Monday, October 31, 2005

பண்டிகை வாழ்த்து

அது ஒரு குக்கிராமம். கப்பி சாலை இப்போது நிறைய ஓட்டைகளுடன் தார்ச்சாலையாய் மட்டுமே மாறியிருக்கின்றது. மற்றபடி பேருந்து நிலையம் கூட அப்படியே காட்சியளிக்கின்றது.

கைத்தறியை மட்டுமே நம்பியிருந்த ஏழைக்குடும்பம் அது. அக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு காரணப்பெயர் உண்டு. கடைக்கார வூடு, பண்ணை வூடு, மச்சி வூடு, மரமூடு, கேணி வூடு இப்படிப் பல. ஊருக்கே கடைக்கோடியில் அக்குடும்பம் வசித்ததால் அவர்கள் வீட்டின் பெயர் கடைசி வூடு.

வீட்டின் தலைவர் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தாரே தவிர வருமானத்தை அல்ல. பெண்களே அதிகமாகப் பிறந்தது வேறு கவலை. கடைசியாய் ஒரு ஆண் மகவைப் பார்த்து விட்டு அதற்கு விவரம் தெரிவதற்கு முன்னாலேயே கண்ணை மூடி விட்டார்.

குசேலரும் இல்லை. புரவலர் கண்ணனும் இல்லை. இருப்பினும் வீட்டுப் பெண்கள் தைரியசாலிகள். கைத்தறி, களை பறித்தல், விறகு வெட்டுதல் என்று உழைப்பிற்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஒரு வேளை உணவிற்காவாவது உத்திரவாதம் தந்தது அவ்வீட்டுப் பெண்கள்தான். வீட்டுத் தலைவிக்கு ஒரு வைராக்கியம். எப்படியும் ஒரே மகனை கைத்தறியில் உட்கார விடக்கூடாது. படிக்க வைக்க வேண்டுமென்பது அந்த படிக்காத ஏழைத் தாயின் கனவு. பிள்ளையும் படிப்பில் குறை வைக்கவில்லை.

அன்று தீபாவளிக்கு முந்திய இரவு. எதிர்த்த வீடோ அப்போது பெரிய நிலக்கிழாருக்கு சொந்தமானது. மிகப்பெரிய குடும்பம். செல்வச் செழிப்பிற்கு குறைவில்லை. ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அந்த ஏழைப்பிள்ளைக்கு புரியாத பருவம். மத்தாப்பும், வெடிகளும் அதம் பறந்து தன்வீட்டு லாந்தர் வெளிச்சத்தை தூக்கிச் சாப்பிட, வீட்டுத் திண்ணையில் ஏக்கமுடன் அப்பிள்ளை வேடிக்கைப் பார்க்கும். தாயும் தன்னால் இயன்ற அளவு சந்தையிலிருந்து துணிமணிகள் வாங்கி வந்தாலும் எதிர் வீட்டோடு போட்டியா போட முடியும்? முதல் நாள் ஆட்டம் முடிந்தது எதிர் வீட்டுக் குழந்தைகள் தூங்கியதும் ரகஸியமாய் வெடிக்குப்பைகளை பொறுக்கியெடுத்து தன் வீட்டின் முன்னால் போட்டு களிப்படியும் அப்பிள்ளை. இப்படி பல தீபாவளி(லி)கள் கடந்தது.

காலச் சக்கரம் சுழன்றது. பிள்ளை வளர்ந்து பெரியவனாகி, மத்தியத்தரத்தை அடைந்து பிள்ளைகளும் பெறுகின்றான். திராவிடப் பாரம்பரியத்தை தன்னுள்ளே வாங்கிக் கொண்டு, தீபாவளி கொண்டாட மாட்டேன் என்பதில் அவருக்கு தீராத அடம்தான். பொங்கலென்றால் பிள்ளைகளுக்கு இரு புத்துடைகள் வாங்கித் தந்தாலும் தீபாவளிக்கு வாங்க மாட்டேன் என்பது அவரது கொள்(ல்)கை.

"டேய் வேணாம்டா. பச்சப்பிள்ளைங்க ஏங்கிப்போயிடும்டா", என்பதே அந்த முன்னாள் ஏழைத் தாயின் அந்நாள் ஓலமாய் அமைந்தது. எறும்பூர கல்லும் தேயும். சரி பட்சணங்கள் செய்து கொள்ளலாம், வெடியும் உண்டு என்று தனது கொள்கைகளை பிற்காலத்தில் சற்றே தளர்த்தினாலும் புத்தாடை மற்றும் பல வருடங்கள் தளரவேயில்லை. பொருளாதாரம் உயர உயர பட்சணங்கள், வெடிகளின் செலவீனங்கள் தாராளமயமாக்கப்பட்டன. தமிழர் திருநாள் பொங்கலென்றால் ஒரே கோலாகலம்தான்.

காலச்சக்கரம் மேலும் சுழல்கின்றது. பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக திருவிழாக் காலங்களில் மட்டுமே அனைவரும் சந்தித்துக் கொள்ளும் நிலை. முதன்முறையாக தன் பேரப்பிள்ளைக்காக தீபாவளிக்கு புத்தாடை வாங்குன்றார் அவர். அதுவும் ஸ்டோன்வாஷ். தனது பிள்ளை கல்லூரியில் படிக்கும்போது தலைகீழாக நின்ற போது கூட அந்த கழிசடையை வாங்கித்தரமாட்டேன் என்றவர் அவர்.

இதோ இன்று தீபாவளி. புத்தாடை எடுக்கவோ, வெடி வெடிக்கவோ தங்கு தடையில்லை. கொள்கைத் தடைகளும் இல்லை. கணி முன்னே அமர்ந்து, நிரலி வெடி வெடித்து, இந்தியா ஸ்டோர்ஸில் வாங்கிய பழைய ஸ்வீட் சாப்பிட்டு, துலக்கி வைக்கப்பட்ட பளிங்குக் கல் கோயிலுக்குச் சென்று பிரசாதம் சாப்பிட்டு வந்தால் தீபாவளி போயே போச்.

பாட்டி என் அப்பாவிடம் சொன்னது மட்டும் பசுமையாய் மனதில். "டேய் வேணாம்டா. பச்சப்பிள்ளைங்க ஏங்கிப்போயிடும்டா"

அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள்!!!

8 comments:

Jayakumar said...

இப்பவெல்லாம் ஒரே சீரியஸ் பதிவுகள்தான் போலயிருக்கு.
:-)
தீபாவளி வாழ்த்துக்கள்

முகமூடி said...

// தனது பிள்ளை கல்லூரியில் படிக்கும்போது தலைகீழாக நின்ற போது கூட அந்த கழிசடையை வாங்கித்தரமாட்டேன் என்றவர் அவர் // வழி...

// வாசகர்களுக்கு ஜாலியான ஜுகல்பந்தி மட்டும்தான்னு சொல்லிட்டு செம செண்ட்டி அடிச்சுட்டீங்க // அதே..

கரண்டு இல்லையா... எங்கியோ உதைக்குதே??

தீபாவளி(ளி) வாழ்த்துக்கள்

குசும்பன் said...

எல்லாம் இந்த "ழ்பா"ப்போன முகமூடியால வந்த வினை Jsri. மலரும் நினைவுகளைக் கொஞ்சம் கிளறிட்டேன். கவலைப்படாதேள். டெண்டுல்கர் மாதிரி திரும்பி பார்முக்கு வந்துட்டாப் போச்.

ஜேகே... பந்தியில கொஞ்சம் வித்தியாசமான சுவை வேண்டாமா? மற்றபடி நான் ஸீரியஸ் பேர்வழியில்லை. அங்கதம் மட்டுமே தெரியும் :-)

முகமூடி... கொஞ்சம் ப்ரீ டைம். அதான் ஒரே ஒரு பதிவு. ஒரே ஒரு கொமண்ட். ஹிஹிஹி

ஏஜண்ட் NJ said...

//காலச்சக்கரம் மேலும் சுழல்கின்றது. //

காலச் சக்கரம் நிறுத்தி வைக்க முடியாதது;

தெளிவு பிறக்க எல்லோருக்கும் ஒரு நேரமுண்டு!

மிகுந்த வேலைப் பளுவுக்கு மத்தியிலும் நேரத்தை ஒதுக்கி , கரண்ட் இல்லாத போதும் கூட, மத்தாப்பு வெளிச்சத்தில் பதிவுகள் போடும் குசும்பனுக்கு நன்றி
;-)

ஏஜண்ட் NJ said...

தி(வி)ரட்டி குசும்பு! பார்த்தேன்! ரசித்தேன்!

குசும்பன் said...

என்னய்யா ஸீரியஸா பதிவு போட்டு இம்மாம் நேரமாச்சு. இன்னும் பீடத்தைக் காணோமேன்னு நெனச்சேன். வந்துட்டேள். இன்னிக்கு தீபாவளி. என்ன சாப்பிட்டேள்ன்னு பதிவைப் போட்டுடுங்க (போட்டோவோட :-)

துளசி கோபால் said...

குசும்ப்ஸ்,

நீரும் நினைவலைகள்பக்கம் வந்துட்டீரா?

அருமை.

பழைய ஸ்வீட் நல்லா இருந்ததா?

குசும்பன் said...

துளசி,

பழைய ஸ்வீட் கூட கிடைக்கவில்லை. வில்மா அல்வா கொடுத்து விட்டது:-)

ஐநோமிநோ: ஒருவழியா முட்டி மோதி டெக்னோராட்டியோ ரொட்டியோ தட்டிப் போட்டுட்டேன் :-)