Tuesday, June 29, 2004

நெஞ்சுக்கு நீதி

திரு ராஜா மற்றும் முகுந்த் அவர்களுக்கு,

உங்களின் பின்னூட்டம் மற்றும் பதிவு படித்தேன். (முகுந்தின் பதிவு இன்னும் இருக்குமெனெ நம்புகின்றேன். ராஜா நீக்கி விடச் சொன்னாலும்).

நான் சொல்ல வந்தது "பாலியல் கல்வி"யின் முக்கியத்துவத்தை. இளைஞர்களின் பாலியல் அறியாமையை. நாமக்கல் மாவட்டத்தை துவேஷிக்கும்/தூற்றும் எண்ணத்தில் அல்ல. பாம்பே, கல்கத்தா போல் நாமக்கல்லில் சிவப்பு விளக்கு பகுதிகள் தடுக்கி விழுந்தால் இருப்பதாய்க் கூறவில்லை. நாமக்கல்லில் பத்தில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பதாய் புருடா விடவில்லை.

ராஜா, நீங்கள் முகுந்த் எழுதிய பதிவில், பின்னூட்டமாய் பின்னியிருக்கிறீர்கள். எனது பதிவைப் படிப்பவர்கள் குறைவென்று. தாங்கள் எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போலவே எனது கருத்துக்களை உள்வாங்காமல் போய் இருக்கலாமே? மேலும் தவறெனச் சுட்டிக் காட்டினால் மன்னிப்புக் கோரி சரி செய்து கொள்கிறேன். அதை விடுத்து முகுந்த் எழுதிய பதிப்பை ஏன் நீக்கக் கோருகிறீர்?

நாமக்கல் நம்பர் 1 என்று நான் மகிழ்வுடனா குறிப்பிட்டேன்? இதன்ன கின்னஸ் சாதனையா? நாமக்கல்லை அவதூறு செய்தேனா? வயிறெரிந்து சொன்னேன். சிறிதே பின்புலத்தைப் பார்க்கலாம்.

போன வருடம் HBO (Home Box Office) நிறுவனத்தின் "HBO Documentaries: Pandemic: Facts About AIDS" என்ற விவரணப் படத்தில் மொத்தம் 5 பகுதிகள் பார்த்தேன். அவற்றுள் ஒரு பகுதிதான் நாமக்கல் மாவட்டம். அதிசயமாக HBO'ல் தமிழ் கேட்கிறதே என ஆவலுடன் நிமிர்ந்தால் பேரிடியாக விவரங்கள் வந்து விழுந்தன.

படம் விவரம் காண இங்கே சுட்டுங்கள்

இந்தியப் பகுதியைக் காண இங்கே சுட்டுங்கள்

(என்னடா HBO சுட்டிகளில் ஒரே ஒரு ஜோடியைத்தான் காட்டுகிறார்களே என்று அவசரப்பட்டு பாயாதீர்கள். நாமக்கல் நாகராஜைச் சுற்றி கதை நகரும்படி படம் பிடித்துள்ளார்கள். ஆனால் படத்தில் சொன்ன புள்ளிவிவரங்களை இங்கே தொகுக்கவில்லை.)

படம் பார்த்தபின் வருத்தப்பட்டு மேலும் விவரம் தேடுகையில் WHO 2002 அறிக்கையைப் பார்க்க நேரிட்டது. அதில் நாமக்கல் பளிச்சென்று இடம் பிடித்து இருந்தது. 1998'ல் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட கருவுற்ற (antenatal) பெண்களின் சதவீதம் நாமக்கல்லில் 3.3. மணிப்பூரிலுள்ள சுராசந்த்பூர் 5.3 சதவீதத்துடன் முன்னணியில் இருந்தது. 1999'ல் இது நாமக்கல்லில் 6.5% ஆக உயர்ந்தது. சுராசந்த்பூரோ வெறும் 5.5% தான் (0.2% உயர்வு ஒரு வருடத்தில்). நாமக்கல் முன்னுக்கு வந்தது.

பார்க்க சுட்டி (பக்கம் 16 சுராசந்த்பூர் மற்றும் நாமக்கல்). (PDF வலையில் படிக்க முடியாவிடில் (கணிணியால்) சொல்லுங்கள். தனியஞ்சலில் அனுப்புகின்றேன்.)

இதே செய்தியை மேலும் ஒரு வளைத்தளம் உறுதி செய்கிறது.

WHO'வின் அறிக்கையை நான் நம்பக் கூடாதா? தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை நம்பக் கூடாதா? சன் டிவிக்கும் நாமக்கல்லுக்கும் வேண்டுமானால் பங்காளிச் சண்டை இருக்கலாம் (?). HBO'வைக் கூடச் சொல்லலாம். சில சமயம் ஒருதலைப் பட்சமாக நடக்குமென்று. ஆனால் இவ்விஷயத்தில் ஏன்? அவர்களும் நாமக்கல்லை அவதூறு செய்கிறார்களா? WHO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பொய் சொல்கின்றனவா? உண்மைத் தகவல் எங்கே கிட்டும்? சொல்லுங்களேன்.

கடைசியாக June 05, 2004 7:59:26 PM IST வெளியான வெப் இந்தியா வலைப்பதிவு 1,00,000 பேர் நாமக்கல்லில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளாக கூறுகிறது. இதுவும் பொய்யா?

இத்தனைக்கும் பிறகுதான், நான் ஒரு தமிழன் (அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தவன்) என்ற காரணத்தால் தலை குனிந்து என் எண்ணங்களைப் பதிந்தேன். பாலியல் கல்வியை வலியுறுத்தும் பொருட்டு நாமக்கல் உதாரணம் காட்டினேன். உங்களைப் போலவே தனிமனித விமர்சனம் செய்ய எனக்கும் தெரியும். தரம் தாழ நான் விரும்பவில்லை. நீங்கள் கூறியிருக்கிறீர்கள் ஒரே ஒரு நோயாளியாயைக் கூட பார்க்கவில்லை யென்று. உங்கள் நண்பரோ நாமக்கல்லில் நிறைய எய்ட்ஸ் நோயாளிகளைப் பார்த்ததாகவும், இப்போது விழிப்புணர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார். ஈஸ்வரனுக்கே வெளிச்சம் யார் உண்மை சொல்கிறாரென்று. ஒருவேளை நீங்கள் மட்டுமே நாமக்கல் என்று நினைக்கின்றீர்களா? அல்லது வசிப்பது வேறு நாமக்கல்லிலா? இல்லை காந்தாரிக் கண்ணனாய் வாழ்கிறீரா?

மகாராஷ்டிராவில்தான் எய்ட்ஸ் அதிகமெனப் படித்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் நாமக்கல்லுக்கு பதில் மகாராஷ்டிரா போட்டிருந்தால் குதியாட்டம் போட்டிருப்பீரா? பாலியல் கல்வி தேவையில்லை என்பீரா? நீங்கள் இந்தியரில்லையா? மகாராஷ்டிரம் மீது அக்கறை இல்லையா?

Clown Fish கேள்விப்பட்டிருக்கிறீரா? பெயரில்தான் அது கோமாளி. மற்றபடி அதுவும் மீன்தான். குசும்பனும் பெயரில்தான் கோமாளி. மற்றபடி நானும் .....

அய்யா...புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்னும் கேனக் கட்டுரை இல்லை அது. ஒரு நிமிடம் நீங்கள் நாமக்கல்லார் என்பதை மறந்து ஒரு நடுநிலையாளராய்ப் பதிவைப் படித்துப் பாருங்கள்.

இந்த முயற்சிக்குப் பிறகும் நீங்கள் சமாதானமாகா விட்டால், நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன். ஏனெனில் நான் குறி வைத்தது பாலியல் கல்வி மீது கவலை இல்லாத சமூகத்தின் மீது...நாமக்கல் வாழ் மக்களை நோக்கி அல்ல...

3 comments:

ராஜா said...

குசும்பன் நான் இரண்டு விசயங்களை மறுக்கிறேன்.

1.
நீங்கள் துவேஷிக்கிறீர்கள், தூற்றுகிறீர்கள் என்று தனி மனித தாக்குதலில் நான் இறங்கவில்லை. அதாவது உங்கள் ஒருவரை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நான் அதை சொல்லவில்லை. பொதுவாகவே இங்கே வீதிக்கு வீதி எயிட்ஸ் நோயாளி இருப்பது போலவும், இங்கே வந்தாலே எயிட்ஸ் வந்துவிடும் என்பது போலவும் ஒரு இளக்கார பார்வை இருக்கிறது. பல ஊர்களுக்கும் பயணப்பட்டவன் என்கிற முறையில் என் ஊர் பெயரை சொன்னதும் சிலர் "ஓ சன் டி.வி.ல கூட காட்டினாங்களே.. உங்க ஊரில் கூட எயிட்ஸ் அதிகமாமே" என்று கேட்கும் போது, நான் கூனி குறுகி போயிருக்கிறேன். காரணம் அப்படிப்பட்ட அனுபவம், அதாவது இங்கே எயிட்ஸ் நோயாளிகள் மலிந்துள்ளது என்று பேசபடுவது போல யாரையும் சந்தித்த அனுபவம் எனக்கு கிட்டியதில்லை. இதை நான் மிக நேர்மையுடன் கூறுகிறேன். ஒருவேளை மருத்துவம் சம்மந்தப்பட்ட தொழிலில் இருந்திருந்தால், அப்படிப்பட்ட நோயாளிகளை பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு, அதாவது இந்திய அளவில் புள்ளி விவரங்கள் தெரிவிப்பது போல எல்லாம் நிலமை துளியுமில்லை.

2.
உங்கள் வலைப்பதிவை படிப்பவர்கள் குறைவு என்ற அர்த்தத்திலும் நான் சொல்லவில்லை. அப்படி உங்களை தாழ்த்தி சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன?. இங்கே யாருக்கும் யாரும் போட்டியில்லை. நம் எண்ணங்களை நாம் பதிக்கிறோம். யார் யாரோ வருகிறார்கள் போகிறார்கள். எல்லோரும் பின்னூட்டங்கள் இடுவதில்லை. அதனால் மட்டுமே பதிவுகளின் தரம் தாழ்ந்துவிடாது. நான் எந்த வலைப்பதிவையும் தாழ்வாக நினைப்பவனில்லை. ஆனால் நான் எந்த சூழ்நிலையில் அப்படி சொல்ல நேர்ந்தது என்றால் - "அங்கே நேரடியா போய் படிப்பவர்கள் படிக்கட்டும். இங்கே வருபவர்களையும் அங்கே திருப்பிவிட வேண்டுமா?. மறுப்புக்கு ஒரு பதிவு தேவைதானா?" என்று கேட்டேன். குசும்பன் என்பவர் வலைப்பதிவுக்கு யாரும் போகக் கூடாது என்பது என் எண்ணமில்லை. உங்கள் வலைப்பதிவைப் பற்றி வலைப்பூவில் சிலாகித்து எழுதியவனே நான் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் குசும்புகளை நான் ரசித்து படித்து வருபவன்.

முகுந்த் எழுதிய பதிவை நான் நீக்க கோருவது எங்களுக்குள்ள பரஸ்பர நட்பின் உரிமையில். இது சம்மந்தமாக எந்த பதிவும் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தால் நான் முதலில் உங்கள் பதிவைத்தான் நீக்க கோரியிருக்க வேண்டும்.

குசும்பன், இப்படி நாம் ஒருவருக்கு ஒருவர் விளக்கம் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததற்க்கு வருந்துகிறேன். ஆனால் என் மண்ணைப் பற்றிய இழி சொற்களை [இங்கே உங்களை குறிப்பிடுவதாக மீண்டும் தப்பர்த்தம் செய்து கொள்ளாதீர்கள்], அது புள்ளி விவரங்களின் அடிப்படையில் உண்மையாகவே இருந்தாலும், மனம் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு இயல்பான கோபம் பிறந்து விடுகிறது. பிறந்த மண்ணின் மீது நேசம் கொண்ட எவருக்கும் இது புரியும். உங்களாலும் என் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

நான் இவ்வளவு தூரம் விளக்கம் எழுதியதற்க்கு காரணமே, நீங்கள் நாமக்கல்லை தாழ்த்தி சொல்ல அந்த பதிவை எழுதவில்லை என்பதையும்,உங்கள் பதிவிலுள்ள நேர்மையையும், நான் ஒப்புக் கொள்வதால் தான்.

Hugs to you my friend :-)

//Clown Fish கேள்விப்பட்டிருக்கிறீரா? பெயரில்தான் அது கோமாளி. மற்றபடி அதுவும் மீன்தான். குசும்பனும் பெயரில்தான் கோமாளி. மற்றபடி நானும் .....//
ஆமா எது என்ன கடைசில ஏதோ மிரட்டுறீங்க?
அடிக்க போறீங்களா? . அட்ரஸ் வேணுமா? :-)).

Gyanadevan said...

ஊர் பிரச்சினை இல்லை அது, பாலியல் கல்வி பிரச்சினை தான்னு படிச்சாலே புரியுது, இதுலே எப்படி நீங்க ரெண்டு பேரும் தப்பா புரிஞ்சிகிட்டீங்களோ? இனிமே கவனமா இருக்கணும். எனக்கும் நாமக்கல்லுக்கும் 50 கிமீ தான் வித்தியாசம். நாமக்கல்காரங்க விழிப்பா இருக்கிறது பெருமைபட வேண்டிய விஷயம். எப்படியோ... ரெண்டு பேரும் சமாதானம் ஆயிட்டீங்களா... இப்படி தான் சமத்து பிள்ளைகளா இருக்கணும். உங்களுக்கு ஒரு வெரி குட்.

குசும்பன் said...

ராஜா,

மண்ணின் மைந்தரே!!! உமது மண்ணின் நேசம் புரிந்து கொண்டேன். உமது நேசம் வாழ்க!!!

அட்ரஸ் எதற்காக தோழரே? சொல்லாமல் விட்டது...

//பெயரில்தால் தான் குசும்பன். நானும்...நேர்மையான வலைப்பதிவாளன்தான். ராஜாவைப் போல். ஞானதேவனைப் போல். முகுந்தைப் போல். இன்னும் சக வலைப்பதிவாளர்களைப் போல.

அடடே...செண்டிமெண்ட் ஆ(க்)கிவிட்டீர்களே! நேக்கு நாழியாச்சு. குசும்பு பண்ண. ஆத்துல கேட்டதா சொல்லுங்கோ. அப்புறமா "ற" கரத்திற்கு அடுத்து மெய்யெழுத்து வராது. நேர்ந்த்தற்க்கு இல்லை நேர்ந்ததற்கு என்பதே சரி. எதோ என்னால் முடிந்த தமிழ் குசும்பு...

தோழமைத் தொடருவோம்...

அன்புடன்,
குசும்பன்.