Sunday, March 19, 2006

**நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு**


இனியவை 'நான்கு' இன்னாதவை 'நாற்பது'ன்னு வைத்தியர் தம்பி ரேசுநாதருக்கு பதில் எழுதோணுமின்னு காத்திருந்தா தோடான்னு முகமூடித் தம்பி சரக்க எடுத்து வுட்டிருக்கு. ஆஹா 12'வது லீவிலேயே பிஞ்சிலேயே பீரா'ப் போனவருன்னு தெரியாம போச்சிப்பா.

நாம ஸ்கோலு முடிச்சி கொஞ்சம் மூணு வருஷம் கழிச்சுத்தான் பீரப் பாக்க முடிஞ்சுது. குளோஸ் பிரண்டோட அண்ணனுக்கு கண்ணாலம் நிச்சயமாச்சுப்பா. அதுக்காக பார்ட்டி கொடுத்தாங்க. வாழ்நாள் முழுவதுவும் "டே ஸ்காலர்" எனப்படும் வீட்டிலிருந்தே செயல்படுபவரின் சோகக்கதை உங்களுக்குத்தான் தெரியுமே. அதுவும் ஒரு காலத்துக்கப்புறம் ஒரே ஊர்ல டெண்ட் போட்டு என் அப்பா உங்காந்துட்டார். அட அங்கன இங்கன டிரான்ஸ்பர் வந்தாலும் வூட்டுக்குப் பெரிய புள்ளய (நாந்தேன்) காவலுக்கு வெச்சிட்டுப் போயிடுவாரு.

ஙௌக்கா மக்கா... ஊர்ல என்னைத் தெரியாத ஆளே இல்லங்ற (அந்நிக்கே புகழ் பெற்ற)நெலம. நம்ம பாட்டி வேற சிட்டுக்குருவி லேகிய காளிமுத்து வைத்தியர் போல ஊருக்கே "உலை" வைக்கிற ஆசாமி. ரசினிகாந்த், பாக்கியராஜ் படங்கள் என்றால் முதல் நாளே துண்டு போடும் ஆள். யாருன்னே தெரியாத பெருசுங்க கூட நம்ம தலையைப் பாத்துட்டாப் போச்சி. "யப்பா ராசா நல்லாயிருக்கியா? பாட்டி நல்லாயிருக்காங்களா?"ன்னு ஒரு பத்து நிமிஷம் பிளேடு கண்டிப்பா உண்டு. இப்பிடி ஆயா பிரண்ட்ஸ், அப்பா பிரண்ட்ஸ், அம்மா பிரண்ட்ஸ், தம்பி பிரண்ட்ஸ் இல்லேன்னா இந்த பிரண்ட்ஸுக்கு பிரண்ட்ஸ்'ன்னு வாழ்க்கையிலே ஒரு "தனிமை"ங்றதே இல்லாமப் போச்சி பாஸு. இதுல தண்ணி எங்க அடிக்கிறது?

ஆனா "பார்ட்டி" சான்ஸை விட முடியுமா? இதோ நீ கேட்ட 'தனிமை' உன்னைத் தேடி வருகின்றது. உள்ளூரிலேயே ஹோட்டல்ல ரூமை புக் பண்றோம். பேர் கேட்ட உடனே ஒரு உடான்ஸ் பேரை சொல்லியாச்சு. என்னமோ நாட்டையே அழிக்க தீவிரவாதத் திட்டம் தீட்டுபவர்களைப் போல ஒரு பீலிங். பீரு பாட்டிலை தூரத்துல பாத்த பார்ட்டியான எனக்கு இப்போ கையில் கல்யாணி (அப்பிடின்னுதான் நியாபகம்). கண்களில் ஆனந்தக் கண்ணீர். "டேய் இவனுக்கு மோந்து பாத்தோன்ன போதை ஏறிடுச்சு பாரு" பக்கத்துல யாரோ கமெண்டு வுட்டதெல்லாம் தெரியாது.

மவனே அரை பாட்டில்தான் உள்ளே போச்சி. அரை மணி நேரம் கழிச்சு டிபன் கொடுத்தாங்க. நம்ம உடம்புல இருக்கிற பயாலஜி கிளாக்குல தண்ணியடிச்சா வாந்தியெடுக்கணும்'னு யாரோ ரவுஸா புரோக்ராம் போட்டு வச்சிட்டாங்க போலருக்கு. பீக் ஸீஸன் குற்றால அருவியாய் எடுத்தேன் எடுத்தேன் எடுத்துக் கொண்டே இருந்தேன். அடப்பாவி நல்ல முட்டை புரோட்டா போச்சேன்னு மனசுக்குள்ள நொந்துக்கிட்டேன். அதுக்கப்புறம் தண்ணியப் பத்தி நான் செஞ்சது வெறும் பேப்பர் ரிசர்ச் மட்டும்தான்.

கல்லூரி வாழ்க்கையில் டூர் போனபோது கூட தண்ணியடிக்கவில்லை. மச்சி பப்(PUB)'புக்கு போயி தண்ணியடிக்கணும் வரியா?ன்னு நண்பர்கள் இண்டீஸண்ட் ப்ரபோஸல் வைத்ததும், கடந்தகால "குற்றால அருவி" ஞாபகம் வர நாசூக்காக மறுத்தேன். அப்புறம் தான் தெரிந்தது. தங்கியிருந்த பெங்களூர் லாட்ஜிலிருந்து ரோடைக் கிராஸ் பண்ணி பப்'க்குப் போயி தண்ணியடிச்சுட்டு பத்திரமாக கூட்டி வர 'எஸ்கார்ட்' ஆகத்தான் என்னைக் கூப்டுறாங்கன்னு. அடப்பாவிங்களான்னு மனசுக்குள்ளே திட்டிக்கிட்டே சிகரெட் புகை, மற்றும் சைடு டிஷ் பதார்த்த சமையலறை புகையுடன் கண்கள் "தீப்பிடிக்க தீப்பிடிக்க" குளிர்பானம் அருந்தி "கொம்பெனி" கொடுத்தேன். மூணு பெக் விஸ்கியில் நண்பனொருவன் "சுயபுராணமே" படித்தான். ஆஹா விஸ்கியின் மாகாத்மியங்கள் என்று புத்தகமே போடலாம் போலிருக்கே என்ற நினைப்புடன் கையேந்தி பவன் இட்லிகளைக் கடித்தேன்.

அதெல்லாம் ஒரு "கனாக் காலம்" பாஸு. ஆனா இன்னிக்கு நம்ம நெலம அப்பிடியா?

டிரிங்ஸ் குறித்து ஒரு பயனர் கையேடு போடுற அளவுக்கு கைவசம் தகவல்கள். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் "அய்யனார் என்ற அடைக்கலம் காத்தவர்" என்ற குல சாமிதான் காரணம். மாட்டுப் பொங்கலன்று சாராயம் வைத்து சாமி கும்பிடுவதுதான் குலவழக்கம் என்று காலம் பிறழ்ந்து அல்லது தாழ்ந்து தகவல் சொன்ன பாட்டியை மனத்துக்குள் சபித்தேன். சரி சரி இப்பெல்லாம் சாராயத்திற்கு எங்கு போவது? சமீபத்து 2005' மாட்டுப்பொங்கல் செலிபிரேஷனில் அய்யனாருக்கு புளு லேபிள் ஸ்காட்ச் விஸ்கி சமர்ப்பணம்.
படையல் முடிந்தவுடன் எங்கே அய்யனார் ஒரு பெக் கேட்பாரோ என்ற பயம் கலந்த அவசரத்தில் புளூ லேபிலைக் என் தொண்டைக்குள் கவிழ்த்தபோது ஆஹா என்னவொரு பரவசம்! இந்த பரவசக் காட்சியைப் பார்க்க பாவம் பாட்டிக்குத்தான் கொடுப்பினை இல்லை. இருப்பினும் பாட்டி நினைவாய் படைக்கப்பட்ட காஞ்சிப்பருத்தி சேலை என்னைப் பார்த்து கண்சிமிட்டுவதாய் தோன்றியது "Blame it on Blue Label" என்று எனக்குத் தோன்றியது. உங்களுக்கு?

2 comments:

ஏஜண்ட் NJ said...

மது பற்றிய ஒரு சிறப்புக் கண்ணோட்டம் இங்கே!! >>> ஜின்னா... ஒயினா... விஸ்கியா?

============

related post:

http://chinnavan.blogspot.com/2006/03/blog-post.html

Anonymous said...

dwevemneframn [url=https://launchpad.net/~codeine-poro]Buy Codeine no prescription[/url] [url=http://wiki.openqa.org/display/~buy-buspar-without-no-prescription-online]Buy Buspar without no prescription online[/url]