Sunday, December 04, 2005

மப்பும் மந்தாரமும்

வெளியே மெல்லிய மேகமூட்டம்; ஸ்வெட்டர் இன்னமும் தேவைபடாத அளவிற்கு குளிர்; சோபாவை விட்டு எழும்பாத சோம்பல்; ஒரு ஷாட் டெக்கீலா முடிந்தவுடன் மனமும் உடம்பும் லேசானதைச் சொல்லவும் வேண்டுமோ?

இந்திப் படம் பார்த்து நாளாகி விட்டதே என்ற குறையைக் களைய இதை விட சுபமுகூர்த்தம் உண்டா? கொஞ்ச நாட்களாகவே பாலிவுட் படங்கள் போரடித்து விட்டன. (அதற்காக கோலிவுட் சூப்பர் என்று சொன்னதாய் நினைக்க வேண்டாம்).

ல்க்ஸ் மணம் குறையாத பிரீத்தி ஜிந்தா, சற்றே தொப்பை போட்டிருக்கும் சாக்லேட் ஹீரோ செய்ப் அலி கான். ஆதித்ய சோப்ராவின் ப்ரொடக்ஷன் என்றால் செலவிற்கு குறைவிருக்காது. ஏதோ அவர் புண்ணியத்தில் கொள்ளை அழகான இடங்களை 2 டாலர்களில் கண்டு களிக்கலாம்.

அப்பாவின் சந்தோஷத்திற்கு ஆர்க்கிடெக்ட் படித்து, சொந்த சந்தோஷத்திற்காக தலைமை சமையல்கார வேலை பார்க்கும் நிகில் aka நிக் (செய்ப்), சராசரி வாழ்க்கை போரடிக்க மெல்போர்னில் மருத்துவம் படிக்க வரும் அம்பர் (பிரீத்தி). இருவரும் சந்திக்கின்றார்கள்; 5 நாட்கள் பழகுகின்றார்கள்; நிக் தன் காதலைச் சொல்ல, அம்பர் முதலில் எதிர்க்கின்றார். நிக் ஒன்றாக தன்னுடன் வசிக்கும்படி கோர, இருவரும் 2 பெட்ரூம் வீடு பார்த்து குடியேறுகின்றார்கள். போரடிக்காமல் காட்சிகள் செல்கின்றன. அழகான அவுஸ்திரேலியாவும், பாடல்களும் கிறங்க அடிக்கின்றன. மேரா தில் போலே ம்ம்ம்ம்ம் மற்றும் து ஜஹான் மே வஹான் டியூன்களை ஹம் செய்யாமல் இருப்பவர் அடுத்த பிறவியில் பீப்ப்ப்ப்ப் (சென்ஸார்)

கல்யாணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் ஒன்றாக, ஒரே வீட்டில் வாழ்வதை புரட்சியென்று இன்னும் எத்தனை காலம் தான் நம்பப்போகின்றோமோ? NRI, பெற்றோரை எதிர்ப்பவர்கள் அதனால் என்று ஹீரோ ஹீரோயினின் இச்செய்கையை நியாயப்படுத்தும் போது, டெக்கீலா தொண்டைக்குழியில் சுரீரென்கிறது. பாதுகாப்புடன் இருந்தும் அம்பர் கருத்தரிக்க பிரச்சினை ஆரம்பமாகின்றது. திருமணம், குழந்தை என்று தனது சுதந்திரத்தை பாதிக்கும் விதயங்களை விரும்பாத நிக், கருக்கலைப்புக்கு வற்புறுத்த, அம்பர் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டு பின்னர் மறுக்கின்றாள். இதுபோன்ற சமயத்தில் டிவி ஸீரியல் டைரக்டர் யாராவது இருந்திருந்தால் சும்மா பிழியப் பிழிய அழ வைத்திருப்பார்கள். நல்ல வேளை அதுபோல் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லை. கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். இருப்பினும் அபிஷேக் பச்சனின் டாக்டர் ரோலுக்காக இழுத்திருக்கின்றார்கள்.

இந்தி தெரியாதவர்கள் எனது விமர்சனத்தால் க(ல)வரப்பட்டால் இப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம். தமிழ் உப-தலைப்புகள் (சப்டைட்டில்) உண்டு. என்ன ஹிந்தி பாடல்களை தமிழ்ப்படுத்தும் போது ஞானபீடத்தின் பதிவுகள் போன்று இருக்கின்றன.

உ.தா. (1)
எல்லாம் உயிருடன் உள்ளன
ஆடிக்கொண்டு
வந்து வாழ்வின் அறிகுறிகளை
கண்டு பிடியுங்கள்

உ.தா. (2)
எப்பொழுதுமே வானத்தில் இருந்து
இறங்கி வருவதைப் போல் வருவாள்
எப்பொழுதுமே அவளது கண்கள்
என்னை உற்றுப் பார்க்கும்

பாத்தீங்களா அவசரத்துல படம் பேரை சொல்ல மறந்துட்டேனே. சலாம் நமஸ்தே. டைரக்டர் சித்தார்த் ஆனந்த்.

பி.கு. பத்து வருட ஞாபகசக்தியுள்ளவர்கள் Nine Months என்று கூறுவார்கள். சலேகா யார் :-)


3 comments:

ஏஜண்ட் NJ said...

//ஹிந்தி பாடல்களை தமிழ்ப்படுத்தும் போது ஞானபீடத்தின் பதிவுகள் போன்று இருக்கின்றன.//

விளம்பரம்:
ஞானபீடத்தின் பதிவுகள் இங்கே காணக் கிடைக்கும்!

*** *** ***
//பாதுகாப்புடன் இருந்தும் அம்பர் கருத்தரிக்க பிரச்சினை ஆரம்பமாகின்றது.//

//... கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். //

அறிகுறிகளை கண்டு பிடியுங்கள்!!

குசும்பன் said...

//அறிகுறிகளை கண்டு பிடியுங்கள்!! //

(*;*) :-) அது!

உங்க பதிவில பின்னூட்டம் உட முடியலீங்கண்ணா.. கொஞ்சம் பாக்கறேளா?

முகமூடி said...

// அறிகுறிகளை கண்டு பிடியுங்கள்//

ஒரு வேளை கொஞ்சம் காத்தோட்டமா இருக்கட்டுமேன்னு...