காட்சி - 1
(சென்னை மாகாணத்தில், கீழ்ப்பாக்கம் என்ற சிற்றூரை மன்னர் பாரா'முகப் பாண்டியன் ஆட்சி செலுத்திய காலமது. ம(கு)டிக்கொரு கம்ப்யூட்டர், மூலைக்கொரு பிரௌசிங் சென்டர், தடுக்கி விழுந்தால் ஒரு ISP, நிமிர்ந்து பார்த்தால் ஒரு புரோக்கிராமரென்று சகல வகையிலும் கீழ்ப்பாக்கமொரு சென்னையின் சிலிக்கன் வேலியாக இருந்தது. மன்னரென்றால் சந்தேகம் வரவேண்டுமென்பது அக்பரிலிருந்து, 'திருவிளையாடல்' வரை பேரரசு, சிற்றரசு, சாதி, மதம் பாரா'த யுனிவர்சல் கட்டளையன்றோ? இதோ ஆரம்பித்தது பாண்டியனின் சந்தேகம்...)
முரசறிவிப்பவன் (அதாவது கையிலிருந்த iPAD அவுட்புட்டை ஆம்பிளிபை செய்த ஸ்பீக்கரோடு): இணையத்தில் எழுதப்படுவது இயற்கைலேயே இலக்கியமா இல்லையா என்ற மாபெரும் சந்தேகம் நமது மாமன்னருக்கு வந்துள்ளது. இச்சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்க்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும்...
இணையதருமி: (அறிவிப்பைக் கேட்டதும் புலம்ப ஆரம்பிக்கின்றான்) அய்யோ அய்யோ ஒரு ரூபாயா ரெண்டு ரூபாயா? ஆயிரம் ரூபாவாச்சே. இப்ப பாத்து நமக்கு இலக்கியம் வர மாட்டேங்குது. ஏய் சொக்கா?
சொக்கன்: (ஜீன்ஸ், டி-ஷர்ட்டில்) என்ன கூப்டீங்களா?
இணையதருமி: அடப் போய்யா... இலக்கியம் படைக்கணுமின்னு சொக்கநாதரைக் கூப்டா நீ வேற பேஜார் பண்றியே?
சொக்கன்: நானும் சொக்கன்தான். என்னவென்று சொல்லுங்கள். உதவ முயற்சிக்கின்றேன்.
இணையதருமி: உன்னைப் பாத்தா திருவிளையாடல் சொக்கநாதர் மாதிரி தெரிலியே. ஒருவேளை தமிழோவியத்துல முத்தொள்ளாயிரத்திற்கு விளக்கவுரை எழுறத ஆளா?
சொக்கன்: (தெய்வீக முறையெனப்படும் மர்மமான சிரிப்பை உதிர்க்கின்றார்)
இணையதருமி: சரி சரி டிப்டாப்பா டிரஸ்ஸைப் பாத்தோண்ண கொஞ்சம் மெரண்டு போயிட்டேன். அது சரி... இணையத்துல இலக்கியம் இருக்குங்றே?
சொக்கன்: அதிலென்ன சந்தேகம்.
இணைய தருமி: அப்ப தண்டோரா போட்டதை நீயும் கேட்டுட்ட... இல்ல... என் வயித்துல அடிக்கிறதுக்குன்னே வந்திருக்க போல...
சொக்கன்: எனக்கு பரிசுப் பணம் வேண்டாம். நான் அச்சு ஊடகத்திலும் பூந்து புறப்பட்டு இருக்கின்றேன். மன்னரின் சந்தேகம் தீர்க்கும் கவிதை ஒன்று தருகின்றேன். பாடலைக் கூறி பரிசு வென்று வா.
இணையதருமி: அப்பப்ப நான் ஜல்லி அடிக்கிறதையே இணைய மக்கள் கீசி, கலாய்க்கிறாங்க. இப்ப உம்மோடத எடுத்துப் போய் பத்து பேரு முன்னாடி வைச்சு சம்மிட்டாய்ங்கன்னா?
சொக்கன்: என் திறமையில் உனக்கு நம்பிக்கையில்லையா?
இணையதருமி: என் நம்பிக்கையை உடு. மத்தவாளுக்கு குறிப்பா மன்னர்வாளுக்கு இருந்தா போதும். ஆயிரம் ரூபா ஐயா பையில. ஆமாம் சத்தியமா உனக்கு ஒரு கட்டிங் கூட வேண்டாமே? நான் புள்ளை குட்டிக்காரன்பா...
சொக்கன்: என் திறமை மீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் என்னை பரிசோதித்துப் பாரேன் உனக்குத் திறமையிருந்தால்
இணையதருமி: என் எங்கிட்டயே மோதிப் பாக்குறியா? நான் பாக்க சும்மா சாதாரணமா இருப்பேன். அடிச்சா சதா-ரணம்தான்.
சொக்கன்: கேள்விகளை நான் கேட்கவா?
இணையதருமி: ஏய் நான் பச்சைத் தமிழன். எனக்குக் கேக்க மட்டும்தான் தெரியும். பதில் சொல்லிப் பழக்கமில்லை.
சொக்கன்: ஜல்தி கேளுமே (நாக்கைக் கடித்துக் கொள்கிறார்)
இணையதருமி: சேர்ந்தே இருப்பது
சொக்கன்: விஜயேந்திரரும், ரகுவும்
இணையதருமி: சேராதிருப்பது
சொக்கன்: காஞ்சியும், கலவையும்
இணையதருமி: பிரிக்க முடியாதது
சொக்கன்: குரங்கும், சிரங்கும்
இணையதருமி: பிரிந்தே இருப்பது
சொக்கன்: அறிவும், (சாகித்ய) அகாதமியும்
இணையதருமி: சொல்லக் கூடாதது
சொக்கன்: சுனாமிக்கு நன்றி
இணையதருமி: சொல்லக்கூடியது
சொக்கன்: ஒன்பது கட்டளைகள்
இணையதருமி: வில்லுக்கு
சொக்கன்: அத்வானி
இணையதருமி: சொல்லுக்கு (அதாவது சும்மா பேச்சுக்கு)
சொக்கன்: வாஜ்பாய்
இணையதருமி: தமிழுக்கு
சொக்கன்: ரீபாக் ஷ¥ (ஹி.. ஹி.. திருமா'ங்க)
இணையதருமி: ஆசைக்கு
சொக்கன்: ஜெ
இணையதருமி: அறிவுக்கு
சொக்கன்: ஜெ. ஜெ (ஹி.. ஹி.. இனிஷியல் போட்டேன்)
இணையதருமி: (தடாலென்று சொக்கன் காலில் விழுகின்றார்) ஐயா...கவிதையைக் கொடுங்கள். என்ன பரிசு கிடைக்கின்றதோ அதை அப்படியே உம்மிடம் கொடுத்து விடுகின்றேன். நீர் பார்த்து ஏதாவது செய்யும்.
சொக்கன்: எல்லாவற்றையும் நீயே எடுத்துக் கொள்.
இணையதருமி: சம்மினா கூடமா?
சொக்கன்: (செருமுகின்றார்) போய் வா. பரிசு உனதே. (கவிதையை இணையதருமி காதில் கிசுகிசுகின்றார்)
காட்சி-2
(மன்னர் பாராமுகப் பாண்டியன் அவை. சபையின் மூத்த தமிழறிஞர் ஜெயக்காமன் வீற்றிருக்கின்றார்)
இணையதருமி: பார் வேந்தே... என்னைப் பார் வேந்தே... சந்தேகம் தீர்க்கும் பாடலைக் கேள் வேந்தே...
(கவிதையைத் திக்கித் திணறி படிக்கின்றார்)
கொங்குநாட்டுத் தமிழ் முதல்
சென்னைச் செம்மொழி வரை
அமோரஸ் பெரோஸையும்
ஆயுத எழுத்தையும்
தோரோவின் குளத்தையும்
சமணர் படுகையையும்
சந்தடி சாக்கில் சாமியாரையும்
சமமாய் பாவித்து சல்லியடித்து
குழுமமாய் கூடி கும்மியடித்து
பின்னூட்டத்திலும் யாம் வளர்ப்பது
நீ அறியாய் இலக்கியமே
மன்னர்: ஆஹா ஆஹா அருமையான கவிதை. தீர்ந்தென் சந்தேகம். யாரங்கே ஆயிரம் ரூபாய்க்கான பெரிய காசோலையைக் கொண்டு வாருங்கள். மந்திரியாரே நமது ஆஸ்தான புகைப்படக்காரரை வரச் சொல்லுங்கள். வருடமொருமுறை வெளியாகும் 'நமது கயமை' என்ற சிற்றிதழில் உடனடியாக இப்படத்தோடு கட்டுரையும் வரவேண்டும்.
மந்திரி: பொறுங்கள் மன்னா. கவிதையில் குறை இருக்கின்றது.
இணையதருமி: யோவ் பெர்சு. தல இருக்க குடுமி ஆடப்படாது. ராசாவே ஓகே சொன்னப்புறம் உனக்கென்னவே? வோணுமின்னா நீ ஒரு கட்டிங் எடுத்துக்க.. ராசா என் மவராசா செக்கைக் குடுங்க. பிரௌசிங் செண்டர் போகோணும்.
மந்திரி: என்ன பிரௌசிங் செண்டரா?
இணையதருமி: அட கஷ்டகாலமே. நான் ஏதோ பிரௌசிங் செண்டர்ல சொக்கநாதன்.காம் படிச்சு கவிதையை டௌன்லோடு பண்ணி இங்க படிச்ச மாதிரி சொல்றீங்களே. பிரௌசிங் செண்டர் போய்த்தானேயா இணைய இலக்கியம் வளர்க்கணும். ராசா நீங்க செக்கை குடுங்க.
மன்னர்: தருமி ஆரம்பிச்சுட்டான்யா... இனி நிறுத்த மாட்டான். சீக்கிரம் செக்கைக் கொடுத்து அனுப்புங்கள் மந்திரியாரே
மந்திரி: தருமியாரே... கவிதையின் பொருள் கூறி பரிசைப் பெற்றுச் செல்லுங்கள்.
இணையதருமி: அப்பாடா...மந்திரி ஜெயக்காமன் அவர்களே... உங்களுக்கே கவித விளங்களைன்னா அது எலக்கியம் தானுங்களே. அர்த்தம் புரியாம அடுத்தவன இம்சை பண்றதுதானே இலக்கியம். கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்னாடி தோன்றியது தமிழ்'னாங்கோ. தமிழுக்கு அப்புறம் வந்த நமக்கு அது எப்படிப் புரியும்? இப்டி ஒரு கேள்வி என்னைத் துளைச்சிப் போட்டுடிச்சி. அப்புறம் மத்த இலக்கியம் ப(டை)டிச்சப்போதான் வெளங்காம இருந்த இந்தக் கேள்வி 'ஒரு மாதிரியா' வெளங்குனது.
மந்திரி: பொருள் உமக்குத் தெரியுமா தெரியாதா?
இணையதருமி: உன் புடுங்கல் கும்பகோணம் கொசுவை விட மோசம்யா. இப்ப இன்னான்றே? அர்த்தம் வோணுமின்னா இணையத்துல டிக்ஷனரியை அதாம்பா 'OTL' பாத்து தெரிஞ்சுக்க.
மந்திரி: அப்ப உமக்குத் தெரியாது. இல்லையா?
இணையதருமி: (தனக்குள் புலம்புகின்றார்)
(ஜெயக்காமன் சிரிக்கின்றார். அவையோர் சிரிக்கின்றனர். இணையத்தருமி பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுகின்றார்)
தொடரும்...
Tuesday, February 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
azhagana karpanai, arputham Kusumban
Part II virkaga kathirikiraen
Post a Comment