Saturday, July 29, 2006

தேன்கூடு அரசியல்


கூட்டு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக தேன்கூட்டைத்தான் கூறுவர். ஆனால் அங்கே நடக்கும் அரசியலைப் பற்றி வலைப்பதிவர்கள் கூட பேசமாட்டேன் என்றிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

நேற்று ஒரு தகவல் படிச்சேன். அது என்னன்னா, தேனை புண்ணுக்கு மருந்தா வச்சுக் கட்டலாமாம். ஏன்னா தேனால கூட free'யா radicals உண்டாக்க முடியுமாம். என்ன கொடுமை பாத்தீங்களா? இங்கிலீஷுல வீக்கான நான் ஆங்கில திசாரஸ எடுத்துப் பாத்தா ரேடிகல்'னா அடிப்படை தீவிரவாதமுன்னு சொல்லுது. கொஞ்சம் சத்தமா சொன்னா தேன்கூட்டுக்கே தடாவோ பொடாவோ போட்டுடுவாங்க போலக்கீது!

அத்தோட விட்டுர்றதா? தேனுக்கு மட்டும் ஏனிப்படி தீவிரவத குணமுன்னு படிக்கப் போக, தேனீக்களைப் பத்தி நாம் அந்தக்காலத்துல படிச்சது மறந்து போயி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சா, சரி தேன்கூட்டையும் ஒரு கையி பாத்துரலாம்னு முடிவு செஞ்சேன். படிக்கப் படிக்க ஒரே ஆச்சரியம். உங்களுக்கும் இருக்கணுமே... இதைப்பற்றி காட்சியைக்கூட கனவாய்க் கண்டு எழுத்தாய் வடிக்கும் சுந்தரவடிவேல் எழுதவேண்டுமே என்று நினைத்தேன். அவர் ஏமாற்றவில்லை. நானும் ஏமாறவில்லை.

'தேன்' இலவச தீவிரவாதத்தை (free radicals) ஊக்குவிக்கின்றது என்ற ஊகமே தவறு என்கின்றார் இணையத்தில் எழுதும் பிரபல டாக்டர் சுந்தரவடிவேல். அதைப் பற்றி டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) தேன்கூடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் உயர்ந்த 10 தேன்கூடுகளில் இருந்தபடி அந்தந்த தேனெடுக்கும் கூடுகளின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த தேனீக்களின் மதம், சாதி, பால் உட்பட பல விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இத்தேன்கூடுகளின் பட்டியலலைப் பிறகு தருகின்றேன் என்று மார் தட்டும் அவர், இவற்றில் 37 தேன்கூடுகளிலிருந்து பல விபரங்கள் கிடைத்ததையும் பட்டியலிடுகின்றார். ஆண்டாண்டு காலமாய் மனுதர்மத்தைக் கொண்டு அதர்மம் செய்யும் பிராமணீய சூழ்ச்சி மனித வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்டு என்று சொல்பவர்கள் கவனிக்கவும். ஒவ்வொரு தேன் கூட்டுலயும் மூனு வகை தேனீக்க இருக்கும். ஒரு 50,000 வேலைக்காரத் தேனீக்கள், ஒரு ராணி அப்புறம் 300-3000 ஆண் தேனீக்கள். இங்கேதான் தேன்கூடு வர்ணாசிரமம் ஒளிந்திருக்கின்றது என்கின்றார் சுந்தரவடிவேல்.

மேலும், "வேலைக்காரத் தேனீக்கள் எல்லாரும் பொண்ணுங்களாம். ஆனா முட்டையிடவோ, புணரவோ முடியாது. ஏன்னா ராணித் தேனீகிட்டயிருந்து வர்ற ஒரு சுரப்பை (pheromone) இவங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க, இந்தச் சுரப்பு இவங்களை முட்டையிடாம வச்சிருக்கும். இந்தச் சுரப்புலேருந்து வர்ற வாசனைதான் அவுங்கவுங்க கூட்டை அடையாளம் கண்டுக்க உதவுது. வேற கூட்டுக்கு மாறிப் போமாட்டாங்க, அப்புடிப் போனா அங்க வேற வாசம், கொட்டு வாங்க வேண்டியதுதான்" என்ற கொடுமையையும் தெரிவித்தார்.

இது குறித்து தேன்துளி என்னும் பத்மா அரவிந்த் என்ற வலைப்பதிவாளரின் கருத்தைக் கேட்டேன். வழக்கம் போல அனைத்து செய்திக்கும் நன்றி கூறும் நல்லவரான அவர் இச்செய்திக்கும் நன்றி கூறி ஆரம்பித்தார், "இது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. என்ன கருத்துக் கூறுவது என்று நான் குழம்பியிருந்த வேளையில் நான் கூற நினைத்ததை என்னை விடத் தெளிவாக சுந்தரவடிவேல் கூறி விட்டார். நன்றி" என்றார்.

ஏன் வேலைக்கார தேனீக்கள் பெண்களாய் மட்டும் இருக்க வேண்டும்? இது குறித்து அச்சு ஊடகத்திலும் புகுந்து புறப்பட்ட பிரபல வலைப்பதிவரான ராமச்சந்திரன் உஷாவைக் கேட்டோம். "அட அத ஏன் கேக்குறீங்க... என்னைப் பொறுத்தவரை ஒரு சம்பவம் ஒரு முடிவுதாங்க. மேலும் ஒரு சம்பவத்துக்கு ஒரு கேள்வி கேக்கலாமுன்னுதான் மொதல்ல இருந்தேன்" என்று சஸ்பென்ஸோடு அவர் தொடர முயல அவரது விஷயதானத்துக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டேன்.

"தேனீக்கூட்டமே ஒரு விபச்சாரக் கூட்டம்", என்று காட்டமாக ஆரம்பித்தார் இணைய சமூக நீதிக்காவலரான கார்த்திக் (ர)மாஸ். இதற்கு சான்றாக கையிலிருந்த ஸ்கேன் செய்யப்பட்ட வால்மார்ட் டிஷ்யூ பேப்பரைக் காட்டினார். "வேலை செய்ய வேண்டுமாம். அதுவும் பெண்களாம். ஆனால் புணரக் கூட முடியாதாம்; இதிலிருந்தே தெரியவில்லையா இது பிராமணீய அவாள் சூழ்ச்சி", என்று தனது நீதியை நிலை நாட்டினார்.

'பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மெல்ல ஆரம்பித்தார் அருணா ஸ்ரிநிவாசன். ராணித்தேனிதான் மத்த வேலைக்கார தேனீக்களுக்கு எதிரிங்றது வருத்தம் வரவைக்கின்றதென்றும், இது குறித்து அடுத்த மாத திசைகள் பெண்கள் சிறப்பிதழில் வரவிருக்கின்றதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் கொழாயடிச் சண்டையை இன்று தீர்த்துக் கொள்பவர் போல், "இது நல்லாருக்கு:)) நல்ல பதிவு" என்று குழப்(ம்)பினார் செல்வநாயகி.

"தேன்கூட்ட ஒரு குடும்பமால்ல நான் நினைச்சிக்கிட்டுருந்தேன். இப்ப என்ன ஆச்சி?" என்ற துளசி கோபாலை இன்னும் குழப்ப விரும்பாமல் அகன்றேன். தன்னோட எடைக்குச் சமமான எடையுள்ள அளவு தேனை ஒரு தேனீயால தூக்கிக்கிட்டு பறக்க முடியுமாம் என்ற செய்தியை அவர் கோபாலுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்தமுறை இந்தியாவிலிருந்து திரும்பும் போது லக்கேஜ் ஹேண்டில் பண்ண ஊக்காமாய் இருக்குமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

"கூட்டுப்புழுவுலேருந்து புதுசா வெளியில வந்திருக்க சின்ன வேலைக்காரத் தேனீக்கள் மெழுகைச் சுரக்கும். குண்டூசி தலையளவுக்கு. அதையெல்லாம் பெரிய வேலைக்காரத் தேனீக்க சுரண்டிக்கிட்டு வந்து கூடு கட்ட, அறையை அடைக்கன்னு வச்சிக்குமாம். சுரப்பது ஒரு தேனி. அதை சுரண்டுவது இன்னொரு தேனி. இந்த இரண்டு தேனிக்களும் இணையாதா என்று சிறிய வயதிலிருந்து ஆதங்கப்பட்டவன் நான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடந்து வரும் இந்த அநியாயத்தை நிவர்த்தி செய்யத்தான் அய்யாவும், சின்னாய்யாவும் உளமாற உழைக்கின்றார்கள். இன்று இரு தேனீக்களும் இணைந்ததைப் பார்த்து தேன் குடித்த நரியாய் இருக்கின்றேன்" என்றார் குழலி.

"வேலைக்காரத்தேனீக்கள் என்றாலே இளக்காரமாகிவிட்டது. அதனால்தான் எல்லாரும் இளக்காரம் செய்கின்றார்கள்", என்று நொ(கொ)தித்தார் முத்து தமிழினி.

'உழைக்காமல் உண்டு கொழிக்கும் ராணித்தேனி ஒரு பாப்பாத்தி' என்ற அரிய தகவலை நியோ அகழ்வாராய்ந்து தெரிவித்தார். டோண்டுவோ "வேலைக்காரத் தேனீக்கள் இது குறித்து அதிகம் கவலைப்படக்கூடாது. போடா ஜாட்டான் தேனீக்களா", என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தார்.

ஒரு தேனீ போயி புதுசா ஒரு இடத்துல தேன் இருக்கதைக் கண்டுபுடிச்சுட்டு வந்துச்சுன்னா, கூட்டுக்குள்ல வந்து ஆட்டம் போடும் என்ற தகவலைக் கேட்டு நல்லடியார் கொதித்துப் போனார். இந்த மாதிரி பெண் தேனீக்கள் ஆட்டம் போடுவதை வன்மையாகக் கண்டித்து பதிவு போடப்போவதாகக் கூறினார். 'இதென்ன கொடுமை. பெண்தேனீக்களுக்கும் புர்கா போடுகின்றார்கள். இந்து மதம்தான் பெண் தேனீக்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கின்றது' என்ற தனது கருத்துடன் பதிலடி தரப்போவதாய் நேசகுமார் தனது ரகஸிய மறைவிடத்திலிருந்து தெரிவித்தார்.

இதனால் எரிச்சலடைந்த சீமாச்சு, "தேன்கூடுங்றது ஒரு பிரைவேட் பிராபர்டி. அங்க என்ன செய்யணுங்றத தேனீக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.

"தேன் கூட்டுல தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இல்ல வேலைக்கார தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இதையெல்லாம் வுட்டுட்டு தேனைக் குத்தம் சொல்றது என்ன நியாயம்?" என்று ரெண்டு படம், எழுபது சுய பின்னூட்டங்களோடு முகமூடி பதிவெழுதினார். இதனால் ஆவேசப்பட்ட ஆருரான், "ஈழத்தமிழருக்கு தேன் உயிர் போன்றது. தேனையும் அவர்களையும் பிரிக்க முடியாது. ஆனால் தேனெடுப்பதற்காக தீப்பந்தம் ஏந்தி ஞானசம்பந்தத்தை போல் தேன்கூட்டை எரித்தது பிராமணர்களே", என்ற திடுக் ரக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

"நம்மள மாதிரி கடுந்தோலுக்குள்ள தேனி கொட்டினா கொக்கி மாட்டிக்கிட்டு எடுக்க முடியாது. விர்ருன்னு கிளம்பி பறக்குற வேகத்துல கொடுக்கோட சேர்ந்த தேனீயோட கொஞ்சம் உடம்பும் பிஞ்சு போயிடும். அதனால மனுசனைக் கொட்டின தேனீ கொஞ்ச நேரத்துல செத்துப் போயிடும். இது தெரியாம கொட்டுன தேனீயை அடிச்சுக் கொல்ல நினைக்கிற விஷமத்தனத்தைதான் திம்மித்துவம்", என்றார் வஜ்ரா ஷங்கர். அதற்கு ஆமாம் போட்ட கால்கரி சிவா இத்தகைய திம்மித்துவ திமிரை தான் அரேபியாவில்தான் அதிகம் பார்த்ததாகக் கூறினார்.

"பொல்லாத தேனியே போகுமிடம் போய்ச் சேர்ந்தாயே" என்று தேனிக்கலம்பகம் கவிதையை எடுத்து விட்டார் ஜயராமன். "நீங்களாவது ஒரிஜினல் கவிதையைப் போட்டீங்க. ஆனா என் நெலமயப் பாருங்க. என்னோட படம் போட்டு போலிப்பதிவுல உல்டா படப்பாடல்களை போடறாங்களே..." என்று உண்மையாய் வருத்தப்பட்ட சிவஞானம்ஜியை எவ்வாறு தேற்றுவதென்று தெரியவில்லை.

"ஒரு சின்ன தேன்கூட்டுல 50,000 தேனீக்களா? ஒவ்வொரு தேனியும் வெறும் ஸ்மைலியைப் பின்னூட்டமா போட்டாக் கூட பிச்சுக்கிட்டு போகுமே" என்று இலவசக் கொத்தனார் கணக்குப் போட ஆரம்பித்தார். "எழுதினேன் ஆறு வரிக்கதை; கிட்டியது ஐம்பது பின்னூட்டங்கள்" என்று கூவினார் பாபா. கொட்டக் கொட்ட இவரும் ஆனாரோ தேனீ என்றால் எனக்கும் தேன்கூட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார். விட்டால் இதற்கு ஐம்பது சுட்டிகள் தருவாரென்ற பயத்தில் எஸ்கேப் ஆனேன்.

'ராணியும் மத்த தேனீக்கள் மாதிரிதான் முட்டையிலேருந்து வரும். ஆனா புழுக்களைப் பாத்துக்கற வேலைக்காரத் தாதிமார் தேனீக்கள் சில புழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதுக்குன்னு சிறப்பான சாப்பாடு (ராயல் ஜெல்லி) குடுத்து வளப்பாங்களாம். அதுதான் பின்னாடி ராணித்தேனீயா வருமாம்' என்ற செய்தியைக் கேள்விப்பட்ட செந்தழல் ரவி இதையே 'தேனீக்களுக்கு ஒரு கேள்வி' என்ற பதிவாய் 'ஒரு ராணியை மட்டும் ஊட்டி வளர்ப்பது ஏன்' என்று போ(கே)ட்டுவிடலாமா என்று யோசித்தார்.

'ஆண் தேனீக்குக் கொடுக்கு இல்லை. இவங்களுக்குத் தேனும் சேகரிக்கத் தெரியாது. சும்மா சுத்திக்கிட்டு இருப்பாங்க. கூட்டுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துட்டா கத்துவாங்க. அட அவிங்களும் நம்மளப் போலன்னா அவிங்களயும் நம்மளோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல உறுப்பினராக்கி விடமாலா?' என்று கைப்புள்ள சின்னப்புள்ளத்தனமாக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஆண் தேனீக்களோட முக்கிய வேலை ராணியைப் புணருதல். ஆனா ஒரு தரந்தான். அந்தப் புணர்ச்சி முடிஞ்சதுமே ஆண் ஈயோட உறுப்பு ராணியோட உறுப்புல மாட்டி அறுந்து போகும், உறுப்பறுந்த ஆண் தேனீ கொஞ்ச நேரத்துல செத்துரும்", என்றவுடன் நமக்கு குறியறுக்கும் வேலையைக்கூட வைக்கவில்லையே என்று ரோஸாவஸந்த் குலுங்கி குலுங்கி அழுதபடியே கால்பந்தாட்டம் பார்க்க சென்று விட்டார். குமரனோ ஒருபடி மேலே சென்று "புணரவி ஜனனம், புணரவி மரணம்" என்ற பாடலைப் போட்டு ஐநூறு பின்னூட்டங்களை அள்ளிச் சென்றார்.

தேனீக்களைப் பற்றி அனைத்து செய்திகளையும் படித்த தருமி, கண்களில் நீர் கசிய இன்ஸ்டண்ட் பதிவு போட்டு "This dude Worker Bee..." என்று உணர்ச்சி வசப்பட்டார்.

தேன்கூட்டு அரசியலைக் கேட்ட பத்ரி, அதற்கு தேனீக்களே முழுப் பொறுப்பு என்று சுட்டிக் காட்டினார். உதாரணமாக இஸ்ரேல், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, அண்டார்டிகா போன்ற நாடுகளிலிருக்கும் தேன்கூடுகளைச் சுட்டிக் காட்டினார். இலங்கையில் தேன்கூடு பற்றி கருத்து தெரிவிப்பதைக் கவனமாகத் தவிர்த்தார்.

தேன் என்று வலைப்பூ வைத்திருக்கும் சிறில் அலெக்ஸை சந்தித்தேன். கட்டாயமாக எங்குமே, யாருக்குமே தேன் புகட்டப்படுவதில்லை என்று அவர்அடித்துக் கூறினார். நீங்கள் விரும்பினால் தேன் குடிக்கலாம். ஆனால் கட்டாய தேன் மாற்றம் நடந்ததே இல்லை என்றார்.

"தேனீக்களை நினைக்கும்போது எனக்கும் ஏதோ வருத்தமாக இருந்தது. புணர்ச்சியின் திளைப்பை அறிந்திராதவொரு வாழ்வினை அவை எப்படி வாழ்கின்றன? அல்லது புணர்ச்சியும் அதனைச் சார்ந்த விதிகளும், பிணக்குகளும் வேலையைக் கெடுக்கும் என்பதாலா அவர்களுக்கு இந்த முட்டையடிப்பு? பின் அவை எதனால் இன்புறுகின்றன? இந்தக் கடமையாலா? கர்ம யோகமா? யாரைக் காப்பாற்ற அந்த 4-5 வார ஓயா ஓட்டம்? புணர்ச்சியின்பம் உட்பட நிறையோ குறையோ வெளியிலிருந்து பார்க்கும் என் மனதின் கற்பிதங்களோ?" என்று சிந்தித்தபடி போலியார் அடுத்த கதைக்கு கருக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைப்பதாய் சிம்ரன் ஆப்பக்கடை ஏஜென்ஸியின் செய்தி கிட்டியது.

"என்னது ராணியா எங்க எங்க?" என்று முழுதாய் செய்தியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் ஜொள்ளுப்பாண்டி நம்மை துரத்தினார். இவர் சீட்டுக்கட்டு ராணியைக் கூட விட மாட்டார் என்ற எண்ணம் வர ஓட ஆரம்பித்தேன்.

"ஓடினேன்...ஓடினேன்... வாழ்க்கையின் எல்லைவரை ஓடினேன்" என்று ஒருவர் கூட ஓடிவர ஆரம்பித்தார். "அட தேன்கூட்டுலயும் அரசியலா?" என்றவரை பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்து மெல்ல திடுக்கிட்டேன். "அட வாங்க காசி" என்றேன் மூச்சிரைத்தபடி...

(தேன்கூடு அரசியல் பற்றிய வாசகர் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த பதிவில் தொடருவேன் :-)

10 comments:

Anonymous said...

//ஓடினேன்...ஓடினேன்... வாழ்க்கையின் எல்லைவரை ஓடினேன்" என்று ஒருவர் கூட ஓடிவர ஆரம்பித்தார். "அட தேன்கூட்டுலயும் அரசியலா?" என்றவரை பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்து மெல்ல திடுக்கிட்டேன்.//

அட என்னாபா நீ இலவச தமிழ்சேவை பண்றவர போயி

http://nutpamtech.com/5.html

மாயவரத்தான் said...

ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே..!

siva gnanamji(#18100882083107547329) said...

a good satire !

Anonymous said...

Superb. PadTHEN RasiTHEN SuvaiTHEN ThuliTHEN sindhaamal KaliTHEN.

Thenunda Mayakkathil Irundhuvidaatheer you have more things to write about. Keep awake.

Regards
Sa.Thirumalai

ஜொள்ளுப்பாண்டி said...

//"என்னது ராணியா எங்க எங்க?" என்று முழுதாய் செய்தியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் ஜொள்ளுப்பாண்டி நம்மை துரத்தினார். இவர் சீட்டுக்கட்டு ராணியைக் கூட விட மாட்டார் என்ற எண்ணம் வர ஓட ஆரம்பித்தேன்.//

:))))))))))))))))

என்னாதிது குசும்பண்ணா! ஓரமா பேட்டையிலே குந்திகினு இருக்குற என்னயப் போயி வாரு வாருன்னு வாருறீங்களே ஞாயமா ?? :)))

குசும்பன் said...

அனானி,

என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியில...

மாயவரத்தாரே...

ஏங்க என்னோட பதிவு புரியிலயா? இல்லே அனானி கமெண்ட் புரியிலயா?

துளசியக்கா நன்றி வெரி மச்.

வாருங்கள் சிவஞானம்ஜி. நன்றி.

நன்றி திருமலை அவர்களே !!!

ஜொள்ளுப்பாண்டி தம்பி... உங்கள இங்கன வரவழைக்க வேறு வழி தெரீல பாஸு... ;-)

ramachandranusha(உஷா) said...

உஹூம், குணம் மணம் காரம் எல்லாம் கம்மி :-)
ஒரு வேளை பெயர் போட்டு சொன்னதால் இப்படி தோணுதோ:))))))

Boston Bala said...

----குணம் மணம் காரம் எல்லாம் கம்மி ---

I second :-)

கால்கரி சிவா said...

வஜ்ராவை கைபிடித்து வாருங்கள் ஐயா என அழைத்து வந்தேன், நான் ஆமாம் சாமி போடாவிட்டால் திரும்பவும் இஸ்ரேல் ஆர்மி அகடெமி வாசலில் போய் கலர் பிடிக்க நின்றுவிடுவார்.

யோவ் குசும்பு உன்ன மாதிரி ஆள் ஏன்யா தமிழ்மணத்தில் இல்லை? நல்லா வம்பா பொழுது போகுதில்லே

ரவி said...

ஒரு லிங்கோ மெயிலோ தரக்கூடாதா...அருமையான இந்த பதிவை ஒரு விளம்பர பதிவா போட்டிருந்தா நாலுபேர் சிரிச்சிருப்பாங்க இல்லையா ?

வந்து தமிழ்மணத்தில் சேருமைய்யா...இனிமே என்ன ?