Monday, June 27, 2005

தினமொரு கடிதம்

என் உயிரினும் மேலான இணைய உடன்பிறப்பே,

இணையம் மூலம் இலக்கியம் வளர்க்காவிடினும், கடிதம் மூலம் கட்சி வளர்த்ததை காதல் கரட்டாண்டியிலிருந்து, கும்பகோணம் கோவால் வரை அறிவார்கள். இன்று கடிதம் எழுதாத ஜீவராசி எது? ஆங்கிலத்தில் மெக் ரயன் கூட 'You got Mail' என்று பாசத்தோடு கூறியதை நீ மறந்திருக்க மாட்டாய்.

ஒவ்வொரு தினமும் உனக்கு மடல் வரைய மறக்கக்கூடாதென்பது அண்ணா எனக்கிட்ட அன்புக்கட்டளை அல்(ல)வா? மற்றுமொரு நல்ல செய்தியுடன் இன்று நானுன்னை சந்திப்பதில் பெரு மகிழ்வும், பேரின்பமும் அடைகின்றேன் என்று சொன்னால் அது ந(மி)கைப்புக்குரியதா?

சின்னம்மா சொன்னால்தான் நடக்குமென்று தவறாக நினைத்திருந்தோரை கண்ணம்மா மூலம் திருத்தினான் நாராயணன் தம்பி. இதோ அவனின் மற்றுமொரு கை'வண்ணத்தில் ப்ரிய'நிமோ' அம்மா என்றவொரு பக்திக்காவியம். ஆங்கிலத்தில் 'Finding Nemo' என்று சக்கைப்போடு போட்ட படத்தை அழகு தமிழில், கொஞ்சும் காட்சிகளாக அமைத்திருக்கின்றேன்.

இதில் மீனாக நடிக்க சீனாவின் மஞ்சள் ஆற்றிலிருந்தோ அல்லது நைல் நதியிலிருந்தோ சொகுசுக்கப்பல் மூலம் பிடித்து வரவழைக்க வேண்டுமென்று "கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதம். மடல். லெட்டர். சரி ஏதோ ஒரு கழுதை", என்ற அருளிய குணாக் கலைஞன் கூறினான்.

இராம. நாராயணன் நடுத்தெரு நாராயணன் ஆக விருப்பமின்மையால் கூவத்தில் நாம் பிடித்த மீனோடு படத்தை எடுத்து முடித்து விட்டோம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சென்று அறிந்து உணர்ந்தவன் நீ! பொன்மலர் நாற்றமுடைத்து என்று அனுபவத்தில் ஆழ்ந்தவனல்லவா நீ!

பாடல்கள் அருமையாக வந்துள்ளன. தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல் இதோ அவற்றிலிருந்து சில வரிகள். நகலெடுக்கப்பட்டதோவென்று 'அந்நியர்' சிலர் ஆச்சரியப்படலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று ஆசான் கூறியதை பொய்த்துப் போகவிடலாமா?

கூவ ஆற்றினில் மீனொன்று நீந்திச் செல்கையில் வரும் பாட்டு:

"குமாரி...
உன் செதில்கள் காய்ந்து பிய்ந்து தொங்குதடி...
நாதாரி
உன் நாற்றம் குடலைப் பிடுங்கி கொல்லுதடி...
சோமாறி
என் கூவம் ஆறும் பொங்குதடி..."

முகாரி ராகத்தில் சில்லென்று வந்திருக்கின்றது.

மேலும், மீன்கள் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது

"கண்ணும் கண்ணும் சீக்ரெட்டா
காலை கடனின் சிகரெட்டா
மாலையில் அடிக்கும் மார்கரிட்டா
நீ
மார்கரெட்டா?"

என்று நீ சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கப்போகும் பாடலும் உண்டு.

பெண்மீனைக் கவர 'நிமோ' என்னும் ஆண் மீன் ராப்'பி(ச்)சையில் பாடலும் உண்டு. கேள் உடன்பிறப்பே வரிகளை...

"நாறும் தலைவன் வருகுது நிமோ
தலைவனின் தானைத் தளபதி நிமோ
ஐம்பது வயது இளைஞன் நிமோ
நான்தான் நிமோ..."

(இதற்கு கொசுறு கோரஸாய் 'கீழ்ப்பாக்கம் நான்தானோ, ஏர்வாடி நீதானோ' என்ற இலக்கிய வரிகளும் உண்டு). இன்னும் கேள்...

செட்டிநாட்டு பேக்கிரவுண்டில் ஒரு தமிழ்நாடு (கர்நாடகமென்று பிறர் அழைப்பர்) சங்கீதத்தில் அருமையான பாடல்: "செட்டியாரு வீட்டு கணக்கே..." இது உள்ளங்களை கொள்ளையடிக்கப் போவதுறுதி.

இவை மட்டுமா...? ஆங்கிலத்தில் சொல்வார்களே "Exclusive Locations" அங்கெல்லாம் சென்று படம் பிடித்த பாடல்:

"குண்டக்க குண்டக்க
குண்டக்க மண்டக்க

குண்டக்க மண்டக்க
அண்டம் முழுதும் கடங்காரி
கண்டால் ஓடும் கண்ணுக்காரி
பையில் வைத்த செல்லுக்காரி
மனசை மயக்கும் கஞ்சாக்காரி
பைசா தராத கஞ்சக்காரி"

தீம் மியூசிக் இருக்கின்றதே... இதை பற்றி தனிமடலே எழுத உத்தேசித்திருக்கின்றேன். அப்போது திரையிசையினையும் கை வைப்போம். படத்தினை போஸ்டர் ஒட்டியும், ஒரு பக்க விளம்பரம் தந்ததோடு உன் பணி முடிந்து விட்டதாக எண்ணிவிடாதே! கண் துஞ்சாமல் படம் காட்டியே வாழவேண்டுமென்பதை வையகம் நமக்குத் தந்த பாடம். வெற்றிமாலையினை சூ(ட்)ட வேண்டியது உன் பொறுப்பு. என்ன புறப்பட்டு விட்டாயா?

அழியாத மற்றும் என்றென்றும் அன்புடன்,
இணைய கலைஞன்.

1 comment:

rajkumar said...

சொதப்பல்