Friday, September 16, 2005

இலக்கியம் For Dummies

இலக்கியம் என்றால் பலருக்கு ஒவ்வாமையாக இருக்கின்றது. இதோ எதற்கெல்லாமோ கையேடு போட்டுக்களித்தவர்கள் அதிமுக்கியமான இத்தலைப்பை மட்டும் விட்டுச் சென்றனர். இதோ இலக்கியம் For Dummies:

1. இலக்கியம் எத்தனை வகைப்படும்?

இலக்கியம் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என்று இரு வகைப்படும். சிற்றிலக்கியம் என்றால் புரியாமல் புரியும்படியும், பேரிலக்கியம் என்றால் புரிந்தும் புரியாமலும் இருக்கும். சுருங்கச் சொல்லின் சிற்றிலக்கியம் சிற்றிதழ்களிலும், பேரிலக்கியம் வெகுசன விரும்பும் ஊடகங்களிலும் தென்படும்.

2. இலக்கியம் படைப்பது எப்படி?

அதி முக்கியமான கேள்வி. முதலில் தனக்குப் பிடித்த அல்லது பிடிக்காத தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிடிக்காத இலக்கியவாதிதான் உங்கள் தேர்வு என்றால் உங்களுக்கு இலக்கியம் வசப்பட்டு விட்டதென்று அர்த்தம். பின்னர் ஏன் பிடிக்கவில்லை என்று குத்துமதிப்பாக 20 உப-தலைப்புகளைப் பட்டியலிடுங்கள். அந்த 20 உப-தலைப்புகளில் உங்களுக்கு தோதானபடி மற்ற யார் யாரெல்லாம் அதே இலக்கியவாதியைத் திட்டியிருக்கின்றார்கள் என்பதை சப்பைக் கட்டாக இட்டு நிரப்ப வேண்டும்.

3. இலக்கியத்தில் புள்ளி விவரங்களின் பங்கு என்ன?

புள்ளி விவரம் இல்லையென்றால் அது தரமான இலக்கியமே இல்லை. அக்பர் பீர்பாலிடம் தனது சாம்ராஜ்யத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றதென்று வினவ பதிலாய் ஒரு எண்ணிக்கையைச் சொன்னார் பீர்பால். இதில்தான் இலக்கியமே அடங்கியிருக்கின்றது. காகங்களை கணக்கெடுத்து பீர்பாலின் எண்ணிக்கை தவறென்று அக்பர் சொன்னாலும், காகங்கள் பறந்து போயின; இன்றேல் புதிய காகங்கள் பறந்து வந்தன என்று சால்ஜாப்பு ஜல்லியடிக்கத் தெரிந்து இருத்தலே சிறந்த இலக்கியவாதியின் பண்பு. குறிப்பாக காலவோட்டம் (Chronology of Events) இலக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. எடுத்துக்காட்டாக "பாசு சபையைச் சேர்ந்த பாஸ்டன் பாம்பிரிட்ஜ், போஸ்ரனில் 1970'களில் காலாபாணி என்ற அமைப்பை நிறுவி வெகுஜன ஊடகத்தை தமது நூல்களில் விமர்சித்தார்... 1980'களில் புதுப் பாய்ச்சல் 1990'ல் பிளா பிளா பிளா (உபயம்: பாரா) 2000'ல் etc. etc. etc. (உபயம்: அகர தூரிகை)." ஆங்கில நூல்களில் கடைசியில் பொதுவாக காலவோட்டதைப் பற்றி சிறுகுறிப்புக் காணப்படும். ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதுதான் முக்கிய இழை.

4. இலக்கியத்தில் தமிழ்ப் பதங்களின் பயன்பாடு யாவை?

அப்பிடிக் கேளுங்க. சொல்லுதேன். பாவிப்பய. பட்டுக் கிடப்பென். மூதி. என்ற பதிவைக் காணோம்ங்க. இது போன்ற வழக்குச் சொற்கள்/சொற்றொடர்கள் யாவும் பேரிலியக்கியத்தில் காணப்படும். தப்பித் தவறி கூட இவை சிற்றிலக்கியத்தில் தோன்றலாகாது. கட்டுடைத்தல், நிறுவனமயமாக்கல், சர்சித்தல், தர்கம், இட வல சாரியம், ஒற்றைப் பரிமாணம், தாழ்வு மனப்பிறழ்வு, பிளவாளுமை, நுகர்வு, நகை முரண் போன்ற சொல்/சொற்றொடர்களை தாராளமாய் அள்ளித் தெளிக்க வேண்டும். உ.ம். FEMA'வின் மைக் பிரௌன் கேட்ரீனாவின் தாக்கத்தை முழுமையாக உணரவில்லை. இதனால் ஏகப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகள் அழிந்தன. இது பேரிலக்கிய வகை. வலதுசாரி வன்முறையில் ஊறித் திளைத்து, பணம் படைத்தவரையே பாதுகாக்கும் ஒற்றைப் பரிமாணம் கொண்ட பிரௌன் போன்றோரின் உயர்வு மனப்பிறழ்வு காரணமாய் கேட்ரீனாவின் தாக்கம் பல்மடங்கு பெருகி சாதரண நுகர்வோருக்கு கடும் சிரமம் கொடுத்தது. இது சிற்றிலக்கியம்.

5. மேற்கோள்கள்?

மேற்கோள்கள் இல்லாமல் இலக்கியமேயில்லை. தமிழிலே ஆயிரமாயிரம் படைப்புகள் இருப்பினும் பாரதியின் 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' என்ற ஆணையை சிரமேற்கொண்டு (இதுவே மேற்கோள்தான்) ஹெமிங்வே, உருகுவே, பராகுவே என்று 'left right & center' அள்ளித் தூவ வேண்டும். மேலும் வாயில் நுழைய மறுக்கும் பெயர்கள் தேவையெனில் கூகிள் தேடுபொறியின் உதவியை நாடலாம்.

பி.கு. இன்னும் உமது சந்தேகங்களை எமக்குத் தெரியப்படுத்தவும். கேள்வி-பதில்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு விக்கும்பீடியாவில் விரைவில் வெளியாகும்.

11 comments:

Ramesh said...

:) சூப்பருங்க!

கூடவே சிற்றிலக்கியத்தில் வரும் 'ஆத்ம அதிர்வுகளினுடைய வெளிப் பிரமாணங்களின் உள் நுழைவுகளால்' போன்ற சொற்றொடர்களையும் விளக்குங்களேன். பின்னால வரும் சந்ததிகள் பார்த்துப் படிச்சு தெளிவா நடந்த்துக்குவாங்க.

Suresh said...

அடுத்தவரின் கருத்துச்சுதந்திரத்தை மதிக்காமல், அவரவரது சுய கருத்துக்களிலிருந்து வேறுபடுவரை கன்னா பின்னாவென்று கெட்ட வார்த்தைகளால் வசை பாடுவது இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் ஒரு அடையாளமா?... இதையும் இதற்கான பதிலையும் தயவு செய்து உங்கள் FAQ- வில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வானம்பாடி said...

:)))
'சிற்றிலக்கியம் simplified' என்று மீண்டுமொரு பேரிலக்கியம் படைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Ramya Nageswaran said...

:-) நல்ல விளக்கம்!!

Jayakumar said...

அக்மார்க் ஒரிஜினல் முத்திரையுடன் நீங்க நடத்தும் நையாண்டி தர்பார் அட்டகாசம்..

சின்னவன் said...

ஏதோ உம்ம புண்ணியத்துல நானும் கொஞ்சம் இலக்கியம் கத்துக்கிட்டேங்க.
ரொம்ப நன்னி !

rajkumar said...

நச்

அன்புடன்

ராஜ்குமார்

குசும்பன் said...

எமது பதிவிற்கு முதன்முறையாக பின்னூட்டம் இட்டு கௌரவப்படுத்திய ரமேஷ், சுரேஷ் செல்வா, ரம்யா நாகேஷ்வரன், ஜேகே மற்றும் ஈஷ்வருக்கு நன்றிகள்.

சுதர்ஷன்: 'சிற்றிலக்கியம் simplified' அருமையான ஐடியா! சீக்கிரம் குசும்பிடலாம் :-)

சின்னவன்: நீரு பொல்லாத ஆளய்யா :-) உம்ம ஷ்டைலு கதி கலங்க வைக்குது.

கவிக்குமார்: ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை (லிங்க் உபிச கொடுப்பார்) பாடலைக் கேட்கவும்.

குசும்பன் said...

பாபா,

எப்டி இருக்கேள்? ஷ்மைலி போடறதுக்கு கொப்பிரைட் வாங்கிவிட்டீர்களா? அப்புறம் உபிச என்ன ஷொல்றார்? மொடர்ன் பொண்ணையும் கேட்டதா ஷொல்லவும். எம்பாட்டுக்கு எசப்பாட்டு இன்னும் படிக்கலியே ஏன்ன்ன்ன்? ;-)

Anonymous said...

. உ.ம். FEMA'வின் மைக் பிரௌன் கேட்ரீனாவின் தாக்கத்தை முழுமையாக உணரவில்லை. இதனால் ஏகப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகள் அழிந்தன. இது பேரிலக்கிய வகை. வலதுசாரி வன்முறையில் ஊறித் திளைத்து, பணம் படைத்தவரையே பாதுகாக்கும் ஒற்றைப் பரிமாணம் கொண்ட பிரௌன் போன்றோரின் உயர்வு மனப்பிறழ்வு காரணமாய் கேட்ரீனாவின் தாக்கம் பல்மடங்கு பெருகி சாதரண நுகர்வோருக்கு கடும் சிரமம் கொடுத்தது. இது சிற்றிலக்கியம்.


மிகவும் ரசித்தது. suuppar

Anonymous said...

இலக்கியம் படைப்பது எப்படி?

மற்றுமொரு படைப்பு முறை. ஒரு தலைப்பில் வரும் பின்னூட்டங்களை
அமைதியாக படித்து வாருங்கள். எல்லாத்தையும் ஒன்று திருடி, சாரி திரட்டி,
கொஞ்சம் ஷ பாலிஷ், நக பாலிஷ் போட்டு வேறு ஒரு பத்திரிகையிலோ அல்லது
தனிப் பதிவோ இடலாம்.மறந்து விடாமல் இடையில் புள்ளி விவரங்கள் சேர்க்கவும்.