Tuesday, June 29, 2004

நெஞ்சுக்கு நீதி

திரு ராஜா மற்றும் முகுந்த் அவர்களுக்கு,

உங்களின் பின்னூட்டம் மற்றும் பதிவு படித்தேன். (முகுந்தின் பதிவு இன்னும் இருக்குமெனெ நம்புகின்றேன். ராஜா நீக்கி விடச் சொன்னாலும்).

நான் சொல்ல வந்தது "பாலியல் கல்வி"யின் முக்கியத்துவத்தை. இளைஞர்களின் பாலியல் அறியாமையை. நாமக்கல் மாவட்டத்தை துவேஷிக்கும்/தூற்றும் எண்ணத்தில் அல்ல. பாம்பே, கல்கத்தா போல் நாமக்கல்லில் சிவப்பு விளக்கு பகுதிகள் தடுக்கி விழுந்தால் இருப்பதாய்க் கூறவில்லை. நாமக்கல்லில் பத்தில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பதாய் புருடா விடவில்லை.

ராஜா, நீங்கள் முகுந்த் எழுதிய பதிவில், பின்னூட்டமாய் பின்னியிருக்கிறீர்கள். எனது பதிவைப் படிப்பவர்கள் குறைவென்று. தாங்கள் எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போலவே எனது கருத்துக்களை உள்வாங்காமல் போய் இருக்கலாமே? மேலும் தவறெனச் சுட்டிக் காட்டினால் மன்னிப்புக் கோரி சரி செய்து கொள்கிறேன். அதை விடுத்து முகுந்த் எழுதிய பதிப்பை ஏன் நீக்கக் கோருகிறீர்?

நாமக்கல் நம்பர் 1 என்று நான் மகிழ்வுடனா குறிப்பிட்டேன்? இதன்ன கின்னஸ் சாதனையா? நாமக்கல்லை அவதூறு செய்தேனா? வயிறெரிந்து சொன்னேன். சிறிதே பின்புலத்தைப் பார்க்கலாம்.

போன வருடம் HBO (Home Box Office) நிறுவனத்தின் "HBO Documentaries: Pandemic: Facts About AIDS" என்ற விவரணப் படத்தில் மொத்தம் 5 பகுதிகள் பார்த்தேன். அவற்றுள் ஒரு பகுதிதான் நாமக்கல் மாவட்டம். அதிசயமாக HBO'ல் தமிழ் கேட்கிறதே என ஆவலுடன் நிமிர்ந்தால் பேரிடியாக விவரங்கள் வந்து விழுந்தன.

படம் விவரம் காண இங்கே சுட்டுங்கள்

இந்தியப் பகுதியைக் காண இங்கே சுட்டுங்கள்

(என்னடா HBO சுட்டிகளில் ஒரே ஒரு ஜோடியைத்தான் காட்டுகிறார்களே என்று அவசரப்பட்டு பாயாதீர்கள். நாமக்கல் நாகராஜைச் சுற்றி கதை நகரும்படி படம் பிடித்துள்ளார்கள். ஆனால் படத்தில் சொன்ன புள்ளிவிவரங்களை இங்கே தொகுக்கவில்லை.)

படம் பார்த்தபின் வருத்தப்பட்டு மேலும் விவரம் தேடுகையில் WHO 2002 அறிக்கையைப் பார்க்க நேரிட்டது. அதில் நாமக்கல் பளிச்சென்று இடம் பிடித்து இருந்தது. 1998'ல் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட கருவுற்ற (antenatal) பெண்களின் சதவீதம் நாமக்கல்லில் 3.3. மணிப்பூரிலுள்ள சுராசந்த்பூர் 5.3 சதவீதத்துடன் முன்னணியில் இருந்தது. 1999'ல் இது நாமக்கல்லில் 6.5% ஆக உயர்ந்தது. சுராசந்த்பூரோ வெறும் 5.5% தான் (0.2% உயர்வு ஒரு வருடத்தில்). நாமக்கல் முன்னுக்கு வந்தது.

பார்க்க சுட்டி (பக்கம் 16 சுராசந்த்பூர் மற்றும் நாமக்கல்). (PDF வலையில் படிக்க முடியாவிடில் (கணிணியால்) சொல்லுங்கள். தனியஞ்சலில் அனுப்புகின்றேன்.)

இதே செய்தியை மேலும் ஒரு வளைத்தளம் உறுதி செய்கிறது.

WHO'வின் அறிக்கையை நான் நம்பக் கூடாதா? தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை நம்பக் கூடாதா? சன் டிவிக்கும் நாமக்கல்லுக்கும் வேண்டுமானால் பங்காளிச் சண்டை இருக்கலாம் (?). HBO'வைக் கூடச் சொல்லலாம். சில சமயம் ஒருதலைப் பட்சமாக நடக்குமென்று. ஆனால் இவ்விஷயத்தில் ஏன்? அவர்களும் நாமக்கல்லை அவதூறு செய்கிறார்களா? WHO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பொய் சொல்கின்றனவா? உண்மைத் தகவல் எங்கே கிட்டும்? சொல்லுங்களேன்.

கடைசியாக June 05, 2004 7:59:26 PM IST வெளியான வெப் இந்தியா வலைப்பதிவு 1,00,000 பேர் நாமக்கல்லில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளாக கூறுகிறது. இதுவும் பொய்யா?

இத்தனைக்கும் பிறகுதான், நான் ஒரு தமிழன் (அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தவன்) என்ற காரணத்தால் தலை குனிந்து என் எண்ணங்களைப் பதிந்தேன். பாலியல் கல்வியை வலியுறுத்தும் பொருட்டு நாமக்கல் உதாரணம் காட்டினேன். உங்களைப் போலவே தனிமனித விமர்சனம் செய்ய எனக்கும் தெரியும். தரம் தாழ நான் விரும்பவில்லை. நீங்கள் கூறியிருக்கிறீர்கள் ஒரே ஒரு நோயாளியாயைக் கூட பார்க்கவில்லை யென்று. உங்கள் நண்பரோ நாமக்கல்லில் நிறைய எய்ட்ஸ் நோயாளிகளைப் பார்த்ததாகவும், இப்போது விழிப்புணர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார். ஈஸ்வரனுக்கே வெளிச்சம் யார் உண்மை சொல்கிறாரென்று. ஒருவேளை நீங்கள் மட்டுமே நாமக்கல் என்று நினைக்கின்றீர்களா? அல்லது வசிப்பது வேறு நாமக்கல்லிலா? இல்லை காந்தாரிக் கண்ணனாய் வாழ்கிறீரா?

மகாராஷ்டிராவில்தான் எய்ட்ஸ் அதிகமெனப் படித்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் நாமக்கல்லுக்கு பதில் மகாராஷ்டிரா போட்டிருந்தால் குதியாட்டம் போட்டிருப்பீரா? பாலியல் கல்வி தேவையில்லை என்பீரா? நீங்கள் இந்தியரில்லையா? மகாராஷ்டிரம் மீது அக்கறை இல்லையா?

Clown Fish கேள்விப்பட்டிருக்கிறீரா? பெயரில்தான் அது கோமாளி. மற்றபடி அதுவும் மீன்தான். குசும்பனும் பெயரில்தான் கோமாளி. மற்றபடி நானும் .....

அய்யா...புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்னும் கேனக் கட்டுரை இல்லை அது. ஒரு நிமிடம் நீங்கள் நாமக்கல்லார் என்பதை மறந்து ஒரு நடுநிலையாளராய்ப் பதிவைப் படித்துப் பாருங்கள்.

இந்த முயற்சிக்குப் பிறகும் நீங்கள் சமாதானமாகா விட்டால், நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன். ஏனெனில் நான் குறி வைத்தது பாலியல் கல்வி மீது கவலை இல்லாத சமூகத்தின் மீது...நாமக்கல் வாழ் மக்களை நோக்கி அல்ல...
அடல்ட் குசும்பு

சாமி செல் போன் வெச்சிருக்கறவாளே...முன்னாடி சொன்னாங்கோ..இடது சட்டைப்பையிலே வைச்சிருந்தா ஹார்ட் அட்டாக் வருமின்னு...பயந்து போய் இடுப்புல கட்டிண்டு அலஞ்சா இப்போ விந்துதுல உயிரணு குறைஞ்சு போயிடுமாம்.

மேலும் படிக்க

அப்போ பின் பாக்கெட்டுல (?) வைச்சுண்டா கொழுப்பு (?) குறைஞ்சுடுமா'ன்னு நீங்கெள்ளாம் கேட்கறது காதுல விழறது...

இதெல்லாம் புருடான்னு இந்த ரிப்போர்ட் சொல்றது

யாரை நம்பறது ஈஸ்வரா???

Monday, June 28, 2004

அடல்ட் குசும்பு (வயதுக்கு வந்தவர்க்கும், வருபவர்க்கும்)

"வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே" என்ற திரைப்படப் பாடலை ரொம்பப் பேரு கன்னா பின்னான்னு விமர்சனம் பண்ணாங்கோ. அதை இப்போது நினைத்தாலும் நேக்கு சிரிப்புதான் வர்றது. நாம் வளர்ந்த சூழ்நிலையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கோ...

காலைலே கழிப்பறையிலிருந்து ஒருவன் குழப்பமாக வெளியேறுகிறான். உடலில் நிகழும் மாற்றங்களுக்கு தந்தையிடம் கூட விளக்கம் கேட்க முடியாமல் தவித்து, நண்பர்கள் நகைப்பரோ என்று குழம்பி, கடைசியில் மஞ்சள் பத்திரிக்கையில் தப்பான விளக்கம் படித்து, குற்றவுணர்வு குறுகுறுக்க ... வேதனை ... வேதனை.
(எனக்கு கோபமோ, சோகமோ தூய தமிழ் வந்துடும். அட்ஜஸ்ட் செய்துக்கோங்கோ).

கண் மண் தெரியாமல் ஹார்மோன்களின் உந்துதலால் திசை மாறிப் போன இளங்காளைகள் எத்தனை பேர். நமது சமூகத்தில் இவ்விஷயத்தில் பெண்கள் நிலை கொஞ்சம் தேவலாம். அம்மா, பாட்டிகள் மூலமாக சில விஷயங்களுக்கு விளக்கமாவது கிடைக்கிறது. அது அறிவியல் பூர்வமானதா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. அது வேறொரு முறை பார்க்கலாம்.

இதற்கிடையே பல முன்னணி பத்திரிக்கைகளில் (ஜீனியர் விகடன், தராசு, நக்கீரன் ...) பல்வேறு வைத்தியர்களின் (?) முழுபக்க விளம்பரங்கள் இன்னும் இவனை குழப்பியடிக்கின்றன. ஏதோ மஹாத்மா தேசத்தைக் காக்க டூர் போவது போல் இவர்களுக்கு பெரிய புரோக்ராம் வேறு. இவர்களின் விளம்பரங்களைப் பார்த்தால் வயிறெரியும். ஏற்கெனவே குழம்பியவர்களை இன்னும் குழப்பி, மீன் பிடிக்கும் இந்த நவீன மீனவர்களை நடு வீதியில் நிறுத்தி வைத்து காயடிக்க வேண்டும். (ஆமாம் அதை வைத்துதானே காசு பார்க்கிறார்கள்).

ஏதோ மாத்ருபூதம் போன்ற புண்ணியவான்கள் அவ்வப்போது அறிவைத் தெளிவுபடித்துகிறார்கள். அந்த லார்டு லபக்குதாஸின் நிகழ்ச்சி கூட வீட்டில் நிம்மதியாக பார்க்கும் சூழ்நிலை பல இல்லங்களில் இல்லாமல் இருப்பதுதான் நிதர்சனம். (குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கப் போய் காதல் காட்சிகளில் அப்பா தொலைத்த காலணா காசு தேடியதுண்டா? ஹி ஹி. ஐயய்யோ அனாமிகாவிற்கு கமெண்ட் போட ஐடியா கொடுத்துட்டேனே)

இதற்கெல்லாம் ஒரே வழி பாலியல் கல்வியை முறையானபடி கற்பிப்பதுதான். "சொல்லித் தெரிவதில்லை இதெல்லாம்" என்று நடுத்தர வர்க்கம் நாகரிகம் பேசக் கூடும். (மேல் மட்டமும், கீழ் மட்டமும் எப்போதுமே, எதற்குமே விசனப்பட்டதில்லை. பாழும் நடுவர்க்கம் மட்டும் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் சே...)

ஐயன்மீரே! நாமக்கல்தான் இப்போ நம்பர் 1. லாரி போக்குவரத்தில் இல்லை. உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸில்.

இன்னும் எத்தனை நாட்கள் காந்தாரியாகவே கண்களை கட்டியிருக்கப் போகிறீர்கள்? பிள்ளைகள் அனைவரையும் பலி கொடுக்கும் வரையிலா?

Thursday, June 24, 2004

கவிதைக் குசும்பு (ஙொப்ரான நான் எழுதியது)

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

மலர்கள்
தேனீக்களுக்கு
மதுவைத்தருவது
மகரந்த சேர்க்கைக்குத்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

மரங்கள்
காற்றுக்கு
தலையசைத்தது
பகலவனுடன் ஒளிசேர்க்கைக்குத்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

நதிகள்
மணலுக்கு
ஆற்றுப்படுத்தியது
கடலை தேடித்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

தோணிகள்
ஆற்றை
துழாவியது
தள்ளிப்போகும் ஒத்திகை
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

சுயம்வரங்கள்
மணாளனை
தேர்ந்ததெடுத்தது
ஒத்திகையான ஒப்புக்குத்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

நீங்கள் (?!)
என்னை
நட்புறவாடியது
என்நண்பனிடம் காதலால்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

Wednesday, June 23, 2004

கதை - பகுதி 2

ஆணாகிய பெண்ணின் கதை (சொந்த சரக்கு)


கொஞ்சம் வித்தியாசமாய் இப்போ மனைவி கணவன் மேல பொறாமைப்பட்டு கடவுள கூப்பிட, அவரும் பால் மாறாட்டம் (Sex Change) பண்ணிட்டுப் போயிட்டாரு. ஒரிஜினல் கணவன் பாவம் ஒரு தலைமை மென்பொறியாளன்...(ரொம்பத் தேவை) அதுவும் ஒரு கொன்டிராக்டர்...! (Contractor)

நேற்றய வேலையில் (அட வீட்டு வேலைப்பா...) களைத்திருந்த மனைவியான கணவன் மறுநாள் சீக்கிரம் துயிலெழுந்து, அவதியாக அலுவலகம் புறப்பட்டார். வழக்கம் போல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து, ஆமை வேகத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தால் 5 குரல் செய்திகளும், 50 மின் செய்திகளும் காத்திருந்தன.

வேலை பார்க்கும் புராஜெக்டில் வழக்கம் போல அதீத செலவீனம் (over budget) ஆனதால் எப்போது வேண்டுமானாலும் ஆப்பு அடிப்பார்கள் என்ற டென்ஷன். அடப்பாவிகளா இப்போதுதானே வீடு வேற வாங்கினேன்...நினப்பே வயிற்றில் பயப் பந்தாய் கண்டபடி உருண்டது.

சரி வேலைய பாக்கலாமென்று நினைத்தால் நெட்நொர்க் நத்தை வேகத்தில் நகர்ந்தது. முதல் மின்னஞ்சலோ ஆப்-ஷோர் குழுவின் யூனிட் டெஸ்ட் டுபுக்கு ஆன நல்ல செய்தியைச் சொன்னது. அப்பவே நினைச்சேன்...ரோட்டுல ஜாவா புத்தகம் வெச்சிருந்த ஒரே காரணத்துக்காக வேலை கொடுத்த கம்பெனியின் மீது கண்டபடி கடுப்பு வந்தது. உங்களோட ப்ளெண்டிங் ரேட்டுக்காக என்னைப் போட்டுப் பாத்துட்டாங்களே...வெள்ளைக்கார மேலாளரின் லொள் லோள் கேட்கத் தயாரானார்.

இருந்த டென்ஷனில் CDN Session password மறந்து போனது. இழவு எத்தனை எத்தனை "நுழைவுச் சொற்கள்"? Lap top, mainframe, VPN (இதிலேயே ரெண்டு), Lotus Notes, வார மணி போடுறதுக்கு ஒண்ணு, சம்பளம் பாக்க...இது போக சொந்த விஷயத்துக்காக MSN, Yahoo, Blog, Bank, Insurance, car rental, hotel reservation, Frequent Flier, Credit Card account (இது ஒரு மினிமம் நாலு), Monster, Hotjobs, Kumudam, Personal Website FTP account, House Alarm, car alarm, cell phone account, Current bill account, cable account...அனுமார் வால் போல நீண்டு கொண்டே போனது. கொடுமை என்னவெனில் ஒவ்வொருத்தரும் நுழைவுச் சொற்கள் உருவாக்க விதவிதமான விதிமுறைகள் வைத்திருந்தது. இந்த லட்சணத்தில் 30 நாளுக்கொருமுறை நுழைவுச் சொற்களை மாற்ற வேண்டி வந்ததுதான். வெறுத்துப் போய் மஞ்சள் "Stick-it" லேபெல்லிருந்து பாஸ்வேர்டு கண்டுபிடித்து லாக்-இன் செய்ய...முதலாம் முடிவில்லா மீட்டிங் செல்ல வேண்டி பாக்கெட் கணிணி கதறியது.

இன்றைக்கு நீ எப்படி இருக்கிறாய்? உனது வாரக் கடைசி எவ்வாறு கழிந்தது? இன்றைய வானிலை எப்படி இருக்கிறது? போன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளுடன் ஆரம்பித்த மீட்டிங் வேறு வழியின்றி யூனிட் டெஸ்ட் டிஸ்கஷனுடன் முடிந்தது. பாவிப்பயலுகளா வேலை பாக்க விடுங்கடா...மதிய உணவு இடைவேளையில் லஞ்ச் பாக்ஸ் மறந்தது ஞாபகம் வந்தது. எல்லாம் த(எ)ன் நேரம். கபேடேரியாவில் உப்பு உரைப்பில்லாத உணவை அவசரமாய் மேய்ந்து (சாலட்பா...) வரும் வழியில் மூச்சா போகலாமென்றால் ஏதோ மெயிண்டனென்ஸ் காரணத்தால் ரெஸ்ட் ரூமை மூடியிருந்தார்கள். ஓ...கெட்ட வார்த்தையுடன் மேல்தளத்திற்கு மூச்சிறைக்க ஓடி ஒரு வழியாய்...

மதியம் ஸ்டேடஸ் ரிப்போர்ட், பட்ஜெட் ரிப்போர்ட் இத்யாதிகளை முடித்தார். சொல்ல வேண்டியதேயில்லை. அதற்குள் ஆயிரம் போன்கால்கள், ஆயிரமாயிரம் இ-மெயில்கள். மாலை வரும்போது அவர் நிலைமை ...OVER WORKED, DRAINED, BORED TO THE CORE...

வீட்டிற்கு போகலாமென காரை ஸ்டார்ட் செய்தால் சனியன் பிடித்த பேட்டரி காலை வாறியது. ஓட்டிப்போக வேண்டிய வண்டியை ஒரு வழியாய் கட்டி இழுத்து இல்லம் அடைந்தபோது இரவு மணி 8:00. குழந்தைகள் ஆவலுடன் கட்டியணத்தபோது இன்பத்திற்கு பதில் லேசான எரிச்சல்தான் வந்தது. அம்மா சமைத்தது போரடிக்கிறது என்று குறை வேறு. அவசரமாய் கைகால் கழுவி, வாடகை டாக்ஸி பிடித்து அருகேயிருந்த ரெஸ்டாரண்டில் மதியம் போல் அறுசுவை உண்டி (?)அருந்தி இல்லம் திரும்பும்போது செல்போன் சிணுங்கியது. ஆப்-ஷோர் (அட இந்தியாங்க...) லின்க் வேலை செய்வதாகவும், ஆனால் சர்வர்களை அணுக முடியவில்லை என்ற மிக நல்ல செய்தி சொன்னார்கள். நள்ளிரவு ஆந்தையாய் செய்வன திருந்தச் செய்து விட்டு படுக்கையை அடைதால் திருமதி நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள்.

அப்புறமென்ன...கடவுளை திரும்பி அழைத்து, "சாமி அவசரப்பட்டுட்டேன். அவா அவா இடத்திலேயே நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். மாத்தி வுட்டுடுங்க ராசா" என்று வேண்டுகோள் வைத்தார்.

கடவுளும், "மாற்றி விட ஆசைதான். ஆனால் இன்றைக்கு உனது வேலையில் மிகவும் மனம் மலர்ந்த வெள்ளைக்கார மேலாளர், காண்டிராக்டை நீட்டித்து விட்டார். ப்ராஜெக்ட் முடியும்வரை உன்னை மாற்ற இயலாது. மன்னித்துவிடு மகராசி" என்றபடி மாயமானார்.

பி.கு. 1. Praise thy Lord and do not have wisecracker ideas.
பி.கு. 2. வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண்களுக்கான படிப்பினை இதுவல்ல...

Friday, June 18, 2004

கதை : பகுதி - 1

பெண்ணாகிய ஆண் (கேட்ட கதை)


கணவனுக்கு நினைக்கையில் பற்றிக்கொண்டு வந்தது. தினமும் 8 மணி நேரம் அலுவலகத்தில் அல்லற்படுகிறோம். மனைவியோ வீட்டில் ஜம்மென்று வாழ்வதை நினைக்கையில்தான் பற்றிக்கொண்டு வந்தது. உடனே கடவுளிடம், " இறைவா நான் படும் துன்பம் என் மனவிக்குப் புரிய வேண்டும். அதற்காக என்னை பெண்ணாகவும் அவளை ஆணாகவும் ஒரு நாளக்கு மாற்றிவிடு" என்று வேண்டிக்கொண்டான். கடவுளும் ததாஸ்து என்றார்.

மறுநாள் மனைவியான கணவன் எழுந்து, கணவனுக்கு காலை உணவு சமைத்து, குழந்தைகளை எழுப்பி, பள்ளிக்கு தயார் செய்து, காலை உணவூட்டி, மதிய உணவு கட்டிக்கொடுத்து, பள்ளியில் விட்டு வந்து, துணி துவைத்து, இஸ்திரி போட்டு, வங்கியில் காசு போட்டு, மளிகை வாங்கி, பூனை/நாயைக் குளிப்பாட்டி நிமிர்ந்தபோது மதியம் மணி 1:00.

மெத்தையை சரி பண்ணி, கார்பெட் சுத்தம் செய்து, சமையலறை சீர் செய்து, பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு மாலை சிற்றுண்டி கொடுத்து, வீட்டு வேலைக்கு ஒத்தாசை செய்து, இரவு உணவுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பிக்குபோது மணி மாலை 4:30.

உருளைக் கிழங்கு தோல் சீவி, மீன் கழுவி, பீன்ஸ் நறுக்கி சமையல் தயார். இரவு உணவு முடிந்ததும் மறுபடி சமையலறையை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவப்போட்டு, துணிகளை மடித்து வைத்து, குழந்தைகளை தூங்க வைத்து ஸ்... அப்பாடா...வென நிமிர்ந்தால் இதோ கணவன். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோடா செல்லம் என்று ஒருவழியாய்.... இணைந்தார்கள்.

விடிந்தும் விடியாததுமாய் மனைவியாய் மாறியிருந்த கணவன் கடவுளிடம், "மன்னிச்சுக்கோங்க பாசு. செய்வது அறியாமல் சிறுபிள்ளைத்தனம் செய்து விட்டேன். மனைவி மேல் இனி பொறாமைப்பட மாட்டேன். ஒரு நாள்லேயே பெண்டு கழண்டு-டுத்து. மறுபடியும் மாத்தி வுடுங்க சாமி"னு கெஞ்சினான்(ள்).

கடவுள்," இது உனக்கொரு நல்ல படிப்பினை. உனை மறுபடியும் மாற்ற ஆசைதான். ஆனால் அதற்கு நீ இன்னும் 9 மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நீ நேற்று இரவு உண்டாகி விட்டாய்" என்றார்.

பி.கு. பகுதி - 11 வரட்டும் பாசு. அத நானே எழுதி இருக்கேனாம்....
தமிழ் குசும்பு -- தொடர்ச்சி

அதென்னா நெட்ல தேடறதுன்னு நானே ரோசிச்சு எழுதுனது இது:

சிறுவன் (பிறந்து 20 வயது ஆகும் வரை)
இளைஞன் (20 - 25)
கலைஞன் (25 முதல் கல்யாணம் கட்டும் வரை)
வளைஞன் (கல்யாணத்திற்குப் பின் எப்போதும் மனைவிக்கு வளைந்தே இருப்பதால் - 40 வயது வரை)
அறிஞன் (40 - 50)
மூதறிஞன் (50'திலிருந்து ....)
தமிழ் குசும்பு

பெண்ணுக்குப் பல பெயர்கள். நீங்க சொல்றீங்களா? என்னங்க சொல்றீங்க?

சினேகிதி, பாக்யா, தாய் ... அப்புறமென்ன ... அவள் விகடனா? நாசமாப் போச்சி.

குமரி, மங்கை, நங்கை, அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, பேரிளம்பெண் என ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பெயர்.

அது மாதிரி ஆம்பளைங்களுக்கும் உண்டான்னு தெரியலை. நானும் நெட்டிலே தடவிப் பாத்துட்டேன். கிடைக்கிறவா சுட்டியோட குடுங்கோ !!! புண்ணியமாப் போவும்.
ஆங்கிலக் குசும்பு

அந்த ஆங்கிலப் பாடல்:

Jack and jill went up the hill
to fetch a pail of water
Jack fell down and broke his crown
and jill came tumbling after!!!

கண்டு பிடித்த துக்காராம் அண்ணாவுக்கு ஜே! ஆமாம் துக்காராம் உங்களுக்கு தமிழ் தெரியுமா?

Tuesday, June 15, 2004

ஊமைக் குசும்பு

சிறிய குக்கிராமத்தில் (யோவ் குக்கிராமம்னாவே சிறுசாதானே இருக்கும்...) புதிதாய் வந்த பாதிரியார் தேவாலயத்திற்கான வழியை ஒரு சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் வழி சொன்னான். பிறகு பாதிரியார் சிறுவனிடம், அன்றிரவு பெற்றோர், நண்பருடன் தேவாலயத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். வியப்புடன் சிறுவன் எதற்கென வினவ, பாதிரியாரும் ,"அனைவருக்கும் சொர்க்கத்தின் வழி சொல்லிக் கொடுத்து பிரார்த்தனை செய்யப் போகிறேன்" என்றார். பதிலுக்கு சிறுவனோ ஆச்சர்யமாய் (குசும்புடன்) சொன்னான், "உங்களுக்கு தேவாலயத்துக்கான வழியே தெரியல..."
ஆங்கிலக் குசும்பு

ஆங்கிலத்தில் புலமை பெற்றவரா? இதோ உங்களுக்கான போட்டி...கீழே தோன்றும் வரிகள் என்னவென்று புரிகிறதா? பதில் நாளைய பதிவில்...

சின்ன க்ளூ: மொவனே இது தெரியல்லன்னா LKG'க்கு கூட லாயக்கில்ல...

Two individuals proceeded towards the apex of a natural geologic protuberance, the purpose of their expedition being the procurement of a sample of fluid hydride of oxygen in a large vessel, the exact size of which was unspecified. One member of the team precipitously descended, sustaining severe damage to the upper cranial portion of his anatomical structure; subsequently the second member of the team performed a self rotational translation oriented in the same direction taken by the first team member.
பள்ளிக் குசும்பு

School Time

Monday, June 14, 2004

கடிதம் எழுதுகிறார்கள் என்று தெரிந்தவுடன்...(ஹி ஹி இதுக்கு மேலே முன்னுரை தேவையா...)

கடிதம் எழுதுபவர்களுக்கு

1. சொந்தமாகக் கடிதம் எழுதுவது, தொடர்ச்சியாக அதை எழுதுவது (கணிணியில் எழுதினாலும்) கைப்பழக்கத்திற்காகவே. மனதுக்கண்ணை சுத்திகரித்துக்கொள்ள ஒரு டெக்னிகல் ஜிகிடி. ஒண்ணரைப் பக்க கடிதம் எழுதியதும் உடன் பிறப்புக்கு கடிதம் எழுதும் கலைஞர் அளவுக்கு கற்பனை வளர்ந்ததாய் நினைக்காமலிருப்பது நலம். ஏனென்றால் கடிதம் என்பது வேறு, மடல் என்பது வேறு.

2. முழு நீளக் கடிதங்களை எழுதுபவர்கள், அடுத்த ஜென்மத்தில் ஆளேயில்லாத ஊரில் பிறப்பார்கள். அப்படியே எழுதித்தான் ஆவேன் என்று அடம் பிடிப்பவர்கள் முதலில் கடிதம் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். குணா படக் கமல் மாதிரி கண்மணி என்று கண்ட-மேனிக்கு எழுதி கழுத்தறுக்காதீர்கள்.

3. வெறும் ரஜினிகாந்த் தம்மடிக்கிறார், ஷாரூக்கான் தண்ணியடிக்கிறார் குறித்துமே அடிக்கடி கடிதம் எழுதி கடிக்காதீர்கள். அஜீத் ரேஸ் கார் ஓட்டுகிறார், விஜயகாந்த் தமிழ்க் கடவுள் ஆகிறார் என்ற சரித்திர நிகழ்வுகளையும் கடிதத்தில் பதியலாம்.

4. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் நீங்கள் கடிதம் எழுதாவிடில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடுவதில்லை. எழுதுங்கள், எதையாவது எழுதுங்கள். எழுத எதுவுமே இல்லாவிட்டாலும் கடிதம் ஒன்றையெடுத்து பிள்ளையார் சுழி மட்டுமாவது போடுங்கள் என்று நான் எங்காவது கூறியிருந்தால் அதை மறந்து விடுங்கள். பதில் கடிதம் எழுதி மானத்தை வாங்காதீர்கள்.

5. சம்பந்தப்பட்டவர்கள் நம் கடிதத்தைப் படிக்கிறார்களா என்று பார்க்க, தொடர்ந்து கடிதம் எழுதிக் குடைய வேண்டாம். அக்நாலட்ஜ்மெண்ட் கிடைத்தால் கடிதம் தபால்காரரை விட்டு உரியவரிடம் சேர்ந்ததாய் மட்டுமே பொருள். படித்தார் என்று அர்த்தமல்ல. கிடைப்பது வேறு. படிப்பது வேறு.

6. விகடன், குமுதம், ஹிந்து, தினமணி போன்ற பத்திரிக்கையிலிருந்து வரும் செய்திகளைப் படித்து உணர்ச்சி வசப்பட்டு குப்ஸாமிக்கும், கோயிந்தசாமிக்கும் கடிதம் போட்டு கலவரம் செய்யாதீர்கள். வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் உங்கள் குழாயடிச் சண்டையை வைத்துக் கொ(ல்ல)ள்ளவும்.

7. எந்த சப்ஜெக்டிற்காக கடிதம் எழுதுகிறோமென கடிதத்தின் மேலேயுள்ள சப்ஜெக்ட் லைனை ஒருமுறை படித்து விட்டு எழுதவும். உதாரணத்திற்கு "ரஜினிக்கு சப்போர்ட்டா?" என்ற சப்ஜெக்டில் நீங்கள் "சப்போட்டா" பழம் சாப்பிட்ட கதையை அவிழ்த்து விட்டு நாறடிக்காதீர்கள். மீறி ஏதாவது உ(கு)ரை க்க விரும்பினால் "என் ரசனை எல்லைக்கு வெளியே" என்று பிளாக் தொடங்கி, மூப்பண்ணா என்ற முகமூடிப் பெயரில் சல்பேட்டா கதைகளைக் எ(கெ)டுத்து விடுங்கள்.

8. கனவில் கலைஞரிடம் பேசினேன், போனில் புஷ்ஷ¤டன் குலவினேன் போன்ற புருடா சமாச்சாரங்கள் அறவே வேண்டாம். அப்போது யாராலும் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், "மவனே (கட்டளைப்) பதிவுகளில் வெக்கறேண்டி" என்று செய்து காட்டுவது திண்ணம்.

9. மடற்குழுக்களில் கடிதம் போடுவோர் கவனிக்க. மடலாடற்குழு விவாதங்களுக்கு மட்டுமே. "மடல் போட்டு ஆடும் குழு" என்று தவறாக எண்ணி வேட்டி உருவி ஆட்டம் போடாதீர்கள்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதினார் --- செய்தி
பரி ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதினார் --- குசும்பு
அதென்னப்பா அன்புமணி மட்டும் தான் கடிதம் எழுதமுடியுமா எனறு இணைய பிரபலங்கள் இதோ புறப்பட்டு விட்டார்கள்.

உ(ஊ)தாசீனம்

எனக்கு எத்தனை வேலை இருக்கு செய்ய
எனக்கென்ன ஆயிரம் கையா இருக்கு?

யாருக்குத்தான் சிகரெட் புடிக்குது
பொல்லாத சிகரெட்
அளவுக்கு மீறி ஊதினால்'னு சும்மாவா சொன்னாங்க
உதட்டை கருப்பாக்குற அளவுக்கு ஊதணுமா?

எல்லாத்தையும் சேத்து வச்சி மொத்தமா ஊதிடுவேன்

குட்ஸ் டிரெயின் அடுப்பு கூட அதைத்தான் பண்ணுது
வெந்துச்சோ வேகலியோ ஊதிட்டுப் போயிடும்
அதுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

நோ ஸ்மோக் வித் ஔட் பயர் இல்லியா?

இதவிட மலிவான சிகரெட் கெடைக்கிறது கஷ்டம்
உங்களோட பஞ்ச் டயலாக்குகளைப் புரட்டிப் பாருங்கள்
ஓ அது முடியாது. பட்டியல் இருந்தாத்தானே?
நான் வேணும்னா போட்டுத் தர்றேன்
----
தேவையான நேரத்துல
தேவையான எடத்துல

சிகரெட் சக-வாசமே வேண்டாம்னு நெனச்சா
மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டுப் போங்க
----
எனக்கும் வேலை இருக்கு

அன்புடன்,
பரி.

பி.கு. பரியார் என்ன சொ(ஜொ)ல்ல வருகிறார் என்று சுத்தமாக புரியாத திரு. ரஜினிகாந்த் அவர்கள் தனது ஜக்குபாய் படத்தின் வசனப் பொறுப்பை பரியாரிடமே கொடுத்து விட்டாராம்.

கடிதக் குசும்பு தொடரும்...

Friday, June 11, 2004

நெஞ்சு பொறுக்குதிலையே

எந்த நேரத்துல எழுதினேனோ? அடுத்தவரை காயப்படுத்தாமல் எழுதுவேனென்று...ஆடு துப்பிய ஐயனாராய், சைவமாகவே எழுதுவேன் என்று சங்கல்பம் செய்த என்னை "கைமா" கவிதை எழுத வைத்தவரை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதிலையே...(ஒரு வேளை ஐயனாரோட சாபமோ?)


இணையத்திற்கு நான் வந்தது நிறைய எழுத, நிறைய நட்பு சேர்க்க...சாடி எழுதி சங்கடப்படுத்தவோ, பின்னோட்டமாய் குத்தி காயப்படுத்தவோ கண்டிப்பாக இல்லை. இணைய நட்பானது, பள்ளி, கல்லூரிக்குப் பிறகு எனக்கு கிடைக்கும் உண்மையான நட்பு. சந்தர்ப்பவாதத்தாலும், போலி நட்பாலும் அலுவலகத்தில், பிழைக்க வந்த சமூகத்தில் அல்லற் பட்டு, சற்றே நிம்மதியாய் என் காற்றை சுவாசிக்க வந்தால் அதிலும் நச்சுக் கலக்க முயற்சி நடக்கிறது.

நட்பு நாடி வந்தால், முகமூடியுடன் ஏன் நடமாட வேண்டும்? நல்ல கேள்வி. என்னைப் பொறுத்தவரையில் நாமனைவரும் ஒவ்வொரு வகையில் முகமூடிகள் தாம். இணையத்திற்கு முன்னமே, நேரிடையாக அறிமுகமான ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஒரு வகையில் எனக்கு முகமூடிகள்தான். வலைப்பதிவில் தனது நிழற் படம் பதிந்திருந்தாலும்...நம்மை இணையத்தில் இணைப்பது நமது எழுத்துக்கள்தான். முகமே தெரியாதபோது முகமூடி போட்டு எழுதினால் (இங்கு நான் குறிப்பிடுவது சைவ எழுத்தை) என்ன தவறு?

என் எழுத்தை தீர்மானிப்பவர் யார்? பா ரா குறிப்பிடும் ஜெயக்காந்தனே, பெரியார் சொன்னதற்காக எழுதமுடியாது என்று பெரியார் முன்னமே கூறியதாய் நினைவு. பா ரா பற்றி எழுத வேண்டும் என நான் நினைத்தால் அது அவரே விரும்பாவிடினும் எழுதுவேன்.

பா ரா வின் கருத்துக்கள் பிடிக்கவில்லையெனில் சாதாரணமாக விட்டு விடவேண்டியதுதானே என்று பலரும் அபிப்ராயம் சொல்கின்றனர். பா ரா கூறியது சாதாரணமல்ல சதா-ரணம். நான் ஒன்றும் ஆன்மீகவாதியல்ல (உபயம்: ரஜினி ஐய்யா). காந்தி+புத்தன் வேடம் போட்டு பம்மாத்து காட்டமாட்டேன். (நன்றி: பெயரிலி ஐய்யா). நான் ஒரு சாதாரணன். சதா ரணம் கிளப்புகின்றவரைப் பார்த்தால் உச்சந்தலையில் நச்சென்று சப்பாத்தால் மொத்தத்தான் தோன்றுகிறது. அதை விடுத்து மோதிரக் கையால் (பா ரா'வால்) குட்டுப்பட்டேன்னு பெருமையா எடுத்துக்கறவா எடுத்துக்கோங்க. அது அவா அவா தனிப்பட்ட விருப்பம். இதற்கு கட்டளைகள் ஏதும் கிடையாது.

சாதிகள் இல்லையடி பா(ரா)ப்பா. எழுதுவதை தொழிலாய் நினைப்பவர், "எழுத்தாளர்" சாதி கண்டீரல்லவா? இணையநாயகத்துள் (ஜனநாயகத்திற்கு இணையம் போட்டால்) எல்லோரும் ஒரே சாதியே...ஆம் நாமெல்லாம் எழுத்தாளர்களே...யார் விரும்பினாலும் பா ரா விரும்பாவிட்டாலும்...

வாழ்க இணையநாயகம் !!!

Thursday, June 10, 2004

போட்டிக் குசும்பு

Kiran1

நர்சரிப் பாடல் தானா யென ஏங்கியவர்க்கு இதோ..."சினிமா பாடல்". கரோகி வசதியிருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

இப்பாடலில் ஒரே ஒரு வரி மட்டும் ஒரிஜினல் வரி. அதைக் கண்டுபிடித்தவர்க்கு பரிசாக...(பாடல் முடிவில்)

திருடா...(திருடியில்லை...)

ராசா ராசா ... யென் ராகவ ராசா
தனியே புலம்புற ரோசா
கொஞ்சம் மூடிக்க ராசா

ராகவ ராசா ராகவ ராசா
எனக்கு குடைச்சல் குடுக்காதே
வலையில ஜோரா வலையில ஜோரா
கட்ளை போட்டுக் கொல்லாதே
உன் இணையப் பதிவுல, இணையப் பதிவுல
திட்டு திட்டு திட்டு திட்டாதே
என் ப்ளாகு பதிவுல எளுத்து ஸ்டைலுல
குத்தம் கூறி ஊர கூட்டாத

ராகவ ராசா ஆஆஆ ராகவ ராசா

குல்லா யே குல்லா யே குல்லா போடு குல்லா...(2)

என்னை குன்ன வைச்சி உன்ன முன்ன வைச்சி
சும்மா குன்சு வுட்டீயே வுட்டீயே வுட்டீயே
பொய்ய நிறைய வச்சி போலி வேசம் கட்டி
உன்னை உணர வச்சீயே வச்சீயே வச்சீயே
ஹே ஆப்போடு ஆப்பா அடிக்கவெச்ச
என்னை யென் வேலையெல்லாம் மறக்கவச்சே
ஹே ப்ளாக்கோடு ப்ளாக்கா துறந்து வைச்சேன்
உனன பெரியாளா நினச்சு எழுத வச்ச
அயெ அழுக்கெல்லாம் உனக்குள்ள தங்க வெச்ச
புது அழுக்கெல்லாம் உனக்குள்ள தங்க வெச்ச
அட அதுக்குள்ள எதுக்கு நீ என்னை வச்ச?

ஹே ராசா ராசா ராசா ராகவ ராசா
லூசா லூசா லூசா போகுற லூசா

நெஞ்சம் எரிய வச்சி கொஞ்சம் புரிய வச்சி
என்னை எழுத வச்சீயே வச்சீயே வச்சீயே
ஹா சந்தி சிரிக்க வச்சி, மந்தி குணத்த வச்சி
உம்மூஞ்சி தெரிய வச்சீயே வச்சீயே வச்சீயே
ஹே உறையாத தயிரை கடைஞ்சு வச்ச
என்னை ஆப்பண்ணா போல எழுத வச்ச
ஆத்தாடி நீதான் அனுபவிச்ச
என்னை முகமூடி போட்டு பதிய வச்ச
இணையம்மே உனக்குன்னு எழுதி வச்ச (2)
யென் ப்ளாக்கை அதுக்குள்ள அடங்க வச்ச

ஹே ராசா ராசா ராசா ராகவ ராசா
லூசா லூசா லூசா போகுற லூசா (2)

பினா குனா (பின் குறிப்பு)

...பரிசாக "பாரா"வுதீனின் ஆயிரம் கட்டளைகள் புத்தகம் இலவசமாத் தரப்படும்...அப்புறம் படத்துல இருக்குறவங்க என்னோட மனச "திருடி"னவங்க.

Wednesday, June 09, 2004

Nursery Padal
PAA RAA PAA RAA
Have you any Flaws?
Yes Sir Yes Sir
Nine Super Laws
None for my Sponsor
None for myself
Nine for the littleboys
who write in the net !!!

சே...சின்னபுள்ளத்தனமா இருக்குதே...

Monday, June 07, 2004

பு(ப)டிக்காத கட்டளைகள் - 9

அதென்ன 9 கட்டளைகள் கணக்கோ...பா.ரா.வின் பக்கம் படியுங்கள்.

நம்பர் பக்கத்துல பா ரா வின் கருத்துக்கள் (சின்னதாய்). அப்புறம் நம்ம மறுமொழி (in bold text)...

1. சொந்தமாக வலைப்பதிவு வைத்துக் கொள்வது, தொடர்ச்சியாக அதில் எழுதுவது எல்லாம் கைப்பழக்கத்துக்காக (???) மட்டுமே...எழுதிக்கொண்டிருப்பது வேறு. எழுத்தாளராக இருப்பது வேறு.

யெப்படீங்க பாசு? எப்பத்தான் எழுதிகொண்டிருப்பவரெல்லாம் எழுத்தாளராவது? இப்போ உள்ள எழுத்தாளரெல்லாம் முன்னாள் ஏன் இன்னாளும் எழுதிக்கொண்டிருப்பவர் இல்லையா?
2. முழ நீள கவிதைகளை வலைப்பதிவுகளில் இடுபவர்கள், அடுத்ததற்கு அடுத்த ஜென்மத்தில் (இழவு இதுவும் என்ன கணக்கோ) பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள்...

பெரிய, பெரிய கவிஞ்சர்கள் யாஹ¥ குழுமத்தில் டார்ச்சர் குடுக்கிறதுனாலதான் மத்த எழுத்தாளர்கள் (பா ரா ஒத்துக்கலனாலும்) வலைப்பதிவிற்கு வந்தார்கள். கவிதைகளை எப்படி எடை போடுவது? முழ நீளமா இருக்கக்கூடாது. சரி...மத்தவங்களுக்கு புரியாமலும் இருக்கணுமா? தகுதி யென்னா பாசு?
3. நீங்கள் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்து ஏராளம் பெறுதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்...

வலைபதிவுல முக்காலே மூணு வீசம் கணிணியோட சம்பந்தப் பட்டவர்கள். யோசிச்சுப் பாருங்க பாசு...வலைபதிவை மைக்ரோஸாப்ட் மேனுவலா மாத்திப்புட மாட்டாங்களா? 24X7 ஆபீஸ¤லயும் கணிணி...வலைப்பதிவுலமா? வுடு ஜூட்டு...
4. ஒரு நாள் ...வலைபதியாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்துவிடாது...

இதுக்கு ராஜா தனது மறுமொழியிலேயே மானத்தை வாங்கிட்டாரு. படிங்க பாசு வலைப்பூவில் பா ரா வின் கருத்துக்கள்

5,6 டிராக் பேக், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், மூத்திர சந்துகள்...

நல்ல கருத்துக்கள். ஆனா ஒரு Common Minimum Programme போட்டுத் தந்தேள்னா நன்னா இருக்கும்.
7. பிரபலங்களை தாக்குவதற்கும், பொத்தாம் பொது அபிப்பிராயங்கள் சொல்லுவதற்கும் வலைப்பதிவுகளை பயன்படுத்தாதீர்.

உங்க பதிவைப் படிச்சு விமர்சனம் பண்ண உரிமை இல்லையா? அப்புறம் ஏன் மறுமொழி வசதி? 400 கேரக்டருக்கு மேல மறுமொழி குடுக்க முடியதவா என்ன செய்வா? ஏங்க நானும், படிக்க வருபவர்களும் அந்தரங்கமா பிரபலங்களைப் போட்டுத் தாக்க (இந்த மாதிரி) பயன்படுத்தக் கூடாதா? (ஆமாம் அதென்ன 138வது வட்டப் பொதுகூட்ட மேடை...???)
8. சக வலைப்பதிவுகளிலிருந்தும் தமிழ் இணையதளங்களிலிருந்தும்....எழுதாதீர்கள்

பலரும் உங்கள் வலைப்பதிவை "Favourites"ல் போட்டு வைத்துக்கொள்வதில்லை. யார் கண்டது? எனது வலைப்பதிவு கண்டு அங்கு வருபவரும் இருக்கலாம் (அட ஒரு பேச்சுக்குத்தாங்க...)
9. வெப் கவுண்ட்...மிகப் பெரிய மாயை...

அட...இது நம்ம டெக்னிகல் குசும்பு. ஐயா வெப் கவுண்ட் ஒரு டானிக் மாதிரி. எங்களுக்குத் தெரியும். நாங்க பப்ளிஷ் பண்ணி சைட்டை பார்க்கும்போதே ஒரு கவுண்ட் கூடுமென்பது...அதுவும் ஒரு 50 பேர்தான் சின்சியராக வலைப்பதிகளைப் படிக்கிறார்கள் என்றீர்கள் (திரும்பவும் இது என்ன கணக்கோ...) அப்ப மத்தவாள்லாம் எதுவுமே படிக்காமல் எழுதிக்கொண்டு இருப்பதாய் (அதாவது உங்களைப் பொறுத்தவரையில், உங்களைப் போல் எழுத்தாளர்கள்) சொல்கிறீர்களா?

கடைசியாய் புடிங்க என்னோட விதி:

10. பா ரா போன்ற பெரியோர்கள் அவ்வப்போது இப்படித்தான் கோபமடைவார்கள். என்னடா எல்லோரும் எழுதுகிறார்களே என்றிருக்கலாம் (வார்த்தை விளையாட்டு பாசு). நீங்க தொடர்ந்து எழுதுங்க. யார் கண்டா? உங்களில் ஒரு ஜெயகாந்தனோ, சுந்தர ராமசாமியோ, சுஜாதாவோ பா ரா'வோ (ஏன் குசும்பனே கூட) வெளியே வரலாம். பாரா' வாக வந்துவிட்டால் ஒரு சின்ன விண்ணப்பம். தயவு செஞ்சு வெறுமனே எழுத்தாளராய் சேவை செய்யுங்கள். என்னைப் போல் எழுதுவர்களை ஊக்கப்படுத்தாவிடினும், தாக்கியழிக்கப் பார்க்காதீர்கள். பாரா' மல் போய்விடுங்கள்

நொந்து போய்,
குசும்பன்.
வாருங்கள் குசும்புவோம்

ஒரே இரவில் (!) புகழ் (famous Overnight) என்பது இதுதானா? பிளாக் லிஸ்ட்ல இப்போதான் சிவப்பு விளக்கு சுத்துது.

அதுக்குள்ள பல (???) பேரு குசலம் விசாரிச்சுட்டாங்க.

முதலாமவர் சங்கர். இவரே சொல்லிக்கோள்வது போல் இவருக்கு திரு(ட்டு) முகம். ஒண்ணும் தெரியாத பாப்பா...ஆனா ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புத்தகம் படிப்பவர். தேங்கா மாங்கா பட்டாணி வேணுன்னா இவரைக் கேளுங்க...ஸாரி படிங்க...

இரண்டாமவர் பரி. அவரது பதிவில சின்ன குசும்பு செஞ்சேன். நம்ம சைட்டுக்கு (முருகா ... பதிவுக்கு) வந்தார். சூப்பர் குசும்பர்'னு பட்டமும் தந்துட்டார். பெ(ப)ரியவா சொன்னா பெருமாள் சொன்னதா எடுத்துக்கிறேன். அவரோட பதிவு எனக்கு சுரங்கம். வேறெதுக்கு குசும்பு பண்ணத்தான்...

சத்தமில்லாம எட்டிப்பாத்துட்டு எச்சமே (ஹிஹி கமெண்ட்ஸ் பாசு) போடமல் போன குப்ஸாமி, பரியோட பதிவுல எழுதியிருக்கார். இவரோட பதிவைப் படித்தேன். ஆஹா...விவகாரமான ஆளு. சுருக்கமாச்சொன்னா கொடைச்சல் பார்ட்டி. இவரது சென்னைத் தமிழ் பதிவுக்கு நான் அடிமை !!!

திரு வாசன் தனது ஹோம் பேஜே குடுக்கல. குசும்பு செய்வேனோன்னு பயம் போல...இன்னும் எட்டிப்பார்த்தவர்கள் சுந்தரவடிவேல், தங்கமணி, முல்லை, முத்து, சுரேன், கார்த்திக்ரமாஸ், சுரதா, இளையதாசன் இன்னும் பலர் (அதாவது... பலருக்காக காத்திருக்கிறேன்).

சுரதாவோ தமிழில் முதன்முறையாக நான் அறிந்து ஙௌ வன்னா தமிழில் பாவித்த முதல் மனிதர் நீங்கள்தான் அசத்துங்க.. என்று வாழ்த்தியுள்ளார். நன்றி. (பொறுப்பு கூடுதுப்பா)

குசும்பனோட வேலையே யாரையும் காயப்படுத்தாமல் நிறைய சிரிக்கவும், அவ்வப்போது சிந்திக்க வைப்பதும் தான். சிந்திச்சாலும் சரி...சிரித்தாலும் சரி...காயப்பட்டாலும் (அதாங்க அப்பப்போ கடிக்கறதுனால)...கமெண்ட்ஸ் எழுதுங்க...

அப்பத்தான் தெளிவா (?) குசும்பு பண்ண முடியும்.

நன்றியுடன்,
குசும்பன்.

Saturday, June 05, 2004

வெளிநாட்டுக் குசும்பு

பிறக்கும் போதே தெரியாதய்யா...நான் வெளிநாடெல்லாம் போய் வருவேன்னு...இந்த இங்லீஷ் தொல்லை தாங்கமுடியலப்பா. அமெரிக்கா வந்து யெரங்கினதுலேர்ந்து தொல்லை ஆரம்பம். நா வறண்டு போய் ஒரு "Soft drink" கொடுப்பான்ன உடனே ஏற இறங்க பார்த்தாங்க. ஒரு குழப்பமான அமெரிக்கனை/ளை பார்க்க கண் கோடி வேண்டும். அப்புறமாய் ஒரு கோக் என்றதும், ஓ "சோடா"வான்னு எடுத்து கொடுத்தவுடனே நம்ம GAS'ஸ¤ குறைஞ்சிப் போச்சி. Finger Chips வந்து French Fries.

இதை விடக் கொடுமை ஹோட்டல்ல வரவேற்பறை அதாங்க Reception...அதுக்குப் பேரு "Lobby". Varandah வந்து Patio.

ஊர் பேருல இன்னும் கோஜி...எழுதுவது San Jose படிப்பது San Hose, எழுதுவது Tucson படிப்பது TiuSon அநியாயம் பாசு.

சாப்பட்டையும் விட்டு வைக்கல்ல...

எழுதுவது/ படிப்பது
Fajitas/ FaHitas
Tortilla/ Tortia
Quesadilla/ Quesadia
Lasagna / Lasanya

எல்லாம் பத்தாதுன்னு Mexico வாங்க என்ற விளம்பரத்தில் மெஹிகோ என்றார்கள். எழுத்து தேவையில்லைன்னா விட்டுடுங்கப்பா. அங்கங்க அமுக்க (Silent basu), அங்கங்க விலக்க சொல்றீங்க...தட்டிக்கேக்க ஆளில்லாமப் போச்சே...
முரண்பாட்டுக் குசும்பு

1. House Fly ன்னு சொல்லிட்டு தன்னோட வீட்டுக்குள் வந்தா மருந்தடித்துக் கொல்வது.
2. ஆட்டோ வாசகம்: பெண்ணே கடவுள். தாயே தெய்வம். அப்படின்னா தாய் பெண்ணில்லையா? கடவுள்னா தெய்வமில்லையா?
3. BLADE SERVER: ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். யார் இப்படி பேர் வச்சதுன்னு.
4. Don Julio Tequila: தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு மகன் அளிக்கவேண்டும் என்று விளம்பரம் படித்தேன். (மகன் தந்தைக்காற்றும் கடன்...?)
5. Philip Morris: மால்பொரோ உள்ளிட்ட பலதரப்பட்ட (தரமான ???) சிகரெட்டுகளை உலகிற்கு தந்த ஸ்தாபனம். சிகரெட் பிடித்து புற்றுநோய் வந்த மக்கள் போட்ட கேஸில் இன்று கோடிக்கணக்கில் செட்டில்மெண்ட் கொடுத்து தனது வெப் சைட்டில் இன்று சிகரெட்டை நிறுத்தற வழிமுறை சொல்லுது. அட தேவுடா..

Friday, June 04, 2004

குமுதம் குசும்பு

பொழுது போகாத பொம்முன்னு பழைய குமுதத்தில ஒரு கேரக்டர். அதோட பாதிப்பு இன்னக்கி ஜாஸ்தியாயிடுச்சு...

வர வர மக்களுக்கு பொறுப்பு இல்லாம போய்டுச்சு. நம்மள மதிச்சு ஒருத்தர் கடுதாசி போட்டா படிச்சும் பாக்றது இல்ல. பதிலும் போடறது இல்ல. இன்னும் கொடுமை என்னன்னா அதைப்போய் bulk mail, junk mail, spam mail அப்படி யிப்படின்னு திட்டு வேற...

இன்னைக்கு மட்டும் அப்படி யெனக்கு வந்த கடுதாசிகளைப் பற்றி சில வரிகள்:

கேனோன் டிமிட்ட்ரியஸ்: 4% வட்டிக்கு வீட்டு லோன் தறுவதாக வாக்களித்திருந்தார். (இவருக்கு நான் விண்ணப்பம் போட்டதாய் இவரே சொல்லிக்கொண்டார்.)
மெடினா: அதே கம்பெனியிலிருந்து (USA Broker Group) 4.6% வட்டிக்கு லோன் தருவதாக சொன்னார்(ள்). (அடப் பாவிகளா ஸ்பாம்னா இப்படியா?)
நான்னி வெஸ்ட்: அதே கம்பெனி...4% வட்டி
ரால்ப்: ஸ்பாம் மெயிலைத் தடுக்க மென்பொருள் விற்பதாய்க் கூவினார். (டேய்...இதுக்கும் ஸ்பாம்தானா? நான் உன்னக் கேட்டேனா?)
பிரிட்கெட் கிரே: வயாக்ராவிலிருந்து வேலியம் வரை மருந்து வாங்கிக்கோன்னு கூவுறாரு

pres-dctr1
pres-via
இதுக்கு மேல எழுதினா யாரும் படிக்கப்போறதில்ல. ஏன்னா உங்களுக்கும் அனுபவமிருக்கும். ஆனாலும் கொஞ்ஜமாவது ஆராய்ச்சி பண்ணேளா? இதோ சம்மரி:

சைசு(அதோட) பெரிசு பண்ணிக்கோன்னு வந்த மெயிலு - 7 (ஆமாம்...நான் ஆம்பளைன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க?)
மேலும் படிச்சுக்கோன்னு வந்த மெயிலு - 4 (டேய் யெனெக்கே குசும்பா?)
உடம்பைக் குறைக்க சொல்லி வந்த மெயிலு - 4 (ஆப்பு அண்ணெ...இவங்க தொல்லை தாங்க முடியல)
அப்படி யிப்படி படத்தோட "ஹேய்" அப்படின்னு கூவி அழைக்கிற மெயிலு - 8
சப்ஜெக்டு, மேட்டரு இல்லாம 10 மெயிலு
இயற்கை மருத்துவம் பற்றி ஒன்று (abstractiontea partiesbecauseridiculously மருந்து பேராம்...அடக் கடவுளே, அனுப்பியது அல்போன்ஸா கெண்டால்)

நம்மளையும் மனுஷனா மதிச்சு கடுதாசு போட்டவாளை என்னன்னா பண்றது? (பல்லை நறநறன்னு கடிக்கா-தேள்)

Wednesday, June 02, 2004

பள்ளிக் குசும்பு (இது கேட்டது)

கணக்காசிரியரோ ஒரு மலையாளி (மலையாளிகள் மன்னிக்கவும்). பாடம் யெடுப்பதோ நார்த் இந்தியா. ஒரு சுலபமான கணக்கைப் போடத் தெரியாத மாணவனை ஆங்கிலத்தில் (மலையாள) வாடையுடன் திட்டினார் "சச் யெ சிம்பிள் பிராப்ளம். யு காண்டு". மாணவன் முகம் இருண்டது.

திட்டியதில் கடைசி வார்த்தை ஆங்கிலத்தில் "Can't Do". ஆனால் ஹிந்தியிலோ *****
அலுவலக குசும்பு - 2

(இதுவும் ஙௌப்ரானே சத்த்¢யமாய் நடந்த உண்மை)

இது இந்திக் குசும்பு தலைவா

பேக்கிரவுண்டு யென்னான்னா, ஆபீஸானது ரெண்டு மாடி கட்டிடம். இடமோ நார்த் இந்தியா. மேனேஜருக்கு ஹிந்தி கத்துக்குற காலம். ஹிந்தி மட்டுமே தெரிஞ்ச பியூன். ஆஹா யென்னே காம்பினேஷன்?

இப்போ நடந்ததைப் பாப்போம்.

ரெண்டாம் மாடி ஆபீஸ¤ல இருக்கிற மேனேஜர் பியூனக் கூப்பிட்டாரு.

மொதோ மாடியில இருக்கிற டாகுமெண்டேஷன் ரூமத் தொறந்து வை. நான் வந்து டாகுமெண்டை யெடுத்திக்கிரேன்னு ஸொல்லணும்.

ஏகத்துக்கு ரோசிச்சு மேனேஜர் சொன்னதை ஹிமிழ்'ல (ஹிந்தி + தமிழ்) சொன்னா, "தும் நீச்சே ஜாக்கே கோள்கே பேட்டோ. மே ஆக்கே லேத்தாஹ¤ம்"

பினா.குனா. (பின் குறிப்பண்ணா..): ஹிந்தி தெரியாதவா, தெரிஞ்சவாக்கிட்ட கேக்றப்போ சர்வ ஜாக்கிரதையா அர்த்தம் கேளுங்கோ. இறுக்கியணைச்சு ஒரு உம்மா தரணும்'னு கேட்ட முத்து ரஜினி மாதிரி ஆய்டுவேள்.
அலுவலக குசும்பு - 1

(ஙௌப்ரானே சத்யமாய் நடந்த உண்மை)

இது இங்லீஷ் குசும்பு...

ஒரு அருமையான பார்டிப்பா (தப்பாயெடுக்கவேணாம்...). மேனேஜர் ஒர்த்தர். வாயை தேவையேயில்லாம திறக்கும் ஆசாமி. பரி ஸார் சொன்ன "கோக்" குடிச்ச்¢ப்பிட்டு பே(த்த)ச ஆரம்பிச்சாரு.

கண்ணாலம் கட்டிட்டு குயந்தை குட்டி இல்லாத ஒரு சோடி பார்டியில இருந்துச்சு. அந்தப் புருஷனோ பாவம் யென்னோடயும், மேனேஜர் பக்கத்துலயும் இருந்தாப்ல. அவரோட ஸம்சாரம் வேறொருத்தரோட குயந்தையை தூக்கி கொஞ்சிக்கினு தூரத்துல போச்சி.

அந்தப் பையனைப் பார்த்து திடீர்னு மேனேஜர் "Your wife is carrying a baby"ன்னாரு.

நம்ம குசும்பு சும்மா இருக்குமா?

"Boss be careful. Your statement has another meaning altogether" ன்னு பீட்டர் வுட்டேன்.

உணர்ந்து பார்த்த மேனஜர் சொன்னது "No... No... No... She is carrying somebodyelse's baby"

நான் துண்டைக் காணோம் துணியைக் காணோனு அப்பீட் வுட்டேன்.

பினா.குனா. (பின் குறிப்பண்ணா..)
சங்கரு அப்பீட்'னா யென்னானு கேக்காதீக...
குசும்பப் படிச்சவா உங்களோட அனுபவத்தை ஸொல்லுங்கோ.

Tuesday, June 01, 2004

நாரதர் குசும்பு

Sify'யில் கடந்த புதனன்று (26 மே 2004'ல்) வந்த தலைப்புச் செய்தி:

Girls on top in CBSE Class XII exams

Girls once again stole a march over boys in terms of results. Of 387,774 students who appeared in the Senior School Certificate Examination across the country this year, 76 per cent passed, an increase of 2.41 per cent from last year, Central Board of Secondary Education (CBSE) Chairman Ashok Ganguly said. The percentage of girls who cleared the examination was much above that of boys - 82.28 per cent as compared to 71.29 per cent.

இதிலென்ன புதுசு? ஆமாம்...இனிமேலாவது கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு, கல்வியறிவை பயனுள்ள வேலையா மாத்துவீங்களா? இல்லை பட்டம் வாங்கியவுடன் கல்யாணம், குழந்தை குட்டின்னு செட்டில் ஆயிடுவீங்களா? அந்த மாதிரி செய்யாதீங்க...ப்ளீஸ்...

ஒரு மார்க் ரெண்டு மார்க்ல, நினைத்ததை படிக்காமப் போன கல்லூரி மாணவர்/மாணவியர் எத்தனைப்பேர். அதில் குடும்பத்த தனது பட்டப் படிப்பால் வேலைக்கு போய் காப்பாற்ற வேண்டியவங்க எவ்வளவு பேர்? அவர்க்கு நீங்கள் துரோகம் செய்தது போலாகாதா?

நல்லாப் படிங்க...படிச்சதைப் பயன்படுத்துங்க...

(ஆகா பத்த வைச்சுட்டேனே... படாதபாடு படுத்திடாதீங்க)

குசும்பு தொடரும்...
கணிணிக் கவிராயர் குசும்பு

மென்பொருள் தரம்

ISO ன்னாங்கோ
SEI ன்னாங்கோ
CMM ன்னாங்கோ
CRM ன்னாங்கோ
இப்போ புச்சா
ஆறுச் சிக்மாவாம்
சாமிப் படம் பார்த்திருப்பாளோ?
இரவல் குசும்பு

நெட்டிலே பாத்ததுங்கண்ணா:

மரியன்னை

mother-mary
காதல் குசும்பு

நிலாக் காதலி
கண்ணாலம் கட்டினாள்
அம்மாவாசை (அம்மாம் ஆசை)
Top 10 - மற(றை)க்கப்பட்ட குசும்புகள்

ஓ.பி. பன்னீர் செல்வம்: முதல்வர் நாற்காலியோடு மறக்கப்பட்டவர்
அத்வானி: ரதத்தால் மறக்கப்பட்டவர்
மோடி: ரத்தத்தால் மறக்கப்பட்டவர்
ரஜினி: வா(சா)ஸ்யோடு மறக்கப்பட்டவர்
ஜெயலலிதா: நாற்பது இடங்களில் மறக்கப்பட்டவர்
கருணாநிதி: காவியோடு மறக்கப்பட்டவர்
நெடுஞ்செழியன்: எப்போதும், எல்லோராலும் மறக்கப்பட்டவர்
சந்திரபாபு: ஹைடெக்கோடு மறக்கப்பட்டவர்
மக்கள்: Exit Poll'ஓடு மறக்கப்பட்டவர்கள்

என்னடா பத்துன்னு சொல்லிட்டு ஒன்பது குசும்புதானான்னு நீங்க கேட்டீங்கன்னா...சபாஷ்...உங்களை சீரியஸா எண்ண (double meaning anna) வைப்பதுதான் இந்த குசும்பனின் எண்ணம்.
சினி குசும்பு - 2

சந்தேகம்

அருமையான கருத்துக் கொண்ட
அன்பே சிவம் தோக்குது
முனா புனா கேனா புனா
சாமி அருள் புரியுது

தரமான திரைப்படம் என்னா?
தமிழன் நிலை குழப்புது

ஏகமா எதிரு பார்த்த
திருடா திருடி ஏச்சுது
அட்ரா சக்கை அப்படின்னா
ஆட்டோகிராபும் கெலிக்குது

தரமான திரைப்படம் என்னா?
தமிழன் நிலை குழப்புது
சினி குசும்பு - 1
தங்கர் ஆட்டோகிராப் பற்றி விமர்சனம் செய்கிறார்:

இப்பல்லாம் என்ன படம் எடுக்கிறாங்கெ? தமிழ்ப்படத்துக்கு தமிழ் பேரே கிடையாதா? இல்லை கிடைக்கலியா? சரி அதை உடுங்க...உருப்படியான கதையே கிடைக்காதா? இல்லை கிடைக்கலியா? சரி அதையும் உடுங்க...ஒரு லாஜிக் வேண்டாம். ஹீரோ எங்க போனாலும் காதலிச்சுக்கிட்டே இருக்காரு. ஏதோ என் கடன் காதலித்துக் கிடப்பதேங்ற மாதிரி. தமிழனாய்ப் பிறந்ததுக்கு ஒரு விவஸ்தை வேணாம். யதார்த்தம் வேணாம். கூட வேலை பாக்கிறவ அடா-புடா'ங்றா பத்து பேர் முன்னாடி கை நீட்டி அடிக்கிறா. இதை தமிழனும் ரசனை கெட்டுப் பார்க்கிறான். எல்லாம் என் போறாத நேரம். இந்தக்கருமத்தையெல்லாம் நான் விமர்சனம் வேறு பண்ண வேண்டியிருக்கு.
டெக்னிகல் குசும்பு

கியாஸ்'ல (அதாங்க அமெரிக்காவுல பெட்ரோல்) ஓடற வண்டி, கியாஸ்'ல (அதாங்க நம்ம ஊர் இயற்கை வாயு) ஓடற வண்டி பாத்திருப்பீங்க. ஆனா கியாஸ்'ல பாதி, கியாஸ்'ல மீதின்னு ஓடற வண்டி பாக்கப் போறீங்க...

வெல்கம் டு ஹைப்ரிட் கார்/வேன். விரைவில் ரிலீஸ்...

இந்த புது வண்டி கிளப்பும் மாசும் கம்மியாம், குடிக்கும் கியாஸ¤ம் (பெட்ரோல்) கம்மியாம். இந்திய பெட்ரோலுக்கு நிகரா இப்போ அமெரிக்க பெட்ரோல் விக்க, பார்த்தாங்க கார் கம்பெனிக்காரங்க. ஹைப்ரிட் கார்/வேன் வாங்குங்க...பெட்ரோலுக்கு கம்மியா செலவு பண்ணுங்கன்னு...விளம்பரம் பண்ண...அட்வான்ஸ் புக்கிங் இப்போ அள்ளிக்கினு போவுது.

C.N.N.'ல ஒரு கணக்கு சொன்னாங்கோ...குத்து மதிப்பா ஒரு ஹைப்ரிட் கார் $6,400, சாதாரணக் காரை விட விலை அதிகமாகம். ஒரு வருஷத்துல சுமார் 30,000 மைல் ஓட்றவங்க, இன்னைய பெட்ரோல் விலைல, வருஷத்துல $400 மட்டுந்தான் மிச்சம் படுத்த முடியுமாம். அப்போ 6 வருஷம் கழிச்சுத்தான் போட்ட அதிகமான பணத்தை மீட்க முடியுமாம்.

ஆறு வருஷத்துல மினிமம் மூணு புது காரு மாத்துற ஆளுங்க காதில, பூம(மா)லையே போடுற இந்த பாழுங் கதைய எங்கன சொல்ல?