Friday, February 03, 2006

குறட்டை அரங்கம்

(கனடாவிலிருந்து நிகழ்ச்சி நடத்த முடியாமல் துரத்தப்பட்ட களங்கத்தைக் கழுவ திருவாளர் விசு தனது குறட்டை அரங்கத்தை அரைகுறை ஆடைகளோடு உலாவும் அழகுச்சுனாமிகள் நிறைந்த மயாமி கடற்கரையில் தனது குறட்டை அரங்கத்தை துவக்குகின்றார். தலைப்பு தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் இணையவாதிகளா? இலக்கியவாதிகளா? ஏற்கெனவே ரிகர்ஸலில் பார்வையாளர்களின் குறட்டைச் சப்தத்தைவிட அதிகமாக காது ஜவ்வு கிழியும்படி கத்திய குறிப்பாக புடலங்காய் சைஸில் இருந்தவர்களை தேர்தெடுத்து வைத்திருந்தார்கள். முதலில் சாதனை புரிந்தோர்க்கு பரிசளிக்கும் விழா)
விசு: இந்தமுறை இணையத்திலேயே அதிகமுறை ஒண்ணுமே புரியலைன்னு சொல்லி உலகச்சாதனை செய்த உஷ்ஷா அவர்களை பாராட்டி "காலங்காத்தேலேயே கண்ணைக்கட்டுதே"ங்ற மெகாசீரியல் DVD'க்களை பரிசாகத் தருகின்றார் ரைட்டர் போரா. உஷ்ஷாம்மா உங்க சாதனைனையைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
(தக தக தக தங்கவேட்டையில் வரும் ஜம்யாகிருஷ்ணன் வெட்கப்படும் அளவிற்கு ஜொலிக்கும் மஞ்சள் பட்டுடையில் அம்மணி)
உஷ்ஷா: அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா
விசு: லலல்லா. யாரைம்மா பாத்து பாடுற? இது தங்கவேட்டை நிகழ்ச்சியில்லை
உஷ்ஷா: ஐயா இணையத்துல படிக்கிறது எழுதுறதுங்றது முதலை வாயில தலையைக் கொடுக்கிற மாதிரி
(அப்ளாஸ்)
விசு: சரிம்மா. விஷயத்துக்கு வாங்க
உஷ்ஷா: இங்கன எழுதுறதுல முக்காலே மூணு வீசம் Subtext என்ன Context'ஏ புரிய மாட்டேங்குது. உள்குத்து, வெளிக்குத்து, புள்ளையார் குத்துன்னு ஒரே குத்தாட்டம்னா பாத்துக்கங்களேன். புரியலைன்னு சொன்னா பெயரிலில்லாதவங்கெல்லாம் திட்றாங்கோ திட்றாங்கோ திட்றாங்கோ திட்றாங்கோ (அடுத்த பாடலை ஆரம்பிக்கவும் அப்ளாஸ்). சிலசமயம் நான் எழுதுதறே கூட எனக்குப் புரியல்லேன்னா பாத்துக்கங்களேன்.
விசு: சரி உங்களுக்கு "புரிஷா"ன்னு பேரு வைக்க முடியாது. அதுனால "புரியாவதி"ங்ற பட்டம் கொடுக்கின்றேன்.
உஷ்ஷா: எதுக்குங்க பட்டம் புரியலியே?
விசு: என்ன இதுவும் புரியலியா? (மைக்கைத் தூக்கிக் கொண்டு தடுக்கி விழுந்து ஓடுகின்றார். சிலர் காப்பாற்றுகின்றனர்)

(குறட்டை அரங்கம் தொடங்குகின்றது)

புடலங்காய்ப் பெண் 1 (புபெ1): ஐய்யா சிக்கன் பிரியாணியில என்ன இருக்கு?
விசு: (யோசித்தபடி) என்னம்மா என்கிட்ட இப்பிடிக் கேள்வி கேக்குற. நான் சாப்பிட்டதில்லையே
உஷ்ஷா: கேள்வியே புரியலியே
விசு: ஐய்யய்யோ நீங்க இன்னுமா போகல. யாராவது என்னக் காப்பாதுங்களேன்
(நிகழ்ச்சியினை தவறாமல் பார்க்கும் க(வ)லைஞர் முகத்தில் கவலை ரேகை படர்கின்றது)
புபெ1: (கீச்சுக் குரலில்) சிக்கன் பிரியாணியில சிக்கன் இருக்கும் ஸார். இது கூடத் தெரியாம வந்துட்டீங்க
(கூட்டத்தின் கைத்தட்டலில் மயாமி கடற்கரையில் அலைகளே அதிர்ந்தன)
புபெ1: சரி விடுங்க மட்டன் பிரியாணியில
விசு: (என்ன எழவுடா இது. இன்னிக்கு ஒரே நான்வெஞ் கேள்விகளா இருக்கு) ஹூம்... மட்டன் இருக்கும்
புபெ1: அப்டிப் போடுங்க. இப்ப சொல்லுங்க தலைப்பாக்கட்டு பிரியாணியில என்ன இருக்கும்?
(பிகில் பறக்கின்றது. காமெரா க்ளோசப்பில் காட்டுகின்றது)
புபெ1: சொல்லுங்க சார். தலைப்பாக்கட்டு பிரியாணியில என்ன இருக்கும்?
விசு: (நாயகன் கமல் பாணியில் ஆனால் தெளிவான குரலில்) தெரியில்லியேமா
புபெ1: அதுதான் ஸார் இணையவாதிகளின் தர்க்க ஸாஸ்திரம். பின்னூட்டப் பிரச்சினைக்கு ப்ளாக்கர்ல கம்ப்ளெயிண்ட் குடுத்தேளான்னா குடுத்தேன்' ன்னாங்க. இழவு கமெண்ட் மாடரேஷன் போட்டியான்னா ஆமான்னாங்க. ஆனாலும் உடாம கூகிள்ல பிராது கொடுத்தியான்னு தர்க்கம் பண்றாங்க பாருங்க. சூப்பரோ சூப்பர். அதுனால இணையவலைப(ம)திவாளர்கள்தான் தர்க்கத்துல சிறந்தவங்க.
(கூட்டம் கையில் கிடைத்ததையெல்லாம் தட்டுகின்றது)
உஷ்ஷா:
பிரச்சினையில பாதிக்கப்பட்ட முறையில சொல்றேன். தீர்வு என்னான்னு புரியில
(வாக்கியத்தை முடிக்குமுன் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் போல குண்டுகட்டாய் தூக்கியனுப்புகின்றார்கள்)
கொத்தவரங்காய் ஆண் 1 (கொஆ 1): ஸார் இங்க வாங்க ஸார். நீங்க படம் எடுத்திருக்கீங்கதானே?
(கூட்டம் சிரிக்கின்றது)
விசு: (மதர்ப்புடன்) ஆமாம்ப்பா. அதிலென்ன சந்தேகம். யாராவது மண்டபத்துல எடுத்து நான் பேர் போட்டுக்கலை.
கொஆ 1: அட கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க ஸார். கதை-வசனம் எழுதியிருக்கீங்கதானே?
விசு: (கடுப்புடன்) ம்ம்ம்ம்
கொஆ 1: வசனத்துக்கு நீங்க உதவி செய்ய ஆளைப் போட்டிருக்கீங்களா?
விசு: இந்தா பாருங்க. தர்க்கம் பத்தி பேசும்போது குதர்க்கம் பண்ண நேரம் கிடையாது. (முதல் மரியாதை சிவாஜி போல்) ஆமாம். வெச்சிருக்கேன்.
கொஆ 1: அப்ப எழுதுற, உதவியாள் எழுதுன வசனத்துக்கு நீங்க தானே பொறுப்பு?
விசு:
(ஆஹா இந்த ஆளு குட்டிப் பிரச்சினை பண்றானே... இன்னிக்குப் பாத்து பொம்பளைக் கூட்டம் வேற அதிகமாச்சே என்ற நினைவுடன்) ஆமாப்பா
கொஆ 1: அட அதைச் சொன்னா கேக்கம உண்டு இல்லைன்னு வேட்டி அவுத்து, துப்பட்டா சுத்துற இலக்கியவாதிகள்தான் தர்க்க ஸாஸ்திரத்துல சிறந்தவங்க ஸார்.

(இடைவேளை. பின்னர் ஒரு சேஞ்சுக்காக மேடையின் வெளியே பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்)
பலூன்: ஐய்யா எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும். நிகழ்ச்சி நடத்தும் போது உங்களுக்கு வயிறு கடமுடா செஞ்சா என்ன பண்ணுவீங்க?
விசு: (இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்ல என்று நொந்தபடி, நடிகர் சுந்தர்ராஜனைப் போல்) உடனே போகணும்னா போயிடுவேன். You got to go You Got to Go
பலூன்:
இப்ப எனக்கும் அதே பிரச்சினைன்னா?
விசு: என்னப்பா இப்பிடி கேக்குற. அதே பதில்தாம்ப்பா
பலூன்: அப்ப பிரச்சினைன்னா பொதுங்றீங்க. இதை நாஞ்சொன்னா அதெப்பிடி நிகழ்ச்சியின் பொறுப்பாளரான உங்களுக்கும், இலவசமாய் பங்கு கொள்ளும் எனக்கும் ஒரே பிரச்சினைக்கு தீர்வெப்படி ஒரே மாதிரியிருக்குங்றாங்கோ
விசு: (நம்மவிட குழப்பவாதிகள் யாரெந்த ஆதங்கத்துடன் குரலை உயர்த்தி கட்டபொம்மன் ஸ்டைலில்) யாரப்படிச் சொன்னது?
பலூன்: எல்லாம் நெட்டுலதாங்ணா. இப்ப சொல்லுங்க வலைப்பதிவர்கள் முன்னாடி எலக்கியவாதிங்க மண்டி போடணும் தர்க்கத்துல

(டேப் செய்யப்பட்ட ஆடியன்ஸ் அப்ளாஸ் ஒலிபரப்பப்படுகின்றது. அடுத்து ஒரு ஜோடி ஆடியோ கான்பெரஸில் இணைகிறது)

விசு: (சன் மியூஸிக் தொகுப்பாளினி போல்) ஹலோ குறட்டை அரங்கம். ஸார் குறட்டை சவுண்டை கொஞ்சம் கம்மி பண்ணுங்க
முத்து&முத்து: (Thamson&Thomson போல் ஒரு காமெடி ஜோடி) முத்துக்கு முத்தாக குத்துக்கு குத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஏட்டிக்கி போட்டியாக... வலைப்பூவில் கதைத்து வந்தோம் தனித்தமிழில் ஒன்றாக
விசு: பாட்டு சூப்பர். அப்றம் மேட்டர் சொல்லுங்க
மு1: ஸார் ஹிட்லரப் புடிக்குமா? படங்கள்ல காமிக்றமாரி "Hail Hitler"ன்னு அடிக்கடி சொல்றமாதிரி இன்னொரு ரெண்டு வார்த்தையை அடிக்கடி சொல்றாங்க ஸார் கசுமாலங்கோ
விசு: (காதலன் பட வடிவேலு ஸ்டைலில்): எவங்க அவங்க?
மு1: அட படிச்சவய்ங்க எழுதுற நெட்டுல சார். வகுத்தெரிச்சலா இருக்கு
விசு: (இந்த கால் எப்ப முடியுமென்கின்ற அவசரத் தொனியில்) அடடே விஷயத்த சொல்லுப்பா
மு1: (அழுதபடியே) "ஜெய் ஹிந்த்"ன்னு கண்ட இடத்துல எழுதுறாய்ங்க.
விசு: (கனடாவில் வாங்கிய குத்தை நினைத்து பயந்தபடி கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி விட்டேத்தியாய்) அப்பிடியா
மு1: இதையெல்லாம் மாடரேஷன் செய்யுணுங்க. திரட்டிய வுட்டே துரத்துணுங்க. எப்பிடி என் தர்க்கம்?
மு2: ஐயா அதாவது பரவாயில்ல. இண்டிபிளாக்ஸ்ன்னு பேர வைச்சுக்கிட்டு தமிழ் பின்னூட்டம் வுட முடியல. ஆனா தமிழ் பதிவுக்கு சர்வே போடுறானுங்க. கேட்டா எனக்குத் தெரிஞ்சது இந்தி, இங்கிலிபீசு, பெங்காலி மட்டும்தான். வேணா அதுல எழுதுன்னு டபாய்க்கிறான். தமிழுக்கு மதிப்பில்லையா? இந்திய மொழிகள்ல தமிழ் ஒண்ணில்லையா?
விசு: நீங்க ரெண்டு பேரும் வலைபதிவாளர்களா?
மு&மு: (கோரஸாக) அட ஆமாம். எப்பிடி கண்டுபிடிச்சீங்க?
விசு: (நிக்கலாக) அதான் உங்க தர்க்கதுலேயே தெரியுதே

(குடந்தை அம்மாசமுத்திரத்திலிருந்து வீடியோ கான்பெரஸில் கார்க்ஸ் என்ற எழுத்தாளர் வருகின்றார்)

விசு: வணக்கம். நிகழ்ச்சி எப்படி நடந்தது?
கா: உங்களுக்கு சினிமாவுல ரோல்மாடல் யாராவது உண்டா?
விசு: எங்களை மாதிரி ஆளுங்களுக்கு படத்துக்கு படம் காப்பியடிப்பதைப் பொறுத்து பிற மொழி மாடல்கள் மாறும். ஆயுதஎழுத்தப்போ மணிரத்னத்திற்கு மாடல் Amores Perros எடுத்த Alejandro Gonzalez Inarritu.
கா: அப்போ உங்க வேர்களை ஸ்பானீஷ்லேயோ, லத்தீன்லேயோ தேடலாம். தப்பில்லதானே
விசு: (ஆஹா மாட்டிக்கிட்டோமோ என்ற குறுகுறுப்புடன்) தப்பில்லே
கா: ஆனா பாருங்க சார் தப்புங்றாங்கோ. Amores Perros எடுத்த Alejandro டெக்கீலா (மெக்ஸிகோ சாராய வகை) சாப்பிட்டார். கியூபா சுருட்டு குடிச்சார். அதுனால நம்மோட வேர்களை (காலுக்கு) கீழேயே தேடணுங்றாங்கோ. இப்பச் சொல்லுங்க... தர்க்கத்துல எங்கள அடிக்க ஆளு இருக்கா?

இறுதியாக

விசு: ஆஹா தர்க்கத்தில் இலக்கியவாதிகள் இணையவாதிகள் இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சியிருக்கின்றனர். இதனால் தமிழ் கூறும் நல்லுல்லகம் மேலான பயனை அடைவது உறுதி. இருப்பினும் முடிவாகச் சொல்லுகின்றேன். இலக்கியம் வளர்க்கும் இணையவாதிகள் தங்களின் முன்னோடிகளான இலக்கியவாதிகளை மிஞ்சிவிட்டார்கள் என்று கூறி முடிக்கின்றேன். வணக்கம்.

(இந்நிகழ்ச்சியின் முடிவில் ஹிந்தி தேசபற்றுப் பாடலை "மா துஜே சலாமி"க் கொண்டிருந்தார் டேப்பில் ரஹ்மான். ஜெய்ஹிந்த் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் விருப்பம் இல்லாத காரணத்தால், ஹிந்தி தேசப்பற்றுப் பாடலுக்கு தமிழ்குடிதாங்கிகள் கும்மிவிடுவார்களே என்னும் கனேடிய அனுபவத்தால் "யோவ் டேப்பை நிறுத்துய்யா" என்று கூக்குரலிடுகின்றார் விசு. ஏனென்று புரியாமல் உஷ்ஷா குழம்ப -- திரை --)

5 comments:

Anonymous said...

//சிலசமயம் நான் எழுதுதறே கூட எனக்குப் புரியல்லேன்னா பாத்துக்கங்களேன்.//

அது சூப்பருணா

Anonymous said...

Kusumban, try to grow up.

ramachandranusha(உஷா) said...

நல்லவேளை என் பெயரை ஒழுங்கா விளக்கமா சொல்லியிருக்கீங்க. இல்லாட்டி யாரோ பெரிய ஆளுங்கள சொல்லுறீங்கன்னு
நா போயிட்டே இருந்திருப்பேன். ஆனாலும் இது ரொம்ப ஓவரூ, இருங்க நுனிப்புல்லுக்கு திஷ்டி கழிச்சிட்டு வரேன்.
கண்ணுப்பட்டுமில்லே, ஆமாம், அங்கங்க நம்ம பிளாக்குக்கு லிங்கு கொடுத்திருந்தா நாலு பேரு வந்து பார்த்திருப்பாங்க இல்லே :-(

அப்புறம் 1 அனானி ரொம்ப தைரியமா பல்ல காட்டியிருக்கீங்க. எனக்கு புரியுதோ இல்லையோ படிக்கிறவங்களுக்கு புரியாம எளுத பளகிக்கிட்டு இருக்கேன். அப்பத்தானே எளக்கியவாதி பட்டம் கிடைக்கும்.

இன்னொரு அனானி, இணைய குசும்பரை வளர சொன்ன உம்மை கடுமையாய் கண்டிக்கிறேன். இப்படி நேர்மையா, தைரியமா தமிள வர்க்கிறதுதான் பெரிய மனுஷனுங்களோட தலையாய பணி. அது சரி, சொந்த பெயரூல ஏம்பூ எளுதலேன்னு கேட்டுடாதீங்க,
நீங்க சொந்த பெயரீலா வந்தீங்கன்னு மடக்கி புடுவாங்க

ramachandranusha(உஷா) said...

test

Muthu said...

//மு1: (அழுதபடியே) "ஜெய் ஹிந்த்"ன்னு கண்ட இடத்துல எழுதுறாய்ங்க.//

ஹி..ஹி..நல்லா இருக்கு...ஒரு டவுட் தான் எனக்கு...அந்த இன்னொரு முத்து யாரு?

அப்புறம் இன்னொன்று....நான் வளர்கிறேனே மம்மி...ஹி..ஹி.நமக்கு நாமே திட்டம்தான்....