Tuesday, July 19, 2005

டில்லி, பாம்பே, கல்கத்தா

இது நிற்காது.

எல்லா கொசுக்களுக்கும் ஊற்றுக்கண் நகராட்சிகள் தன் ஏரியாவிலும் மற்ற ஏரியாக்களிலும் அடிக்கும் கொசுமருந்தே காரணவென்பது என் சமீபத்திய கண்டுபிடிப்பு. அப்படிப் பார்க்கும்போது பல நூறு வருடங்களாக நகராட்சி/பேரூராட்சி/ஊராட்சி பதவிகளில் இருந்தவர்கள் தன் ஏரியாவிலும் மற்ற ஏரியாக்களிலும் கொசுக்கள் மீது எண்ணற்ற அட்டூழியங்களை கட்டவிழ்த்துள்ளனர். உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் கொசுப்பிரச்சினைகளுக்கான காரணம் மேற்கூறியவாறு அவற்றுக்கு போஷாக்களிக்கும் மருந்து. மீதிக்கு அம்(ரு)மருந்து அடிப்பவர். இக்காரணங்களையே சமீபத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணிகளாகக் கூறலாம்.

கொசுவழிப்பு தொழில்நுட்பம் பரவப்பரவ (கொசுமருந்து, கிரீம், காயில், வில்லை etc.,) பாதிக்கப்பட்டவர்கள் - மக்களோ, மாக்களோ (OTL உபயமண்ணா...) - தாங்களும் கொசுக்களை போட்டுத் தாக்க முடியும் என்று காண்பித்து வருகின்றனர். டில்லி, பாம்பே, கல்கத்தா - நகரங்களை முழுமையாக ஆக்ரமிப்பு செய்ய முடியும் என்று கொசுக்கள் காண்பித்துள்ளது. கொசுக்களையும் மிஞ்சும் பயங்கரப் பிராணிகள்(?) நாளை தோன்றும்.

இன்று கொசு கடித்த கோபத்தில், வீங்கிய முகத்துடன் பேசும் டில்லிவாசி ஒருவர் தமது நகராட்சியுடன் உதவிகளை மீறித் தாம் எத்தனை கொசுக்களை அடித்துக் கொன்றோம் என்பதை இன்று தூங்கப் போகும்போது நினைத்துப் பார்ப்பாரா? பூட்டாசிங்கை விட புத்திசாலியானவரான டில்லிவாசி, இதை யோசித்துப் பார்ப்பது நல்லது.

தனது சுய-நலத்தை நிலைநாட்ட பிற கொசுவினங்களை அடியோடு அழித்துக் கொல்வது பாவமல்ல என்கின்ற policy of exigency என்னும் சர்வைவலிஸத்தை முன்னிறுத்திய கொஸ்(சு)ஸிங்கர், ரெமோ-அந்நியன்கள் ஆகியோரே உலகில் கொசுவாதம் அழியக் காரணமானவர்கள்.

டில்லிக் கொசுக்களைக் கழுவேற்ற, கும்பகோணம் கொசுக்களை குஷிப்படுத்துவது, அதனால் கும்பகோணம் கொசுக்கள் லோக்கலில் செய்யும் அட்டகாசத்தை கண்டிக்காமல் விட்டது, சென்னைக் கூவத்தை கொசுக்களின் கூடாரமாக மாற்றியது, நதித்துவாரங்களையெல்லாம் நாகரிகத்தின் வாயில் என்பதைவிட கொசுக்களின் வாயி'லாய் நாசமாக்கிக் கொண்டிருப்பது, கோயம்புத்தூரில் கொசுக்கள், அயோத்தியாவில் கொசுக்கள், காஷ்மீரில் கொசுக்கள் என்று கொசுக்களை வளர்த்து விடாத ஆக்களே கிடையாது. (நாமொன்றும் பரிஷ¤த்தமில்லை. உள்ளூரிலேயே வட்டதுக்கு வட்டம் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடும் கொசுக்கள் ஏராளம். அதைவிட அடுத்த ஊருக்குள் ஏவிவிட்டும் அல்லது ஏற்றுமதி செய்து குசும்பு செய்வதும் நிச்சயமாக குத்துமதிப்புடன் இருக்கும்)

இன்றளவிலும் கொசுக்களால் பல சாவுகள். இறந்தவரென்ன இன்னா செய்யாதவரா? மலேரியா போன்ற வியாதிகளைத் தடுக்காத, அநியாயமான கொசுப்போரை தடுக்காத குற்றம், ரோட்டோரத்தில் உச்சா (மூச்சா?) போகும் வயதிலுள்ள அத்தனை பேர்களும் உண்டு. இது எல்லோருக்கும் பொருந்தும். நம்மூரில் ஒவ்வொரு முறையும் ஒரு கொசு முட்டை பொறியும்போது அதற்கு நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் (நிலம் ஆறு வகைப்படுவன; அ·தாவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மற்றும் அல்-கொசு'தா) காரணம். அதைப்போலவேதான் ஒவ்வொரு சென்னைவாசியும் கூவத்திற்கு காரணம். ஒவ்வொரு நாட்டுக்காரனும் இன்றைய கொசுத்தாக்குதலுக்குக் காரணம்.

பினா.கூனா. இன்னைக்கு கொசுத்தொல்லை தாங்க முடிலைண்ணா... கரும்பு ஜீஸ் கிளாஸ் மேல மொய்க்கிற ஈக்களைப் போல எம்மேல கொசுக்கள். அதுனால போ(பொ)த்திண்டு தூங்கப்போறேண்ணா. இல்லாங்காட்டி இன்னும் நீட்டி முழக்கி 'பாம்பைப் பாத்தாலும், கொசுவைப் பாத்தாலும், பாம்பை விடு. கொசுவை அடி' அப்பிடின்னு ஏகப்' பட்டதுக்கு பினாத்தலாம்னு இருந்தேன். வர்ணம் பூசாம சொல்லிட்டேங்ணா. '''குசும்பு பிரம்மாதம்''' (யோவ் பெயிண்டு விளம்பரத்த சொல்றேன்யா!)

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.