Wednesday, October 19, 2005

உள்ளே வெளியே

கெடு(ம்) நேரம் முடிந்து விட்டது. காசி மற்றும் ஏனைய தமிழ்மண நிர்வாகிகளிடம் நான் விண்ணப்பித்துக் கேட்டது இரு விதயங்கள்.

1. எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா?
2. அப்படியானால் காரணிகள் என்ன?

பதிலாக பதிவினை இட்டுள்ளார். பச்சை விள(ல)க்கு முறையை அமுல்படுத்தியுள்ளார். நீக்குதல்/தணிக்கை முறைக்கு 4 காரணிகளும் கூறப்பட்டிருந்தன. அப்பதிவினையே அவர் எனக்களித்த பொதுவில் வைக்கப்பட்ட பதிலாக எடுத்துக்கொள்வோம். முதல் கேள்விக்கு பதில் பச்சை விலக்கு (!) பிரகாசிக்காத போதே புரிந்து விட்டது. இரண்டாவது கேள்விக்கு அவர் அளித்த நான்காவது காரணமாகத்தான் (என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை) இருக்க வேண்டும். ஒரு வேடிக்கை பாருங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பதிவில் திரு பத்மாவின் பின்னூட்டம்



அதற்கு காசியின் பதில்:


"...ஆனாலும் ஒரு மின்னஞ்சல் முகவரி என்று பொதுவில் வைத்தபின், எவரை எங்கு நியமித்தால், என்ன அறிவுரைத்தால், வரும் மின்னஞ்சல்களைக் கையாள முடியுமோ, அதைச் செய்யவேண்டிய கடமை அவருக்கோ அல்லது அவரின் அலுவலகத்தை நிர்வகிப்பவருக்கோ வந்துவிடுகிறது. அதன்பேரில் வரும் விமர்சனத்துக்கும் அவர் ஆளாகிறார். அதில் எந்த விலக்கும் அளிக்கும் சாத்தியம் இல்லை. "

நல்ல கருத்து. மின்னஞ்சல் முகவரியை பொதுவில் வைத்தற்காக இந்தியக் குடியரசின் தலைவரின் பதிலை (அல்லது அவரது உதவியாளர்களின் பதிலை) காசி எதிர்நோக்குகின்றார். ஆனால் தனது சுயமுயற்சியில் வளர்த்த (கண்டிப்பாக பாராட்டுக்குரிய செயல்) தமிழ்மணம் என்னும் திரட்டியை பொதுவில் வைத்த பின்னர் விமர்சனங்களையோ (கவனிக்க பொதுவில் வைத்த பின்னர் ஒரு 100 கோடி மக்களின் தலைவரே விமர்சனத்துக்கு ஆளாகலாம்), கேள்விகளையோ காசியால் கையாள முடியவில்லை. ஆமாம் இதற்கு சகவலைபதிவர்கள் என்ன கூற விழைகின்றார்கள்? ஒரு வேளை இதுதான் ஹிப்போகிரஸி என்பதோ?

தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் காசி கூறியிருக்கின்றார். http://kasi.thamizmanam.com/?item=205 மேலும் இது ஒரு இலவச சேவை என்பதை காசியும், தமிழ்மண நிர்வாகிகளும் கவனத்துடன் சொல்லி வந்திருக்கின்றார்கள். பொதுவில் வைத்தற்கு பாராட்டுப் பட்டயம் கண்டிப்பாக உண்டு. ஆனால் அதற்காக படியளக்கும் தவச தானியம் மற்றும் கசையடிகள் என்ற வெற்று சொல்லாடல்கள் எதற்கு? பிரீயா கொடுத்த பினாயிலைக் கூட குடிக்கிற கூட்டத்துலதான நீயும் (அதாவது நான்) இருக்க? உனக்கெதுக்கு விமர்சனம், கேள்வி கேட்கும் உரிமை என்ற நோக்கத்திற்கு என்ன பெயரிட்டு அழைப்பது? பாசிசமா? போட்டத வாங்கிட்டு போவியா சும்மா தானம் கொடுத்த மாட்டை பல்லைப் புடிச்சு பதம் பாக்குற என்ற கூற்று நியாயமானதுதான். பொதுவில் வராதவரை. கொடுக்கும் கரம் உயர்ந்தே இருக்கும். ஒத்துக் கொள்கின்றேன். அது உங்கள் வீட்டுப் புழக்கடை சமாச்சாரமாகவே இருக்கும்வரை.


உங்களது தமிழ்மண முயற்சிகளுக்கு தேவைப்பட்டால் நிதியுதவி செய்ய பலரும் கேட்டிருந்தது அனைவரும் அறிந்த விதயம். சுனாமி, பூகம்பம், ஏழை மாணவிக்கு படிப்புதவித் தொகை என்று தங்களால் இயன்ற வரையில் தமிழ் வலைபதிவர்கள் தாராளமாக உதவி செய்து வந்து கொண்டிருக்கும் காலத்தில், உங்கள் பொதுப்பட்ட முயற்சிக்கு யாரும் உதவமாட்டேன் என்று கூற மாட்டார்கள். நிதி மட்டுமல்ல தொழில்நுட்டத்தில் கூட உதவ வல்லுநர்கள் தயாராக இருப்பதாக அடிக்கடி கூறினார்கள். உதவி வேண்டாமென்று பிடிவாதமாக இருந்து விட்டு இன்று எதற்கு தவச தானிய ஓலம்? பிச்சைக்காரர்களாவே விட்டு வைத்தால் நாளை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நிலக்கிழாரிய தத்துவமா? உங்களின் தனிப்பட்ட/ குடும்பத்தோடு செலவிடும் நேரத்தை இழுத்துப் பிடித்தற்காக மன்னியுங்கள். அது என் நோக்கமன்று. உதவிகளை உதறிவிட்டு இன்று உங்களின் பதிவு முழுக்க முழுக்க ஹிப்போகிரிஸியை கொடி பிடித்து நிறுவுகின்றது.


பச்சை விலக்கு முறையைப் பார்ப்போம். சொந்த கைகாசில் தளம் நடத்துபவரிடம் யாரும் சென்று நீ அதைச் செய். இதைச் செய்யாதே என்று கூறுமளவிற்கு மதி கெட்டவன் நானில்லை. இங்கே நாம் கண்கூடாக பார்ப்பது தமிழ்மண சேவை (இலவசம்) என்பது இன்று காசி என்பவரின் சொந்த தளமாகிவிட்டது. இதில் எனக்குப் பிடித்ததைத் தான் நான் செய்வேன் என்று கூறினால் அதற்கு மறு பேச்சுக் கிடையாது. அது அவரது சுதந்திரம். என்ன விளக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளும் உரிமை அவருக்கு பரிபூரணமாக ஒன்று. அதை நேரடியாகத் தெரிவித்து விட்டு செய்யலாமே? ஒருபக்கம் இலவச சேவையென்று படம் காட்டுவதும் மறுபுறம் மட்டுறுத்துவேன் என்று பயமுறுத்துவதுமான பாசாங்க நாடகம் ஏன்?


குசும்பனின் இந்தப் பதிவால் அல்லது அந்தப்பதிவால் தூக்கிவிட்டார்கள் என்று ஏகப்பட்ட ஊகங்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் தான் சொல்ல வேண்டும். இதில் கட்டாயம் ஏதுமில்லை. பொதுவில் கேட்கப்பட்டதால், பல தமிழ் வலைபதிவர்களின் பிரதிநிதி என்று நீங்கள் கருதும் காரணத்தால், தார்மீக நியாயத்தில் நம்பிக்கை உடையவராக (உங்களது தனிப்பட்ட நம்பிக்கை எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியாது) இருந்தால் சக வலைப்பதிவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் விடையோ விளக்கமோ தரலாம். மறுபடியும் தானியம், கசையடி, படம் பார்க்கவேண்டும் என்று ஜல்லியடிப்பதோ மட்டையடிப்பதோ உங்கள் விருப்பம். என்ன செய்வது காசி? பொதுவில் வந்தால் நேயர் விருப்ப(மு)ம் கேட்டுத்தானே ஆக வேண்டும் (உங்களின் குடியரசுத்தலைவருக்கு மடல் போல).


மதத்துவேஷம், ஆபாசம், இனவெறி, தீவிரவாதம், இந்திய/ஈழ/புலி ஆதரவு/எதிர்ப்பு, மொழிவெறி, தனிப்பட்ட காழ்ப்புணர்வு, வன்முறை, போலிப்பிரச்சாரம் (பிறர் கண்ணோட்டத்தில்) தாங்கி வரும் பதிவுகள் எல்லா மொழிகளிலும் உண்டு. முழுமையான கருத்துச் சுதந்திரம் வேண்டுமென்பதே பெரும்பாலான வலைப்பதிவர்களின் ஆவல். இன்றைய வாசகர்கள்/பதிவர்கள் விபரமானவர்கள். தமக்குப் பிடித்ததை அவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.


For any new system to grow we need Falilitators not Moderators என்று யார் கூறினார்கள் என்று மறந்து விட்டது. இந்தியாவில் IT அறிமுகமான காலகட்டத்தில் தடுப்புச் சட்டங்களைத்தான் முதலில் போட்டார்களாம். அப்போது யாரோ ஒரு வல்லுநர் கூறினாரென்று ஞாபகம். இன்று என்னைப் பொறுத்தவரையில் தற்சமய சூழலுக்கு இக்கண்ணோட்டம் ஒத்துப் போகலாம் மென்பது என் தனிப்பட்ட கருத்து.


அமெரிக்காவில் வசித்த நீங்கள் அங்கதம் என்ற காரணத்தால் எனது பதிவை நீக்கினீர்களா என்று தெரியாது. ஜார்ஜ் கார்லின் போல பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் என்னால் பகிடி செய்யப்பட்டவர்கள் பின்னூட்டங்களிலும், தனியஞ்சல்களிலும் குசும்பை ரசித்ததாகவே கூறினார்கள். பழைய பின்னூட்டங்கள் மறைந்து விட்டன. இருப்பினும் குசும்பனின் நோக்கமே மென்மையான அங்கதம்தான். இதனால் யாரேனும் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். இது மீண்டும் தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள விடுக்கப்படும் விண்ணப்பம் அல்ல. தமிழ்மண பதிவர் பட்டியலிருந்து(ம்) 'இணையகுசும்பன்' தொடுப்பையும் தயவு செய்து அகற்றி விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனது பதிவிவின் செய்தியோடையை நேற்று வரை இலவசமாக திரட்டியமைக்கும், பிற தமிழ்மண சேவைகளுக்கும் காசி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. இணையகுசும்பன் உள்ளே இல்லாவிட்டாலும் வெளியே இருப்பான்.


பின்னூட்டங்களிலும், வலைப்பதிவுகளிலும், தனியஞ்சலிலும், தொலைபேசியிலும் ஊக்கம் தந்த, தரும் சகவலைப்பதிவு நண்பர்களுக்கும் (எனது கருத்துகளில் முழு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த நண்பர்களையும் சேர்த்துத்தான்) எனது வணக்கமும் நன்றிகளும் உரித்தாகுக.

பி.கு. எனது 'நடவடிக்கைகளை' பொதுவில் வைக்கும் உத்தேசமில்லை. வாசகர்க்கு ஜாலியான ஜூகல் பந்தி மட்டுமே :-)

9 comments:

Anonymous said...

எனனருமை குசும்பா,

உங்கள் பல பதிவுகளையும் படித்து வரும் முகம் தெரியாத இணைய வாசகன் நான். ஒன்றும் கவலை வேண்டாம். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்குத் துணையாக.

சேர்த்தால் சேர்க்கட்டும்.. சேர்க்காவிட்டால் போகட்டும்.

யாரையோ திருதிப்படுத்துவதாக நினைத்து தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன்.

விரைவில் நான் ஒரு திரட்டி ஆரம்பிக்கிறேன். அங்கே தானியமோ, அரிசியோ பணமோ பிச்சையாகக் கேட்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.

மன அமைதியுடன் இருக்கவும்.

முகமூடி said...

குசும்பன்,

நல்ல கேள்விகள். பதில் கிடைத்தால், முடிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது போன்ற நடவடிக்கைகள் பலரும் சொன்னது போல பல நூறு திரட்டிகளுக்கு வழிகோலும் என்று நானும் நம்புகிறேன்.

தொடந்து எழுதி வாருங்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.

ROSAVASANTH said...

I did not read your earlier posts, especially the controversial one(if it exists). In any case I do not agree with this act of banning you. I am not sure what can be done about this, apart from giving a moral support. I onl do that.

ஏஜண்ட் NJ said...

குசும்பன்,

நல்ல கேள்விகள். பதில் கிடைத்தால், முடிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது போன்ற நடவடிக்கைகள் பலரும் சொன்னது போல பல நூறு திரட்டிகளுக்கு வழிகோலும் என்று நானும் நம்புகிறேன்.

தொடந்து எழுதி வாருங்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.


Bloglines-ல் myfeeds-ல் நான் வைத்திருக்கும் rss feed-களில் உம்முடையதும் ஒன்று, குசும்பரே!

முகமூடியின் "சகிப்புத்தன்மை" பதிவை ஆவலுடன் எதிர்பாருங்கள்!!!

Anonymous said...

குசும்பரே,

சூப்பரே சொன்னீங்க! காசி அண்ணாவோட இந்த ஒருதைலைப்பட்ச, அருவெறுக்கத்தக்க (ஆமாம் ஏன் யாருக்கும் இப்ப குமட்டுல?) நடவடிக்கைதான் பாஸிஸம். சொந்தக்காசு போட்டதற்கும், டைம் செலவு பண்ணியதற்கும் தாராளமா, பெருமையா எப்பவும் பாராட்டுவோம். யாருப்பா அது ஸ்ரீகாந்த்? நச்சுன்னு நாலு வார்த்தைல கேட்டாருப்பா. பொதுமக்களின் நம்பிக்கைகுரியவராய் ஒரு காலத்தில் இருந்துவிட்டு இப்போது ஜகா வாங்கிட்டார்னு. நம்பிக்கை எங்கேர்ந்து வந்ததாம்? தன்னோட நம்பிக்கை, சொந்த விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சுட்டு பொதுவான கருத்துநீதிகளின்படி நடப்பார் என்பதே அந்நம்பிக்கைக்குக் காரணம். என்னிக்கு "தன் தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில்" (அந்த நம்பிக்கை என்ன, அதற்கான காரணங்கள் என்னவென்பதை விளக்க மறுப்பதும் அதைவிட ஹிப்போகிரஸி) தமிழ்மணத்திலிருந்து பதிவுகள் நீக்கப்பட்டன என்று அபத்தம் அறிவிப்புச் செய்தாரோ அப்போதே காசியின் முகத்திரை கிழிந்து விட்டது.

தமிழ்மணத்தின் முதல் பிறந்த நாளில் இன்றைக்கு இத்தனை பதிவுகள் உள்ளன என்று பெருமையாய் டமாரமடித்தார். இந்த லிஸ்ட்டில் மூன்று மாதங்கள் எழுதாமல் இருந்தவர்களின் பதிவுகளையும் சேர்த்துச் சொன்னார். அப்போதே மூன்று மாதங்கள் எழுதாமல் இருந்தவர்கள் திரட்டப்படவில்லை. காசிக்குத் தேவை என்றால் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பெருமையடித்துக் கொண்டு சேர்த்துக் கொள்வார். தேவையில்லாவிட்டால் தூக்கி விடுவார்.

பாஸிஸம் எப்போதும் முதலில் கருத்துச் சுதந்திரத்தின் எதிரியாகத்தான் உள்ளே வரும். நண்டு படம் அவர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றுதான். எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும், துளசியக்கா ஒருமுறை சொன்னதுபோல ஒரு ஆபத்தோ தேவையோன்னா எல்லாரும் ஒண்ணாக் கூடி தேரிழுக்கும் இடமாவும், மீந்த நேரங்களில் சண்டை போட்டாலும் மற்றவரைச் சகித்துக் கொள்கிற இடமாகவும்தான் தமிழ்மணம் ஒருகாலத்தில் இருந்தது. இப்போ தன் தனிப்பட்ட நம்பிக்கையை (aka விருப்பு வெறுப்பு) உள்நுழைத்து உடைத்தத் தகர்த்த நண்(டு)பர் காசி கட்டாயம் நண்டு விசிடியைப் பார்க்க வேண்டும். நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதைதான் இதுவும். தோழர் காசிக்கு ஏதேனும் பரிசு தர வேண்டும் என்று முன்னர் ஒரு முயற்சி நடைபெற்றது. இதோ ஒரு யோசனை. தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பண்ட் உருவாக்கி இவ்வளவுநாள் தங்களைக் காசி தமிழ்மணத்தில் இலவசமாக விட்டு வைத்திருந்ததற்காக அவருக்கு நண்டு விசிடியை வாங்கிப் பரிசளிக்கலாம்.

By Chao

Anonymous said...

/*** எனது 'நடவடிக்கைகளை' பொதுவில் வைக்கும் உத்தேசமில்லை. வாசகர்க்கு ஜாலியான ஜூகல் பந்தி மட்டுமே :-) ***/

நானும் குசும்புதலைவருக்கு ஒரு கடிதம் எழுதலாமுன்னு இருக்கணுங்னா.
தேசவிரோத வலைபதிவுகளுக்கு தொடர்பு கொடுக்கிறார்ங்னா?

சின்னவன் said...

அங்கதம் பற்றிய உங்களின் கேள்விகள் எனக்கு நியாமாகவே படுகின்றது.
குசும்பன் விலக்கப்பட்டதால் இழப்பு தமிழ்மண வாசகர்களுக்குத்தான்.

Anonymous said...

குச்சூம்பரே,

//தமிழ்மணத்தின் முதல் பிறந்த நாளில் இன்றைக்கு இத்தனை பதிவுகள் உள்ளன என்று பெருமையாய் டமாரமடித்தார். இந்த லிஸ்ட்டில் மூன்று மாதங்கள் எழுதாமல் இருந்தவர்களின் பதிவுகளையும் சேர்த்துச் சொன்னார். அப்போதே மூன்று மாதங்கள் எழுதாமல் இருந்தவர்கள் திரட்டப்படவில்லை. காசிக்குத் தேவை என்றால் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பெருமையடித்துக் கொண்டு சேர்த்துக் கொள்வார். தேவையில்லாவிட்டால் தூக்கி விடுவார். //

பிறந்த நாளு ரிப்போர்ட்ட காணோமேய்யா. சொந்த பதிவையே தூக்க ஆரம்பிச்சிட்டாங்களா? இன்னும் என்னவெல்லாம் தூக்கப்போறாங்களோ?

Boston Bala said...

---சொந்த பதிவையே தூக்க ஆரம்பிச்சிட்டாங்களா---

http://kasi.thamizmanam.com/?item=200

Please check Krupashankar's comment (at செவ்வாய், 23.08.05, 14:04:49) for more info on that vanishing issue.

Thx.