு வாருங்கள். மந்திரியாரே நமது ஆஸ்தான புகைப்படக்காரரை வரச் சொல்லுங்கள். வருடமொருமுறை வெளியாகும் 'நமது கயமை' என்ற சிற்றிதழில் உடனடியாக இப்படத்தோடு கட்டுரையும் வரவேண்டும்.

மந்திரி: பொறுங்கள் மன்னா. கவிதையில் குறை இருக்கின்றது.
இணையதருமி: யோவ் பெர்சு. தல இருக்க குடுமி ஆடப்படாது. ராசாவே ஓகே சொன்னப்புறம் உனக்கென்னவே? வோணுமின்னா நீ ஒரு கட்டிங் எடுத்துக்க.. ராசா என் மவராசா செக்கைக் குடுங்க. பிரௌசிங் செண்டர் போகோணும்.

மந்திரி: என்ன பிரௌசிங் செண்டரா?
இணையதருமி: அட கஷ்டகாலமே. நான் ஏதோ பிரௌசிங் செண்டர்ல சொக்கநாதன்.காம் படிச்சு கவிதையை டௌன்லோடு பண்ணி இங்க படிச்ச மாதிரி சொல்றீங்களே. பிரௌசிங் செண்டர் போய்த்தானேயா இணைய இலக்கியம் வளர்க்கணும். ராசா நீங்க செக்கை குடுங்க.

மன்னர்: தருமி ஆரம்பிச்சுட்டான்யா... இனி நிறுத்த மாட்டான். சீக்கிரம் செக்கைக் கொடுத்து அனுப்புங்கள் மந்திரியாரே
மந்திரி: தருமியாரே... கவிதையின் பொருள் கூறி பரிசைப் பெற்றுச் செல்லுங்கள்.

இணையதருமி: அப்பாடா...மந்திரி ஜெயக்காமன் அவர்களே... உங்களுக்கே கவித விளங்களைன்னா அது எலக்கியம் தானுங்களே. அர்த்தம் புரியாம அடுத்தவன இம்சை பண்றதுதானே இலக்கியம். கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்னாடி தோன்றியது தமிழ்'னாங்கோ. தமிழுக்கு அப்புறம் வந்த நமக்கு அது எப்படிப் புரியும்? இப்டி ஒரு கேள்வி என்னைத் துளைச்சிப் போட்டுடிச்சி. அப்புறம் மத்த இலக்கியம் ப(டை)டிச்சப்போதான் வெளங்காம இருந்த இந்தக் கேள்வி 'ஒரு மாதிரியா' வெளங்குனது.

மந்திரி: பொருள் உமக்குத் தெரியுமா தெரியாதா?
இணையதருமி: உன் புடுங்கல் கும்பகோணம் கொசுவை விட மோசம்யா. இப்ப இன்னான்றே? அர்த்தம் வோணுமின்னா இணையத்துல டிக்ஷனரியை அதாம்பா 'OTL' பாத்து தெரிஞ்சுக்க.

மந்திரி: அப்ப உமக்குத் தெரியாது. இல்லையா?
இணையதருமி: (தனக்குள் புலம்புகின்றார்)

(ஜெயக்காமன் சிரிக்கின்றார். அவையோர் சிரிக்கின்றனர். இணையத்தருமி பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுகின்றார்)

தொடரும்...