Friday, October 21, 2005

அங்கதம் For Dummies

அங்கதம் எழுதுவது எப்படி என்ற பச்சையாய் விளக்கும் கையேடு இது. இவையனைத்தையும் ஒழுங்காகப் பின்பற்றிய பின்னால் உங்கள் வாழ்வில் பச்சை விளக்கு ஓளிரும்.

1. முதலில் கருத்தாவையும், அவரது கருத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பாடுபொருள் அனைவராலும் ஏறுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். வேண்டுமெனில் இது குறித்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம். எ.கா. ஆயாவிற்கு பாயா வாங்கித் தரலாமா என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. இத்தலைப்பிற்கு கூட மனிதாபிமான சங்(க)பரிவார்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழ வாய்ப்புண்டு. எனவே சனநாயகத்திற்கு விரோதமான தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டும்.

2. பலராலும் அங்கீகரிக்கப்பட்ட தலைப்புடன், கருத்தாவிடம் அங்கதம் செய்யலாமவென்று ஒரு விண்ணப்பம் போட வேண்டும். அங்கதம் செய்யப்படுபவரின் அங்கீகார சகிப்பின் எல்லையை முதலில் வரையறுத்துக் கொள்ள இது உதவும் (இது பத்துமா பத்தாதாம்மா பத்துமாம்மா?). கருத்தாவின் அநுமதி இல்லாவிட்டால் பின்னாளில் பிரச்சினைக்கு ஆளாக நேரிடலாம். மேற்கண்ட தலைப்பை ஆயாவிற்கு பாயா வாங்கித் தரலாமா என்று கோயா(ன்) என்பவர் எழுதியிருந்ததாய் கொள்வோம். கோயாவை தொடர்பு ஊடகங்கள் மூலம் சென்றடைந்து உங்களது அங்கதத்தின் நோக்கம், பயன், பின்விளைவுகள் பற்றி ஒரு சினாப்ஸிஸ் அனுப்ப வேண்டும். பின்னர் பேக்ஸ் மூலமாகவாவது அவரது ஒப்புதல் ஒப்பமிட்ட ஆவணத்தைப் பெறவேண்டும். ஓப்புதல் கிட்டாவிடில் பாயிண்ட் ஒன்றுக்கு (!) செல்லவும்.

3. மேற்கண்ட இரண்டு ஸ்டெப்களின் மூலம் வரைவு ஆவண விதிகளை வகைப்படுத்தி, ஒரு பொதுக் குறை(ரை)ப்பு முறைமை CMP (Common Minimum Program) ஆவணம் தயாரிக்க வேண்டும். நாளை உங்களது பதிவு பட்டையையோ சாராயத்தையோ கிளப்புமானால் பதிப்பிக்கும் மணமோ/குழுமமோ தனது தணிக்கை விதிகளுடன் ஒப்பு நோக்க இந்த ஆவணம் உதவும். இந்த ஸ்டெப்பை ஆங்கிலத்தில் CYA (Cover Your As*) என்பார்கள். இவ்வாவணத் தயாரிப்பிற்கு பொதுநோக்கர்களின் உதவிகளைப் பெறலாம். கவனிக்க: இப்பொதுநோக்கர்கள்தான் பின்னாளில் கருத்தாவின் பாதுகாவலர்கள் அவதாரம் பூண்டு அங்கதத்தானை பின்னிப் பெடலெடுப்பார்கள். பொதுவாக இவர்கள் பிரச்சினையைக் கிளப்பும் போது குழப்பமானவர்களாகவே இருப்பார்கள். பல இடங்களில் சென்று குழப்பி, குழம்பி பின்னர் யாரேனும் ஒரு பொதுநோக்கர் இவர்களோடு ஒத்து எழுதினால் ஓடிச்சென்று பலமாக ஒத்து ஊதுவார்கள். பொதுநோக்கரில் இன்னொரு வகையுண்டு. இவர்களிடம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தனது ஒரே கருத்திற்கு "+" என்று ஒரு இடத்திலும் "-" என்று இன்னொரு இடத்திலும் குத்துவார்கள். இப்போது புரிகின்றதா பொதுநோக்கர்களின் அங்கதத்தில் பங்கென்ன என்பது?

4. என்ன கடுமையான வரைமுறைகளாகவே இருக்கின்றன என்று கலங்க வேண்டாம். இதுதான் மிகவும் ஈஸியான ஸ்டெப். CMP விதிகளுக்கு உட்பட்டு உங்களது அங்கதத்தை எழுதுவது(!).

5. அங்கதப்பதிவு எழுதி முடித்தவுடன் கருத்தாவிடம் எடுத்துச் செல்லவும். அவரின் முழு ஒப்புதல் (கையெழுத்துடன்) பெறவேண்டும். ஒப்புதல் பெறாவிடில் மேல்ல்லே செல்லவும். கவனிக்க: கருத்தா உங்களின் ஆக்கத்தை விரிக்கவோ/சுருக்கவோ அதிகாரம் உண்டு.

6. ஒப்புதல் பெற்றபின் மணத்தின் தணிக்கைகுழுவின் (இது ஒன்மேன் ஆர்மியாகக் கூட இருக்கலாம்) பார்வைக்கு, கருத்தாவின் ஒப்புதல் கடிதத்தோடு பதிப்பிற்கான விண்ணப்பத்துடன் செல்ல வேண்டும். இந்த தணிக்கை குழு/அதிகாரி உங்களது அங்கதத்தை பரிசீலித்து அது நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றதா அல்லது தன(ம)து சுய நம்பிக்கையின் அடிப்படையில் பதிப்பிக்கக் கூடியதா என்று ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து, முகர்ந்து, ரசித்து, சுவைத்து ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் தனது சொந்த த(வ)ர்க்க ஞானத்தையும், தார்மீக நியாத்தின் அளவுகோல்களால் அளப்பீடு செய்து உங்களின் பதிவை வெளியிடும் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி வெளியிடுவார். வெளியிட்டபின் பரீட்சையில் பாஸா பெயிலா எனக் கண்டறியும் மாணாக்கனைப் போல விரைந்தோடி பதிவின் முன்னே என்ன விளக்கெறிகின்றதென்று பார்க்க வேண்டும். பச்சை என்றால் "ஆத்தா(டி) நான் பாஸாயிட்டேன். தணிக்கை அதிகாரிக்கு நன்றி" என்ற பின்னூட்டம் கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் மேல்ல்லே முருங்க மரம் சென்று விக்ரமாதித்தனாய் இன்னொரு அங்கத வேதாளம் பிடிக்க வேண்டும். மீண்டும் கவனிக்க: உங்களின் ஆக்கத்தை விரிக்கவோ/சுருக்கவோ அதிகாரம் தணிக்கை அல்லது தன்னிச்சை அதிகாரிக்கு உண்டு.

7. அப்பா(டி) நான் பாஸாயிட்டேன்; எனது அங்கதம் பதிவாகிவிட்டது என்பதோடு உங்களது கடமை முடிந்து விடாது. இந்தப் பொதுநோக்கர்களின் கருத்துப் பின்னூட்டங்களை கவனமாகப் படித்து தேவைப்படின் விளக்கம் கொடுக்கத்தயாராக இருக்க வேண்டும். எ.கா. ஆயாவிற்கு பாயா தேவையா என்ற தலைப்பில் திரு.கோயா(ன்) எழுதிய பதிவிற்கு அங்கதப்பதிவு போட்ட பேயா(ன்)வாகிய நான் எனது பதிவினை "சுயபரிசீலனை" செய்ததற்கான ஆய் அறிக்கை இதோ என்று எடுத்துப் போட்டு திருப்திப் படுத்த வேண்டும். தேவைப்பட்டால் பிற ஒப்புதல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பொதுவில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களது பதிவென்ன, பட்டியலிலிருந்தே காணாமல் போகும் அபாயம் உண்டு.

8. பொதுநோக்கர்களின் பின்னூட்டங்கள், மற்ற வலது/இடது/மைய (Right/Left & Center) நோக்கர்களின் கருத்துத் தொகுப்போடு தணிக்கை அதிகாரி மற்றும் கருத்தாவுக்கு பின்-ஆய்-அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது உங்கள் மீதான நம்பகத்தன்மை வளர உதவும். TIPS: முடிந்தால் இந்த ஆய்-அறிக்கையின் ஒப்புதலைப் பெற முயற்சிக்கவும். இத்தகைய ஒப்புதலையும் பொதுவில் வைத்தால் மக்கா நீ பெரிய அங்கதனப்பா...

9. இதில் சம்பந்தமே இல்லாமல் பாஸிஸம், ரேஸிஸம், பாயாசம், ஆயாசம் போன்ற பல இலக்கிய விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டும். ஒவ்வொரு இஸத்திற்கும் ஒரு மாற்று மருந்து உள்ளது. அதைப்பயன்படுத்தி ஒவ்வாமையை குணப்படுத்த முயற்சிப்பது அங்கதனாகிய உங்கள் தலையாய கடமை. இல்லாவிடில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதை உணராத அரசு அதிகாரிகளைப் போல காத்திருப்போர் பட்டியலில் காய வேண்டியதுதான். இது மிக மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய ஸ்டெப்.

10. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஏதாவது ஏடாகூடமாக நடக்க வாய்-ப்புண்டு. எ.கா. ஆயாவிற்கு ஏன் வெறும் பாயா மட்டும் கொடுக்க வேண்டும்? கூடவே சல்னா கொடுக்க ஏன் அங்கதப்பதிவர் முயலவில்லை. இது ignorance is bliss என்ற high handedness'ஐ குறிக்கின்றது என்பதற்கு நீங்கள்....

ஹலோ...ஹலோ... ஏன்ப்பா இப்பிடி தலை தெறிக்க ஓடுற? நான் இந்தா முடிக்கப்போறேன். என்ன நீயும் முடியெடுக்கப் போறியா? என்ன முடிவெடுக்கப் போறியா? என்னாப்பா சொல்ற? அங்கதமா ஆளை வுடுன்னா? ஏம்ப்பா நான் சிம்பிளாத் தானே சொன்னேன்.

பி.கு. நல்லதுக்கு காலமில்லைப்பா.

6 comments:

Anonymous said...

//நல்லதுக்கு காலமில்லைப்பா//

இது பாயிண்டு. நல்ல செருப்படி.

சின்னவன் said...

கலக்கல் குசும்பரே

ஏஜண்ட் NJ said...

குறையேதும் இல்லை, குசும்பா!
;-)

Anonymous said...

//நல்ல செருப்படி.//

ஆமாம். தன் தலையில்லேயே அடித்துக் கொள்வதைதானே சொல்கிறீர்கள்?

rajkumar said...

நீங்கள் கடந்த சில காலங்களாக செலவழித்துக் கொண்டிருக்கும் நேரத்தையும், ஆற்றலையும் தங்களுக்கு மேலும் பயன் தரும் விடயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

உங்கள்து பதிவுகளை படித்து சிரித்து மகிழ்ந்த காலங்கள் மாறி, தற்போது உங்கள் பதிவை ரசிக்க மற்ற பதிவுகளின் நிகழ்வுகளையும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான நேரமும் ,சக்தியும் எனக்கு இல்லை.

வலை நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டும் நகைச்சுவையான அம்சங்களை தங்களால் எழுத முடியும் என்று நான் நம்புகிறேன்.

எழுதுங்கள் என்பது வேண்டுகோள்.

எழுதுவீர்கள் என்பது நம்பிக்கை.

அன்புடன்

ராஜ்குமார்

Jayakumar said...

குசும்புரே,
என்ன நாலு நாளாய் வலைப்பக்கம் காணவில்லை?