Monday, February 06, 2006

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்தபோது நடந்த பெயர் சூட்டும் சம்பவம் அண்டை வீட்டு இஸ்லாமியர் வீட்டில் நிகழ்ந்தது. சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் சாயபு "நூர் முகம்மது" என்று குழந்தைக்குப் பெயரிட்டார். என் வீட்டில் பெயர் சூட்டும் சம்பவம் பற்றி கேட்டதற்கு வீட்டுப் பெரியவர் குழந்தையின் வாயில் சர்க்கரைத் தண்ணீர் புகட்டி பெயரை மூன்று முறை அதன் காதில் கூறுவார்கள் என்று விளக்கப்பட்டது.

எனது பாட்டி பெயர் வைப்பதில் மிக்க ராசியானவர் என்று கூறுவார்கள். இப்படித்தான் இன்னொரு அண்டை வீட்டில் பெண் பிள்ளைகளாய்ப் பிறந்ததைக் கண்டு கடைசிப் பெண்குட்டிக்கு "மங்களம்" என்று பெயரிட்டதாகவும், அதனால்தான் அடுத்து பிறந்தது என் நண்பனான "ராஜா" என்று அவரது குடும்பத்தாரே கூறினார்கள். "ராஜா"வுக்கு அப்புறம் "ராஜாத்தி" என்ற பெண் மகவு பிறந்தது வேறு கதை. ஒருவேளை "மங்களம்" எபெக்ட் ஒரு "மகவு"க்குத்தானோ என்னவோ!

இந்தப் பெயரில் அப்படியென்ன விஷேஷம்? பெயரின்றி பிறக்கும் விலங்குகளுக்குக் கூட நாம் பெயர் வைத்து கொண்டாடுகின்றோமே! பாலப்பிராயத்தில் பால்பண்ணை வைத்திருந்த குடும்பம் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. அவர்கள் வீட்டில் மாடு கன்றுகளுக்குப் பெயரிட்டு வாஞ்சையோடு வளர்த்தாலும் அவர்கள் வீடு பூனைகளுக்குத்தான் பெயர் போனது. எனக்கு இன்றைக்கும் நினைவிலிருக்கும் பூனையின் பெயர் "மஞ்சுளா". மஞ்சள் தூக்கலான அரக்குப் படர்ந்த நிறமும், நீர் அதிகம் கொண்ட கோலிக்குண்டுகளைப் போல கண்களுமாய் மஞ்சுளா வலம் வருவதைக் காண கண் கோடி வேண்டும்.

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பெட் அனிமல்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம். 17/18' அகவையில் பிள்ளைகளையே தனித்து இயங்க விட்டு விடும் பெற்றோர்கள் தமது வளர்ப்புப் பிராணிகளிடத்து காட்டும் அன்பும், அரவணைப்பும் கண்டு மாளாது. அவை இறந்தால் துக்கம் அனுஷ்டிப்பது, தாமிறப்பதற்கு முன்னால் சொத்தெழுதி வைப்பது என்று இவர்கள் அதகளப்படுத்தி விடுவார்கள். ஜிம்மி, ஜாக்கி, பிரௌனி, பெட்டி, பில்லி, மேக்கி என்று பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களே இப்பிராணிகளுக்கு சூட்டப்படுகின்றன. பூனையா நாயா எது சிறந்த வளர்ப்புப் பிராணி? என்று பட்டிமன்றங்களும், விவாதமேடைகளும் ஏன் ஹாலிவுட் படங்களே கூட வந்துள்ளன.

என்ன இருந்தாலும் கிராமத்துப் பெயர்களைப் போல் வராது. இவை காரணப் பெயர்களா? டவுனில் வைப்பதைப் போன்ற பட்டப் பெயர்களா? என்றெனக்கு குழப்பம் வந்ததுண்டு. பிறந்தபோது சிறிய உருவமாக இருந்ததால் "எலி" என்ற நாமகரணத்துடன் சொந்த கிராமத்தில் ஒருவன் வளர்ந்து வந்தான். ஆறு வயதில் பள்ளிக் கூடம் போகவேண்டுமென்ற காரணத்தால் "ராஜேந்திரன்" ஆனான். அநேகமாக படிக்காமல் இருந்திருந்தால் எலியாகவே இருந்திருப்பான்.

ஆனால் காரணம் விளங்காமல் இன்னும் என்னைக் குழப்பும் பெயர்கள் "பாவாடை", "பொசபொசா", "சக்கர", "கட்டாரு", "ராம்நாடு", "சின்னாரு", "ஐலி"...

இதே போல் வேலையில் வடக்கிந்தியர்களை குழப்பிய உடன் வேலை பார்த்த ஒருவரின் பெயர் "தையத்து கிழக்கே வீட்டில் உமேஷன்". பேரைக் கேட்டா அட்றஸையும் சொல்றானேன்னு வியக்கும்படி சில தெலுங்கு நாமகரணங்கள்.

டவுனில் படிக்கும் போது சகமாணவர்கள் வைக்கும் சம்பந்தா சம்பந்தமில்லாத பட்டப் பெயர்களும் அவ்வாறு சுவாரஸியம் தருவனவே. புளுபேர்டு, பல்லாண்டு வாழ்க, ஊசி, அகிலா இன்னும் பல.

எங்கு சென்றாலும் பெயர்களை அறிவதிலுள்ள ஆர்வம் மட்டும் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சிலநாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக குறிஞ்சிப்பாடி அருகேயிருந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். பந்தி முடிந்ததும் கைகழுவதற்காக பந்தலுக்கு வெளியே வந்தபோது எச்சில் இலைகளின் மலைகளுக்கருகே ஒருவர் நின்றிருந்தார். சடாமுடி, அழுக்கேறிய கருந்தேகம், அரையாடை மட்டும் அணிந்து தனக்குள்ளேயும், அவ்வப்போது உரத்தும் பேசிக் கொண்டிருந்தார். சித்தரா, சாமியாரா, பைத்தியமா தெரியவில்லை. சாப்பிட அழைத்தாலும் உள்ளே வர மறுத்து விட்டவரை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது ஆர்வத்தை உணர்ந்த நண்பர் சொன்னார்," அவர் பெயர் திருஞானம்".

5 comments:

ஏஜண்ட் NJ said...

.
திருஞானம், நல்ல பெயர்!
.

Anonymous said...

தூயத் தமிழ்ப்பெயரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், பைத்தியம் அளவுக்கு சிம்பாலிக் காட்டுறீங்களே? Why?

குசும்பன் said...

அச்சச்சோ நான் முன்னமிட்ட பின்னூட்டம் எனக்கே வரமாட்டேங்குதே...

NJ & Anony,

இதோ பொழிப்புரை: கிராமத்தில் கிடைப்பது "தெருஞானம்" என்பதை குறிப்பாக உணர்த்துவதே பதிவின் நோக்கம்.

ஞானபீடம் உணர்ந்து பின்னூட்டியதாக பாராட்ட நினைத்திருந்தேன். உண்மையாக ;-)

பரி (Pari) said...

பாவாடை=திருவருட்(பா) + வாடை
மயிலாடுதுறை<->திருவாரூர் சாலையில் மங்கைநல்லூர் என்ற ஊரில் வள்ளலாரின் திருவருட்பாவிற்கு அடிமையான ஒரு நிலக்கிழார் தன் பெயரை இப்படி மாற்றிக் கொண்டார் என்று கேட்டதுண்டு. வள்ளலாருக்கு கோயிலும் கட்டியிருக்கிறார்.

மத்தபடி அவர் "சீதாவ காணோம்"னு அப்டி நின்னாரோ என்னவோ :)

மாமூலன் said...

பாவாடை என்பது ஒரு சாமியின் பெயர்
நாட்டார் - நாட்டுப்புற தெய்வம்.
பாவாடைசாமி.
கடற்கரை என்ற பெயரும் அப்படித்தான்.
தென்தமிழ்நாட்டில் இருக்கிறது.
(எனது பின்னூட்டைத்தை நோண்டிப் பார்த்து க~;டப்படத்தேவையில்லை...நான் யார் என்பதைக் கண்டு பிடிக்க.
எதையும்மறைக்கவில்லை...இது ரமணீதரன் கந்தையாவிற்கு)