Thursday, June 23, 2005

மப்பு அகலக் காணலே மாட்சி

முத(ல்)லே சொல்லிவிடுகிறேன்; குடி'மக்களை நியாயப்படுத்துவது அல்ல என் நோக்கம். ஆனால் உலக நிகழ்வுகளை உன்னித்துக் கவனித்து வருவோமானால், பெரும்பாலும் குடிகாட்டும்_ஊடகங்கள் (இங்கே கண்ணும் கருத்தும் தெளிவில்லாது மப்பில் இருப்போர் குடிக்கட்டும்_ஊடகங்கள் என்று வாசிப்பார்கள்) உயர்குடி-தாழ்குடி பிளவுகளைப் பெரிதுபடுத்திக்காட்டுவதிலேயும் ஹார்டு டிரிங்க்-ஸொப்டு டிரிங்க் (ரம்-பெப்ஸி_ஒரு-பகுதி) ஆகிய கூட்டினை எள்ளி நகையாடுவதிலேயே கண்ணாக இருக்கின்றது; (கவனிக்க: இருக்கின்றார்கள் இல்லை)

ஆக, இத்தால் அறியப்படவேண்டியது என்னவென்றால், உலகில் உள்ள குடிப்பிரச்சனை அத்தனையும் "இடை_குடி".எதிர்."தாழ்_குடி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே. உலகின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூலகாரணம், குடிதான் என்று ஒடுக்கிச் சுருக்குவது எவ்வளவுக்கு மடத்தனமும் நேர்மையற்ற செயலுமோ அதைப்போலவே "குடிமக்களின் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிவேர் குடியே" என்பதும்; ஆனால், குடி என்பது நிச்சயமாக பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அத்தோடு, குடி எனும்போது, இடைநிலைக்குடி, தாழ்நிலைக்குடி என்ற வகைப்படுத்தலோடு மேல்நிலைக்குடி என்பதும் உள்ளடங்கியிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

குடிகாட்டும் ஊடகம், ஊடகவியலாளர் என்று ஏன் கூறுகின்றேனென்றால், தமிழ்உடையாரான ராமசாமி உடையார் போன்றோரும் அவருடைய குட்டி' உடையார்களும் மிக இலகுவாக குடிபானம்-தயாரிப்பாளர் அல்லாதவராக உருக்காட்டப்பட்டுத் தப்பிவிடலாம்; கிட்டத்தட்ட மல்லையா இந்நூற்றாண்டின் இப்பகுதியிலே செய்ததும் இதுவே; வேண்டுமானால், மோஹன் புரூவர்ஸ்சையுங்கூட இந்தப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளலாம். இப்பட்டியலிலே, உடையாரையும், மல்லையாவையும் விட்டு விடுவோம்; பணமிகுதியானவர்கள், தாம் பீட்டர் ஸ்காட் விஸ்கியினைக் குடிப்பது நாம் அறிந்ததே - தம் 'பல' இருப்பினை (எததனை பெக் அடிப்பதென்ற) தக்க வைக்கச்- செய்தார்களா, அல்லது, இவர்கள் ஏற்கனவே சரக்கு விட்டு ஆடிகொண்டிருந்த நிலைநில்லாப்பாட்டினாலே (விஜய் மல்லையாவின் ஆய்வுரீதியான கிங்பிஷரை முன்னிறுத்திய போக்கு; ஜான்னி வாக்கரின் விஸ்கி'யிசத்தை முன்னிறுத்திய போக்கு; ஓல்டுகாஸ்க்கின் ரம்சுவைத்தலின் பாற்பட்ட கோக்கோடு முன்னிறுத்திய போக்கு) குடிச் சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை (நானிப்போ அடிச்சது நச்சின்னு நாட்டுச் சரக்குங்கோய்!). ஆனால், இவர்களையும் இவர்களின் பொருட்களையும் ஹார்டு டிரிங்க்/ஸொப்டு டிரிங்க் கலந்து/முழுமைதோய்ந்தக்கூட்டுக்குடிக்கெதிரான நிலைப்பாடுள்ளோர்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; இன்னும் பயன்படுத்துகின்றார்கள்.

ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் குடி எதிர்ப்புப்போராட்டத்தினையும் ட்ரிங்க் எதிர்ப்பினையும் திராவிடபர'தேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய குடிதீண்டாக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த டிரிங்க்/ஸொப்டு டிரிங்க் கலந்து/முழுமைதோய்ந்தக்கூட்டுக்குடிக்கெதிரான சக்திகள்,
குடிதீண்டாக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய குடித்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தக்காலகட்டத்திலே, இத்தகுசக்திகளின் காய்நகர்த்துதல், ஒடுங்கிப்போய்விட்ட மேல்நாட்டுக்'குடி'யின் ஏகாதிபத்தியத்தின் பலம்பொருந்திய கொள்கையான தனக்கு எதிரானசக்திகளைப் பிரித்தலும் தம்மை மீறாதவிதத்திலும் தம்நலத்தினைச் சேதப்படுத்தாதவிதத்திலும், தாம் கூறாக்கிப் பிளந்த எதிர்க்குடிசக்திகளிலே தமக்கு அடுத்த நிலையிலே குடியின் அடிப்படையிலே வைத்திருக்கும் குழுவுக்கெதிராக, குடிமட்டத்திலே குடிக்கும்சிரமமும் வைத்திருக்கும் குழுவினை மோதவிடுதலுமாக இருக்கின்றது. குடிபீடங்கள் முதன்முதலிலே, சாராயம்/கள்ளு குடிகளை
மேக்டோவல்குடிமாறுசம்பவத்தோடு ஒரு கண்துடைப்புக்காக அணுக முயன்றன. அதற்குக் காரணம், மல்லையாவின் அத்திவாரத்திலே ஆட்டம் வந்துவிடுமோ என்பதால், மேல்குடியிலே இருந்தவர்கள் பயமுற்றது.

---இடைவேளை

போஸ்டர்: என்னெழுத்து மெள்ள மெள்ளப் புரிந்ததாகக் கூறும் செல்வ'ம் கொழிக்கும் ராசு'களுக்கும், புரியாத நாடகம்போடும் 'நர்த்தகி ராமு'களுக்கும் சமர்ப்பணம். மேல்குடிகளென தம்மைக் கருதிக் கொல்லும் குடிசாதிகளுக்கு மூன்றெழுத்தென்பது எழுதிடாத விதியா? வோட்காவினை வல/இட'ம் பாராது அருந்திய செஞ்சட்டைத் தோழர்கள், ஹோசே குவர்வோ (சே-குவாரா போல் செக்ஸியாயில்லை!) என்னும் டெக்கீலாவை உதாசீனப் படுத்தவில்லையா? தாழ்த்தப்பட்ட குடியென்று 'கள்வெறி' கொண்டார்களை நோக்கி கல்வீசத் தோணுதடி...உன்'மத்தமும் ஏறுதடி

மப்பு தொடர்கின்றது

அதன் பின்னாலே, எதுவுமே பத்தாண்டுகளாக நடக்கவில்லை. பிறகு, குடிபீடங்களுக்கு ஈடான அ'மப்புத்தன்மை கொண்ட பொருட்பலமுள்ள கெனேடியன் விஸ்கி ஊடுருவலும் (மில்லியில் அடித்தவன் ஒண்ணே முக்கால் லிட்டருக்கு வெறும் இருபது டாலரே செலவீனம் செய்து) மத்தியகிழக்கிலே குடித்தொழிலுக்குப் போனவர்களூடாக உள்நுழைக்கப்பட்ட தீவீரவாத எவர்கிளியரிஸமும் (ஙொக்கா மக்கா அத்தனையும் ஆல்கஹால்) வெளிப்படையாகச் செயலாற்றத் தொடங்கிய காலத்திலே, தீவிர குடிஇயக்கங்களினை வைத்து குடிக்கூட்டுச்சக்திகள் செயலாற்றத்தொடங்கின என்று சொல்வேன். அண்மைக்காலத்திலே, வஜீர் என்னும் ஹார்டு கலந்த பியர் ஸொப்ட்-டிரிங்க் பி(ய)ரியர்களை அணுகலும் இதன்பாலானதே. கிட்டத்தட்ட, 'விஸ்கிகுருவுக்கு வன்னாயுதப்போரிட எத்துணை தெரிந்தபோதும், புழு டெக்கீலாவிலே (மெக்ஸிகோவில் புழுவைப் போட்டு டெக்கீலாவெனும் மது அருந்துவனம்) மிதந்தாலுங்கூட விஸ்கிகுருவின் மப்பு கலையாது அசையாதிருக்கும் சீடனாக, ஒரு ஷத்திரியனுக்குத்தான் ஆகும்' என்கிற குடிமகா(ப்)பார்வையைக் கொஞ்சம் தாழ்குடிகளுக்கு நகர்த்தியதுபோன்ற செயற்பாடு இதுவெனலாம். மீதியான தம்மை எஞ்சியிருக்கும் பணம், மிஞ்சியிருக்கும் தள்ளாடல் வகையிலே எதிர்கொள்ளக்கூடிய குடியினரை எதிர்கொள்ள, மற்ற குடிகளை படுத்திக் கொல்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது.


'05 ஜூன், 24 வியா. 1:18 கிநிநே.

பி.கு.: ஆண்/பெண்/அவதாரமாக/பெயரிலிகளாக/முகமூடிகளாக/குசும்பனாக வந்து திட்டிவிட்டுப்போகவும் கருத்துச்சுதந்திரம் உண்டு; மூலம்(!) எங்கேயெண்டு கண்டுபிடித்து, வழக்கேதும் போடமாட்டேன். ;-)

Part-II கூடவுண்டு. சாவதானமாய்... மப்பு கலைந்தவுடன்...

4 comments:

NambikkaiRAMA said...

தமிழ்க்(குடி)மகனே! நன்றாய் எனை சிரிக்கவைத்தாய்..உன் குசும்பை என்னவென்பது?

-/பெயரிலி. said...

;-)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நானும் ஒரு :-) ஐ உதிர்த்துவிடுகிறேன்.

SnackDragon said...

நானும் ஒரு :-) ஐ,
Good theme Kusumban