Monday, June 28, 2004

அடல்ட் குசும்பு (வயதுக்கு வந்தவர்க்கும், வருபவர்க்கும்)

"வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே" என்ற திரைப்படப் பாடலை ரொம்பப் பேரு கன்னா பின்னான்னு விமர்சனம் பண்ணாங்கோ. அதை இப்போது நினைத்தாலும் நேக்கு சிரிப்புதான் வர்றது. நாம் வளர்ந்த சூழ்நிலையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கோ...

காலைலே கழிப்பறையிலிருந்து ஒருவன் குழப்பமாக வெளியேறுகிறான். உடலில் நிகழும் மாற்றங்களுக்கு தந்தையிடம் கூட விளக்கம் கேட்க முடியாமல் தவித்து, நண்பர்கள் நகைப்பரோ என்று குழம்பி, கடைசியில் மஞ்சள் பத்திரிக்கையில் தப்பான விளக்கம் படித்து, குற்றவுணர்வு குறுகுறுக்க ... வேதனை ... வேதனை.
(எனக்கு கோபமோ, சோகமோ தூய தமிழ் வந்துடும். அட்ஜஸ்ட் செய்துக்கோங்கோ).

கண் மண் தெரியாமல் ஹார்மோன்களின் உந்துதலால் திசை மாறிப் போன இளங்காளைகள் எத்தனை பேர். நமது சமூகத்தில் இவ்விஷயத்தில் பெண்கள் நிலை கொஞ்சம் தேவலாம். அம்மா, பாட்டிகள் மூலமாக சில விஷயங்களுக்கு விளக்கமாவது கிடைக்கிறது. அது அறிவியல் பூர்வமானதா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. அது வேறொரு முறை பார்க்கலாம்.

இதற்கிடையே பல முன்னணி பத்திரிக்கைகளில் (ஜீனியர் விகடன், தராசு, நக்கீரன் ...) பல்வேறு வைத்தியர்களின் (?) முழுபக்க விளம்பரங்கள் இன்னும் இவனை குழப்பியடிக்கின்றன. ஏதோ மஹாத்மா தேசத்தைக் காக்க டூர் போவது போல் இவர்களுக்கு பெரிய புரோக்ராம் வேறு. இவர்களின் விளம்பரங்களைப் பார்த்தால் வயிறெரியும். ஏற்கெனவே குழம்பியவர்களை இன்னும் குழப்பி, மீன் பிடிக்கும் இந்த நவீன மீனவர்களை நடு வீதியில் நிறுத்தி வைத்து காயடிக்க வேண்டும். (ஆமாம் அதை வைத்துதானே காசு பார்க்கிறார்கள்).

ஏதோ மாத்ருபூதம் போன்ற புண்ணியவான்கள் அவ்வப்போது அறிவைத் தெளிவுபடித்துகிறார்கள். அந்த லார்டு லபக்குதாஸின் நிகழ்ச்சி கூட வீட்டில் நிம்மதியாக பார்க்கும் சூழ்நிலை பல இல்லங்களில் இல்லாமல் இருப்பதுதான் நிதர்சனம். (குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கப் போய் காதல் காட்சிகளில் அப்பா தொலைத்த காலணா காசு தேடியதுண்டா? ஹி ஹி. ஐயய்யோ அனாமிகாவிற்கு கமெண்ட் போட ஐடியா கொடுத்துட்டேனே)

இதற்கெல்லாம் ஒரே வழி பாலியல் கல்வியை முறையானபடி கற்பிப்பதுதான். "சொல்லித் தெரிவதில்லை இதெல்லாம்" என்று நடுத்தர வர்க்கம் நாகரிகம் பேசக் கூடும். (மேல் மட்டமும், கீழ் மட்டமும் எப்போதுமே, எதற்குமே விசனப்பட்டதில்லை. பாழும் நடுவர்க்கம் மட்டும் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் சே...)

ஐயன்மீரே! நாமக்கல்தான் இப்போ நம்பர் 1. லாரி போக்குவரத்தில் இல்லை. உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸில்.

இன்னும் எத்தனை நாட்கள் காந்தாரியாகவே கண்களை கட்டியிருக்கப் போகிறீர்கள்? பிள்ளைகள் அனைவரையும் பலி கொடுக்கும் வரையிலா?

No comments: