Friday, June 11, 2004

நெஞ்சு பொறுக்குதிலையே

எந்த நேரத்துல எழுதினேனோ? அடுத்தவரை காயப்படுத்தாமல் எழுதுவேனென்று...ஆடு துப்பிய ஐயனாராய், சைவமாகவே எழுதுவேன் என்று சங்கல்பம் செய்த என்னை "கைமா" கவிதை எழுத வைத்தவரை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதிலையே...(ஒரு வேளை ஐயனாரோட சாபமோ?)


இணையத்திற்கு நான் வந்தது நிறைய எழுத, நிறைய நட்பு சேர்க்க...சாடி எழுதி சங்கடப்படுத்தவோ, பின்னோட்டமாய் குத்தி காயப்படுத்தவோ கண்டிப்பாக இல்லை. இணைய நட்பானது, பள்ளி, கல்லூரிக்குப் பிறகு எனக்கு கிடைக்கும் உண்மையான நட்பு. சந்தர்ப்பவாதத்தாலும், போலி நட்பாலும் அலுவலகத்தில், பிழைக்க வந்த சமூகத்தில் அல்லற் பட்டு, சற்றே நிம்மதியாய் என் காற்றை சுவாசிக்க வந்தால் அதிலும் நச்சுக் கலக்க முயற்சி நடக்கிறது.

நட்பு நாடி வந்தால், முகமூடியுடன் ஏன் நடமாட வேண்டும்? நல்ல கேள்வி. என்னைப் பொறுத்தவரையில் நாமனைவரும் ஒவ்வொரு வகையில் முகமூடிகள் தாம். இணையத்திற்கு முன்னமே, நேரிடையாக அறிமுகமான ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஒரு வகையில் எனக்கு முகமூடிகள்தான். வலைப்பதிவில் தனது நிழற் படம் பதிந்திருந்தாலும்...நம்மை இணையத்தில் இணைப்பது நமது எழுத்துக்கள்தான். முகமே தெரியாதபோது முகமூடி போட்டு எழுதினால் (இங்கு நான் குறிப்பிடுவது சைவ எழுத்தை) என்ன தவறு?

என் எழுத்தை தீர்மானிப்பவர் யார்? பா ரா குறிப்பிடும் ஜெயக்காந்தனே, பெரியார் சொன்னதற்காக எழுதமுடியாது என்று பெரியார் முன்னமே கூறியதாய் நினைவு. பா ரா பற்றி எழுத வேண்டும் என நான் நினைத்தால் அது அவரே விரும்பாவிடினும் எழுதுவேன்.

பா ரா வின் கருத்துக்கள் பிடிக்கவில்லையெனில் சாதாரணமாக விட்டு விடவேண்டியதுதானே என்று பலரும் அபிப்ராயம் சொல்கின்றனர். பா ரா கூறியது சாதாரணமல்ல சதா-ரணம். நான் ஒன்றும் ஆன்மீகவாதியல்ல (உபயம்: ரஜினி ஐய்யா). காந்தி+புத்தன் வேடம் போட்டு பம்மாத்து காட்டமாட்டேன். (நன்றி: பெயரிலி ஐய்யா). நான் ஒரு சாதாரணன். சதா ரணம் கிளப்புகின்றவரைப் பார்த்தால் உச்சந்தலையில் நச்சென்று சப்பாத்தால் மொத்தத்தான் தோன்றுகிறது. அதை விடுத்து மோதிரக் கையால் (பா ரா'வால்) குட்டுப்பட்டேன்னு பெருமையா எடுத்துக்கறவா எடுத்துக்கோங்க. அது அவா அவா தனிப்பட்ட விருப்பம். இதற்கு கட்டளைகள் ஏதும் கிடையாது.

சாதிகள் இல்லையடி பா(ரா)ப்பா. எழுதுவதை தொழிலாய் நினைப்பவர், "எழுத்தாளர்" சாதி கண்டீரல்லவா? இணையநாயகத்துள் (ஜனநாயகத்திற்கு இணையம் போட்டால்) எல்லோரும் ஒரே சாதியே...ஆம் நாமெல்லாம் எழுத்தாளர்களே...யார் விரும்பினாலும் பா ரா விரும்பாவிட்டாலும்...

வாழ்க இணையநாயகம் !!!

No comments: