Sunday, March 26, 2006

நல்லதோர் கதை செய்தே

* ஏம்ப்பா அந்த புது ஆளு கதை சொல்ல வரேன்னிருந்தானே வந்தாச்சா?
* அய்யா ஆளு ஹாலுல ஒரு மணி நேரமா தவமா தவமிருக்காருண்ணே
* என்னது தவமா தவமிருந்தா? யப்பா தமிழ் சனத்த நம்பி இன்னொரு திரையிலொரு நாவல் எடுக்க முடியாதுப்பா... என்னாப்பா கதை ரெடியா?
* (பவ்யமாக) ரெடி ஸார் சொல்லட்டுமா? ஓப்பனிங் ஷாட் ஒரு பொட்டீக்கடை. ஹீரோ ஸ்டைலா ஒரு டீயை கிளாஸில் குடிக்கிறார்
* ஓகோ கிராமத்து சப்ஜெக்டா? செண்டிமெண்ட் தூக்கலா இருக்கணும்
* அட கவலையை வுடுங்க ஸார். அண்ணன்-தங்கை, அம்மா-மகன்'ன்னு ரெண்டு டிராக்குல ஜமாய்ச்சுடலாம்
* வடுமாங்கா ஸ்டைலுல ஒரு குத்துப்பாட்டு உண்டுல்ல?
* அதில்லாமலா? நயாந்தாராவையோ, சாயாசிங்கையோ போட்டு பட்டய கிளப்பிடலாம். பாட்டு கூட ஹிஹி நானே எழுதிட்டேன்ங்க
* (அப்பாடா பாடலாசிரியர் செலவு மிச்சம்) அது சரி காமெடிக்கு யாரு?
* பழைய ரஜினி டைரக்டர் மனோபாலாவையும், ஹீரோவையும் வைச்சு ஹிட் காமெடி ரெடி ஸார்
* (என்னையா இது எள்ளுன்னா எண்ணெய்யா இருக்கானே!) அது சரி படத்த எப்ப ஆரம்பிக்கலாம்?
* ஸார் இன்னும் கதையைவே கேக்கலியே?
* அட இவ்வளவு நேரம் கேட்டதென்ன? சரி சரி நீ இண்டஸ்ட்ரிக்கு புதுசுதானே. பழகிடுவ. ஆமாம் படம் பேரென்ன?
* UP ஸார்
* அடப்பாவி இப்போது இரண்டுபட்டிருக்கும் தமிழ்க்குடிதாங்கிகளை எம்மூலமா இணையவைச்சுடாதேய்யா...
* ஹிஹி அதெல்லாம் இல்லை ஸார். "உடையார்பாளையம்" டைடில செல்லமா UP. மதுர, சிவகாசி, திருப்பதி அப்பிடியே கொஞ்சம் BF (அ ஆ) செண்டிமெண்டைக் கலந்து வைச்ச டைட்டில் ஸார். A,B,C ஏன் D செண்டர்ல கூட படம் பிச்சிக்கினு ஓடும்
* அதென்னயா D செண்டர்?
* ஹிஹி டப்பிங் செண்டர் சார்
* (அடப்பாவி புதுசாவே இப்பிடி பொளந்து கட்டுறானே) சரி சரி படத்துலயும் இதே வேகத்தைக் காட்டு. என்ன?

(சமீபத்தில் [2006'ல்தான் டோண்டு ஸாரே] ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். தமிழனின் வீக்னெஸே எதையும் திரைப்படத்தோடு ஒப்பிட்டு பேசுவதுதானென்று. நான் ஒத்துக் கொள்கின்றேன். ப(பா)க்காத் தமிழனான நான் திராவிடம் பற்றி திரைப்படங்களில் அறிந்ததுதான் அதிகம். ஏன் பொட்டீக்கடை கூட குறும்படமெடுத்து அடுத்த சந்ததியருக்கு காட்ட வேண்டுமென கூறவில்லையா? இந்தியா ஸ்டோர்ஸில் மெம்பர்ஷிப் கட்டி கையில் தமிழ் டிவிடி எடுத்தவுடன் மனதில் ஓடிய மேற்கண்ட சிந்தனைகளை ஓணர் உடைத்தார்)
* சார் அருமையான படம் இது. என்ன வேணுமா?(முனகியபடி வீக்கெண்டு கெட்டுப்போகாம இருந்தா சரி) (படம்: அழகிய தீயே... பழைய படம்தான்... எல்லாம் உன்கையில்... சரக்கு கெட்டுப்போகாம காப்பாத்து என்று வேண்டியபடி...)

ஒரு பிளாஷ்பேக். பிரகாஷ்ராஜ் என்ற ஒரு குணச்சித்திர நடிகர். கன்னடர் என்று அறிகின்றேன். KB'யைக் குருவாக, தெய்வமாகப் போற்றுபவர். மொழியும், குருவும் இவரைத் தமிழராய்ப் பார்க்க முடியாமல் பலருக்குத் தோன்றினாலும், இவர் தமிழ் திரையுலகிற்கு செய்யும் பணிகள் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை. ஏராளமான இன்றைய டைரக்டர்களுக்கு அவர்கள் கஷ்டப்பட்ட காலத்தில் புரவலனாகவும், கைகொடுத்து தூக்கிவிடும் ஊக்கியாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றார். நல்ல கதைக்காக தானே தயாரிப்பாளராகவும் அவதாமெடுத்தவர். இன்று சினிமாவில் எடுத்த பணத்தை எனக்குத் தெரிந்த சினிமாவில்தானே செலவு பண்ண முடியுமென்று இவர் சொன்னாலும், அதிகமறியப்படாத கலைஞர்கள், கமர்ஷியல் வாடையில்லாத படங்களை எடுக்கவும் ஒரு தில்" (தில்: ஹிந்தியில் இதயம்) வேண்டும்.

அழகிய தீயே படத்திற்கு வருவோம். கோடம்பாக்க கனவுகளுடன் வலம் வரும் நான்கு (சந்திரன், மூர்த்தி, புயல், சித்தப்பா) இளைஞர்கள் (நான்கு மட்டுமா இன்றைய நிலையில்?). ஒரு மெடிக்கல் ரெப் இவர்களது அட்டாச்மெண்ட். மெடிக்கல் ரெப்பிற்கு திருமண நிச்சயத்தைக் கொண்டாட தனது ஆதர்ஸ நண்பர்களை அழைக்கின்றார். அப்பார்ட்டிக்கு டைரக்டர் சந்திரன் (ஹீரோ பிரசன்னா) வரப்போகின்றார் என்று மெ.ரெப்பின் எதிர்கால மனைவி ஆச்சரியப்படும்போது "என்னப் பத்தி என்னா நினைச்சே" என்று கனைத்தபடி மாப்பிள்ளை தொடங்குவது படத்தின் பிளாஷ்பேக்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பதிவுத் திருமணம் செய்து வாழ வேண்டிய கட்டாயத்தில் சந்திரனும், நந்தினியும் (ஹீரோயின் நவ்யா நாயர்). வில்லன் அப்பா (பிரமிட் நடராஜன்)'விடமிருந்து திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பிக்க நந்தினி மெ.ரெப் அண்ணனை நாடுகின்றார். அப்பா தேடிய மாப்பிள்ளை USA Software Engineer'ஆன அரவிந்தன் (பிரகாஷ்ராஜ்). (நம்ம பெரகாசு Software Engineer'ராம். வயசு வித்தியாசம் ரொம்பவே மோசம். அதுவும் மூட்ட மூட்டயா அமெரிக்காவுல பணம் சம்பாதிக்கிறாருன்னு, வில்லனப்பா சொல்லும் போது சிரிப்பு மீறுகின்றது. ஏன்ப்பா LA. Raam'மை இதுக்கெல்லாம் கன்சல்ட் செய்ய மாட்டீயளே :)

மெ.ரப். பிரசன்னாவிடம் ஹீரோயின் திருமணத்திலிருந்து தப்பிக்கும் வழி கேட்க, அவர் பிரகாஷ்ராஜிடம் ஒரு பொய்யான நவ்யா காதல் கதை எடுத்து விட, நல்ல மனிதனான அவர் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்துவிடுகின்றார். பயங்கர பில்ட்-அப்புடன் வரும் பிரமிட் நடராஜன் கேரக்டர் அத்தோடு பணால். கதை for obvious reasons ஹீரோ,ஹீரோயினைச் சுற்றி சுழலுகின்றது. பார்ப்பவரைப் படுத்தாத, வெகு இயல்பான செண்டிமெண்ட் காட்சிகள். மற்ற படங்களில் வரும் காதல் காட்சிகளைக் கிண்டலடிக்கும் போது ஆஹா புது திருப்பம் கொண்டிருக்கும் கதையோ என்று யோசிக்க வைக்கின்றது.

கொலுசினைக் கண்டதும் காதல், பார்த்ததும் காதல், பார்க்காமலே காதல் இத்யாதி. மௌண்ற்றோடில் நிர்வாணமாக அலைந்து சொல்லும் காதல். எல்லாம் சரி. இப்படத்தில் "பூம்" என்று (உள்ளுக்குள்) வெடித்துச் சிதறும் காதல். அடடே இதுல வித்தியாசம் இல்லியே சந்துரு...?

பதிவுத் திருமணம் செய்து, ஒரே வீட்டில் வாழும் போது அழகான செண்டிமெண்ட் மூலம், ஹீரோவிற்கு ஹீரோயின் மீது (வில்லன்கள் தொந்தரவு ஏதுமின்றி) காதல் வருகின்றது. ஆனால் ஹீரோயின் தனது வாழ்வை தானே அமைக்க விரும்புவதாய் அளவுக்கதிகமாய் காட்டியபின், சிம்பிளாய் "பூம்" என்ற சவுண்டுடன் ஹீரோவுடன் காதலில் விழுவது கோலிவுட்டின் இன்னொரு பாணி.

சம்பந்தமேயின்றி நண்பன் மூர்த்தி ஹீரோ டைரக்டராக புக்கானவுடன் ஹீரோயினியின் மீதான காதலை சொல்வேன் என்று திண்ணை போன்றவொரு சுமைதாங்கியின் மீலமர்ந்து சவால் விடுத்தபின்னர், திடீரென்று செத்து விடுவதாய் காட்டுவதும் படத்தில் ஒட்டவில்லை.

மூன்றாம் பிறை போல காதலி காதலனை ம(து)றந்து விடுபடுவதாய் மட்டும் காட்டியிருந்தால் எங்கேயோ போயிருக்கும்.

போட்ட காசுக்கு பிரகாஷ்ராஜும், நானும் ஒன்றாய்தான் ஜெயித்தோம். Pirakash Way to Go !!! Radha Mohan as a Director you impressed ME!

வீணடிக்கப்பட்ட கேரக்டர் பேராசிரியர் ஞானசம்பந்தம்.

பிகு: ரமேஷ் விநாயகம் மியூசிக் கலக்கல். ஆனந்த் விநாயகம் போட்டோகிராபி பத்தி சொல்லுப்பா... ;-)

3 comments:

குசும்பன் said...

பிளாக்கர் சொதப்புகின்றது. லிங்குகளை போஸ்ட் செய்யும்போது சாப்பிட்டு விடுகின்றது. எனக்கு மட்டும் தான் பிரச்சினையா என்று தெரியவில்லை. எட்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பதிவு சொதப்பலாக இருந்து விட்டமைக்கு வருந்துகின்றேன். (சரி செய்யப்பட்ட பதிவென்ன வாழுதோ என்று சத்தம் போடுவதற்குள் அப்பீட்டு ;-)

அழகிய தீயே போஸ்டர்: உபயம் சிபி.காம்.

Anand V said...

தல
படம் காட்டறது
இங்கே .

நான் இந்த படம் பார்க்கவில்லை இதுவரை.
நான் இந்த வாரமாவது படத்தை பார்த்துவிட்டு ஒளிபதிவைப் பற்றி சொல்கிறேன்.

rajkumar said...

அற்புதமான படம் இது. ராதா மோகன் இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் என்று ஒரு படம் எடுத்தார்.நல்ல கதாநாயகனை போட்டிருந்தால் அந்த படமும் ஓடி இருக்கும்.